Apr 21, 2015

வைரமுத்துவும் மாயச்சூழலும்

புகழ் ஒரு மாயச் சூழல். இழுத்துக் கொண்டேயிருக்கும். யாராவது நம்மைக் கவனிக்கத் தொடங்கும் போதே ஒரு பரபரப்புத் தொற்றிக் கொள்ளும். அதன் பிறகு அந்தப் புகழ் இன்னமும் பரவ வேண்டும் என மனம் விரும்புகிறது. அதற்கான காரியங்களைச் செய்யத் தொடங்குகிறோம். அந்த வெளிச்சம் ஒரு போதை. போதை குறையும் போதெல்லாம் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. எதையெல்லாம் செய்ய வேண்டும் என கணக்குப் போட்டு அதன்படி காய்களை நகர்த்துகிறோம். மீண்டும் தாங்கிப்பிடித்துவிட்டால் பிரச்சினையில்லை. இல்லையென்றால் ஒரு படி கீழே இறங்கவும் தயங்குவதில்லை. ஒரு படி இரண்டு படிகளாகி இரண்டு படிகள் என்பது மூன்று படிகளாகி எவ்வளவு வேண்டுமானாலும் கீழே இறங்கும் போதுதான் சந்தி சிரிக்கிறது.

நமது புகழ் பரவுகிறது என நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போதுதான் எதிரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. வயிற்றெரிச்சல், பொறாமை, இயலாமை அல்லது உண்மையான காரணங்கள் எது வேண்டுமானாலும் பின்னணியில் இருக்கக் கூடும் ஆனால் புகழ் வெளிச்சம் அதிகரிக்க அதிகரிக்க எதிரிகளின் பட்டியல் நீண்டுகொண்டேயிருக்கும். ஒரேயொரு வாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் அவர்கள். நாமே அந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தால் நமது கதை முடிந்தது என்று அர்த்தம். நேர்மை, நாணயம், அறம், புண்ணாக்கு, பருத்திக் கொட்டை என்ற ஏதாவதொரு காரணத்தை முன்வைத்து அடித்து நொறுக்கி சிதைத்துச் சின்னாபின்னமாக்கி தொங்கவிட்டுவிடுவார்கள். ஊரே சேர்ந்து அடித்துக் கொண்டிருக்கும் போது யாருடைய சட்டையையும் பிடித்து ‘என்னை அடிக்கிறயே நீ ஒழுக்கமா?’ என்று கேட்க முடியாது. அவனும் ஒழுக்கமில்லைதான். அவனும் அயோக்கியன்தான். ஆனால் என்ன செய்ய முடியும்?


வைரமுத்து அப்படித்தான் சிக்கிக் கொண்டிருக்கிறார். குமுதத்தில் தான் எழுதிக் கொண்டிருப்பதைப் பாராட்டி ஜெயகாந்தன் எழுதியதாக ஒரு கடிதத்தை எழுதி அவரது பழைய கையொப்பத்தையும் பயன்படுத்தி ‘இதுதான் ஜெயகாந்தனின் கடைசி ஆவணம்’ என்று குமுதத்திலும் வெளியிட்டுவிட்டார்களாம். ஆச்சரியமாக இருக்கிறது. ஜெயகாந்தனிடம் சிபாரிசு வாங்க வேண்டிய இடத்தில்தான் வைரமுத்து இருக்கிறாரா என்ன? அவர் அடைய வேண்டிய புகழ் என்று ஏதாவது மிச்சமிருக்கிறதா? தமிழ் வாசிக்கத் தெரிந்த அத்தனை பேருக்கும் வைரமுத்துவைத் தெரிந்திருக்கும். அதற்குப் பிறகும் ஏன் தவியாய்த் தவிக்கிறார் என்றுதான் புரியவில்லை.

நமக்கான ஒரு இடத்தை அடைந்த பிறகு- இதில் ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது- எது நமக்கான இடம் என்பதே குழப்பம்தான். போதும் என்கிற மனமெல்லாம் வாய்ப்பதில்லை. ‘இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்’ என்கிற ஆசையில் அறிவை இழந்து, அறிவின் கட்டுப்பாட்டை இழந்து எதையாவது செய்து அடைந்த புகழை இன்னும் உயரச் செய்வதையே கவனமாகச் செய்யத் துவங்குகிறது மனம். வைரமுத்து அப்படியான ஒரு சிக்கலில் இருக்கிறார். 

பாரதிக்குப் பிறகு மிகப்பெரிய புகழை அடைந்த தமிழ்க்கவிஞனாக தான் இருக்க வேண்டும் என விரும்புகிறார். அப்படியான ஆசை இருப்பதில் தவறொன்றுமில்லை. அதற்கான மேடை மொழி, மீசை, உடை, பாவனை என அத்தனையையும் மாற்றியமைத்திருக்கிறார். இதெல்லாம் லேசுப்பட்ட காரியமில்லை. யார் வேண்டுமானாலும் ஆசைப்பட்டுவிடலாம். ஆனால் அந்த இடத்தை அடைவதற்கான முயற்சிகளோடு வெகுசிலர்தான் நகர்கிறார்கள். வைரமுத்து நகர்ந்து கொண்டிருந்தார். ஆனால் தாம் விரும்புகிற இடத்தை அடைய முடியாது போய்விடக் கூடும் என்று பதறுகிறார். அதற்கான சாத்தியங்கள் அருகிக் கொண்டே வருவதாக நம்பத் தொடங்கியிருக்கிறார். அதுதான் வைரமுத்துவின் பிரச்சினை. அதனால்தான் மரணப்படுக்கையில் கிடந்த ஜெயகாந்தனின் சிபாரிசு தேவைப்பட்டிருக்கிறது. 

சில ஆண்டுகளுக்கு முன்பாக எங்கள் ஊரில் பொங்கல் விழா நடந்தது. வைரமுத்துதான் சிறப்பு விருந்தினர். ஒரு திருமண மண்டபம் நிரம்பி வழிந்தது. இடமில்லாமல் வெளியில் நின்றபடியே ஏகப்பட்ட பேர் மெகா திரைகளில் கவிஞரின் பேச்சை ரசித்துக் கொண்டிருந்தார்கள். கூட்டம் முடியும் வரை ஒரு ஆள் நகரவில்லை. வைரமுத்துவின் திறமைக்குச் சேர்ந்த கூட்டம் அது. அவரது எழுத்து மற்றும் பேச்சு மீதான நம்பிக்கையில் கூடியிருந்தார்கள். கோபிச்செட்டிபாளையம் போன்ற இரண்டாம் கட்ட நகரங்களில் கூட அவ்வளவு பெரிய கூட்டத்தை அசையாமல் கட்டிப் போடும் ஆளுமையுடைய எழுத்தாளர்கள் வேறு யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை. வைரமுத்துவை தமிழ்ச் சமூகத்தின் சாமானிய மனிதன் நம்புகிறான். இந்த மொழிக்காகவும் இனத்துக்காகவும் சிந்திக்கிற கவிஞன் என்று வைரமுத்துவை ஏற்றிப் பிடிக்கிறான். ஆனால் வைரமுத்துவுக்கு ஓரளவு புரிதல் இருக்கிறது அல்லவா? அதனால் அவர் தன்னை நம்புவதில்லை. தமக்குச் சேர்கிற கூட்டமும் இந்தப் புகழும் தனக்குப் பின்னால் காலியாகிவிடும் என்று பயப்படுகிறார். அதனால்தான் விருதுகளையும் சிபாரிசுகளையும் தேடித் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார். 

வயது கூடக் கூட வரக் கூடிய இயல்பான பதற்றமும் பயமும்தான் இது. மருமகள் வந்தவுடன் தனது இடம் கேள்விக்குள்ளாகிவிடும் என்று பயப்படுகிற மாமியாரின் மனநிலைதான் இது. அப்படியெல்லாம் எதுவும் ஆகாது. அம்மாவின் இடம் அம்மாவுக்குத்தான். இளங்கவிஞர்கள் தனது இடத்தைப் பிடிக்கிறார்கள் என்று வைரமுத்து பயப்படுகிறார் போலிருக்கிறது. அடுத்த தலைமுறை வந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் முந்தய தலைமுறையின் இடத்தைக் காலி செய்துவிட முடியாது. psychological crisis இது. ஆனால் ஒன்று- எம்.ஜி.ஆருக்குப் பிறகு ரஜினி என்பார்கள். ஆனால் ரஜினி தலைகீழாக நின்றாலும் எம்.ஜி.ஆரின் இடத்தை அடைய முடியாது. ரஜினிக்குப் பிறகு இவர்தான் என்று யாரை நோக்கியும் விரலை நீட்ட முடியாது. ரஜினியின் இடம் ரஜினிக்குத்தான். அப்படித்தான் வைரமுத்துவும் என்று நம்புகிறேன். எப்படி பட்டுக்கோட்டையாரின் பெயரையும் கண்ணதாசனின் பெயரையும் வைரமுத்துவால் ஸ்வாஹா செய்துவிட முடியாதோ அப்படித்தான் முத்துக்குமாராலும் யுகபாரதியாலும் வைரமுத்துவை விழுங்கிவிட முடியாது. பாரதியின் பெயருக்கு அடுத்தபடியாக வரவில்லையென்றாலும் தமிழ் வரலாற்றில் வைரமுத்துவின் பெயரை இருட்டடிப்பு செய்துவிட முடியாது என்பதுதான் நிதர்சனம். இதைக் கூட புரிந்து கொள்ளாத அளவுக்கு சாமானிய மனநிலையோடுதான் கவிப்பேரரசு இருக்கிறார் என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.