Apr 2, 2015

அடிமை சாசனம்

சவூதியிலிருந்து ஒருவர் அழைத்திருந்தார். இப்பொழுதுதான் முதன்முறையாகப் பேசிக் கொள்கிறோம். அவரது உறவுக்காரப் பெண்மணி ஒருவர் சிக்கலில் இருக்கிறார். ஒன்றேகால் லட்சம் தேவைப்படுகிறது என்றார். அவர் சொன்னதை வைத்துப் பார்த்தால் சிக்கல்தான். ஆனால் பணம் கொடுக்காமல் விடுவிக்கக் கூடிய சிக்கல் மாதிரிதான் தெரிகிறது. சவூதிக்காரருக்கு முழுமையான விவரங்கள் தெரியவில்லை. தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு அந்தப் பெண்ணிடமே பேசினேன் மதுரையில் வசிக்கிறார்.

அந்தப் பெண்ணின் அப்பாவுக்கு பெரிய கல்விப்புலமோ வசதியோ இல்லை. சிறிய கடை நடத்திக் கொண்டிருக்கிறார். வீட்டிற்கு பக்கத்திலேயே இருக்கும் ஒரு பள்ளிக் கூடத்தில் படித்திருக்கிறார். அந்தக் பள்ளிக் கூடத்துக்காரர்களே ஒரு செவிலியர் கல்லூரியையும் ஆரம்பித்திருக்கிறார்கள். தங்கள் பள்ளியிலிருந்து ஐந்து மாணவிகளைத் தேர்ந்தெடுத்து ‘உங்களுக்கு இலவசமாக செவிலியர் படிப்பைச் சொல்லித் தருகிறோம்’ என்று அழைத்திருக்கிறார்கள். நான்கு பேர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. வேறு படிப்புகளில் சேர்ந்துவிட்டார்கள். இந்தப் பெண் மட்டும் செவிலியப் படிப்பில் சேர்ந்துவிட்டாள். இலவசமாகத்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். பிணை எதுவும் இல்லை. படிப்பு முடியும் தருவாயில் தங்களது மருத்துவமனையிலேயே பணியில் சேர விருப்பமா என்று கேட்டிருக்கிறார்கள். வீட்டிற்குப் பக்கத்திலேயே மருத்துவமனையும் இருப்பதால் அதற்கும் சம்மதித்துவிட்டாள்.

மருத்துவமனையில் வேலை மிக அதிகமாக இருந்திருக்கிறது. மன அழுத்தம் அதிகமாகியிருக்கிறது. உடல் ரீதியிலான சில உபாதைகளும் ஆரம்பித்திருக்கின்றன. மொத்தத்தில் இவளுக்கு அந்தச் சூழலும் வேலையும் பிடிக்கவில்லை. சொல்லாமல் வேலையை விட்டு நின்றுவிட்டாள். அப்பொழுது வந்து சேர்ந்திருக்கிறது வினை. அடுத்த சில நாட்களில் கல்லூரியிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள். நம்பிச் சென்றிருக்கிறாள். ஆனால் சான்றிதழ்களைத் தரவில்லை. நிறுத்தி வைத்துவிட்டார்கள். பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, செவிலியர் படிப்பு என அனைத்துச் சான்றிதழ்களும் அவர்களிடம்தான் சிக்கியிருக்கின்றன. இப்பொழுது பணம் கேட்கிறார்களாம். அதுதான் சிக்கல்.

தங்களுக்குத் தெரிந்த உள்ளூர் அரசியல்வாதிகள் மூலமாக நிர்வாகத்திடம் பேசிப் பார்த்திருக்கிறார்கள். ‘நீ யார்கிட்ட வேணும்ன்னா சொல்லிக்க...பணத்தைக் கொடுத்துட்டு சான்றிதழ்களை வாங்கிக்க’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்குத்தான் இப்பொழுது வழி தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

இது அந்தப் பெண்ணின் version. 

கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டால் வேறு ஏதாவது காரணத்தையும் கதையையும் சொல்லக் கூடும். என்ன காரணங்களுக்காக சான்றிதழ்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதற்கு வேறு ஏதேனும் வலுவான காரணங்கள் கூட அவர்களிடம் இருக்க வாய்ப்பிருக்கிறது.

என்னுடைய பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புச் சான்றிதழ்கள் என்னிடமில்லை. ஹைதராபாத் நிறுவனத்தில் நான்கு வருடம் வேலை செய்வதாகச் சொல்லி பிணையில் கையெழுத்திட்டிருந்தேன். பிணைக்கு அத்தாட்சியாக பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புச் சான்றிதழ்களை வாங்கி வைத்திருந்தார்கள். நல்லவேளையாக பொறியியல் படிப்புச் சான்றிதழ்கள் எதையும் கொடுத்திருக்கவில்லை. ஒன்றரை வருடங்களில் அந்த நிறுவனத்தைவிட்டு ஓடி வந்தததால் சான்றிதழ்களைத் திருப்பி வாங்க முடியவில்லை. இரண்டு லட்ச ரூபாய் கட்டச் சொன்னார்கள். அது ஒத்து வராது என்பதால் பள்ளிக் கல்வித் துறையில் விண்ணப்பித்து மாற்றுச் சான்றிதழ்களை வாங்கிக் கொண்டேன்.

ஆனால் இந்தப் பெண்ணின் விவகாரம் அப்படியானது இல்லை. பிணை எதுவும் இல்லை. வேறு எந்த ஆவணத்திலும் கையொப்பமும் இடவில்லை. இருந்தாலும் பிடித்து வைத்திருக்கிறார்கள். ஒன்றாம் வகுப்பிலிருந்து தங்களிடமே படித்துக் கொண்டிருந்த பெண்ணின் வாழ்க்கையை ஏன் இப்படி இருட்டடிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இருதரப்புக்குமிடையில் என்னதான் பிரச்சினையென்றாலும் சான்றிதழ்களை பிடித்து வைத்துக் கொள்ள எந்த நிறுவனத்திற்கும் அதிகாரமில்லை. இது ஒரு அயோக்கியத்தனம். ஆனால் பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் இந்தச் சில்லரைத்தனத்தைச் செய்கின்றன. இப்பொழுது நிறைய கன்ஸல்டன்ஸி நிறுவனங்களும் இதே விதத்தில் ஆட்களை மடக்குகின்றன. இதன் வழியாக நான்கைந்து வருடங்களுக்கும் பணியாளர்களை அடிமைகளாக்கி வைத்துக் கொள்கிறார்கள்.

இப்படிச் சிக்க வைத்துவிடும் சான்றிதழ்களை சண்டை போட்டு வாங்கிவிடலாம் என்பதெல்லாம் சாத்தியமே இல்லை. சட்ட ரீதியாகச் சந்திக்க விரும்பினால் அவர்களிடம்தான் சான்றிதழ்கள் இருக்கின்றன என்று நிரூபிக்க நம்மிடம் எந்தத் தரவுகளும் இருப்பதில்லை. அப்படியே நம்மிடம் ஏதேனும் தரவுகள் இருந்தாலும் வருடக்கணக்கில் இழுத்தடிக்கும் வழக்குகள், நாம் எதிர்க்கப் போகும் பெரும் பணமுதலைகள் என எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்தால் பத்து அடி பின்னால் வந்துவிட வேண்டியதுதான்.

பெரும்பாலானவர்கள் வேறு வழியில்லாமல் நிறுவனங்கள் கேட்கும் பணத்தை அழுதுவிட்டுத்தான் சான்றிதழ்களை திரும்ப அடைகிறார்கள். இல்லையென்றால் தொலைந்து போகட்டும் என்று விட்டுவிடுகிறார்கள். இதைத் தவிர வேறு வழிவகைகள் இருப்பதாகவே தெரியவில்லை. தொழிலாளர் நலச் சட்டத்தில் இதையெல்லாம் தடுப்பதற்கு எதுவும் வழிவகைகள் இல்லை. இந்தப் பெண்ணுக்கு எப்படி உதவுவது என்று தெரியவில்லை. இதற்கு பணம் கொடுப்பதில் துளி கூட உடன்பாடில்லை.

தொழிலாளர் நலத் துறையில் ஆணையாளராக இருப்பவரிடம் பேசி வைத்திருக்கிறேன். அவர் சென்னை அலுவலகத்தில் இருக்கிறார். தான் மதுரையில் இருக்கும் தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் மூலமாக கல்லூரி நிர்வாகத்திடம் பேசுவதாகச் சொல்லியிருக்கிறார். பேசினால் வழிக்கு வருவார்களா என்று தெரியவில்லை. கல்லூரி நடத்துபவர்கள் சாதாரண ஆட்களா என்ன? எமகாதகர்கள். இப்படியெல்லாம் எத்தனை பேரைச் சந்தித்திருப்பார்கள்? இருந்தாலும் முயற்சித்துப் பார்க்க வேண்டும். 

அதேசமயம் இத்தகைய சிக்கல்களுக்கு வேறு வழிவகைகள் இருக்கின்றனவா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுத்தால் இப்படிச் சிக்கியிருப்பவர்கள் லட்சக்கணக்கில் தேறுவார்கள்.