May 14, 2015

அம்மணம்

இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு பத்திரிக்கையில் கருத்துக் கேட்டிருந்தார்கள். இதெல்லாம் பெருமையா? நமது கடமை என்று நினைத்துக் கொண்டு பக்கம் பக்கமாக அனுப்பி வைத்திருந்தேன். இன்னமும் பிரசுரமான பாட்டைக் காணவில்லை. வாய் இருக்கம்மாட்டாமல் இரண்டு மூன்று பேரிடம் சொல்லி வைத்ததுதான் வம்பாகப் போய்விட்டது. நேரில் பார்க்கும் போதெல்லாம் கேட்கிறார்கள். முப்பது ரூபாய்க்கு கைத்தறித் துண்டு கிடைக்கிறதாம். அதில் ஒன்றை வாங்கி அவர்கள் எதிரில் வரும் போதெல்லாம் முகத்தை மூடிக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்.

அது போகட்டும். 

அவர்கள் கேட்டிருந்த சமாச்சாரத்தைத்தான் சொல்ல வேண்டும். ‘இணையத்தில் எழுதறதைப் பத்திச் சொல்லுங்க’ என்று கேட்டிருந்தார்கள். இப்படிப் பெரு மொத்தமாகக் கேட்டால் என்ன சொல்வது? ‘குறிப்பா சொல்லுங்க சார்’ என்றேன்.  ‘குறிப்பான்னா...ம்ம்ம்ம்...எதையெல்லாம் ரசிக்கிறார்கள்?’ என்றார்கள். யோசித்துப் பார்த்தால் இதற்கான பதில் எதுவும் என்னிடமில்லை. எல்லாவற்றையும் கலந்துகட்டித்தான் ரசிக்கிறார்கள். இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கும் வரைக்கும்தான் சுவாரஸியம். தெரிந்துவிட்டால் என்ன சுவாரஸியமிருக்கிறது? அப்புறம் அதை மட்டும்தான் எழுதத் தோன்றும். 

இணையத்தில் எதை எழுதுகிறோம் என்பதைவிடவும் எப்படி நம்மை வெளிப்படுத்துகிறோம் என்பதுதான் அவசியம் என்று தோன்றுகிறது. மிகப்பெரிய வி.ஐ.பி என்று நினைத்திருப்போம். அவர் இணையத்தில் உலவும் போது சர்வசாதாரணமாக அவரை நெருங்கிப் பேசிவிட முடிகிறது. இருபது வருடங்களுக்கு முன்பு வரையில் சமூகத்தில் ‘செலிபிரிட்டி ஸ்டேட்டஸ்’ என்ற ஒன்றிருந்தது. சாமானியர்களிடமிருந்து தம்மை விலக்கியே வைத்திருப்பார்கள். தேவைப்படும் போது மட்டும் ஒன்றரை மில்லிமீட்டருக்கு மட்டும் சிரிப்பார்கள். அடுத்தவர்கள் தங்களிடம் ஆட்டோகிராப் கேட்டு வர வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இப்பொழுது அதெல்லாம் எதுவும் இல்லை. பொதுவாகப் பார்க்கும் போது தமிழர்களிடையே இந்த செலிபிரிட்டி-சாமானியன் என்கிற மனநிலை இருந்தாலும் இணையத்தைப் பொறுத்தவரைக்கும் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்து கொண்டிருக்கிறது. இன்னும் பத்து வருடங்களில் காணாமல் போய்விடும்.

யாராக இருந்தாலும் அடிப்பார்கள். 

இணையத்தில் வாசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அலுவலக வேலைகளுக்கிடையில் வாசிப்பவர்கள்தான். காலையிலிருந்து மாலை வரைக்கும் கணினித்திரையை வெறித்துக் கொண்டிருக்கும் போது ஏதாவதொருவகையில் தங்களின் கவனத்தைத் திசை திருப்புகிறார்கள். ஃபேஸ்புக், ட்விட்டர் உதவுவது போலவே வலைப்பதிவும் உதவுகிறது. அவ்வளவுதான். அவ்வளவுதானா  என்று கேட்டால் அவ்வளவுதான். அதற்கு மேல் எதுவும் இல்லை. ‘என் எழுத்துதான் சாகாவரம் பெற்றது..அது ஒரு புனித வஸ்து’ என்பதெல்லாம் புருடாதான். எது சாகாவரம் பெற்றது என்பதைக் காலம் மட்டும்தான் தீர்மானிக்கும். இரண்டாயிரம் வருட காலத்தில் தமிழில் எழுதப்பட்ட எழுத்துக்களில் எத்தனை எழுத்துக்கள் சாகாவரம் பெற்றிருக்கின்றன? மிகச் சொற்பம்.

இதையெல்லாம் கணிக்கவே முடியாது. அப்புறம் எதற்கு அலம்பல்கள்? தெரியும் என்றால் தெரியும். தெரியாது என்றால் தெரியாது. எதற்கு வெட்டி பந்தா? 

இந்த வாரம் தினமணிக்கு ஒரு கட்டுரை அனுப்பியிருந்தேன். சினிமாக்கட்டுரை. 1939 ஆம் ஆண்டிலிருந்து 1944 ஆம் ஆண்டு வரைக்கும் பாரீஸில் நடந்த கதை அது. முதல் தடவை படத்தைப் பார்க்கும் போது குழப்பமாக இருந்தது. படம் முடிந்த பிறகு பாரீஸ் நகரின் அந்தக் காலகட்ட வரலாற்றைப் படித்துவிட்டு மீண்டும் படத்தைப் பார்த்தேன். இரண்டாவது முறை புரிதலே வேறு மாதிரி இருந்தது. இதைக் கட்டுரையிலும் குறிப்பிட்டிருந்தேன். ‘முதன்முறையாக இந்தப் படத்தைப் பார்க்கும் போது எனக்கு இந்த வரலாறு தெரியவில்லை. ஹிட்லரின் ஆட்கள் ஏன் பாரீஸ் நகரில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று குழப்பமாகத்தான் இருந்தது. ஆனால் பிரச்சினை படத்தில் இல்லை. என்னுடைய அறியாமையில்தான்’ என்று எழுதியிருந்தேன். இந்த வரிக்குக் கத்தரி போட்டுவிட்டார்கள். ‘உங்களை நீங்களே degrade செய்து கொள்வது மாதிரி இருக்கு’ என்று என்னிடம் சொல்லிவிட்டுத்தான் கத்தரித்தார்கள் என்பதால் அவர்களைக் குற்றம் சொல்லவில்லை. ஆனால் குழப்பமாகவே இருக்கிறது. இப்பொழுது கட்டுரையைப் படித்துப் பார்த்தால் பாடம் நடத்துவது போலத் தெரிகிறது. இதெல்லாம் எனக்கு ஏற்கனவே தெரிந்திருந்ததாகவும் அதனால் நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் மகாஜனங்களே என்று கீழே இருப்பவர்களைப் பார்த்து பாடம் எடுப்பதாகவும் தெரிகிறது. இது தவறுதானே?

எழுதுகிறவன் தம்மை குறைத்துக் கொள்ளக் கூடாதா?  தனக்குத் தெரியவில்லை என்பதை எழுதுகிறவன் ஒத்துக் கொள்ளும் போது வாசகன் எழுத்தாளனைவிட தன்னை உயர்வாக நினைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது என்னும் எளிய சைக்காலஜிதானே இது? எழுதுகிறவனைவிட வாசகன் தன்னை உயர்வாக நினைத்துக் கொள்ளக் கூடாதா என்ன? அபத்தமாகத் தெரிகிறது. 

நம்மை நாமே உயர்த்தி வைத்துக் கொள்வதெல்லாம் அவசியமில்லை. அறிவைப் பொறுத்த வரைக்கும் அம்மணமாகத் திரிய வேண்டும். இவ்வளவுதான் என்னுடைய அறிவு. இவ்வளவுதான் எனக்குத் தெரியும். மறைத்து வைக்க என்னிடம் எதுவும் இல்லை. மறைத்து வைக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று இருக்க வேண்டும். அது ஒரு சுதந்திரம். அறிவுச் சுதந்திரம். தெரியாததைத் தெரிந்த மாதிரி காட்டிக் கொண்டு, புரியாததைப் புரிந்த மாதிரி தலையைத் தலையை ஆட்டிக் கொண்டு அறிவாளி என்று நிரூபித்தால் நோபல் பரிசு தரப் போகிறார்களா?

பில்ட் அப்புகளும், புருடாக்களும், அலம்பல்களும் நம் மனத் திருப்திக்குச் செய்து கொள்ளுகிற ஆடம்பரங்கள். அரிதாரங்கள்.

அவசியமற்ற ஆடம்பர அரிதாரங்கள்.

சமீபத்தில் எழுதியிருந்த ‘சில்லரைப்பயலே’ என்ற கட்டுரையை வாசித்துவிட்டு ஒருவர் அழைத்துப் பேசினார். வயதானவர். இப்படியெல்லாம் எழுதினால் உன்னைப் பற்றித் தவறான பிம்பம் உருவாகிவிடும் என்றார். ‘சரிங்க’ என்று சொல்லிவிட்டு துண்டித்துவிட்டு வெகுநேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த உலகம் நம் மீது அழுத்தத்தை உண்டாக்கிக் கொண்டேயிருக்கிறது. நாம் எப்படி பேச வேண்டும், எதை எழுத வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என எல்லாவற்றிலும் ஏதாவதொரு கட்டுப்பாட்டை விதிக்கிறது. 'உன்னை நல்லவன் என்று காட்டிக் கொள்'. 'அறிவாளியாக நிரூபி' என்று அழுத்துகிறார்கள். இதெல்லாம் அவசியமில்லை. நாம் நாமாக இருக்கும் வரைக்கும்தான் சந்தோஷம் நிம்மதி எல்லாமும். எப்பொழுது அடுத்தவர்களிடம் நம்மை நிரூபிக்க வேண்டிய அவசியம் வருகிறதோ அப்பொழுதே நம்மை இழந்துவிடுகிறோம். 

இதெல்லாம்தான் பிரச்சினை. உண்மையை மறைக்கச் சொல்கிறார்கள். தெரியாததைத் தெரியாது என்று ஒத்துக் கொள்ள வேண்டாம் என்கிறார்கள். கஷ்டம்தான். யோசித்துப் பார்த்தால் பிம்பம் என்ற ஒன்று அவசியமே இல்லை. நாம் என்னவாக இருக்கிறோமோ அதாகவே வெளிப்படுவதுதான் ஆளுமை. மற்றதெல்லாம் பலூன். எப்பொழுது வேண்டுமானாலும் உடைந்து போய்விடும். எழுத்தாளனுக்கு மட்டும் என்றில்லை சாமானியனுக்கும் இது பொருந்தும். ஆனால் இங்கு அப்படி நடப்பதில்லை. உண்மைத்தன்மைக்கு முற்றிலும் முரணான பிம்பங்களை கட்டமைத்துவிடுகிறோம். அதுதான் சிக்கலாகிவிடுகிறது. வறக்கஞ்சனாக இருப்பவன் மேடையில் தன்னை தயாளனாகக் காட்டிக் கொள்கிறான். மூடன் தன்னை அறிவாளியாகக் காட்டுகிறான். பொம்பளைப் பொறுக்கி தன்னை சந்நியாசியாகக் காட்டிக் கொள்கிறான். ஒரு கட்டத்தில் இதெல்லாம் உடைந்து உருகும் போது ‘அடச்சீ இவனையா நம்பினோம்’ என்றாகிவிடுகிறது. 

பலூன் வெடிக்கும் வரைக்கும் பிரச்சினையில்லை. வெடித்துவிட்டால் அவ்வளவுதான். எவ்வளவு போராடினாலும் திரும்ப ஊத முடியாது.