Mar 3, 2015

மகாராஜாவின் ரயில்வண்டி

பதினான்கு வயது மிக முக்கியமானது. நம் அத்தனை பேருக்கு அந்த வயதில் ஒரு காதல் இருந்திருக்கும். காதல் என்று சொல்ல முடியாவிட்டாலும் மனதுக்குள் பதுங்கிக் கொண்டிருந்த காமமும் எதிர்பாலின ஈர்ப்பும் ஒரு பூனைக்குட்டியைப் போல விழித்துக் கொள்ளும் தருணம் அது. அரும்பிய அந்தக் காதலை நாம் விரும்பியவர்களிடம் வெளிப்படுத்தியிருக்கக் கூட மாட்டோம். ஆனால் முதல் மழையில் நனைந்த ரோஜாவைப் போல எந்தக் காலத்திலும் நெஞ்சுக்குள் குளிர்ச்சியாகவே இருந்து கொண்டிருக்கும்.

அப்படியான பால்யத்தின் ஈரத்தை மெலிதாகக் கீறிவிடக் கூடிய கதைதான் மகாராஜாவின் ரயில் வண்டி. அ.முத்துலிங்கத்தின் கதை இது.


பதினான்கு வயதுச் சிறுவனொருவன் செல்வநாயகம் மாஸ்டர் வீட்டில் தங்குவதற்கு பதிலாக ஜார்ஜ் மாஸ்டர் வீட்டில் தங்குகிறான். அது மாளிகை மாதிரியான வீடு. அவ்வளவு வசதியை இவன் அதுவரை பார்த்ததில்லை. அந்த வீட்டில் ஒரு பெண் இருக்கிறாள். பதின்மூன்று வயது. ரோஸ்லின் என்று பெயர். அவர்கள் கத்தோலிக்கர்கள். இவனுடைய மதம் கதையில் வருவதில்லை. ஆனால் கண்டிப்பாக கத்தோலிக்கன் இல்லை என்று புரிந்து கொள்ளலாம். அந்தக் குடும்பம் அந்நியோன்யமாக இருக்கிறது. அம்மாவுக்கு மகள் முத்தம் கொடுக்கிறாள். மகளுக்கு அம்மா முத்தம் கொடுக்கிறாள். தனது தாய்க்கு முத்தம் கொடுக்கும் போது அவள் இவனை ஓரக்கண்ணில் இவனைப் பார்க்கிறாள். இவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிவதில்லை. இதெல்லாமே வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது.

அந்த வீட்டில் இவன் வெகுநாட்களுக்குத் தங்கப் போவதில்லை. சில நாட்கள்தான். ஆனால் புதுமையான அனுபவத்தைத் தேடிக் கொண்டிருக்கிறான். அந்த வீட்டின் அம்சங்கள் இவனுக்கு புதியதாகத் தெரிகிறது. இரண்டு தலையணைகளுடனான கட்டிலும் மடிப்புக்கலையாத விரிப்புடன் கூடிய மெத்தையும் இவனுக்கு இதுவரை பழக்கமேயில்லை. அந்த அறையிலிருக்கும் மூன்று கதவுகளையுடைய குளியலறை வித்தியாசமாக இருக்கிறது. அந்தக் குளியலறையில் பெண்களின் அந்தரங்கமான பொருட்கள் கிடக்கின்றன. உள்ளாடைகள் கிடக்கின்றன. இப்படி எல்லாமே இவனுக்கு ஒரு கிளர்வூட்டும்படியான அனுபவங்கதான். பதற்றமுண்டாக்கக் கூடிய புதுமைகள்.

இவனுக்குத்தான் அப்படி. அவள் இரவுடை அணிந்து வந்து மிக நெருக்கமாக நின்று பேசுகிறாள். அவளது அங்கத்தின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் இவனால் தொட்டுவிட முடியும்.  அவ்வளவு அருகாமை. வீட்டில் மற்றவர்களோடு மிக சகஜமாக இருக்கு அந்தப் பெண்ணுக்கு இவனை விட்டு தள்ளி நிற்க வேண்டும் என்று தெரியாமல் இருந்திருக்கலாம். இவன் பார்க்கும் பாலினக் கவர்ச்சியுடனான பார்வையிலேயே அவள் இவனை பார்த்தாள் என்றெல்லாம் சொல்ல முடியாது. இவனுக்கு அவள் மீது பிரியம். அவ்வளவுதான். 

இவன்தான் அந்தப் பெண்ணின் அங்கங்களைப் பார்க்கிறான். அவள் கிதார் வாசிக்கும் போது தொடைகளை கவனிக்கிறான். காமம் துளிர்விட்டுக் கொண்டிருக்கிறது. அவளின் குழந்தைமை அப்படியேதான் இருக்கிறது. தன்னுடைய அப்பாவுக்கு ஒரு ரயில்வண்டி இருப்பதாகவும் அது தாத்தாவிடமிருந்து அவருக்கு வந்ததாகவும் அவருக்குப் பின் தனக்கு வரப்போவதாகவும் சொல்கிறாள். அவன் தங்கியிருக்கும் அறையில் குட்டிகளுடன் வசிக்கும் பூனை குட்டியாக இருக்கும் போது ஆணாக இருந்ததாகவும் பிறகு வளரும் போது பெண்ணாக மாறி குட்டி ஈன்றதாகவும் சொல்கிறாள். ஒரு இளம்பெண்ணுக்கேயுரிய சம்பாஷனைகள் அவை.

திடீரென்று செல்வநாயகம் மாஸ்டர் வருகிறார். இவனை வேறொரு விடுதிக்கு அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கிறார். இவன் தனது உடைமைகளை எடுத்துக் கொள்கிறான். இனி திரும்ப இந்த அறைக்கு வரவே முடியாது என யோசிக்கிறான். பூனைகளை ஒரு முறை பார்த்துவிட்டு வெளியேறுகிறான். ரோஸ்லின் என்ற பெயரை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவது என்று கூட தெரிந்து கொள்ளாமல் வந்துவிட்டதாக யோசிக்கிறான். வகுப்புகள் தொடங்கிய பிறகு அவளைப் பற்றி ஓரிருமுறை கேள்விப்படுகிறான் ஆனால் அதன் பிறகு அவளைப் பார்ப்பதெல்லாம் இல்லை.

பதின்ம வயதின் தொடக்கத்தில் நிற்கும் ஆணுக்குள் துளிர்க்கும் காமத்தை பதிவு செய்த கதையாகத்தான் புரிந்து கொள்கிறேன். இந்தக் கதையை வாசித்துவிட்டு யோசிக்க நிறைய விஷயங்கள் உண்டு. உதாரணமாக அதே அறையில் குட்டிகளுடன் வசிக்கும் பூனை எதைக் குறிக்கிறது? இவன் அவளைக் காமத்தோடு பார்க்கிறான் சரி. மாறாக அவள் அவனை எப்படிப் பார்த்திருப்பாள்? சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருந்த போது ஜார்ஜ் மாஸ்டர் எதற்காக டம்ளரில் இருக்கும் தண்ணீர் அதிரும்படி கத்தினார்? இது போன்ற கேள்விகளுக்கு பதில் தேடிப் பார்க்கலாம். 

அப்படியே யோசிக்கச் செய்தாலும் இதை ஆகச் சிறந்த கதை என்றெல்லாம் சொல்ல முடியாது. அ.முத்துலிங்கத்தின் வேறு மிகச் சிறந்த கதைகள் இருக்கின்றன. ஆனால் மகாராஜாவின் ரயில்வண்டியை எந்த அடிப்படையில் எஸ்.ராமகிருஷ்ணன் சிறந்த நூறு கதைகளின் தொகுப்பில் சேர்த்திருக்கிறார் என்று தெரியவில்லை. அந்தத் தொகுப்பில் எஸ்.ரா ஒவ்வொரு எழுத்தாளர் பற்றியும் நீண்ட குறிப்பை எழுதியிருப்பதாகச் சொன்னார்கள். நான் வாசித்ததில்லை. ஒருவேளை இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை அதில் சொல்லியிருக்கலாம். எனக்கு இது ஒரு சாதாரணமான கதையாகத்தான் தெரிகிறது. வாசித்துவிட்டுச் சொல்லுங்கள்.