Mar 14, 2015

வாக்குமூலம்

நேற்றிரவிலிருந்து எவ்வளவுக்கு எவ்வளவு பாராட்டுக்கள் வந்தனவோ அதே அளவுக்கு வசவுகளுக்கும் குறைவில்லை. அலைபேசியில் பேசியவர்களில் கணிசமானவர்கள் தெரிந்தவர்கள்தான். அவர்களுக்கு பதில் சொல்வதில் பிரச்சினையில்லை. மின்னஞ்சல்கள்தான் யோசிக்கச் செய்கின்றன. பதில் சொல்லியே தீர வேண்டுமா என்று தெரியவில்லை. பொறுமையாக எழுதி அனுப்பிவிடலாம்தான். ஆனால் அதை மண்டையில் ஏற்றிக் கொள்வார்களா என்று குழப்பமாக இருக்கிறது.

தூங்கியெழுந்தவுடன் சில மின்னஞ்சல்களை வாசித்தேன். இப்பொழுது வரை பசியே இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

இன்று மதியம் ஆனந்த் என்கிற ஒரு நண்பர் வந்திருந்தார். அமெரிக்கவாசி. விடுமுறையில் இந்தியா வந்திருக்கிறார். மதியவாக்கில் வீட்டுக்கு வந்திருந்தார். எங்கள் வீட்டில் இன்னமும் நம்பாமல்தான் இருக்கிறார்கள். இவனாக ஆள் செட்டப் செய்து நம்மையெல்லாம் ஏமாற்றுகிறான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவராகத்தான் வந்தார் என்று இவர்களை நம்ப வைப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும் போலிருக்கிறது. கிடக்கட்டும். ஆனந்திடம் பேசிக் கொண்டிருந்த ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.

நாம் எவ்வளவுதான் முயன்றாலும் நம்மைப் பற்றிய பிம்பத்தை (இமேஜ்) நடிப்பு அல்லது புரட்டு வழியாக உருவாக்கிவிட முடியாது. பல்லைக் கெஞ்சி நடித்தாலும் நம்முடைய உண்மையான குணாதிசயம் ஏதாவதொரு கணத்தில் எட்டிப்பார்த்துவிடும். அப்படி எட்டிப்பார்க்கிற குணத்தின் வழியாகத்தான் நம்மைப் பற்றிய பிம்பத்தை அடுத்தவர்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். நடித்துக் கொண்டிருப்பது தெரிந்தால் அந்தப் பக்கமாகச் சென்று ‘நடிக்கிறாண்டா...’ என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டுச் சென்றுவிடுவார்கள். எட்டிப்பார்க்கிற குணாதிசயம் இருக்கிறதல்லவா? அதுதான் நாம். அதுதான் உண்மை. எனவே நம்மைப் பற்றிய பிம்பம் ஒன்றை நமக்குப் பிடித்தமான வகையில் அடுத்தவர்களிடம் உருவாக்க வேண்டுமானால் நமது குணத்தைத்தான் மாற்றிக் கொள்ள வேண்டுமே தவிர நடிப்பினாலும் புரட்டு பேசுவதனாலும் சாத்தியமே இல்லை.

வாழ்க்கையில் மட்டுமில்லை, எழுத்துக்கும் இது பொருந்தும். ஏதேனும் அழுத்தத்தின் காரணமாகவோ அல்லது இன்னாரைக் கவர வேண்டும் என்பதற்காகவோ அல்லது ஒரு சாராரை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகவோ இன்றைக்கு ஒரு மாதிரி எழுதி நாளைக்கு இன்னொரு மாதிரி எழுதிக் கொண்டிருந்தால் வாசிக்கிறவர்கள் புரிந்து கொள்ளமாட்டார்களா என்ன? எவ்வளவுதான் தேன் தடவி எழுதினாலும் நமது நோக்கம் எழுத்தில் எட்டிப் பார்த்துவிடும். நுண்மையான வாசகர்களிடம் தப்பிக்கவே முடியாது.

இந்த எண்ணங்களை மனதில் நிறுத்திக் கொண்டுதான் எழுதுகிறேன். மனதுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதைத்தான் பேசுகிறேன். காந்தியடிகள் சொன்னதுதான் வேத வாக்கு- உண்மையைப் பேசிவிட்டால் பிரச்சினையே இல்லை. பொய்யைச் சொல்வதற்கு ஞாபக சக்தி அதிகம் தேவை. ஒரு பொய்யை மறைக்க இன்னும் சில பொய்கள் சொல்ல வேண்டியிருக்கும். Political correctness க்காக நமது மனது நினைப்பதற்கு மாறான ஒன்றைச் சொன்னால் நிச்சயமாக இன்னொரு சமயத்தில் சிக்கிக் கொள்ள வேண்டிய நிலை வரும். அது அடுத்தவர்கள் நம் மீது வைத்திருக்கும் ஒட்டுமொத்த நம்பகத்தன்மையையும் சிதைத்துவிடும். அதனால் வெளிப்படையாக இருந்துவிடுவது உசிதம்.

மதம், சாதி போன்ற விஷயங்களைப் பற்றி பேசும் போது ஒரு சாராருக்கு பிடிக்காமல்தான் இருக்கும். அதைத் தவிர்க்கவே முடியாது. திடீரென்று நமது கருத்தை வாசிக்கும் எதிர்நிலை ஆட்கள் ‘த்தா’ என்று மின்னஞ்சல் அனுப்பத்தான் செய்வார்கள். அதற்காக என்ன செய்ய முடியும்? தொடர்ந்து கவனிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்- இதுதான் நான். அபத்தமோ ஆழமோ- இது என் புரிதல். தெரிந்ததைப் பேசுவதில் தயக்கம் எதுவும் இல்லை. அதே சமயம் ஒரு கருத்தைச் சொல்லிவிட்டோம் என்பதற்காக ‘நான் சொல்வதுதான் சரி’ என்கிற முரட்டுவாதம் எதுவும் இல்லை. என்னுடைய உயரம் எனக்குத் தெரியும். ஆனால் யாரோ எதிர்க்கிறார்கள் என்பதற்காகவெல்லாம் ரிவர்ஸ் கியருக்கு மாறிவிட முடியாது.  அவ்வளவு பலவீனமானவாகவும் இல்லை.

நேற்று ஒரு நண்பர் பேசும் போது ‘controversy ஆன விஷயங்களை விட்டுவிடுங்கள்’ என்றார். அப்படி இருப்பது சாத்தியமா என்று தெரியவில்லை. அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை என நினைக்கிறேன். நம்மைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் ஏதாவதொரு கருத்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஒருவேளை வெளியில் சொல்லாமல் வேண்டுமானால் அமுக்கிவிடலாமே தவிர கருத்தே இல்லை என்று சொல்வதெல்லாம் பம்மாத்துதான். ஒரு விஷயத்தில் வலியச் சென்று கருத்தைத் திணிக்க வேண்டியதில்லை. ஆனால் பேசலாம் என்று நினைக்கிற விஷயங்களில் மனதில் தோன்றுவதை பேசிவிட வேண்டியதுதானே?