Apr 20, 2015

திக்கும் இல்லை திசையும் இல்லை

1930களின் தொடக்கத்தில் ஜப்பானுக்கு பேராசை. உலகின் மாபெரும் பேரரசாக தன்னை அறிவித்துக் கொள்ள வேண்டும் என்கிற முஸ்தீபுகளில் இறங்கியது. முதலில் சீனாவை அடித்தது. ஹிட்லரின் ஜெர்மனியுடனும், முசோலினியின் இத்தாலியுடனும் கூட்டு சேர்ந்து கொண்டது. அந்தத் தில்லாலங்கடிகளோடு இராணுவ ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டது. இந்த மூன்றுபேரும் சேர்ந்தால் குடி மூழ்கிப் போய்விடும் என்று மற்ற நாடுகள் பதறின. அமெரிக்காவுக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. அந்தக்காலத்திலேயே பெரியண்ணன் ஆகியிருந்ததால் ஜப்பான் மீது பொருளாதாரத் தடையை விதித்தது. ஜப்பானில் எண்ணெய் உள்ளிட்ட சரக்குகள் கிடைக்காமல் அழுத்தம் அதிகமானது. ஜப்பான்காரனும் லேசுப்பட்டவனா? விடுவேனா என்று முரட்டுத்தனமாக அமெரிக்காவின் பேர்ள் துறைமுகத்தைத் தாக்கினார்கள். அது அமெரிக்காவுக்கு பெரிய அடி. சுதாரித்துக் கொண்ட அமெரிக்காவும் போரை அறிவித்துக் களத்தில் இறங்கியது. அதன்பிறகு போர் உக்கிரமாக நடந்து ரஷ்யா, இங்கிலாந்து என்று ஆளாளுக்கு ஜப்பானை வெளுத்துக் கட்டினார்கள் என்பதும் கடைசியாக 1945 ஆம் ஆண்டு இரண்டு அணுகுண்டுகளை ஹிரோஷிமா, நாகசாகி மீது போட்டதில் நிலைகுலைந்த ஜப்பான் சரணடைந்தது என்பதெல்லாம் வரலாறு.

வரலாற்றின் பக்கங்களில் கண்டுகொள்ளப்படாத சில வரிகள் இருந்து கொண்டேயிருக்கும். அப்படியொரு வரியை எடுத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்தான் Against the sun.உலகப்போர் நடந்து கொண்டிருக்கும் போது மூன்று அமெரிக்க வீரர்கள் போர் விமானத்தில் பசிபிக் கடலின் மீது பறக்கிறார்கள். தகவல் தொடர்பு சரியாக இருப்பதில்லை. கிழக்கில் திரும்ப வேண்டுமா, மேற்கில் திரும்ப வேண்டுமா என்று குழம்பி தடம் மாறிவிடுகிறார்கள். கதை கந்தல். கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் நிலமே தெரிவதில்லை. விமானத்தில் எரிபொருளும் குறைந்து கொண்டே வருகிறது. உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும். பைலட் விமானத்திற்குள் இருப்பதையெல்லாம் எடுத்துக் கொள்ளச் சொல்கிறார். மூன்று பேருமாகத் தயாரான பிறகு விமானம் கடலுக்குள் இறக்கப்படுகிறது. பைலட் தவிர மற்ற இரண்டு பேருக்கும் நீச்சல் அவ்வளவாகத் தெரியாது. என்றாலும் மிதவையை எடுத்துக் கொண்டு குதித்ததால் தப்பித்துவிடுகிறார்கள். ஆனால் உடனடியாக மிதவை விரிவடைவதில்லை. சதிகார மிதவை அழிச்சாட்டியம் செய்து கொண்டிருக்க போதாக்குறைக்கு இவர்கள் எடுத்து வந்த சாமான்கள் தண்ணீருக்குள் இழுக்கின்றன. எடையைக் குறைத்தாக வேண்டும். வேறு வழியில்லாமல் முடிந்தவரை பிற சாமான்களை கடலுக்குள் வீசிவிடுகிறார்கள். திக்கித் திணறி மிதவையை விரிவடையச் செய்து சிரமப்பட்டு அதன் மீது ஏறி அமர்கிறார்கள்.  


அப்போதைக்குத் தப்பித்துவிடுகிறார்கள். ஆனால் அடுத்த முப்பத்து நான்கு நாட்களுக்கு அந்த மிதவைதான் வீடு படுக்கை எல்லாமும். இரண்டாம் உலகப்போரின் போது உண்மையில் நிகழ்ந்த சம்பவம் இது. அந்த மூன்று அமெரிக்க வீரர்களின் கதையை அப்படியே படமாக்கியிருக்கிறார்கள். டிக்ஸன், டோனி, ஜீன் ஆல்ட்ரிச். இவர்களில் டிக்ஸன் விமானி. சற்று வயதானவர். மற்ற இரண்டு பேரும் திருமணம் ஆகாத இளைஞர்கள்.

எல்லை தெரியாத பசிபிக் பெருங்கடலில் என்னதான் செய்து தொலைவது? ஆரம்பத்தில் சற்று ஆசுவாசமாகத்தான் இருக்கிறார்கள். தனது தங்கையைப் பற்றி ஒரு இளைஞன் சொல்கிறான். அவன் விவரிப்பதிலிருந்தே இன்னொரு இளைஞனுக்கு அவள் மீது காதல் வருகிறது. அவளைப் பற்றி கற்பனை செய்து பார்க்கிறான். கற்பனை என்றால் கண்டபடிக்கு இல்லை. வெறும் மூன்று பேர்களை மட்டுமே காட்டிக் கொண்டிருந்தால் பார்வையாளனுக்கு சலித்துவிடும் என்பதால் ஒரு பெண்ணின் முகத்தை காட்ட இயக்குநர் விரும்பியிருப்பார் போலிருக்கிறது. அவளுக்கு வசனம் கூட இல்லை. முகத்தை மட்டும் இரண்டு முறை காட்டியிருக்கிறார். கடலையும் இந்த மூன்று ஆண் கிடாய்களையும் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு ஒரு கவன மாற்றம். படத்தில் இந்த நான்கு முகங்கள்தான். அப்புறம் வெறும் நீலக்கடல். 

மிதவையில் கீறல் விழுந்துவிடக் கூடாது என்பதற்காக ஆரம்பத்திலேயே ஷூக்களைக் கழட்டி வீசிவிடுகிறார்கள். பைலட் டிக்ஸன் தனது ஷூக்களை மிதவைக்குள்ளாகவே வைக்கிறார். முதல் சில நாட்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லை. அந்த ஷூவில் சிறுநீரைக் கழித்து அதையே குடிக்கிறார்கள். சாப்பாட்டுக்கும் வழியில்லை. வெயில் சுட்டெரிக்கிறது. கடற்காற்று கொஞ்சம் கொஞ்சமாக உடலில் புண்களை உண்டாக்குகிறது. முகம், உடல் என எங்கும் உப்புப் படிந்து வெளுத்துப் போகிறது. மிகக் கொடுமையான நாட்கள். ஏதோவொரு நம்பிக்கையில் வாழ்க்கையின் கரையைப் பார்த்துவிட முடியும் என்று மிதந்து கொண்டிருக்கிறார்கள். 

எவ்வளவுதான் பசியோடு சமாளிக்க முடியும்? இருக்கிற கம்பியை வைத்துத் தூண்டில் ஒன்று தயாரிக்கிறார்கள். ஒரு மீன் கூட சிக்குவதில்லை. கத்தியை வைத்துக் குத்துவதற்கு முயலும் போது மிதவை கிழிந்துவிடும் என டிக்ஸன் எச்சரிக்கிறார். அதைக் காதில் கேட்காமல் குத்தி மீனைப் பிடித்துவிடுகிறான். ஓரளவு பெரிய உருவமுடைய சுறா மீன் அது. அதைப் பச்சையாகவே தின்கிறார்கள். விதி வலியது. ரத்தவாடையின் காரணமாகவோ என்னவோ பிற சுறாமீன்கள் சூழ்ந்து கொள்கின்றன. ஒருவன் தெரியாத்தனமாக கையை வெளியில் விட்டு கடி வாங்கித் தப்பிக்கிறான். அதன் பிறகு மீண்டும் சுறாவை வேட்டையாடினார்களா என்று தெரியவில்லை. சில நாட்கள் கழித்து ஒரு பறவை மிதவையின் மீது வந்து அமர்கிறது. கைத்துப்பாக்கியை எடுத்துச் சுட்டு அந்தப் பறவையைக் கொன்று தின்கிறார்கள். இப்படித்தான் வயிற்றை எப்பொழுதாவது நிறைக்கிறார்கள். இப்படியே நாட்கள் நகர்கின்றன.

அட்டகாசமான படம் என்றெல்லாம் சொல்ல முடியாது. படமாக மட்டும் பார்த்தால் சில இடங்களில் இழுவையாகத் தெரிகிறது. ‘எப்படா முடியும்?’ என்று கூடத் தோன்றியது. ஆனால் இது புனைகதை இல்லை. உண்மையிலேயே இந்த மூன்று மனிதர்களும் இதையெல்லாம் அனுபவித்திருக்கிறார்கள். மீண்டும் வாழ்ந்துவிட முடியும் என்ற ஏதோவொரு நம்பிக்கையைப் பற்றிக் கொண்டு போராடியிருக்கிறார்கள். உணவு, தண்ணீர், கடற்பயணத்துக்கான உபகரணங்கள் என எதுவுமில்லாமலேயே திசை தெரியாத கடலுக்குள் ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்திருக்கிறார்கள். முப்பத்து நான்கு நாட்கள் இப்படி போராடியது சாதாரணக் காரியமில்லை. சுறாக்களிடமிருந்து தப்பித்திருக்கிறார்கள். புயலில் சிக்கி மீண்டிருக்கிறார்கள். கருக்கியெடுக்கும் சூரியனின் வெப்பம், உப்புக் காற்று உள்ளிட்ட அத்தனை சிக்கல்களிலிருந்தும் தப்பியவர்களின் கதை. இந்தப் படத்தை அப்படித்தான் பார்க்கிறேன்.

மூன்று பேரின் உளவியலும் மிக முக்கியமானது. படத்தில் அதைச் சரியாக பதிவு செய்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் டிக்ஸனை தங்களின் தலைவனாக ஏற்றுக் கொண்டு அவர் சொல்வதை இம்மிபிசகாமல் கேட்கிறார்கள். ஆனால் இனி தேறுவது கஷ்டம் என்று அவர் சொல்வதை மறுக்கத் தொடங்கி தங்கள் இஷ்டத்துக்கு செயல்படத் தொடங்குகிறார்கள். எதனால் விமானம் திசை மாறியது என்று டிக்ஸன் சொல்கிறார். அவருடைய தவறுதான். விமானத்துக்குள் வெப்பம் அதிகமாக இருந்திருக்கிறது. ஓரிரு நிமிடங்கள் உறங்கிவிடுகிறார். திருப்ப வேண்டிய இடத்தில் விமானத்தைத் திருப்பாமல் வேறொரு இடத்தில் திருப்புகிறார். அந்த சில நிமிடங்கள்தான் மூவரின் விதியை நிர்ணயிக்கிறது. மூன்று பேரையும் கடலுக்குள் இறக்குகிறது. ஆனால் இனி என்ன செய்ய முடியும்? மற்ற இரண்டு பேரும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பயணத்தினால் மூன்று பேருக்கும் உண்டாகும் விரக்தி, இயலாமை, கோபம் என எல்லாவற்றையும் உரையாடல் வழியாகவும் சோர்ந்து போன தங்களின் முகங்களின் வழியாகவுமே காட்டுகிறார்கள். ‘ஒருத்தன் செத்துட்டா மத்த இரண்டு பேரும் என்ன செய்வது?’ என்று கேட்டு இதயத்தைத் தின்பது குறித்தும் நுரையீரலையும் சிறுநீரகத்தையும் எடுத்து ஆளுக்கு ஒன்றாகத் தின்பது பற்றியும் பேசிக் கொள்கிறார்கள். சிரித்துக் கொண்டேதான் பேசுகிறார்கள் என்றாலும் உள்ளுக்குள் அப்படியொரு நினைப்பு மூன்று பேருக்குமே இருக்கிறது என்று தெரிகிறது. தற்கொலை குறித்தும் கூட பேசிக் கொள்கிறார்கள். 

வாழ்க்கையின் விளிம்பு வரைக்கும் சென்றாலும் அத்தனை பிரச்சினைகளையும் தாண்டி எப்படியாவது தப்பித்துவிட மாட்டோமா என்கிற ஆசையை பிடித்துக் கொண்டே நகர்வதுதானே மனித மனம்? எவ்வளவுதான் பெரிய ஆபத்து வந்தாலும் கடைசி வரைக்கும் தம் கட்டி பார்த்துவிட வேண்டும் என்கிற நினைப்பில்தான் மொத்த உலகமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் எல்லா உயிர்களாலும் கடைசி வரைக்கும் போராட முடிவதில்லை. ஒரு கட்டத்தில் ‘அவ்வளவுதான்’ என்று கைவிட்டுவிடுகின்றன. அவர்களை இந்த உலகம் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. சிலர் மட்டுமே இலக்கை அடையும் வரை போராடி வெல்கிறார்கள். அவர்களைத்தான் inspiration என்கிறோம். இந்த மூவரையும் அப்படி எடுத்துக் கொள்ளலாம். ஆனால் எந்தவிதமான அதிகப்படியான பில்ட் அப்களும் இல்லாமல் இயல்பான inspirations.