May 4, 2015

பொம்மலாட்டம்

சமீபமாக இணையத்தில் ஒரு விவகாரம் சூடு கிளப்பிக் கொண்டிருக்கிறது. இணைய சமத்துவம். Net neutrality என்கிற இந்தச் சொல் உருவாக்கப்பட்டு தசாப்தம் கடந்தாகிவிட்டது. நமக்குத்தான் இதுவரைக்கும் அதைப் பற்றி பேச பெரிய அவசியம் உருவாகியிருக்கவில்லை. இப்பொழுது பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கு மிகப்பெரிய காரணமிருக்கிறது. ஏர்டெல், ரிலையன்ஸ் உள்ளிட்ட அலைபேசி பெருந்தலைகள் சில தில்லாலங்கடி முஸ்தீபுகளில் இறங்கியிருக்கிறார்கள். இத்திட்டத்தின்படி இவர்களது வாடிக்கையாளர்கள் சில இணையதளங்களை மட்டும் தங்களது அலைபேசி வழியாக இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற தளங்கள் அல்லது செயலிகளை(APP) பெற வேண்டுமானால் தனியாகக் காசு கட்ட வேண்டும். 

எதற்காக இப்படியொரு பாரபட்சத்தைக் கொண்டு வர முயற்சிக்கிறார்கள் என்பதைப் பிறகு பார்க்கலாம். ஆனால் இவர்கள் எந்தவிதத்திலும் வெற்றியடைந்துவிடக் கூடாது என்பதற்கான கவன ஈர்ப்புகளை இணைய ஆர்வலர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அலைபேசி நிறுவனங்களின் இந்த பாரபட்சத்தை ஆதரித்தால் எதிர்காலத்தில் இணையவாசிகளின் சுதந்திரம் பாதிக்கப்படும் என்பதில் ஆரம்பித்து இணையத்தை நம்பித் தொடங்கப்படும் சிறுநிறுவனங்கள் காலியாகிவிடும் என்பது வரை ஏகப்பட்ட கருத்துக்களை எதிர்ப்பாளர்கள் முன்வைக்கிறார்கள். இந்த எதிர்ப்பில் நிறைய அர்த்தங்கள் இருக்கின்றன.

இந்திய தகவல் தொடர்புச் சந்தை படுவேகமாக விரிவடைந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் கணினி வழியாக இணையத்தைப் பயன்படுத்துபவர்களைக் காட்டிலும் அலைபேசி வழியாக இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரிக்கிறது. இந்த வருடத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை இருபது சொச்சம் கோடியைத் தாண்டிவிடும் என்று கணித்திருக்கிறார்கள். அதிகமான வசதிகளைக் கொண்டிருக்கும் நுண்ணறிபேசிகள்(Smartphone) புதிது புதிகாக வந்து கொண்டேயிருக்கின்றன என்பதால் அலைபேசி வழி இணையப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை இன்னும் ஓரிரண்டு வருடங்களில் இருமடங்கானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவ்வளவு பெரிய ஜனத்திரளை வைத்துக் கொண்டு லாபம் கொழிப்பதற்கு கார்போரேட் நிறுவனங்கள் விரும்புவது சகஜம்தானே? அத்தகைய ஒரு செயல்தான் அலைபேசி நிறுவனங்களின் இந்தச் செயல்பாடும்.

கடந்த சில வருடங்களாக குறுஞ்செய்திகளின் வழியாக வந்து கொண்டிருந்த வருமானம் அதலபாதாளத்தில் விழுந்திருக்கிறது. கிட்டத்தட்ட நான்காயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கணித்திருக்கிறார்கள். வாட்ஸப், ஃபேஸ்புக் போன்றவற்றின் வழியாக இலவசமாகச் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் வசதி இருக்கும் போது எதற்காக காசு செலவழித்து குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்? அதனால் குறுஞ்செய்தி அனுப்புபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது. என்றாலும் இதன் காரணமாக அலைபேசி நிறுவனங்களுக்கு நட்டம் என்று சொல்லிவிட முடியாது. அலைபேசி வழியாக இணையத்தைப் பயன்படுத்துவதற்காக ‘இண்டர்நெட் பேக்’ என்ற பெயரில் வாடிக்கையாளர்கள் தனியாகக் கட்டணம் செலுத்துகிறார்கள்தான். கணக்குப் பார்த்தால் இதில் வரும் வருமானம் குறுஞ்செய்தியில் இழக்கும் நான்காயிரம் கோடிகளைவிட பன்மடங்கு இருக்கும். என்ன இருந்தாலும் கார்போரேட் முதலாளிகள் அல்லவா? புதிதாக வரும் வருமானம் வந்து கொண்டேயிருக்கட்டும். பழைய வருமானத்தில் ஒரு பைசா கூட இழப்பு வரக் கூடாது என விரும்புவார்கள். இதை எப்படித் தடுக்க முடியும் என்று யோசித்தவர்கள் முதலில் ‘ஓவர் த டாப்’ என்கிற சேவைகள் மீது முதலில் கை வைக்கலாம் என்று முடிவெடுத்தார்கள்.

வாட்ஸப், ஸ்கைப் போன்ற செயலிகளை ‘ஓவர் த டாப்’ என்கிறார்கள். உதாரணமாக ஸ்கைப்பை நம்முடைய அலைபேசியில் நிறுவி வைத்திருப்பதன் மூலம் வெளிநாட்டில் இருப்பவர்களோடு கூட மிகக் குறைந்த செலவில் அல்லது இலவசமாகவே பேசிக் கொள்ள முடியும். ஸ்கைப் அலைபேசி நிறுவனங்களின் உள்கட்டமைப்பைத்தான் பயன்படுத்துகிறது. ஆனால் இதன் வழியாக அலைபேசி நிறுவனங்களுக்கு எந்த வருமானமும் கிடைப்பதில்லை. இதுதான் அலைபேசி நிறுவனங்களின் பிரச்சினை. பல கோடி ரூபாய் முதலீடு செய்து ஊர் ஊராக அலைபேசி கோபுரங்களை நட்டு வைத்து, செயற்கைக்கோள் உபயோகத்துக்காக பணம் கட்டி, 2ஜி, 3ஜி, 4ஜி என அலைக்கற்றைகளை பல கோடி ரூபாய்களில் ஏலம் எடுத்து, இருபத்து நான்கு மணி நேர வாடிக்கையாளர் சேவை மையங்களை அமைத்து, விளம்பரங்களில் காசைக் கொட்டி வாடிக்கையாளர்களை பிடித்து வைத்தால் வாட்ஸப்பும், ஸ்கைப்பும் இன்னபிற நிறுவனங்களும் ‘நோகாமல் நோம்பி கும்பிடுகிறார்கள்’ என்று அலறுகிறார்கள். 

அதனால்தான் ஏர்டெல், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் கடந்த பல மாதங்களாக தீவிரமான லாபிகளைச் செய்து வருகின்றன. தங்களின் உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி மேலேறிக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு ஏதாவதொருவகையில் ‘செக்’ வைத்தே தீர வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான காய் நகர்த்தலில் ஈடுபட்டிருக்கின்றன. இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான TRAI, மத்திய அரசாங்கம் என சகல இடங்களையும் அணுகியிருக்கிறார்கள். TRAI ஒரு வேலையைச் செய்திருக்கிறது. இருபது கேள்விகள் கொண்ட ஒரு ஆவணத்தை வெளியிட்டிருக்கிறது. இணைய சமத்துவம் தேவையா? ஓவர்-த-டாப் சேவைகளில் எந்தவிதமான கட்டுப்பாடுகளை விதிக்கலாம்? உள்ளிட்ட இருபது கேள்விகள்தான். யார் வேண்டுமானாலும் தங்களது கருத்துக்களை நிரப்பி அனுப்பி வைக்கலாம். பிரச்சினை என்னவென்றால் இருபது கேள்விகளைக் கொண்ட இந்த ஆவணம் நூற்றுக்கும் மேலான பக்கங்களைக் கொண்டது. இதை மொத்தமாகப் படித்து புரிந்து பதில் அனுப்புவது சாத்தியப்படுகிற காரியமா? நல்லவேளையாக எதிர்ப்பாளர்கள் இந்த ஆவணத்தைச் சுருக்கி வைத்திருக்கிறார்கள். உடனடியாக நிரப்பி அனுப்பச் சொல்லி ஒரு மிகப்பெரிய இயக்கத்தையும் முன்னெடுத்திருக்கிறார்கள். இணைய சமத்துவத்துக்கு ஆதரவான போக்கு அதிகரித்தத்தைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஐந்து லட்சம் மின்னஞ்சல்கள் TRAI க்கு அனுப்பப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இதையெல்லாம் ஆலோசனை செய்து தனது கருத்துக்களையும் முடிவுகளையும் TRAI வெளியிடும்.

அலைபேசிகளில் இத்தகைய கட்டுப்பாடுகள் அவசியம் என்று அலைபேசி நிறுவனங்களுக்கு ஆதரவாக வாதிடுபவர்கள் சொல்லும் முக்கியமான காரணம்- பாதுகாப்பின்மை. ஸ்கைப், வாட்ஸப் போன்றவற்றின் வழியாக நடைபெறும் உரையாடல்களுக்கு எந்தவிதமான தடயமும் இருப்பதில்லை. தீவிரவாதிகள் உள்ளிட்டவர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தினால் எந்தத் துப்பும் கிடைப்பதில்லை என்கிறார்கள். அதே போல ஓலா (OLA) போன்ற வாடகைக்கார் பிடிக்கும் செயலிகள் உள்ளூர் சட்டதிட்டங்கள் எதையும் கணக்கில் எடுத்துக் கொள்வதேயில்லை. இத்தகைய செயலிகளின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும் போது குற்றச் செயல்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய கருத்துதான் என்றாலும் இது அலைபேசி நிறுவனங்களின் செயல்களை ஆதரிப்பதற்கான ஒரு மேற்பூச்சு மட்டும்தான். இதையெல்லாம் தடுப்பதற்கு வேறு விதமான வழிவகைகளைத்தான் ஆராய வேண்டுமே தவிர காசு கொடுத்தால் மட்டும் அனுமதிப்போம் என்று அறிவிக்கக் கூடாது.

ஏர்டெல், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் திட்டத்தின்படி அலைபேசி நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போட்டுக் கொள்வார்கள். அந்தப் ஒப்பந்தத்தின்படி பெரிய நிறுவனங்கள் அலைபேசி நிறுவனங்களுக்கு பெருந்தொகையைக் கப்பமாகக் கட்டிவிடுவார்கள். கப்பம் கட்டிய நிறுவனங்களின் தளங்களையும் செயலிகளையும் மட்டும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அலைபேசி நிறுவனத்தார் இலவசமாகக் கொடுப்பார்கள். மற்ற தளங்களையும் செயலிகளையும் பார்க்க வேண்டுமானால் வாடிக்கையாளர் அலைபேசி நிறுவனங்களுக்கு காசு கட்ட வேண்டும். காசு கட்டி செயலியைப் பார்க்கும் அளவுக்கு தயாள குணமுடையவர்கள் நிரம்பிய தேசம் நம்முடையது இல்லை என்பதால் பெரு நிறுவனங்களால் மட்டும்தான் தாக்குப் பிடிக்க முடியும். சிறு நிறுவனங்களையும் புதிய நிறுவனங்களைத் தொடங்கலாம் என்கிற கனவுகளையும் காலி செய்துவிடுவார்கள். எதிர்காலத்தில் ஃபேஸ்புக் அல்லது வாட்ஸப் மாதிரியான ஏதாவது ஒரு செயலியை நீங்களோ நானோ உருவாக்கினால் பெருந்தொகையை இந்த அலைபேசி நிறுவனங்களுக்குக் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அதை தங்களின் அலைபேசி சேவை வழியாக நமது செயலியை அனுமதிப்பார்கள். நான்கு சுவர்களுக்குள் ஒரு கம்யூட்டரை வைத்துக் கொண்டு ஒரு செயலியை உருவாக்கும் இளைஞனுக்கு ஏர்டெல்லும், ரிலையன்ஸூம் கேட்கிற தொகையைக் கொடுக்கும் தெம்பு இருக்குமா என்ன? காசு கொடுக்கவில்லையென்றால் மற்றவர்களுக்கு இந்தச் செயலியைப் பற்றி தெரியவே தெரியாது. எந்த வரவேற்பும் கிடைக்காது. சோலி சுத்தம்.

முதலில் ஓவர்-த-டாப் மீது மட்டும் கட்டுப்பாடு விதிப்பவர்கள் போகப் போக இணையதளங்களின் மீதும் கை வைக்க முடியும். மிகப்பெரிய செய்தி நிறுவனங்களிடம் காசை வாங்கிக் கொண்டு அந்தத் தளங்களை இலவசமாகக் கொடுத்துவிட்டு பிற தளங்களை வாசிக்க வேண்டுமானால் வாடிக்கையாளர்கள் காசு கட்ட வேண்டும் என்று சொல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. சில தளங்களை வேகமாக தரவிறக்கமாகும்படியும் பிற தளங்களின் வேகத்தைக் குறைத்தும் யாரோ ஒரு குழுவினருக்கு சார்பாக அலைபேசி நிறுவனங்கள் செயல்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம். இவையெல்லாம் உடனடியாக புரிந்து கொள்ளக் கூடிய எதிர்விளைவுகள். ஆனால் நம்மால் யூகிக்கவே முடியாத சிக்கலான கார்போரேட் கயவாளித்தனங்களைச் செய்வதற்கான அத்தனை வழிவகைகளையும் ஆராய்வார்கள்.

இந்தப் பிரச்சினை இந்தியாவில் மட்டும்தான் என்றில்லை. உலகம் முழுவதுமாகவே விவாதங்கள் ஆரம்பித்திருக்கின்றன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இணைய சமத்துவத்துக்கு ஆதரவான கருத்துக்களை அழுத்தமாக முன் வைத்திருக்கிறார். இந்த விவகாரத்தில் இந்திய அரசாங்கமும் TRAI ம் என்ன முடிவெடுக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை அலைபேசி நிறுவனங்கள் தங்களது லாபியில் வெற்றியடைவார்களெனில் இது ஒரு தொடக்கமாகத்தான் இருக்கும். இணைய வர்த்தகத்தில் எந்த நிறுவனம் வளர வேண்டும் எந்த நிறுவனம் தேய வேண்டும் என்பதையெல்லாம் முடிவு செய்வதற்காக மிகப்பெரிய பணப்பரிமாற்றங்களும் பேரங்களும் நடைபெறும். கார்போரேட் அளவில் மட்டுமில்லை சாமானியர்கள் எந்தத் தளத்தைப் பார்க்க வேண்டும் என்பதிலிருந்து எந்தச் செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்பது வரையிலும் வேறு யாரோதான் முடிவு செய்வார்கள். நம்மைக் கயிறு கட்டி ஆட்டுவார்கள். எதற்கும் வெர்ச்சுவல் உலகத்தின் மிகப்பெரிய பொம்மலாட்டத்திற்கு தயாராகிக் கொள்வோம்.

மே’2015 காலச்சுவடு இதழில் வெளியான கட்டுரை.