Apr 15, 2015

நீயா நானாவும் கவிதையும்

நீயா நானாவில் கவிதையைப் பற்றி பேசியது சரியா தவறா என்று இன்னொரு நீயா நானா ஓடிக் கொண்டிருக்கிறது. வெகுஜன ஊடகத்தில் கவிதையைப் பற்றி பேசக் கூடாது என்பது இவர்களின் வாதம். கோபிநாத்துக்கும் ஆண்டனிக்கும் கவிதை பற்றி தெரியாது என்கிறார்கள். தெரியாமலே இருக்கட்டும். அவர்கள் பேசினால் என்ன குறைந்து போய்விடும்? அப்படியாவது பேசட்டுமே. எழுத்தைப் பற்றிய விவாதம் எங்கு நடந்தாலும் வரவேற்கக் கூடியதுதான். அதை யார் வேண்டுமானாலும் நடத்தட்டும். கவிதையின் பக்கத்தில் வருவதற்கே உனக்கு தகுதியில்லை என்று தாதா வேலையைச் செய்தபடி கவிதையை மூடி மூடி வைத்துத்துதானே கவிதை என்றால் காத தூரம் ஓடும் ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம்? கவிதை ஏன் புரிவதில்லை? எங்கு சிக்கல்? எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என எல்லாவற்றையும் பேச வேண்டியிருக்கிறது. ஒரு கவிதையை எப்படி அணுகுவது என்பதில் ஆரம்பித்து எது கவிதை எது கவிதையில்லை என்கிற விவாதம் வரை பரவலாக நடக்க வேண்டும். 

ஜோல்னா பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வயிறு முட்டக் குடித்துவிட்டு வட்டமாக அமர்ந்து ‘நாம்தான் கவிதையைப் பற்றி பேச வேண்டும்’ என்று முடிவு செய்து அறிவிப்பது அதிகாரம் மட்டுமில்லை அபத்தமும் கூட. கவிதை என்பது புனிதம் வெங்காயம் ஆட்டுப்புலுக்கை என்பதெல்லாம் வெறும் டுபாக்கூர் வாதங்கள். அதை அவிழ்த்து நிர்வாணமாக்கி பிரித்து மேயலாம். தப்பே இல்லை. கோபிநாத் மட்டுமில்லை அசின், ஐஸ்வர்யா ராய் கூட கவிதையைப் பற்றியும் ஆத்மாநாம் பற்றியும் பேசலாம். அதைச் செய்யக் கூடாது என்று சொல்வதற்கு எவருக்கும் அதிகாரமில்லை.

பக்கத்து வீட்டு ஈஸ்வரி அக்காவுக்கும் எதிர்வீட்டு முருகையன் சித்தப்பாவுக்கும் கவிதையின் அடிப்படையாவது தெரியட்டுமே. நீங்களும் நானும் பேசினால் கேட்கவா போகிறார்கள்? நீயா நானாவில் பேசினால் கேட்பார்கள். நகுலன், சுந்தர ராமசாமி என்ற பெயர்களுக்குள் நுழைவார்கள். அது அவசியமில்லையா? அது இப்பொழுது தேவையானதாக இல்லையா? அதை ஊக்குவிக்க வேண்டுமே தவிர ‘அடிங்ங்’ என்று கற்களைத் தூக்கிக் கொண்டு வரக் கூடாது. கவிதை முந்நூறு பேர்களுக்குள் மட்டும் சிக்கிச் சிதிலமைடந்து எட்டுக்கால்பூச்சி கூடு கட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்தால் அதுதான் அக்கப்போரே. அதைத் திறந்துவிடுங்கள். அத்தனை பேரும் பேசட்டும்.

மனுஷ்யபுத்திரனும், போகன் சங்கரும், வெய்யிலும் இன்னபிறரும் கவிதைப் பற்றி பேசுவதை டிவியில் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. வீட்டில் ‘கவிதையைப் பற்றி நீயா நானா’ என்று சில நிமிடங்களாவது வாயைத் திறந்தபடி பார்க்கிறார்கள். கவிதைக்கு சம்பந்தமேயில்லாத சில ஆயிரம் பேர்களாவது நிகழ்ச்சியைப் பார்த்திருக்கக் கூடும். நூறு பேராவது கவனித்திருக்கக் கூடும். பத்து பேராவது கவிதை என்கிற உலகிற்குள் நுழைந்திருக்கக் கூடும். அதுதான் தேவை. சிற்றிதழ்கள் வழியாகத்தான் கவிதையைக் காப்பாற்ற வேண்டும் என்பதில்லை. லட்சக்கணக்கில் செலவு செய்து ஒரு சேனல் கூட அந்த வேலையைச் செய்யலாம்.

தன்னை அழைக்கவில்லை என்ற கடுப்பிலும் பேசினவன் மட்டும்தான் கவிஞனா? மற்றவன் எல்லாம் கவிஞனில்லையா என்ற எரிச்சலிலும் ‘கவிதை எவ்வளவு புனிதமானது தெரியுமா? அதைப் போய் ஒரு டிவியில் பேசலாமா?’ என்று வேஷ்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு வந்துவிடுகிறார்கள். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. எல்லோரும் பேசலாம். பரவலாக விவாதிக்கலாம். 

சரி அவர்கள் பேச வேண்டாம். அமைதியாக இருக்கச் சொல்லிவிடலாம். தீவிர இலக்கியவாதிகளான நீங்கள் கவிதைகளைப் பற்றி பேசுகிறீர்களா? நாங்கள்தான் தமிழ்க்கவிதையைத் தாங்கிப் பிடிக்கிறோம் என்று சொல்லும் முக்கால்வாசிப்பேர் தன் குழுவைச் சார்ந்தவனின் கவிதையைத் தவிர வேறு யாருடைய கவிதை குறித்தாவது பேசுகிறார்களா? இங்கு விமர்சனமா நடக்கிறது? ஆளாளுக்கு மாற்றி மாற்றிச் சொறிந்து கொள்ள வேண்டியது. எதிராளியாக இருந்தால் offlineக்குச் சென்று ‘அதெல்லாம் ஒரு கவிதையா’ என்று அடுத்தவனிடம் புலம்ப வேண்டியது. இவ்வளவுதானே இங்கு விமர்சனம்? வெளிப்படையாக எவ்வளவு விவாதங்களை கடந்த பத்து பதினைந்து வருடங்களில் நடத்தியிருக்கிறோம்? விரல்விட்டு எண்ணிவிடலாம். இங்கு நடக்கும் கவிதை சார்ந்த உரையாடல்களில் பெரும்பாலானவை பாராட்டுக்கூட்டங்கள்தான். மிஞ்சிப் போனால் வலிக்காமல் ஒரு வரியில் ‘அடுத்த கவிதைத் தொகுப்பில் இவரிடமிருந்து இன்னமும் எதிர்பார்க்கிறேன்’ என்று முடிப்பார்கள். அவ்வளவுதான். வெளிப்படையாக விமர்சனம் செய்வதாக இருந்தாலும் கூட துடிபாணனும், மத்தவிலாஸ பிரசனனும், தீர்த்தமுனியும் முகத்தை மறைத்துக் கொண்டுதான் வர வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் அடித்து நொறுக்கிவிட மாட்டீர்களா?

இந்த லட்சணத்தில் நீயா நானாவில் பேசக் கூடாது என்கிறோம். பேசட்டும் விடுங்கள். 

இதையெல்லாம் எழுதுவதால் நீயா நானாவுக்கு அடிபோடுகிறேன் என்று யாராவது சொல்லக் கூடும். ஏற்கனவே சிலமுறை அந்நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கிறார்கள். தவிர்த்துவிட்டேன். அந்தக் களம் எனக்கு சரிப்பட்டு வராது. இனி அவர்கள் அழைத்தாலும் அதையேதான் செய்வேன் என்பதால் அடிபோடுவதாக தப்புக் கணக்கு போட வேண்டியதில்லை. இங்கு ஒருவரைப் பாராட்டினால் விருதுக்கு திட்டமிடுகிறான் என்பார்கள். இல்லையென்றால் வாய்ப்புக்கு பல்லைக் கெஞ்சுகிறான் என்பார்கள். அப்படியெல்லாம் ஒரு எழவும் இல்லை. ஆண்டனியும் நீயாநானாவும் தமிழ் கவிதைப் பரப்புக்கு செய்திருப்பது மிக முக்கியமான காரியம். சித்திரை ஒன்று போன்ற முக்கியமான நாளில் பெரும்பாலானவர்கள் தொலைக்காட்சி முன்னால் அமர்ந்திருக்கும் தருணத்தில் இவ்வளவு வெளிச்சம் நவீன கவிதைக்கு கிடைத்திருப்பது மிகச் சந்தோஷமான விஷயம். கவிதை பரவட்டும். தவறே இல்லை. உங்கள் ஊசிப்போன சித்தாந்தங்களைக் குப்பையில் போடுங்கள்!