May 14, 2015

மலையகத் தமிழர்கள்- கடிதங்கள்

மலையகத் தமிழர்கள் பற்றிய அட்டைப்பூச்சிகள் உறிஞ்சு வாழ்க்கை கட்டுரை குறித்து சில கடிதங்கள் வந்திருந்தன. அதில் இவை இரண்டும் சில முக்கியமான விஷயங்களைத் தொடுகின்றன. 

                                                                       ****
                                                                         (1)

நான் அறிஞ்ச வரைக்கும் மலையகத்தில உள்ள தமிழர்களை பற்றி  உங்கட கூட்டத்தில் சொன்னது எல்லாமே உண்மை தான், எங்களுடன் 2 தம்பிமார் கொழும்பில வேலை செய்யுறாங்க, அதில ஒராள் வீட்டுக்கு இப்போ 2 வருஷத்துக்கு முன்னால தான் மின்சாரம்  வந்தது என்று சொன்னார். அவ்வளவு  கஷ்டத்திலயும் பல்கலைக்கழகம் முடிச்சிருக்கார். சரியான கவலையாய் இருந்தது. ஏன் எண்டால் அதே ஹட்டனில தான் எங்க அக்கா ஓராளும் இருந்தாங்க, அவங்க வீட்டுக்கு 20-25 வருஷத்துக்கு முன்னால இருந்தே மின்சாரம்   இருந்தது. தோட்டத்தில இருக்கிறவங்களுக்கு நிறைய அடிப்படை வசதிகள் கிடைக்கிறதில்லை என்பது உண்மை தான். இன்னொன்று  கொழும்பில இருக்கிற நிறைய ஹய் பை  சிங்கள வீடுகளில மலையக தமிழ்ப் பெண்கள்  வீட்டு வேலை செய்யுறாங்க. 

இதில இன்னொரு கவலை என்ன எண்டா  நான் எல்லாரையும் 'வாங்க போங்க அவங்க இவங்க' என்று மரியாதையாய் கதைச்சால், கனடாவில இருக்கிற ஒரு ஒண்டு விட்ட அண்ணா என்னைப் பார்த்து ‘என்ன தோட்டக்காட்டான் மாதிரி வந்தாங்க போனாங்க என்று கதைக்கிறாய்’ என்று திட்டுறார். உண்மையிலேயே யாழ்பாணத்து ஆக்கள் மலையக ஆக்களை மதிக்கிறதில்லை. 

என்னோட வேலை பாக்கிற தம்பிட்ட நான் இத பத்தி கேட்டப்போ அவரும் சில விடயங்கள் சொன்னார்,   

மலையகத்தில  பிரதானமான  பிரச்சினை கல்வி தான். இலங்கையில தனியார் பாடசாலைகள் குறைவு. அரசாங்க பாடசாலைகளில தான் பெரும்பாலானவர்கள் படிப்பார்கள். அரசாங்க பாடசாலைகளில ஒன்று முதல் உயர் தரம் வரைக்கும் கல்வி இலவசம். பாடசாலையில சேர்க்கும் போது மட்டும்தான்  அட்மிசன் பீஸ் கட்டணும். பிறகு இல்லை. அப்பிடியிருந்தும் அங்க நிறைய பேர் கல்வியை இடைநிறுத்தி வேலைக்காக வெளி மாவட்டங்களுக்கு போறாங்க. இல்லை அங்கேயே வேறு வேலை செய்கிறாங்க. அதுக்கு முக்கிய காரணம் என்று அந்த தம்பி குறிப்பிட்டது -மலையகப் பாடசாலைகளில கற்பிக்கும் ஆசிரியர்களின் தரம் குறைவு, பட்டதாரி ஆசிரியர் வீதம் குறைவு, அர்ப்பணிப்போட செயற்படுவதும் இல்லை. இதனாலேயே மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் கல்வியில் அவ்வளவு அக்கறை இல்லை எண்டு. அந்த தம்பி இப்போ கொழும்பில வேலை செய்றார். அவர் அங்க போய் மாணவர்களுக்கு கருத்தரங்குகள் வகுப்புகள் வைத்து சொல்லி குடுத்திருக்கார். அதே மாதிரி நிறைய பேர் செய்தால் மாணவர்களின் எதிர்காலம் நல்லா இருக்கும் என்று நினைக்கிறார். 

அதோட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற மலையகக் கட்சிகள் இவர்களை இப்பிடியே வைத்திருக்க தான் விரும்புகிறார்கள். அப்பிடி என்றால்தானே அவர்கள் சொல்பவருக்கு வாக்கு போடுவினம். தாங்களாக யோசிக்க  தொடங்கினால்   இவங்களுக்கு வேலை இல்லாம போயிடுமே, அதான்.  ஆனால் இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு நல்ல பாடம் படிப்பிச்சிட்டாங்க. தாங்களே நல்லது கெட்டது யோசிச்சு வாக்கு போட்டிருக்காங்க. வடகிழக்குக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் மாதிரி மலையக கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து மக்களின் பிரச்சினையை அரசுக்கு தெரிவித்து தீர்வு எடுக்க வேணும் என்று தான் அந்த தம்பி சொன்னார்.  

அனுஷியா நடராஜன்

*அனுஷியா கொழும்பு நகரில் வசிக்கும் தமிழ்ப் பெண்.

                                                                       *****
                                                                          (2)

இந்தக் கட்டுரையில் சென்ஸிடிவான விஷயங்கள் தொடப்பட்டிருக்கின்றன. வாழ்த்துக்கள். 

பிரச்சினை ஸ்ரீமாவோ/சாஸ்திரியின் ஒப்பந்தத்தில் தொடங்கியது. 1964 ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்தச் சமயத்தில் கிட்டத்தட்ட ஒன்பதே முக்கால் லட்சம் தமிழர்கள் இலங்கையில் குடியுரிமை இல்லாமல் இருந்தார்கள். அவர்களில் ஐந்தேகால் லட்சம் பேரை இந்தியா திருப்பி அழைத்துக் கொள்ளும் என்றும் மூன்று லட்சம் பேருக்கு இலங்கை குடியுரிமை வழங்கும் என்று ஒப்பந்தமிட்டார்கள். மீதமிருக்கும் ஒன்றரை லட்சம் பேரின் நிலைமை குறித்து பிற்காலத்தில் விவாதித்து முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்தார்கள். சாஸ்திரியின் இந்த ஒற்றைக் கையொப்பத்தினால் கிட்டத்தட்ட ஐந்து லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் தங்களின் உரிமைகளை இழந்தார்கள். தங்கள் நிலம் என்று நம்பிக் கொண்டிருந்த இடங்களிலிருந்து விரட்டியடிப்பட்டார்கள். அவமானப்படுத்தப்பட்டார்கள்.

யாழ்ப்பாணத் தமிழர்கள் அமைதியாக மட்டுமில்லாமல் அந்த ஒப்பந்தத்தை வரவேற்றார்கள் என்பதுதான் உண்மை. மலையகத் தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய அநீதி இது. அந்தச் சமயத்தில் இலங்கையைவிடவும் இந்தியா மிக வலுவானதாக இருந்தது. இந்தியா நினைத்திருந்தால் வேறு மாதிரியான தீர்வுகளை உருவாக்கியிருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. 

“ஈழத்தில் தமிழன் சிங்களப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் கூட விட்டுவிடுவார்கள். ஆனால் மலையகப் பெண்ணைத் திருமணம் செய்தால் தொலைந்தான். கழட்டிவிட்டுவிடுவார்களாம்”- இதைவிடத் தெளிவாக மலையகத் தமிழர்கள் மீது ஈழத்தமிழர்களுக்கு இருக்கும் வெறுப்பை வெளிப்படுத்திவிட முடியாது. மிகச் சரியான கூற்று இது.

இன்னமும் மலையகத்தில் சரியான சாலை வசதிகளோ, பள்ளிகளோ கிடையாது. நிறைய ஈழத் தமிழர்கள் ஐரோப்பாவிலும் கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும் புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள். இப்பொழுது நிலைமை ஓரளவு சீரடைந்திருக்கிறது. ஆனாலும் தாயகத்துக்குத் திரும்பி வரத் தயங்குகிறார்கள். அங்கிருந்தாலும் கூட மலையகத் தமிழர்களின் நலவாழ்வுக்காக அவர்கள் எந்தப் பங்களிப்பையும் செய்வதில்லை. நாமும் செய்வதில்லை. அப்புறம் என்ன தொப்புள்கொடி உறவு?

மலையகத் தமிழர்களின் வாழ்க்கை உண்மையிலேயே வெகு துக்ககரமானது. அவர்கள் மரியாதையாக நடத்தப்பட வேண்டும். ஈழத் தமிழர்கள் தனித் தேசம் கேட்கிறார்கள். ஆனால் மலையகத் தமிழர்கள் மரியாதையைத்தான் கேட்கிறார்கள். ஏதாவது செய்தாக வேண்டும்.

நாகேஸ்வரன்