Apr 18, 2015

நடிப்பு

தம்பிச்சோழனின் புத்தக வெளியீடு நாளை சென்னையில் நடக்கிறது. தம்பிச்சோழன் எந்த பின்புலமும் இல்லாதவர். இளவயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டு சென்னை வந்து சேர்ந்துவிட்டவர். சாலையோரக் கடைகளில் சமையல் வேலை செய்வதிலிருந்து எப்படியெல்லாமோ நாட்களைக் கடந்தவருக்கு கூத்துப்பட்டறை மிக முக்கியமான இடம். அங்கு சம்பளத்துக்கு வேலை சேர்ந்தவர் பிறகு நடிப்பு பழகி, சில இயக்குநர்களிடம் பணிபுரிந்து, இப்பொழுது இயக்குநராவதற்கு முயற்சித்தபடியே நடிப்பு பயிற்சியாளராக இருக்கிறார்.

பத்தாம் வகுப்பு வரை அவர் படித்த சூழல், வளர்ந்த நிலை போன்றவற்றை விரிவாக எழுதினால் ஒரு நாவலாகிவிடும். அவரது திரைப்படங்களில் அவற்றை பயன்படுத்திக் கொள்ளட்டும். தம்பிச்சோழன் ஓசூரில் இருந்த போது எனக்கு அறிமுகம். காதல் திருமணம். பெண்வீட்டார் தம்பிச்சோழன் மீது கடத்தல் புகாரை அளித்திருந்தார்கள். சென்னையில் இருந்தால் சிக்கல் என்பதால் இந்தப் புகாரிலிருந்து மீண்டு வரும்வரைக்கும் ஓசூரில் வாடகைக்கு வீடு பிடித்திருந்தார். அவருடைய தங்கை வீடு பெங்களூரில் இருக்கிறது- எங்கள் வீட்டுக்கு சற்று அருகாமையில்தான். அங்கு வரும் போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு வருவார். அப்பொழுது ஏதோ ஒரு சமயத்தில் அவரது நடிப்பு அனுபவத்தையெல்லாம் புத்தகமாக்கிவிடலாம் என்று பேசிக் கொண்டிருந்தோம்.

பத்து நாட்களில் கிட்டத்தட்ட இருபது கட்டுரைகளை எழுதிவிட்டார். எல்லாமும் சொந்த அனுபவம்தான். 

தம்பிச்சோழனுக்கும் ஆழ்ந்த வாசிப்பனுபவம் உண்டு. எழுத்து குறித்தும் புத்தகங்கள் குறித்தும் நிறையப் பேசுவார். அடிப்படையில் நல்ல மனிதர். வெகுளியும் கூட. ஆனால் அவசர அவசரமாக முடிவெடுத்துவிடுவார். அது ஒரு நபரைப் பற்றிய முடிவாக இருந்தாலும் சரி அல்லது நிகழ்வு குறித்த முடிவாக இருந்தாலும் சரி. சினிமாக்காரனுக்கு மட்டுமில்லை- யாருக்குமே அவசர முடிவுகள் எதிர்மறையான விளைவுகளைத்தான் அதிகம் உருவாக்கும். ஒரு நாள் ஆறப்போட்டுவிடுவது நல்லது. இடையில் இரண்டு மூன்று மணி நேரமாவது அதைப் பற்றி யோசிக்கவே கூடாது. பிறகு அது குறித்து யோசித்து முடிவெடுக்க வேண்டும். இதை நாளைக்கு சற்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டு வரலாம் என்றிருக்கிறேன்.

நடிப்பு சார்ந்த புத்தகம் வெளியீட்டு விழாவில் என்னை அழைத்துப் பேசச் சொன்னால் எனக்கு வேறு என்ன பேசத் தெரியும்?

நடிப்புக்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. அதன் அடிப்படை சூட்சமம் கூட தெரியாது. ஊரில் இருந்த போது தொடர்ந்து சினிமா ஷூட்டிங் பார்ப்பதுண்டு. நடிகைகள் ஒரு காகிதத்தை வைத்துக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து மனனம் செய்வார்கள். மிகப்பெரிய வசனமாக இருக்கும் என நினைத்துக் கொள்ளத் தோன்றும். ஆனால் கேமிராவுக்கு முன்பாக நின்று ‘இல்ல...எனக்கு பிடிக்கல’ என்று உதட்டை அசைப்பார்கள். ஆச்சரியமாக இருக்கும். இந்த ஒற்றை வரியை பேசுவதற்கு ஹை-கீல்ஸ் அணிந்து ஏன் இவ்வளவு நடை நடந்தார்கள் என்று மண்டைக்குள் குடையும். அது குடைந்தால் குடைந்துவிட்டு போகட்டும். அந்த நடை அவ்வளவு அழகாக இருக்கும். நம் ஊர் பெண்களுக்கு ஏன் இப்படி நளினமாகவே நடக்கத் தெரிவதில்லை என்று நினைத்துக் கொண்டே வீட்டுக்கு வருவேன். எட்டாம் வகுப்பு பையனுக்கு அது வயதுக்கு மீறிய ஆராய்ச்சிதான் என்றாலும் கிளுகிளுப்பான ஆராய்ச்சி.

நடிப்பு பற்றி எந்தப் புத்தகத்தையும் வாசித்ததில்லை. இதுதான் முதல் புத்தகம். தமிழில் நடிப்பு குறித்து வேறு ஏதேனும் புத்தகம் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. தம்பிச்சோழனின் இந்தப் புத்தகம் ஒரு அடிப்படையான் புரிதலை உருவாக்கியிருக்கிறது. ஜூனியர் விகடன் க்ரைம்ஸ்டோரியில் இருந்து கூட நடிகனுக்கு கற்றுக் கொள்வதற்கு ஏதாவது இருக்கிறது போலிருக்கிறது. கவிதை வாசிக்கத் தெரிய வேண்டும். ஒரு கதையை வாசித்துவிட்டு அதை நடித்துக் காட்டத் தெரிய வேண்டும். பிச்சையெடுத்துக் கொண்டு வரும் சாலையோர கிருஷ்ணபரமாத்மாக்களிடமிருந்து கூட நடிப்பையும் குரலையும் பெற்றுக் கொள்ள முடியும். இப்படி எவ்வளவோ! விஜய் சேதுபதியிலிருந்து இன்றைய யதார்த்தமான நடிகர்களில் பெரும்பாலானவர்களுக்கு கூத்துப்பட்டறைதான் தாய்வீடு. அதே கூத்துப்பட்டறையில் இருக்கும் தம்பிச்சோழனின் இந்தப் புத்தகம் நடிப்பார்வம் மிக்கவர்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என நம்புகிறேன். ஆர்வமே இல்லையென்றாலும் நடிப்பின் அடிப்படைகளைப் பற்றிய ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் கொடுத்துவிடும்.

இந்நூலை தோழமை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. நாளை டிஸ்கவரி புக் பேலஸில் புத்தக வெளியீட்டு நிகழ்வு நடைபெறுகிறது. வாய்ப்பிருப்பவர்கள் கலந்து கொள்ளலாம். வீட்டில் அனுமதி வாங்கியாகிவிட்டது. இன்றைய பந்த் முடிந்ததும் பேருந்து ஏற வேண்டும்.