May 4, 2015

பொறியியல் கல்லூரிகளின் சதுரங்க வேட்டை

‘சாமீ...இங்க வாங்க...உங்களுக்கு வேண்டித்தானே நாங்க உக்காந்துட்டு இருக்கிறோம்’ என்று ஒரு ஜோசியகாரர் அழைத்தார். நெற்றி நிறைய சந்தனத்தைப் பூசி அதன் மீது பெரிய குங்குமப் பொட்டாக வைத்து கையெல்லாம் வண்ண வண்ணக் கயிறுகள். விரலெல்லாம் விதவிதமான மோதிரங்கள். கல்விக் கண்காட்சியில் இப்படியொரு சதுரங்க வேட்டை ஆளைப் பார்க்க ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால் அப்படித்தான் இருந்தார். பொறியியல் கல்லூரிக்காரர்கள் ஒரு கல்யாண மண்டபத்தை வாடகைக்குப் பிடித்து அங்கு டெண்ட் அடித்து கல்விக் கண்காட்சி என்று பெயர் வைத்து மாணவர்களை வேட்டையாடிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் பார்த்தால் எனக்கு மூக்கு வியர்த்துவிடும். என்னதான் சொல்கிறார்கள் என்று நுழைந்து பார்க்க ஆசை வந்துவிட்டது.

‘தம்பிக்கு அட்மிஷன் போடணும்’ என்றுதான் ஆரம்பித்தேன்.

‘பையனுக்கு என்ன கட்- ஆஃப் வரும்?’

‘தெரியலைங்க’

‘190க்கு மேல வாங்கிட்டான்னா எதைப் பத்தியும் யோசிக்காதீங்க...நேரா காலேஜுக்கு வந்துடுங்க....உங்க ஊர்ல இருந்தே பஸ் கிளம்புது..அட்மிஷனுக்குன்னு சொல்லுங்க...வாசல்ல கொண்டு வந்து இறக்கி விட்டுடுவாங்க...நேரா கேண்டீனுக்கு போங்க....அட்மிஷனுக்கு வந்திருக்கோம்ன்னு சொல்லி சாப்பிட்டுட்டு ஆசுவாசப்படுத்திக்குங்க...ஒருத்தரும் உங்களைக் கேள்வி கேட்கமாட்டாங்க...அப்புறம் மெதுவா அட்மிஷன் செக்‌ஷனுக்கு வாங்க’. அடேயப்பா! அப்படியே தலையணை மெத்தையெல்லாம் கொடுத்தால் படுத்துத் தூங்கிவிட்டு வரலாம். அட்டகாசமாக வலை விரிக்கிறார்கள். 

‘சரிங்க’

‘190க்கு மேலன்னா ஹாஸ்டல், காலேஜ், பஸ் வசதி...எதுவா இருந்தாலும் இலவசம்..பைசா கொடுக்க வேண்டியதில்லை...180க்கு மேல இருந்தா ஹாஸ்டல் ஃபீஸ் மட்டும் கட்டினா போதும்..காலேஜ் ஃபீஸ் கட்ட வேண்டியதில்லை...170க்கு மேல வந்தா ஸ்காலர்ஷிப் தருவோம்’ - கிட்டத்தட்ட அங்கிருந்த அத்தனை கல்லூரிக்காரர்களுமே இதைத்தான் சொல்கிறார்கள். வந்திருந்தவர்களில் முக்கால்வாசிக் கல்லூரிகள் டப்பா கல்லூரிகள். 190 வாங்கியவன் இவர்களிடம் வந்து ஏன் சேரப் போகிறான்? 

‘அமெரிக்க பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து செயல்படுகிறோம்...ஆஸ்திரியாவில் கிளை வைத்திருக்கிறோம்...இந்திய நிறுவனங்கள் எங்கள் கல்லூரியிலிருந்து ஆட்களை அள்ளி எடுத்துக் கொள்கிறார்கள்’ என்பதையெல்லாம் கூட பொறுத்துக் கொள்ளலாம். ‘எங்கள் கல்லூரிக்கு விளம்பரமே தேவையில்லை’ என்று அடித்துவிட்டதைத்தான் தாங்க முடியவில்லை. நெஞ்சுவலியே வந்துவிடும் போலிருந்தது. 

‘ரொம்ப சந்தோஷங்க....’

‘இந்த வருஷம் எந்தப் படிப்புக்கு டிமாண்ட் அதிகம்?’ என்று கேட்டால் கிட்டத்தட்ட அத்தனை பேரும் ஒரே பதிலைத்தான் சொன்னார்கள். 

‘மின்னியல் மற்றும் மின்னணுவியல்’. 

ஒவ்வொரு வருடமும் இப்படித்தான் நடக்கிறது. மொட்டைத்தலையன் குட்டையில் விழுந்த கதைதான். அத்தனை பேரும் ஒரே படிப்பைத்தான் எடுக்கிறார்கள். ஒரு வருடம் எல்லோரும் கம்யூட்டர் சயின்ஸ். இன்னொரு வருடம் ஐடி. இன்னொரு வருடம் மெக்கானிக்கல். இன்னொரு வருடம் இசிஇ. அதே மாதிரிதான் இந்த வருடம் மின்னியல் மற்றும் மின்னணுவியல். ஒரு மாணவன் கல்லூரியில் என்ன படிக்கப் போகிறான் என்பதைக் கிட்டத்தட்ட பத்தாம் வகுப்பிலேயே முடிவு செய்துவிடுவதற்கான வழிவகைகள் உருவாக்கப்பட வேண்டும். ஒருவேளை பொறியியல் சேர்வதாக இருந்தால் ப்ளஸ் ஒன் படிக்கும் போதே எந்தப் பிரிவு என்பதை அவன் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். பொறியியலில் மட்டும் கிட்டத்தட்ட நூறு பிரிவுகள் இருக்கின்றன. ஆனால் ஏழெட்டு பிரிவுகளைத் தவிர வேறு யாருக்குமே தெரிவதில்லை அல்லது தெரிந்து கொள்வதற்கான எத்தனிப்புகள் இல்லை. கடைசி நேரத்தில்தான் முடிவெடுக்கிறார்கள். அதனால்தான் இப்படியான கல்லூரிகள் குட்டையைக் குழப்பி மீன்களைப் பிடிக்கிறார்கள்.

அதே கண்காட்சி வளாகத்தில் சில மாணவர்களிடம் பேசிய போது பெரும்பாலானவர்கள் EEE என்றுதான் முடிவெடுத்திருக்கிறார்கள். ‘ஏன் இந்தப் படிப்பு?’ என்று கேட்டால் கிட்டத்தட்ட அத்தனை பேருக்கும் தெளிவான பதிலைச் சொல்லத் தெரியவில்லை. வீட்டில் சொன்னார்கள். ஆசிரியர்கள் சொன்னார்கள் என்று குழப்புகிறார்கள். அவனுக்கு எப்படிச் சொல்லத் தெரியும்? இந்தக் கண்காட்சியில் ஆள் பிடிக்க வந்திருந்த ஆசிரியர்களுக்கே தெரியவில்லை. ஒரு தொழிலதிபரின் கல்லூரிக்காரர்களைச் சந்திக்க நேர்ந்தது. அந்தக் கல்வித்தந்தை பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என்று சகல கல்லூரிகளையும் நடத்தி வருகிறார். அந்தக் கல்லூரியின் ஆசிரியரிடம் ‘ஏன் இந்த வருடம் எல்லோரும் EEE விரும்புகிறார்கள்?’ என்று கேட்டுத் தொலைத்துவிட்டேன். 

‘நீங்க என்ன படிச்சிருக்கீங்க?’ என்று கேட்டார். 

‘எம்.ஏ தமிழ்’ என்று சொன்னது அவருக்கு வாகாக போய்விட்டது. ‘EEE படிப்பதற்கு எளிமையானது’ என்பதில் ஆரம்பித்து எதை எதையோ இழுத்துக் கொண்டு போனார். விட்டால் ரஜினிகாந்த் இதைத்தான் படித்தார் என்று சொல்வார் போலிருந்தது. ஏன் இப்படி குழப்புகிறார் என்று விசாரித்தால் காரணம் மிக எளிமையானதாக இருந்தது. அவர் கலைக்கல்லூரியில் வணிகவியல் ஆசிரியர். பொறியியல் படிப்பு குறித்து அவர் ஆலோசனை சொல்லிக் கொண்டிருக்கிறார். அதைத் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் ஓரளவுக்காவது தெரிந்து வைத்துக் கொண்டு பேச வேண்டாமா?

முதல் பத்தியில் சொன்ன சதுரங்க வேட்டை ஆசாமி பெற்றோர்களோடு வருபவர்கள் யாராக இருந்தாலும் இழுத்து வைத்துப் பேசிக் கொண்டிருந்தார். ‘எந்த ஊர்?’ ‘என்ன வேலை செய்யறீங்க?’ என்பதில் ஆரம்பித்து ‘நீங்க கவுண்டரா? மேனேஜ்மெண்ட்ல அத்தனை பேரும் கவுண்டங்கதான்’ என்றெல்லாம் பேசுகிறார். அவர்கள் கல்லூரியின் மேலாண்மையில் அறுபது பேர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்களாம். ஆளாளுக்கு இரண்டு மூன்று நிறுவனங்கள் வைத்திருப்பதாகவும் படித்து முடித்தவுடன் அவர்களே வேலை கொடுத்துவிடுவதாகவும் லிட்டர் லிட்டராக ஊற்றிக் கொண்டிருந்தார்.

‘நீங்க நம்ம காலேஜ்ல படிச்சீங்கன்னா...முடிக்கும் போது கல்லூரி நிர்வாகத்திடம் வேலை வேண்டும் என்று உரிமையோடு கேட்கலாம்..அவர்கள் கனிவோடு அணுகுவார்கள்’ என்று கல்யாண் ஜூவல்லர்ஸ் பிரபுவை மிஞ்சிவிடுவார் போலிருந்தது. 

கண்காட்சிக்கு முப்பது கல்லூரிக்காரர்கள்தான் வந்திருப்பார்கள். சிவப்பான பெண்களை அமர வைப்பதிலிருந்து இப்படியான சதுரங்க வேட்டை ஆசாமிகள் வரைக்கும் சகலமான வேலைகளையும் கல்லூரிகள் செய்து கொண்டிருக்கின்றன. கண்காட்சியின் பெயரை மட்டும் வழிகாட்டி கண்காட்சி என்று வைக்கிறார்கள். எந்த வழியைக் காட்டுகிறார்களோ தெரியவில்லை. பொறியியல் படிப்புகள் பற்றி அடிப்படையான புரிதல் எதுவும் இல்லாமல் விட்டில் பூச்சிகளைப் போல மாணவர்களும் பெற்றோர்களும் விழுகிறார்கள். கல்லூரிகளும் அதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் படுவதாகத் தெரியவில்லை. ஆட்களை வளைத்தால் போதும். விதவிதமான வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டிருந்தார்கள். இதற்கு மேல் இங்கே நின்று கொண்டிருந்தால் மயக்கம் வந்துவிடும் போலிருந்தது. 

வெளியே வந்த போது ‘அட்மிஷன் நடந்து கொண்டிருக்கிறது...உங்கள் குழந்தைகளை எங்கள் பள்ளியில் இப்பொழுதே சேர்த்துவிடுங்கள்....அதிர்ஷ்டக் கடவுள் ஒரு முறைதான் கதவைத்தட்டுவார்..தவறவிட்டுவிடாதீர்கள்’ என்று ஒலிப்பெருக்கி பொருத்தப்பட்ட ஆட்டோவில் கத்தியபடி போய்க் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். அஸ்ஸு. இஸ்ஸு!