Apr 18, 2015

கர்நாடகமும் தமிழ்நாடும்- பந்த்

ஒரு ஆடு எந்தக் காலத்திலேயோ தாண்டிச் சென்றுவிட்டது. இன்றைக்கு அந்த இடத்தை வைத்துக் கொண்டு கர்நாடகக்காரர்களும், தமிழ்நாட்டுக்காரர்களும் அழிச்சாட்டியம் செய்கிறார்கள்.  கன்னடத்தில் மேகே என்றால் ஆடு. தாட்டு என்றால் தாண்டுதல். மேகேதாட்டு. புலியொன்று துரத்திக் கொண்டு வந்த போது உயிரைப் பணயம் வைத்தபடி ஆடு ஓடியிருக்கிறது. ஒரு பாறையிலிருந்து இன்னொரு பாறைக்கு தாண்டியாக வேண்டும். கீழே காவிரி ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏமாந்தால் கதை முடிந்துவிடும். என்றாலும், உயிருக்கு பயந்த ஆடு தாண்டிவிட்டது. புலி பின்வாங்கி திரும்பிச் சென்றுவிட்டது. ஒரு காலத்தில் ஆடு தாண்டிவிடக் கூடிய அகலத்தில்தான் இந்த இடத்தில் காவிரி ஓடியிருக்கிறது. இப்பொழுது அந்த கிரானைட் பாறைகள் அரிக்கப்பட்டு அகலமாகிவிட்டது என்றாலும் மேகேதாட்டு என்ற பெயரே ஒட்டிக் கொண்டது. இந்த இடத்திற்கு சற்று முன்பாகத்தான் அர்க்காவதி ஆறு வந்து சேர்கிறது. காவிரியும் அர்க்காவதியும் சேர்ந்து தமிழ்நாட்டுக்குள் நுழையும் இடத்தில் ஒரு அணையைக் கட்டிவிட்டால் தமிழ்நாட்டுக்குக் கொடுக்கும் தண்ணீரில் இன்னும் கொஞ்சம் கஞ்சத்தனம் காட்டலாம் என்று கன்னட அரசாங்கம் நினைக்கிறது. அரசியல்வாதிகள் உறுதியாக நிற்கிறார்கள்.


தமிழ்நாட்டுக்காரர்களுக்குத்தான் நீர் மேலாண்மையே இல்லை. கோடை காலம் வந்தால் கர்நாடகத்திடமும் ஆந்திராவிடமும் பிச்சையெடுக்க வேண்டியிருக்கிறது. இந்த அணையைக் கட்டினால் இப்பொழுது கொடுத்துக் கொண்டிருக்கும் தண்ணீரின் அளவிலும் கை வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது. தமிழக அரசியல்வாதிகளைப் பொறுத்தவரைக்கும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைக்காது என்பதைவிடவும் வாக்கரசியலுக்காகவாவது கர்நாடக அரசாங்கத்தை எதிர்க்க வேண்டியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பாக தமிழ்நாட்டில் பந்த் நடத்தினார்கள். பெங்களூரிலிருந்து ஊருக்கு வர வேண்டிய வேலை இருந்தது. நம் ஊரில் ஏதாவது பிரச்சினையாக இருக்குமோ என்று பயந்து கொண்டேதான் கிளம்பினோம். ஒரு வித்தியாசமும் இல்லை. வழக்கம் போலவே பேருந்துகள் ஓடின. கடைகள் திறந்திருந்தன. சாதாரணமாக ஆட்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அவ்வளவுதான் நம் எதிர்ப்பு. இன்றைய தகவல் தொடர்பு யுகத்தில் கன்னடக்காரர்களுக்கு இந்த விவகாரம் தெரிந்திருக்காதா என்ன? ‘பந்த் நடத்துறேன்னு பேர் பண்ணுறீங்களா...நாங்க நடத்துறோம் பாருங்க பந்த்’ என்று இன்று களமிறங்கியிருக்கிறார்கள்.

நேற்றிரவே பந்துக்கான அடையாளங்கள் தெரியத் தொடங்கிவிட்டன. பொம்மனஹள்ளி சிக்னல் தாண்டியவுடன் தமிழ்நாட்டுப் பேருந்து ஒன்று படுவேகமாக வந்து ஒரு ஆளை அடித்து வீசிவிட்டது. அடி என்றால் சாதாரண அடி இல்லை. பேருந்தின் முன்பக்கம் வளைந்து கண்ணாடி சுக்கு நூறாக நொறுங்கிப் போய்விட்டது. ஒரு மனிதனை அடித்து பேருந்துக்கு இவ்வளவு சேதாரம் ஆக வேண்டுமென்றால் என்ன வேகத்தில அடித்திருக்க வேண்டும்? இறந்து போனவர் தமிழராகக் கூட இருக்கலாம். மூளை சிதறிக் கிடந்தார். பேருந்துக்கு முன்பாக நின்று கொண்டிருந்த போது ‘பஸ் எப்படி வளைஞ்சிருக்கு பாருங்க’ என்று ஒரு தமிழர் பேசிக் கொண்டிருந்தார். சிவப்பு மஞ்சள்- அநேகமாக இந்தியாவிலேயே மாநிலத்துக்கென தனிக்கொடியை உருவாக்கி வைத்திருப்பவர்கள் கன்னடர்களாகத்தான் இருக்க வேண்டும்- அந்தக் கொடியை தலையில் கட்டியிருந்த இளவட்டத்தின் காதில் இது விழுந்துவிட்டது. ‘ஒரு ஆள் செத்துக் கிடக்கான்...அது தெரியாது...உங்களுக்கு பஸ் போனதுதான் முக்கியமா?’ என்று அரைகுறைத் தமிழில் எகிற ஆரம்பித்துவிட்டான். அவர் பஸ் வளைந்திருக்கிறது என்பதை வேறு அர்த்தத்தில்தான் சொன்னார். பேருந்தின் வேகத்தைச் சுட்டிக்காட்டும் தொனி அது. ஆனால் அவர் அதைத் தமிழில் சொன்னதுதான் பிரச்சினையாகிவிட்டது. சொன்னவர் கமுக்கமாக அந்த இடத்திலிருந்து கம்பி நீட்டிவிட்டார். கொடியைக் கட்டியிருந்தவன் ‘நாளைக்கு இருக்கு’ என்றான். சற்று திகிலாகத்தான் இருந்தது. பைக்கை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்துவிட்டேன்.

இன்று காலை ஒன்பது மணிவாக்கில் ஒரு சுற்று சுற்றிவிட்டு வரலாம் என்று கிளம்பினேன். சாலை வெறிச்சோடிக் கிடந்தது. அத்திபள்ளியில் தமிழ்நாட்டு எல்லை சீல் வைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். அங்கே சென்றால் சுவாரஸியமாக எதுவும் இருக்காது. ஜெயலலிதாவுக்கும், பன்னீர்செல்வத்துக்கும் திதி கொடுக்கிறார்கள் என்றார்கள். அந்த இடத்துக்குச் செல்லலாமா என்று தோன்றியது. ஆனால் வம்பை விலை கொடுத்து வாங்கியது போலாகிவிடக் கூடும். சிவப்பு மஞ்சள் கொடி கூட கைவசம் இல்லை. இந்த பந்த்துக்கு அரசாங்கம் ஆதரவில்லை என்று சொல்கிறார்கள். சித்தராமையாவும் அப்படித்தான் அறிவித்திருக்கிறார். அப்படியெல்லாம் தெரியவில்லை. கன்னடர்களின் கெத்தைக் காட்டிவிடுவதற்கான எல்லா வாய்ப்புகளும் மறைமுகமாக உருவாக்கிக் கொடுக்கப்பட்டிருப்பது போலத்தான் தெரிகிறது. நேற்றிலிருந்தே ‘தமிழர்களுக்கு ஆபத்து, பிரச்சினை உண்டாகும்’ என்றெல்லாம் வதந்திகளைப் பரப்பியிருக்கிறார்கள். விவேக் நகர் வரைக்கும் சென்றிருந்தேன். அந்தப் பகுதி குடிசைகளால் நிரம்பியிருக்கும். ஆனால் கருமாரியம்மன் கோவிலும், சக்தி விநாயகர் ஆலயமும் ஏதோ தமிழ்நாட்டுக்குள் இருப்பது போன்ற பிரமையைத்தான் உருவாக்கும். சென்ற வாரத்தில் கோவில் திருவிழாவுக்கு தமிழ்நாட்டிலிருந்து ஆட்களை வரவழைத்து பட்டிமன்றம் நடத்தினார்கள். அந்த அளவுக்கு தமிழர்களால் நிரம்பிய பகுதி. ஆள்நடமாட்டம் எதுவும் இல்லை. ஒருவரைச் சாலையில் சந்தித்தேன். ‘பிரச்சினையெல்லாம் எதுவும் வராது. ஆனாலும் அமைதியா இருந்துக்கிறது நல்லது’ என்றார். இப்படியொரு மிரட்டலை உருவாக்குவதுதான் இந்த பந்த்தின் நோக்கம். 

தமிழக அரசியல்வாதிகள் கன்னட அரசியல்வாதிகளின் பக்கத்தில் கூட நிற்க முடியாது. இது போன்று கிளம்பும் பொதுவான பிரச்சினைகளில் அத்தனை பேரும் தோள் கொடுக்கிறார்கள். அனைத்துக்கட்சிக் கூட்டம் என்றால் ஈஸ்வரப்பாவும், எடியூரப்பாவும், சித்தாரமையாவும், குமாரசாமி கெளடாவும் சிரித்துக் கொண்டே கலந்து கொள்வார்கள். உள்ளூர் பிரச்சினைகளில் அவர்களுக்குள் எவ்வளவு சண்டை வேண்டுமானாலும் இருக்கும். ஆனால் மாநிலப் பிரச்சினை என்று வந்துவிட்டால் சேர்ந்து கொள்கிறார்கள். நம் மாநிலத்தில்தான் அவலட்சணம். சட்டமன்றத்தில் கூட எதிர்கட்சித்தலைவர்கள் சந்தித்துக் கொள்வதில்லை. எலியும் பூனையுமான அரசியல் அநாகரிகம் நம்மிடம்தான் இருக்கிறது. ஒரு கட்சிக்காரன் பந்த் நடத்தினால் அடுத்த கட்சிக்காரன் அது தோல்வியடைய வேண்டும் என தேவுடு காப்பான். ஒருவன் ஊர்வலம் நடத்தினால் கூட்டமே வரக் கூடாது என்று அடுத்தவன் பிரார்த்தனை நடத்துவான். இவர்களுக்கு காவிரி என்பது எந்தவிதத்திலும் உணர்வுப்பூர்வமானது இல்லை. ஆளுங்கட்சியை எதிர்க்க எதிர்கட்சிகளுக்கும், ‘நாங்கதான் காவலர்கள்’ என்று மக்களை ஏமாற்ற ஆளுங்கட்சிக்கும் ஒரு ஆயுதம். அதைத் தாண்டி எதுவும் இல்லை. கர்நாடகத்தில் அப்படியில்லை. இது ஒரு எமோஷனலான விவகாரம். கட்சிக்காரர்களுக்கும் சரி, சாமானிய பொதுமக்களுக்கும் சரி. அப்படித்தான் கருதுகிறார்கள். அதனால்தான் பந்த் என்று அறிவித்தால் ஆட்டோவிலிருந்து அத்தனையும் ஓரங்கட்டி நிறுத்துகிறார்கள். மாநிலக் கொடியைத் தலையில் கட்டிக் கொண்டு சட்டமன்றத்தை முற்றுகையிடச் செல்கிறார்கள். தமிழ் சினிமாக்களின் போஸ்டர்களை கிழித்து எறிகிறார்கள். தமிழக அரசியல்வாதிகளுக்கு திதி கொடுக்கிறார்கள்.

தமிழ்நாட்டு அரசியல்கட்சிகள் ஒரு சலனத்தை மட்டும் உருவாக்கிவிட்டு ஆளாளுக்கு அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுகிறார்கள். கன்னடக்காரர்கள் அப்படியில்லை. தங்களைச் சொறிந்துவிடுபவர்களிடம் ‘பந்த்ன்னா இதுதான்’ என்று வரிந்து கட்டி நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். வீட்டுக்குச் சென்றுவிடலாம் என்று கிளம்பி வந்துவிட்டேன். பிரதான சாலைகளைத் தவிர்த்துவிட்டு குடியிருப்புகளின் சாலைகள் வழியாகவே வந்து கொண்டிருந்தேன். யாரும் தடுக்கவில்லை. கூட்லு கேட் அருகில்தான் சிறு கூட்டம் இருந்தது. ஏதோ கன்னட அமைப்பினர். வீட்டிலிருந்து வெகு அருகாமையில்தான் கூட்லு கேட் இருக்கிறது என்பதால் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பைக்கிலிருந்து இறங்கச் சொன்னார்கள். அருகில் வந்தவன் எதுவுமே கேட்கவில்லை. சிரித்துக் கொண்டே பைக்கின் பின் சக்கரத்தில் காற்றைப் வெளியேற்றினான். ஒரு வார்த்தை கூட பேசாமல் சிரித்துக் கொண்டே நின்றேன். ‘இவாகா ஸ்டரைக் குரு’ என்று சொல்லிவிட்டு அடுத்த பைக்கை நிறுத்தச் சென்றுவிட்டான். அவனைப் பொறுத்தவரைக்கு பந்த தினத்தில் பைக் ஓட்டக் கூடாது. அவ்வளவுதான். தள்ளிக் கொண்டே வீட்டுக்கு வந்துவிட்டேன்.