Mar 5, 2015

காட்டிலே ஒரு மான் - அம்பை

தங்கம் அத்தை கதை சொல்வார். அவரிடம் கதை கேட்பது என்றால் குழந்தைகளுக்கு அலாதி ப்ரியம். வழக்கமான கதைகளாக இல்லாமல் இட்டுக்கட்டி சொல்வார். சூர்ப்பணகை போன்றவர்களை அரக்கி என்று சொல்லாமல் அவர்களுக்குள் இருக்கும் பெண்களை வெளியில் கொண்டு வருவார். என்னவோ காரணத்தினால் தங்கம் அத்தை கதை சொன்ன அந்த இரவுகளை மறக்கவே முடிவதில்லை. 

அத்தை கறுப்பு நிறம். கொஞ்சம் முடி நரைத்திருந்தது. அவர்கள் வீட்டில் காலால் இயக்கும் ஹார்மோனியமும் உண்டு. அத்தைதான் வாசிப்பாள். மாமாவுக்கு வேறு மனைவியும் இருக்கிறாள். அத்தையைப் பார்க்கிறவர்கள் கனிவு அல்லது பரிதாபத்தோடுதான் பார்க்கிறார்கள். அதற்கு காரணமிருக்கிறது. அத்தை இன்னமும் பெரியவள் ஆகவே இல்லை. பார்க்காத வைத்தியங்கள் இல்லை. எல்லாவிதமான மருந்தையும் கொடுத்துப் பார்த்துவிட்டார்கள். அப்பொழுது  பலன் இல்லை. பயமூட்டினால் ஆகிவிடுவாள் என்று எதிர்பார்த்து அவளை இருட்டுக்குள் போர்வையைப் போர்த்திக் கொண்டு வந்து மிரட்டினார்கள். எதுவும் நடக்கவில்லை. மாமாவுக்கு வேறொரு பெண்ணை பார்க்கிறார்கள் என்று தெரிந்த போது விஷத்தைக் குடித்துவிட்டாள். மாமாவும் தனக்கு வேறு திருமணமே வேண்டாம் என்று இருந்துவிட்டார். ஆனால் அத்தை என்ன நினைத்தாளோ- அவளே ஒரு பெண்ணைப் பார்த்து மாமாவுக்குத் திருமணம் செய்துவிட்டாள். இப்பொழுது அவர்களுக்கு ஏழு குழந்தைகள்.

அத்தை பெரியவள் ஆகவில்லை என்கிற விஷயத்தை வள்ளிதான் கண்டுபிடித்தாள். ஆனால் அப்படியென்றால் என்னவென்றே வள்ளி உட்பட மற்ற குழந்தைகளுக்குத் தெரியவில்லை. அத்தைக்கு முடியெல்லாம் நரைத்திருக்கிறது. அப்புறம் ஏன் பெரியவள் ஆகவில்லை என்கிறார்கள் என்று ஒரே குழப்பம். வெயில் காலத்தில் அத்தை ரவிக்கையைக் கழற்றிவிட்டு சாமானங்கள் வைக்கும் அறையில் படுத்திருப்பாள். அப்பொழுது ஓடிச் சென்று அவளது மார்போடு அணைந்தபடி படுத்துக் கொள்ளும் போது அவளது உடம்பில் ஏதோவொரு ஜீவ ஊற்று ஓடுவது போலத் தெரியும். ஆனால் அத்தையிடம் என்னவோ ராசி இருக்கிறது என்கிறார்கள். விதை நடுவதிலிருந்து மாடு கறப்பது வரை இவள் தொட்டால்தான் நடக்கிறது. குழந்தை பிறக்கும் போது அத்தையை அழைத்து அம்மா அருகில் நிறுத்திக் கொண்டாள்.

இதுதான் அம்பையின் காட்டிலே ஒரு மான் கதையின் போக்கு.


அம்பை தமிழின் முக்கியமான பெண் எழுத்தாளர். எழுத்தாளர்கள் வரிசையைத் தமிழில் எழுதினால் அவரை எந்தவிதத்திலும் தவிர்த்துவிட முடியாது.  காட்டிலே ஒரு மான் என்கிற கதையைவிடவும் அவருடைய அம்மா ஒரு கொலை செய்தாள்  என்ற கதைதான் மிக முக்கியமானதாகத் தோன்றுகிறது. ஆனால் நூறு சிறந்த கதைகளில் எஸ்.ராமகிருஷ்ணன் இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்ததில் நிச்சயம் ஒரு காரணமிருக்கும் என நம்புகிறேன். 

தங்கம் அத்தையின் பிரச்சினை மிக உணர்வுப்பூர்வமானது. எல்லோரும் பரிதாபத்துடன் பார்க்கிறார்கள். குழந்தை இல்லை. மனைவி என்கிற ஸ்தானத்தை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. இப்படி அவள் தன் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை இழக்கிறாள். ஆனால் அவள் எதையும் காட்டிக் கொள்வதில்லை. குழந்தைகளுக்கு கதை சொல்லிக் கொண்டும், மாடு கறப்பதிலிருந்து குழந்தைப் பிறப்பின் போது அருகில் இருப்பது வரை மிக இயல்பாகவே இருக்கிறாள். 

அத்தைக்கு வேதனை இல்லையென்று சொல்ல முடியாது. பழகிக் கொண்டாள். இந்தக் கதையின் முடிவில் குழந்தைகளுக்காக ‘காட்டிலே ஒரு மான்’ என்ற கதையைச் சொல்வாள். ஒரு மான் காட்டில் கூட்டத்தோடு வசித்து வந்தது. அந்தக் காட்டில் எல்லாமும் கிடைக்கிறது. வேடன் இருக்கிறான் தான் ஆனாலும் வாழ்க்கை செளகரியமாக இருக்கிறது. திடீரென்று மான் தனது கூட்டத்தைவிட்டு திசை மாறி வேறு காட்டுக்குள் சென்றுவிடுகிறது. எப்படி அலைந்து தடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தூரத்தில் ஒரு வேடன் இருக்கிறான். பயத்தில் ஒரு மரத்துக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறது. பிறகு மெள்ள காட்டைச் சுற்றிப் பார்க்கிறது. இந்தக் காட்டிலும் எல்லாமும் இருக்கிறது. இந்தக் காட்டிலும் வாழ முடியும் என பழகிக் கொள்கிறது. குழந்தைகள் உறங்கிவிடுகிறார்கள். தங்கம் அத்தை மட்டும் உறங்காமல் அமர்ந்திருக்கிறாள்.

ஒரு கதை, அதை முடிக்கும் போது குழந்தைகளுக்கான இன்னொரு கதை என்கிற உத்தியையும் குறிப்பிட்டாக வேண்டும். 

தமிழ் சிறுகதைகளில் தொடர்ந்து புதுவிதமான சோதனை முயற்சிகள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. அப்படியான முயற்சிகள்தான் கதைமொழியை அடுத்தடுத்த தளத்துக்கு நகர்த்திக் கொண்டிருக்கின்றன. அந்த நோக்கிலும் இந்தக் கதையைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. மிகப்பெரிய பிரச்சினைகளை பெண் எப்படித் தாங்கிக் கொள்கிறாள் என்பதை குழந்தையின் பார்வையிலிருந்து சொல்லப்படும் போது அதில் ஒரு துல்லியத்தன்மை வந்துவிடுகிறது. 

ஆனால் இந்தக் கதை நமக்கு முந்தைய ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பு. இந்தக் கதையில் வரும் தங்கம் அத்தையைப் போல நவீன உலகின் இன்றைய பெண்கள் இருக்கிறார்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை என்றாலும் இரண்டு தலைமுறைக்கு முந்தைய தமிழ்ப் பெண் ஒருத்தியின் பொறுமை அவளது வாழ்க்கை முறை ஆகியனவற்றை சித்திரமாக்குகிறது என்கிற அடிப்படையில் வாசிக்க வேண்டிய கதையாக தனக்கான இடத்தைப் பிடித்துக் கொள்கிறது.