Apr 20, 2015

மசாஜ் பார்லர் ரெய்டு

இரவில் தூக்கம் கெட்டு பயணம் செய்தால் அடுத்த நாள் தெளிவாகிவிடுவதற்கான ஒரு வழி இருக்கிறது. நீராவிக் குளியல். நாம் கால் வைக்கும் அத்தனை ஊர்களிலும் இந்த வசதி இருக்காதுதான். ஆனால் சென்னையில் உண்டு. நேற்று காலையில் பத்து மணிக்கெல்லாம் டிஸ்கவரி புத்தகக் கடைக்குச் சென்றிருந்தோம். கடையே திறக்கவில்லை.  ‘பிரபா ஒயின்ஸ் ஷாப் ஓனருங்களா?’ என்கிற ரீதியில் வேடியப்பனின் எண்ணுக்கு ஆளாளுக்கு ஃபோன் செய்யத் தொடங்கினார்கள். பதினோரு மணிக்கு கெளதம சித்தார்த்தனின் படைப்புலகம் குறித்தான கூட்டம் தொடங்கியது. என்னால் அமரவே முடியவில்லை. தூக்கம் தள்ளுகிறது. கூட்டத்தில் பேசியவர்கள் மோசம் என்று சொல்லவில்லை. பயணக் களைப்பு. 

புத்தகக் கடையிலிருந்து நேராக நடந்தால் ஒரு சலூன் இருக்கிறது. அந்த சலூனின் மேல்தளத்தில் நீராவிக் குளியல் எடுத்துக் கொள்ளலாம். கடந்த முறை காலை எட்டு மணிக்கே அந்தக் கடையைத் தட்டியதால் வெறும் ஆண்கள்தான் இருந்தார்கள். சலூன் கடை ஊழியர்கள். பெரிய பிரச்சினை இல்லை. அறைக்குள் அமர வைத்து சூட்டைக் கிளப்பிவிட்டார்கள். வியர்வை வழிந்தது. உடல் வெடுக்கென்று ஆகிவிட்டது. அதனால் இந்த முறையும் அதே கடைக்குச் சென்றேன். நேற்று பதினோரு மணியைத் தாண்டிவிட்டதல்லவா? அதனால் நீராவிக் குளியல் ஏற்பாடுகளை பெண்கள்தான் செய்தார்கள். எசகுபிசகாகவெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. பத்து நிமிடம் காத்திருக்கச் சொல்லிவிட்டு அறையைத் தயார் செய்தார்கள். ஹீட்டரை அவர்கள் ‘ஆன்’ செய்துவிடுவார்கள். அறைக்குள் அமர்ந்து கதவைப் பூட்டிக் கொள்ள வேண்டும். கடந்த முறை சூடு தாங்க முடியாத போது அவ்வப்போது அறைக் கதவைத் திறந்து வைத்துக் கொண்டேன். இந்த முறை அதற்கு சாத்தியமில்லை. வெளியே பெண்கள் நடமாடினால் சங்கோஜம் ஆகிவிடுமே என்று அடைபட்டுக் கிடக்க வேண்டியதாகிவிட்டது.

‘எவ்வளவு நேரம் தருவீங்க?’ என்றேன்.

‘பதினைந்திலிருந்து இருபது நிமிடம் சார்’

‘சரிங்க...நீங்க போங்க.. நேரம் ஆனவுடன் வந்து கதவைத் தட்டுங்க’ என்று சொல்லிவிட்டு தாழிட்டுக் கொண்டேன். துணிமணியெல்லாம் கழட்டி- துணியை மட்டும்தான் - பக்கத்து அறையில் மாட்டிவிட்டு வந்து அமர்ந்து கொண்டேன். நல்லவேளையாக ஒரு துண்டைக் கைவசம் கொடுத்துவிட்டு போயிருந்தார்கள்.

ஒரு குட்டி அறை. அதற்கு நடுவில் ஒரு முக்காலியைப் போட்டு வைத்திருந்தார்கள். பக்கவாட்டில் இருக்கும் குழாயிலிருந்து நீராவி அறையை நிரப்புகிறது. அந்த வெப்பம் மெதுவாக நம்மை ஆக்கிரமிக்கத் துவங்கி ரத்தக் குழாய்கள் விரிவடைந்து வியர்வையை வழியச் செய்கிறது. பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும். வெப்பம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. பற்களைக் கடித்துக் கொண்டு பொறுத்துப் பார்த்தேன். வெளியே பெண்கள் யாராவது நடமாடக் கூடும் என்ற சங்கடம் இருக்கத்தான் செய்தது. ஆனால் சமாளிக்க முடியாது போலிருந்தது. கதவைத் திறந்துவிடலாம் என்று துண்டைக் கட்டிக் கொள்ளத் தயாராவதற்குள் யாரோ கதவைத் தட்டினார்கள்.

‘சார்...கதவைத் திறங்க’

நேரம் முடிந்துவிட்டது போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

‘சரிங்க..நீங்க போங்க’- கதவைத் திறக்காமலேயே பதில் சொன்னேன்.

‘இல்ல சார்...போலீஸ் நிக்கிறாங்க..உங்களைப் பார்க்கணுமாம்’

என்னைப் பார்க்க போலீஸா? டிஸ்கவரி கடையிலிருந்து யாரோ பின்னாலேயே வந்து கலாய்க்கிறார்கள் போலிருக்கிறது என்றுதான் நினைத்தேன். இருந்தாலும் அந்த மூன்றெழுத்துச் சொல்லைக் கேட்டாலே பதறத் தொடங்கிவிடுகிறேன்.

‘எதுக்குங்க?’

‘ரெய்ட் வந்திருக்காங்க...சும்மா செக்கிங்’

ரெய்டு- இந்த ஒரு வார்த்தை போதாதா? சப்தநாடிகளும் துள்ளி அடங்கின. இருந்தாலும் ஒரு நம்பிக்கை- அறைக்குள் தனியாகத்தான் இருக்கிறேன். எந்த வழக்கும் பதிய முடியாது என்கிற ஆசுவாசம். இருந்தாலும் மண்டைக்குள் குறுக்கும் மறுக்குமாக எண்ணங்கள் அலைபாயத் தொடங்கியிருந்தன. அடுத்த அறைக்குள் யாராவது ஒரு அரசியல்வாதியின் மகன் ஏதாவது தப்புத்தண்டா செய்து கொண்டிருந்தால் அவனைத் தப்பிக்க வைப்பதற்காக வழக்கை என் மீது போடவும் வாய்ப்பிருக்கிறது என்று நினைத்தபோது வியர்த்திருந்த உடம்பில் மீண்டுமொருமுறை வியர்வை பெருக்கெடுத்தது. எப்படித் தப்பிக்க முடியும்? பிடித்துக் கொண்டு போய் அமர வைத்து நிழற்படம் எடுப்பார்கள். நாளைக்கு ‘சென்னையில் விபச்சாரம். பெங்களூர் சாஃப்ட்வேர் இஞ்சினியர் உட்பட ஐந்து பேர் கைது’ என்று தினத்தந்தியில் படத்தோடு செய்தி வரும். செல்ஃபோனை வாங்கி வீட்டில் இருப்பவர்களுக்குத் தகவல் கொடுப்பார்கள். என்னவென்று சொல்வார்கள்? யோசிக்கும் போதே பேயறைந்த மாதிரி இருந்தது. இனி அவ்வளவுதான். ஃபேஸ்புக், ஜிமெயில், நிசப்தம் என அத்தனையும் மூடி வைத்துவிட வேண்டியதுதான். ‘இவனையா நல்லவன் என்றோம்’ என்று ஆளாளுக்கு வாயில் வசம்பை வைத்துத் தேய்த்துக் கொள்வார்கள். ‘இவன் ஒரு தில்லாலங்கடின்னு அப்பவே தெரியும்’ என்று ஒரு சாரார் நாறடிப்பார்கள். ஃபேஸ்புக் நக்கல் கமெண்ட்டுகளில் பிரேமானந்தா, நித்யானந்தா வரிசையில் நம் படத்தையும் சேர்த்துக் கொள்வார்கள். ஆண்டவா என்ன இது சோதனை? 

இவற்றையெல்லாம் யோசிப்பதற்குள் மீண்டும் கதவைத் தட்டினார்கள். 

இது ஆண் குரல்- ‘வெளியே வாங்க சார்’. போலீஸ்காரனேதான்.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. அவசரத்தில் ‘ஜட்டியைப் போட்டுட்டு வர்றேன்’ என்று உளறிவிட்டேன். உண்மையில் ‘துண்டைக் கட்டிக் கொண்டு வருகிறேன்’ என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். கண்றாவி. அந்தப் போலீஸ்காரர் மனதுக்குள் என்னவெல்லாம் நினைத்துப் பார்த்தாரோ! ஜட்டி மீது அரைஞாண் கயிறைப் போட்டு இறுக்கி துண்டையும் அவிழ்க்கவே முடியாத அளவுக்கு படி-முடிச்சு போட்டுக் கொண்டேன். ஏதாவது தள்ளுமுள்ளு நடந்தால் மானம் துண்டு வழியாக போய்விடக் கூடாதல்லவா?

நல்லவனைப் போல முகத்தை வைத்துக் கொண்டு கதவைத் திறந்தேன்.

‘எதுக்கு வந்தீங்க?’ என்றார் அந்த மஃப்டி மனிதர்.

வியர்வை வடியும் முகத்தில் பால் வடியும் படியான பாவனையைக் கொண்டு வந்து ‘ஸ்டீம் பாத் எடுத்தா ரத்த ஓட்டம் அதிகமாகி கொழுப்பு கரையும் சார்’

‘உங்க உடம்புலதான் சதையே இல்ல..அப்புறம் எங்கே கொழுப்பு?’ 

ஜோக் எல்லாம் அடிக்கிறார். சிரித்து வைத்துவிடலாம் என்று சிரித்துக் கொண்டேன். ‘போய் குளிச்சுட்டு வாங்க’

குளிக்கவெல்லாம் இல்லை. குளியலறைக்குள் புகுந்து இரண்டு குடுவை தண்ணீரை ஊற்றிவிட்டு ஆடையை மாற்றிக் கொண்டு வந்து நின்றேன். அதற்குள் கூடச் சேர்ந்த இன்னொரு மஃப்டியாளர் ‘இவரைப் பார்த்தா சம்பந்தமே இல்லையே’ என்றார். எதுக்கு சம்பந்தமில்லை என்று சொல்கிறார் என்று புரிந்து கொள்ள வெகுநேரம் ஆகவில்லை. ஈகோவைத் தீண்டுகிறான் கிராதகன்.

ஐடி கார்ட் வைத்திருந்தேன். 

‘பெங்களூரா?’

‘ஆமா சார்...ஒரு மீட்டிங்குக்கு வந்தேன்’

‘என்ன மீட்டிங்’

‘இலக்கியம் சார்’

‘ம்ம்ம்ம்’

‘எங்கே நடக்குது?’

சொன்னேன். 

‘பெங்களூரில் இல்லாத ஸ்டீம்பாத்தா?’

‘அங்க இருக்கு சார்...காலையில்தான் சென்னை வந்தேன்....ரூம் எடுத்தா ஐந்நூறு ஆகும்....இங்க அப்படியில்ல....ஷேவிங் முடிச்சு ஸ்டீம்பாத் எடுத்து குளிச்சுட்டு கீழே போன முந்நூறு ரூபாதான் கேட்பாங்க’ என்ற போது அந்த பெண் அப்படி முறைத்தாள். அடுத்த முறை இந்தப் பக்கமே எட்டிப்பார்க்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். மீறி வந்தால் கழுத்தில் கத்தியை வைத்துவிடுவார்கள்.

போலீஸ்காரர்களுக்கு சந்தேகம் நிவர்த்தி ஆகியிருக்கக் கூடும். மற்ற எந்த விவரமும் கேட்கவில்லை. ‘சரி போய் எடுத்துக்குங்க’ என்றார்கள்.

‘அதெல்லாம் வேண்டாம்...ஆளை விட்டீங்கன்னா போதும்...கிளம்பட்டுமா?’

விட்டுவிட்டார்கள். அவசர அவசரமாக பையைத் தூக்கிக் கொண்டு திப்புரு திப்புரு என இறங்கி வெளியே ஓடி வந்த பிறகுதான் ஆசுவாசமாக இருந்தது. ‘சாஃப்ட்வேர் இஞ்சினியர் கைதுக்கு பதிலாக இளம் எழுத்தாளர் கைது என்று செய்தி வந்தால் கெத்தாக இருக்குமல்லவா?’ என்று நினைத்த போது ‘ஏண்டா உன் புத்தி இப்படிப் போகுது’ என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். ஈரத்தை நன்றாகக் கூட துவட்டவில்லை. அப்படியே டிஸ்கவரி புக் பேலஸில் போய் அமர்ந்தேன். மேடையில் இன்னமும் யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஈழத்துக் கவிஞர் அகரமுதல்வன் அருகில் வந்து ‘ஷேவிங் செஞ்சுட்டு வர்றீங்களோ’ என்றார்.  ‘ஜஸ்ட் மிஸ்...save ஆகிட்டு வர்றேன்’ என்றேன். அவருக்கு நிச்சயமாக புரிந்திருக்காது. ஆனால் இட் ஹேஸ் ஒரே ஒரு மீனிங்...பட் பிக் மீனிங்!