Apr 3, 2015

சதிகாரர்களின் வியூகம்

திருமணம் நிச்சயிக்கப்பட்டவுடன் சில நண்பர்களிடம் அந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டேன். அது 2008 ஆம் வருடம். ஆளாளுக்கு ஒரு கருத்தைச் சொன்னார்கள். எழுத்தாளர் ஜெயமோகனையும் அழைத்துச் சொன்னேன். ‘வாசகியா?’ என்றார். என்ன நம்பிக்கையில் அப்படிக் கேட்டார் என்று தெரியவில்லை. நான் எழுதுவதையெல்லாம் வாசித்துவிட்டு ஒருத்தி எனக்குக் கழுத்து நீட்டுவது நடக்கிற காரியமா? அதுவும் எனது கவிதைகளை வாசித்துவிட்டு. அப்பொழுது கவிதைகளை மட்டும்தான் எழுதிக் கொண்டிருந்தேன்.  ஒருவேளை அது நக்கலுக்குக் கேட்ட கேள்வியாக இருக்க வேண்டும்.  அவருடைய மனைவி அவரது வாசகியாக அறிமுகம் ஆனவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எங்களின் திருமணச் சமயத்தில்தான் சித்தார்த்- காயத்ரி திருமணமும் நடந்தது. அவர்கள் இருவரும் எழுத்து வழியாக அறிமுகமாகி காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அதையும் ஜெமோதான் சொன்னார். சொல்லிவிட்டுத்தான் அப்படியொரு கேள்வியைக் கேட்டார். ‘ஷிட்னி ஷெல்டனுக்கு மட்டும்தான் வாசகியாமா சார்’ என்றேன். உண்மையோ பொய்யோ- அப்படித்தான் என்னிடம் சொல்லியிருந்தார்கள். 

நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் திருமணத்திற்கு முன்பாக மலேசியாவில் சில காலம் இருக்க வேண்டியிருந்தது. அந்தத் தருணத்தில் உற்சாக மிகுதியில் எனது சில கவிதைகளை அனுப்பி வைத்திருந்தேன். நானாக அனுப்பி வைக்கவில்லை. எவனோ ஒரு போக்கற்றவன் impress செய்யச் சொல்லியிருந்தான். அதற்கு கவிதைதானா சிக்கியது? அதிர்ஷ்டமோ துரதிர்ஷ்டமோ தெரியவில்லை- கவிதைகளை அனுப்பிய காரணத்திற்காக திருமணம் நின்று போகவில்லை. ‘இனிமேல் இதையெல்லாம் அனுப்பி வைக்க வேண்டாம். ஒரு மண்ணும் புரியவில்லை’ என்ற கடுகடுப்பான செய்தி வந்தவுடன் நல்ல பையனாக அடங்கிக் கொண்டேன். அதோடு சரி. தெரியாத்தனமாகக் கூட இவளிடம் எழுதுவதைக் காட்டி இடிப்பு வாங்கிக் கொள்ளக் கூடாது என்று முடிவு செய்து கொண்டேன். 

ஆனாலும் இஃது ஒருவிதத்தில் நல்லதாகப் போயிற்று. என்ன எழுதினாலும் கேட்பதற்கு ஆள் இல்லை என்கிற சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டது. இருந்தாலும் அப்படியே விட்டுவிடக் கூடாதல்லவா? கிரிமினல் மூளைக்கு வியர்த்துவிட்டது. போதாக்குறைக்கு அந்தக் காலத்தில் அதி தீவிர ரஜினி ரசிகனாவும் இருந்தேன். அருணாச்சலம் படம் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். அறை நிறைய சுருட்டுகளைப் போட்டு வைத்து அப்பா ரஜினி உறிஞ்சச் சொல்வார். ஓர் இரவில் முடித்தாக வேண்டும். உறிஞ்சி உறிஞ்சி மகன் ரஜினிக்கு சுருட்டு என்றாலே அலர்ஜியாகிவிடும். திருமணம் முடிந்தவுடன் இந்த ட்ரீட்மெண்ட்டைக் கொடுக்க முடிவு செய்து வைத்திருந்தேன். டிசம்பரில் திருமணம். ஜனவரியில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. அதில் கவிதைச் சங்கமம் என்று நடத்தினார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் கவிஞர்களை எல்லாம் அழைத்து வந்து கவிதை வாசிக்கச் சொல்வார்கள். கிட்டத்தட்ட இருநூறு கவிஞர்களாவது தேறுவார்கள். தமிழ்நாட்டில் கவிஞர்களுக்கு மைக் கிடைப்பது பெரிய விஷயம். கிடைத்தால் விடுவார்களா? ஆளாளுக்கு நான்கைந்து கவிதைகளை வாசிப்பார்கள். கவிஞர்களுக்கே ஒன்றும் புரியாது. அதன் வாசனையே இல்லாதவர்களுக்கு புரியுமா? அப்பேற்ப்பட்ட அரங்கில் கூட்டி வந்து அமர வைத்துவிட்டேன்.

காலையில் ஒன்பது மணிக்கு ஆரம்பித்த சோதனை மதியம் இரண்டு மணியைத் தாண்டியும் இழுத்துக் கொண்டிருந்தது. மேடை ஏறியவர்கள் கீழே இருந்தவர்களை திணறத் திணற அடித்தார்கள். ‘ப்ளீஸ்...கிளம்பலாம்’ என்று ஆயிரம் முறையாவது கேட்டிருப்பாள். ‘இரு போகலாம்’ என்று ஆயிரத்தொரு முறை சொல்லியிருப்பேன். ஒரு கட்டத்திற்கு மேல் தாங்காது என்று தெரிந்துவிட்டது. ஏடாகூடமாகி மூர்ச்சையாகிவிட்டால் என்னால் தூக்க முடியாது. அப்பொழுது ஐம்பத்தாறு கிலோதான் இருந்தேன். கிளம்பினோம். வெளியில் வந்து வானத்தைப் பார்த்த போது எனக்கு தலையில் பாறாங்கல்லை ஏற்றியது போல வலி. அவளுக்கு அநேகமாக ரயிலை ஏற்றியது போல வலித்திருக்கக் கூடும். ஆபரேஷன் சக்ஸஸ். அதற்கு பிறகு முழுச் சுதந்திரம் கிடைத்துவிட்டது. எங்கேயாவது கூட்டம் இருக்கிறது என்று சொன்னால் போதும். காது கேட்காதவள் போலத் திரும்பிக் கொள்வாள். ‘போய்த் தொலை..என்னை விட்டுடு’ என்று அர்த்தம்.

ஊர் ஊராகச் சுற்றி கும்மாளம் போட்டுவிட்டேன். இந்தப் பொல்லாத உலகத்தில் யாரோ கண் வைத்துவிட்டார்கள். இதுநாள் வரையிலான இந்தச் சுதந்திரத்தில் இப்பொழுது பெரிய அடி விழுந்துவிட்டது. கவிதைச் சங்கமம் நடந்து கிட்டத்தட்ட ஆறேழு வருடங்கள் ஆகிவிட்டதனால் அதன் தாக்கம் குறைந்துவிட்டது போலிருக்கிறது. இந்த வாரம் சென்னைக்கு நானும் வருகிறேன் என்று அழிச்சாட்டியம் செய்துவிட்டாள். ஒரு கூட்டம் நடந்தால் என்னைப் பார்க்க பல லட்சம் பேர் திரண்டு வந்துவிடுகிறார்கள் என்று படம் ஓட்டி வைத்திருந்தேன். வந்து பார்க்கவா போகிறாள் என்ற தெனாவெட்டில் ஒட்டிய படம் அது. அந்தக் கூட்டத்தைத்தான் பார்க்க வேண்டுமாம். ‘உங்களை நம்பி வர்ற அந்த புண்ணியவான்களைப் பார்த்தே தீர வேண்டும்’ என்று கங்கணம் கட்டியிருக்கிறாள். அலைகடலென வருவார்கள். ஆர்பரித்து வருவார்கள் என்றெல்லாம் பேசியிருக்கக் கூடாதுதான். பேசிவிட்டேன். இனி என்ன செய்வது?

முன்பாகவே சொல்லியிருந்தாலாவது செலவானாலும் பரவாயில்லை என்று ஊரிலிருந்து ஆள் பிடித்து வந்திருக்கலாம். கடைசி நேரத்தில் சொல்கிறாள். தனிக்கட்டையாக தோளில் பையும் அதில் ஒரு வேட்டியையும் செருகிக் கொண்டு கிடைக்கிற பேருந்தில் ஓசூர், கிருஷ்ணகிரி,வேலூர் என்று பேருந்து மாற்றி மாற்றி வந்து தி.நகரில் ஒரு நாற்றமெடுத்த அறையில் தங்கிக் கொள்ளலாம் என்ற அத்தனை கற்பனையும் தவிடு பொடி. பத்து பேர் வந்தாலும் கூட தனித்தனியாக நின்று நிழற்படமெடுத்து வீட்டில் வந்து அளந்திருக்கலாம். ம்ஹூம். அதெல்லாம் கூட போய்த் தொலைகிறது. இன்னொரு முறை சென்னை வரும் போது பார்த்துக் கொள்ளலாம். இப்பொழுது கூட்டத்திற்கு எங்கே போவது? வண்ணாரக் கருப்பராயன் தவிக்கவிட்டு விடுவான் போலிருக்கிறது. 

அவசர அவசரமாக கரிகாலனை அழைத்து ‘கூட்டத்துக்கு எத்தனை பேரு வருவாங்க?’ என்றேன். 

‘ஒரு இருபது...’ என்று இழுத்தார். 

‘கிண்டல் பண்ணாதீங்க இருபதாயிரம் எல்லாம் வர மாட்டாங்க’ என்றேன். கண்டபடி திட்டிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார். 

திரும்ப அழைத்துக் கெஞ்சிய பிறகு கூட்டத்தில் பேசுபவர்கள் ஐந்து பேர். ஏற்பாட்டாளர்கள் ஐந்து பேர். அவ்வளவுதான் தன்னுடைய எதிர்பார்ப்பு என்று சொல்லிவிட்டு மறுபேச்சு பேசாமல் முடித்துக் கொண்டார். எல்லோரும் கூட்டுச் சதியாளர்களாக இருப்பார்கள் போலிருக்கிறது. சதி இல்லையென்றால் அழைப்பிதழில் என் பெயரை மட்டும் தவிர்த்திருப்பார்களா?


ஆனது ஆகட்டும். எவ்வளவு பெரிய சதியாக இருந்தாலும் அதை உடைத்தே தீர வேண்டும். தனியொருவனால் இவர்களை எல்லாம் சமாளிக்க முடியாது. இந்தச் சதிகாரர்களின் வியூகத்திலிருந்து என்னை நீங்கள்தான் தப்பிக்க வைக்க முடியும். இதைப் படிக்கிறவர்கள் எல்லோரும் வந்து விடுங்கள். உங்களுக்கு லட்சம் புண்ணியம் கிடைக்கும். அப்படியே ரங்கநாதன் தெருவில் ஆளுக்கு இரண்டு பேரை பிடித்து இழுத்து வர முடியும் என்றால் கோடி புண்ணியம் கிடைக்கும். விளையாட்டுக்குச் சொல்லவில்லை. ஒரு அப்பாவியைக் காப்பாற்றுவதும் கைவிடுவதும் உங்கள் வசம். இனி நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். 

ஆமென்!