Apr 15, 2015

வேறு வழி?

இன்று காலையில் எழுந்தவுடன் ஒரு அதிர்ச்சி. சந்தோஷமான அதிர்ச்சிதான். எழுபதாயிரம் ரூபாய் அறக்கட்டளைக்கு வந்திருப்பதாக குறுஞ்செய்தி வந்திருந்தது. ஒரே மனிதர் அனுப்பியிருக்கிறார். இதுவரையில் தனிமனிதர் கொடுத்த மிகப்பெரிய தொகை இதுதான். யாராவது மின்னஞ்சல் அனுப்பியிருக்கக் கூடும் என்று திறந்து பார்த்தால் தகவல் இல்லை. வங்கிக் கணக்கில் சார்லஸ் ஆண்டனியின் பெயரில் வந்திருக்கிறது. அவருக்கு நன்றி. 

இன்றைய தேதியில் ரூ. 561150 (ஐந்து லட்சத்து அறுபத்தோராயிரத்து நூற்றைம்பது ரூபாய்) இருக்கிறது.

இன்று இரண்டு காசோலைகள் அனுப்ப வேண்டியிருக்கிறது. ஒன்று ராகவர்ஷினி என்கிற குழந்தையின் சிகிச்சைக்கு. குழந்தைக்கு ஒன்பது மாதங்கள் ஆகின்றன. சென்னை எஸ்.ஆர். எம் மருத்துவமனையில் ஈரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவிருக்கிறார்கள். அம்மருத்துவமனையின் மருத்துவர் ராஜசேகர் கொடுத்திருக்கும் கணக்கின்படி பார்த்தால் பன்னிரெண்டிலிருந்து பதினைந்து லட்சம் வரை செலவு பிடிக்கும் போலிருக்கிறது. குழந்தையின் தந்தை சென்னையில் தனியார் நிறுவனமொன்றில் சாதாரண வேலையில் இருக்கிறார். கடந்த முறை சென்னை வந்திருந்த போது சந்தித்துப் பேசினேன். அவரோடு வேலை செய்யும் பணியாளர்கள் பணத்தைப் புரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சார்பில் நாகராஜ் என்பவர்தான் தொடர்பில் இருக்கிறார். ஆரம்பத்தில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் உதவி கோரியபடி தொடர்ந்து யாராவது தொடர்பு கொள்கிறார்கள். பணம் தேவைப்படுகிறது. அதனால் அவர்களை மீண்டும் அழைத்து ஐம்பதாயிரம் ரூபாய் தருவதாகச் சொன்னேன். அவர்கள் எதுவும் சொல்லவில்லை. இயன்றதைத் தரச் சொன்னார்கள். மிச்சத்தை வேறு யாரிடமாவது கேட்பதாகச் சொன்னார்கள்.

இப்பொழுது மருத்துவர்கள் சிவசங்கரும், செந்தில்பாலனும் மருத்துவம் சம்பந்தமான சந்தேகங்களை நிவர்த்தி செய்து உதவுகிறார்கள். சிவசங்கர் கோபி அரசு மருத்துவமனையில் இதய சிகிச்சைப் பிரிவில் இருக்கிறவர். செந்தில்பாலன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் எலும்பு சிகிச்சை நிபுணர். இருவரையும் தனித்தனியாக அழைத்து ராகவர்ஷினி நிலை குறித்து விசாரித்த போது இரண்டு பேருமே பெரும் செலவு பிடிக்கக் கூட சிகிச்சை என்றார்கள். அறுவை சிகிச்சைக்குப் பிறகும் கூட தொடர்ந்து மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. சற்று கூடுதலாகக் கொடுக்கலாம் என்று தோன்றியது. 

இன்றுதான் காசோலை அனுப்புவதாக இருந்தேன். ராகவர்ஷினியின் பெற்றோரிடம் நேற்றே அனுப்புவதாகத்தான் சொல்லியிருந்தேன். ஆனால் விசாரித்து முடிக்க சற்று தாமதமாகிவிட்டது. இன்று அனுப்பிவிடலாம். ஒத்துக் கொண்டதைவிடவும் சற்றே கூடுதலாக- எழுபதாயிரம் ரூபாய். கடவுள் மீது எனக்கு ஆழ்ந்த நம்பிக்கையுண்டு. ஏதாவதொரு வகையில் நமக்கான செய்திகளை அனுப்பிக் கொண்டேயிருப்பார் என்று நம்புகிறேன். இன்றைய குறுஞ்செய்தியையும் அப்படித்தான். அதனால் சார்லஸ் கொடுத்திருக்கும் மொத்தத் தொகையும் அந்தக் குழந்தையின் உயிரை ஆசிர்வதிக்கட்டும்.

இன்னொரு காசோலையும் இன்று அனுப்ப வேண்டியிருக்கிறது. பனிரெண்டாயிரம் ரூபாய்க்கான காசோலை அது. சில நாட்களுக்கு முன்பாக விஷ்ணுப்பிரியா என்கிற மாணவியை தேர்வெழுத அனுமதிக்காமல் அவளது கல்லூரி நிர்வாகத்தினர் நிறுத்தி வைத்திருந்தார்கள். கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்று காரணம் சொல்லியிருந்தார்கள். சைதை புகழேந்தி அந்தத் தொகையை மாணவியின் அப்பாவிடம் கொடுத்திருந்தார். நேற்று விஷ்ணுபிரியாவிடம் பேசினேன். தேர்வுகள் எழுதிக் கொண்டிருக்கிறாள். அந்தப் பெண்ணின் தந்தை தையற்கலைஞர். தாயார் வேலை எதுவும் செய்வதில்லை போலிருக்கிறது. இருதய நோயாளி. கவிஞர் சந்திரா தங்கராஜின் மகளும் விஷ்ணுப்பிரியாவும் வகுப்புத் தோழிகள். அந்த வகையில்தான் தொடர்பு கொண்டார்கள். புகழேந்தி கொடுத்த பன்னிரெண்டாயிரத்தை பணத்தை அவருக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

இவை தவிர வேறு சிலரும் உதவி கோரியிருக்கிறார்கள். 

ஒரு மாணவர் தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். ஆதிதிராவிட வகுப்பைச் சார்ந்தவர். கல்லூரி பணம் கட்ட வேண்டும் என்றார். விசாரித்துப் பார்த்தால் மதிப்பெண் மிகக் குறைவாக இருக்கிறது. தனியார் கல்லூரி வேறு. ஒரு லட்சம் தேவைப்படும் போலிருக்கிறது. முடியாது என்று சொல்லியிருக்கிறேன். வறுமையான குடும்பம்தான். மூத்தவனும் பொறியியல்தான் படிக்கிறான். இரண்டாவது மகனை தனியார் கல்லூரியில் சேர்த்திருக்கிறார்கள். ‘எல்லாம் ஃப்ரீ’ என்றுதான் கல்லூரிக்காரர்கள் அழைத்திருக்கிறார்கள். அப்படித்தான் பொறி வைப்பார்கள். இப்பொழுது புத்தகம், விடுதி என்று லட்சக்கணக்கில் கேட்கிறார்களாம். வங்கிக் கடனுக்கு விசாரித்திருக்கிறார்கள். ‘உங்களுக்குத்தான் நிறைய சலுகை வருதே’ என்று வங்கியிலும் இழுத்தடிக்கிறார்கள் போலிருக்கிறது. வங்கிகளை அணுகுவதுதான் சரியானதாக இருக்கும் என்று மறுத்துவிட்டேன். தனியார் கல்லூரிகள் எனில் ஏதாவது அவசரத் தேவை என்றால் உதவலாம். ஆனால் ஒரு வருட ஃபீஸ் கட்டுவது என்பதெல்லாம் சாத்தியப்படாத காரியம். இதை ஏன் சொல்ல வேண்டியிருக்கிறது என்றால் அடுத்த முறை யாராவது பரிந்துரை செய்யும் போது இதையெல்லாம் தயவு செய்து சற்று கவனத்தில் எடுத்துக் கொள்ளவும். 

இப்படி விசாரிப்புகளும், ஆமோதிப்பகளும், நிராகரிப்புகளுமாக நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. எல்லோருக்கும் உதவ முடிவதில்லை. ஏதேனும் சில காரணங்களுக்காக தவிர்க்க நேர்கிறது. அப்படி தவிர்க்கப்படும் போது தயவு செய்து தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த விருப்பு வெறுப்புமில்லை. நிராகரிக்க வேண்டும் என்கிற intention எதுவும் இல்லை. அடுத்தவர்கள் கொடுக்கும் பணத்தை மிகச் சரியான இடத்துக்குக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு இருக்கிறது. அந்தப் பொறுப்பை ஒழுங்காக நிறைவேற்ற இப்படியான நிராகரிப்புகள் தவிர்க்கவே இயலாதவை. வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.