Apr 2, 2015

புலப்படும் வெளிச்சம்

மகேஷ் பற்றி எழுதி பத்து நாட்கள் ஆகிவிட்டன. இதுவரைக்கும் ஏகப்பட்டவர்கள் விசாரித்துவிட்டார்கள். நிறையப் பேருக்கு அவரது விவரங்களை அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. நேர்காணல்களுக்கான ஏற்பாடுகளும் ஜரூராக நடந்து கொண்டிருந்தன. அந்தப் பதிவை எழுதிய அடுத்த சில நிமிடங்களில் Cazaayan நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு.ஹரி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். நிறுவனத்தின் தலைமையிடம் அமெரிக்காவில் இருக்கிறது. இந்தியாவில் மும்பையிலிருந்து இயங்குகிறார்கள். மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நிறுவனங்களில் ஒன்று.

உடனடியாக அவரை அழைத்துப் பேசினேன். மிக எளிமையாகப் பேசினார். மகேஷ் பற்றிச் சொல்வதற்கு மேலும் சில தகவல்கள் இருக்கின்றன.

மகேஷ் ரயில் விபத்தில் தனது இரண்டு கால்களையும் இழந்தது கடந்த ஆண்டு மே மாதம். ஆனால் ஆறே மாதங்களில் ஒரு ஆச்சரியத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். அடுத்த டிசம்பர் மாதமே தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் கர்நாடகா சார்பில் கலந்து கொண்டிருக்கிறார். 

‘ஆறு மாசத்துல எப்படி மகேஷ் ப்ராக்டீஸ் செஞ்சீங்க?’ என்றேன். 

அந்தக் கேள்வி அவசியமானதாகத் தெரிந்தது. நேற்று வரை நடந்து கொண்டிருந்தவன் இனி வாழ்நாள் முழுக்கவும் நடக்கவே போவதில்லை என்பதை உணரும் போது நொறுங்கிப் போய் அமர்வதுதானே பெரும்பாலும் நடக்கும்? மகேஷ் தலைகீழ். 

‘மருத்துவமனையில் நினைவு வந்தவுடனே ஏதாச்சும் சாதிச்சு ஆகணும்ன்னு முடிவு செஞ்சுட்டேண்ணா’என்றார். 

பெங்களூர் வந்து பாரா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரைச் சந்தித்திருக்கிறார். எடை தூக்குவது உள்ளிட்ட சில விளையாட்டுக்களைப் பற்றி ஆலோசனை செய்திருக்கிறார்கள். மகேஷ் தேர்ந்தெடுத்தது கூடைப்பந்து. சக்கர நாற்காலியிலேயே அமர்ந்த படி கூடைப்பந்து விளையாட வேண்டும். இதுவரை அவர் சக்கர நாற்காலி ஓட்டியதில்லை. அதற்குத்தான் முதலில் பயிற்சியளித்திருக்கிறார்கள். அடுத்து விளையாட்டுப் பயிற்சி. தேறியவுடன் தேசிய அளவில் விளையாடி இருக்கிறார். Runner-up.

‘இதுக்கு முன்னாடி ஃபுட்பால் ப்ளேயர்ண்ணா...இனிதான் ஃபுட் இல்லையே..அதனால் பேஸ்கட் பால் ப்ளேயேர்’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார். இந்த ஒரு உற்சாகம்தான் அவரது தனித்தன்மையாகத் தெரிந்தது.

மகேஷ் பற்றி எழுதியவுடன் ஒரு நிறுவனத்தின் CEO தனிப்பட்ட கவனம் எடுத்துக் கொள்கிறார் என்பது சந்தோஷமாக இருந்தது. விவரங்களைச் சொன்னவுடன் ‘அந்தப் பையனை நாங்கள் வேலைக்கு எடுத்துக் கொள்கிறோம்’ என்றார். ஒன்றை கவனிக்க வேண்டும்- அதுவரையில் மகேஷிடம் அவர் பேசியிருக்கவில்லை. ரெஸ்யூமைக் கூட பார்த்ததில்லை. வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலான உறுதி அது. அதன் பிறகு அவரது அலுவலகத்திலிருந்து மகேஷை அழைத்துப் பேசியிருக்கிறார்கள். சில டெக்னிக்கலான விஷயங்களையும் விவாதித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் மகேஷைப் பிடித்துப் போய்விட்டது.

பெங்களூரில் நிறுவனத்தின் கிளை ஒன்றைத் தொடங்கவிருக்கிறார்கள். அதுவரைக்கும் மகேஷ் கோயமுத்தூரில் அவரது வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துவிடப் போகிறார்கள். அலுவலகம் பெங்களூரில் செயல்படத் தொடங்கும் போதும் மகேஷ் பெங்களூர் அலுவலகத்துக்கு வந்துவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.

மகேஷ் கேட்ட சம்பளம் சற்று கூடுதலாக இருந்திருக்கிறது. ஆனால் அதையும் ஒத்துக் கொண்டார்கள்.

இன்று ஹரி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ‘மகேஷூக்கு இன்று கடிதம் அனுப்பி வைக்கிறோம். திங்கட்கிழமையன்று பணியில் சேர்கிறார்’ என்று. இன்றைய தினத்தை இதைவிட வேறு எந்தச் செய்தி சந்தோஷம் ஆக்கிவிட முடியும் என்று தெரியவில்லை.

மகேஷிடம் பேசினேன். ‘ரொம்ப சந்தோஷமா இருக்கேண்ணா...இப்போ பேசறதுக்கு வார்த்தை இல்லை....சாயந்திரமா உங்க கூட பேசுறேன்’என்றார். அவரை விடவும் நான் குதூகலித்துக் கொண்டிருக்கிறேன் என்பதற்கு யாருக்குமே தெரியாமல் கசிந்த துளி கண்ணீர்தான் சாட்சி.

ஒரு வேலை வாங்குவது பெரிய காரியமா என்றுதான் தோன்றும். ஆனால் மிகச் சிரமமான காரியம் அது. கிட்டத்தட்ட நான்கைந்து மாதங்களாக வேலை தேடிக் கொண்டிருந்தவருக்கு இது ஒரு முக்கியமான மைல்கல். வெறும் ஒன்றரை வருட அனுபவம்தான் இருக்கிறது. இடையில் ஒரு வருடம் இடைவெளி விழுந்துவிட்டது. இந்த அனுபவத்திற்கெல்லாம் வேலைச் சந்தையில் யாரும் அவ்வளவு சீக்கிரம் கண்டுகொள்ள மாட்டார்கள். கிட்டத்தட்ட ஃப்ரெஷர் மாதிரிதான். லட்சக்கணக்கில் போட்டியாளர்கள் குவிந்து கிடக்கிறார்கள். எப்படி முட்டி மோதுவது?

இப்பொழுது மகேஷின் பாதையில் வெளிச்சம் விழுந்திருக்கிறது. 

தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றிக் கொண்டிருக்கும் தந்தையின் சம்பளத்தில் நடக்கும் குடும்பம், இன்னமும் பள்ளிப் படிப்பைத் தாண்டாத தங்கை என தத்தளித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இனி துணிச்சலாக கையை நீட்டுவார். 

இதுவரை விசாரித்தவர்கள், மகேஷூக்காக தங்களுக்குத் தெரிந்த வகையில் எல்லாம் உதவியவர்கள், நேரடியாக பேசியவர்கள், மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொண்டவர்கள், ஐடி நிறுவனங்களில் இயக்குநர், சீனியர் மேனேஜர், வைஸ் பிரசிடெண்ட் போன்ற மிக உயர்ந்த பதவிகளில் இருந்தாலும் நேரம் ஒதுக்கி இது குறித்து அக்கறை காட்டியவர்கள் என அத்தனை பேருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். நிசப்தம் தளத்தை இவ்வளவு பேரிடம் பரவலாகக் கொண்டு சேர்த்த ஒவ்வொருவருக்கும் நன்றி. 

மகேஷூக்கு வாழ்த்துக்கள். இப்பொழுதுதான் வாழ்க்கையின் தொடக்கத்தில் இருக்கிறார். திருமணம், குடும்பம், வாழ்க்கை என அவர் இன்னமும் எவ்வளவோ காரியங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. இதே உற்சாகத்தோடு அவர் தொடர்ந்து இயங்குவதற்குத் தேவையான உடல் மற்றும் ஆன்ம பலமும் கிடைக்கட்டும் என்று மனதார வேண்டிக் கொள்கிறேன்.

இந்த வாய்ப்பை மகேஷூக்கு அளித்த திரு.ஹரி அவர்களுக்கும் Cazayaan நிறுவனத்திற்கும் மனப்பூர்வமான நன்றியும் வாழ்த்துக்களும். நிறுவனம் மென்மேலும் வளர்ச்சியடையவும் இன்னமும் பல்லாயிரம் குடும்பங்களில் விளக்கேற்றவும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.