Mar 4, 2015

எவ்வளவு பிரச்சினைகள்?

‘நான் வயசுக்கு வராததுக்கு முன்னாடியே கண்ணாலம் பண்ணி வெச்சுட்டாங்க’ என்று வெற்றிலைபாக்கு போட்ட பாட்டி ஒருவர் சொன்னது ஞாபகமிருக்கிறது. அவர் சொன்ன அந்தச் சமயத்தில் நானும் வயசுக்கு வந்திருக்கவில்லையென்பதால் வேறு கேள்விகளைக் கேட்கவில்லை. அந்தப் பாட்டிக்கு எப்பவோ சங்கு ஊதிவிட்டார்கள். இன்னமும் உயிரோடிருந்தால் அவரிடம் கேட்பதற்கு எவ்வளவோ கேள்விகள் இருக்கின்றன. குறிப்பாக ‘என்ன செஞ்சீங்க?’ என்று கேட்டிருப்பேன். கண்களை மூடிக் கொண்டு கண்ட கண்ட அர்த்தமெல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டாம். ‘வீட்டு வேலையெல்லாம் செஞ்சீங்களா?’ என்கிற அர்த்தம்தான். என்னிடமிருந்து தப்பித்துவிட்டார்.

அதன் பிறகு சிறு வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டவர்களை நேரில் பார்க்க முடிந்ததில்லை. பதினாறு பதினேழு வயதுகளில் திருமணம் செய்யப்பட்ட பெண்களைச் சந்தித்ததுண்டு. அதைவிடச் சிறுவயதில் திருமணம் செய்து கொண்டவர்களைப் பார்த்ததில்லை.

இப்பொழுதெல்லாம் நாற்பதைத் தொட்டபிறகும் திருமணம் ஆகாத ஆண்களைத்தான் அதிகம் பார்க்கிறேன். உறவுக்காரப் பையன் ஒருவருக்கு நாற்பதைத் தாண்டுகிறது. எப்படியாவது ஒரு பெண்ணைப் பிடித்துவிட வேண்டும் என அலையாய் அலைந்து திரிந்தார்கள். கடைசியில் மலைப்பாங்கான இடத்திலிருக்கும் ஒரு கிராமத்தில் பெண்ணொருத்தி சிக்கிவிட்டாள். அவளுக்கு அப்பா இல்லை. அண்ணன்தான். அண்ணனுக்கு ஒன்றரை ஏக்கர் பூமி இருக்கிறது. அந்த பூமியில் மொத்த உழைப்பும் இந்தப் பெண்ணுடையதுதான். காலை எழுந்து கஞ்சியோ கூழோ குடித்துவிட்டு காட்டுக்குச் சென்றால் பொழுது சாய்ந்த பிறகுதான் திரும்புவாளாம். இடையில் யாராவது சாப்பாடு கொண்டு போய்க் கொடுப்பார்களாம். கடும் உழைப்பாளி. 

மாப்பிள்ளைப் பையனுக்கு ஓரளவுக்கு வசதியுண்டு. கட்டிக் கொண்டு வந்துவிடலாம் என்று முடிவு செய்துவிட்டார்கள். முந்தின நாள்தான் ஜாதகம் பார்த்திருக்கிறார்கள். பையனுக்கு படிப்பு எதுவும் இல்லை. மூன்றாவதோடு படிப்பை நிறுத்திவிட்டு மண்வெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டான். ஜாதகப் பொருத்தம் இருந்திருக்கிறது. விட்டால் யாராவது குட்டையைக் குழப்பிவிடுவார்கள் என்று அடுத்த நாளே பெண் பார்க்கச் செல்லும் படலம். எங்களுக்கு அலைபேசியில் தகவல் கொடுத்தார்கள். அடுத்த நாள் காலையில் பறந்தடித்துக் கொண்டு கிளம்புகிறோம். பெண் வீட்டில் சாப்பிட்டாகிவிட்டது. ஜவுளி எடுத்தாகிவிட்டது. நகை உருக்கக் கொடுத்துவிட்டார்கள். அத்தனையும் வெள்ளிக்கிழமை நடக்கிறது. திங்கட்கிழமையன்று முகூர்த்தம். இடையில் இரண்டே நாட்கள்தான். ஆனால் வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து பெண்ணின் அண்ணன்காரனைக் காணவில்லை. ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு எங்கேயோ ஓடிவிட்டான்.

தேடாத இடம் இல்லை. ‘மீறி நடந்துச்சுன்னா என் பொணத்தை வந்துதான் தூக்கிட்டு போகோணும்’ என்று தகவல் கொடுத்துவிட்டான். என்ன செய்வது? திருமணம் நின்றுவிட்டது. அந்த மாப்பிள்ளைக்கு அவ்வளவு வருத்தம். அவரது நாற்பதாண்டு கால வாழ்க்கையில் ஐந்நூறு ஜாதகங்களாவது பார்த்திருப்பார்கள். இருநூறு பெண்களின் வீட்டுக்காவது விசாரிப்புக்குச் சென்றிருப்பார்கள். எவ்வளவோ தடைகளுக்குப் பிறகு இவ்வளவு தூரம் வந்திருந்த திருமணம் நின்று போனது. அவரையும் மீறி அழுதிருந்தார். முகம் வாடிக் கிடந்தது. ‘விடுங்க போகட்டும்’ என்றேன். எச்சிலை விழுங்கிக் கொண்டார். அவருக்குள் எத்தனை வருத்தமிருக்கும் என்று  தெரியும்தான். ஆனால் ஏதாவது பேசியாக வேண்டுமே என்று பேசினேன். அவருக்குள் ஆயிரம் கேள்விகள் சுழன்றடித்துக் கொண்டிருக்கும். அவர் எதுவுமே பேசவில்லை. அவர் பேசுகிற மாதிரியான மனிதர் இல்லை. சாந்தமான அப்பாவி. பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

இப்படி இன்னொரு மனிதரிடம் பேசியிருக்கிறேன் - அவரும் நாற்பது ப்ளஸ்ஸில் இருப்பவர்தான். திருமணமே கைகூடவில்லை. ஒரு சமயம் அவரிடம்   ‘கல்யாணம்தான் வாழ்க்கையா? அதைத்தவிர வேறு எவ்வளவோ இருக்கு’ என்று மஹா கழட்டி மாதிரி பேசினேன். அவர் நன்கு படித்திருக்கிறார். ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவர் ‘உனக்கு எவ்வளவு வயசுல கல்யாணம் ஆச்சு?’ என்றார். ஒரு வினாடி கூட யோசிக்காமல் ‘இருபத்தேழு’ என்றேன். ஆமோதிப்பது போல தலையை மேலும் கீழுமாக அசைத்துவிட்டு எங்கேயோ பார்க்கத் தொடங்கிவிட்டார். அதற்கு மேல் அவர் ஒரு வார்த்தை பேசவில்லை. அப்புறம்தான் யோசித்தேன். அதை நான் சொல்லியிருக்கக் கூடாது.

பணம் இருப்பவன் இல்லாதவனைப் பார்த்து ‘பணம்தான் பிரதானமா?’ என்று கேட்பது எவ்வளவு அபத்தமோ அப்படியான அபத்தம்தான் திருமணம் செய்து கொண்டவன் நாற்பது வயதிலும் திருமணமாகதவனைப் பார்த்து ‘கல்யாணம்தான் வாழ்க்கையா?’ என்று கேட்பது. திருமணத்தின் வழியாக கைகூடும் பாலியல் சந்தோஷங்கள், சமூக அந்தஸ்து என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். எதிர்ப்படுபவர்கள் கேட்கும் கேள்விகளைச் சமாளிப்பதுதான் மிகப்பெரிய கொடுமை. அவனுக்குத் திருமணம் ஆகவில்லை என்று தெரியும்தான். ஆனால் முதல் கேள்வியே ‘ஏதாச்சும் செட் ஆச்சா?’ என்பார்கள். எதிர்த்தும் பேச முடியாது. பதிலும் சொல்ல முடியாது. ‘இத்தனை வெளியூர்களுக்கு போற.....ஒரு பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லையா?’ என்கிற ரீதியில் எழுப்பப்படும் கேள்விகள் அவனுடைய சாமர்த்தியத்திற்கு எதிரான கேள்விகள் இல்லை. அவனுடைய ஆண்மையைக் குறி வைத்து எழுப்பப்படும் கேள்வி. நொந்து போய்விடுகிறார்கள். 

தோல்வியடைந்த திருமணங்கள், விரும்பியவரை திருமணம் செய்து கொள்ள முடியாமல் போனது, நாற்பது வயதான பிறகும் திருமணமே ஆகாமல் இழுத்துக் கொண்டிருப்பது, திருமணத்திற்கு பிறகான லடாய்கள்- எவ்வளவு பிரச்சினைகள்? நம் சமூகத்தில் ஒரு தனிமனிதனின் பிரச்சினைகள் என்று பொதுவாக பட்டியலிட்டால் அதில் பெரும்பாலானவை திருமணம் சார்ந்துதான் இருக்கும் போலிருக்கிறது. 

ஆண்களுக்கு இப்படியென்றால் பெண்களுக்கும் வேறு பிரச்சினைகள். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்னமும் அந்த வெற்றிலைபாக்குக் கிழவியைப் போல இளவயதிலேயே பிடித்துக் கட்டி வைத்துவிடுகிறார்கள். சமீபகாலம் வரை இப்படியான விவகாரங்கள் நடப்பது பற்றி தெரியாது. அவ்வப்போது ஊடகங்களில் செய்தி வரும்போது எங்கேயோ ஒன்றிரண்டு நடந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன். சமீபத்தில் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நண்பர்கள் இன்னமும் பரவலாக குழந்தைத் திருமணம் நடப்பதாகச் சொன்னார்கள். வாழை, ஒய்யல் போன்ற அமைப்புகளின் வழியாக கிருஷ்ணகிரி, தர்மபுரி பள்ளி மாணவர்களிடையே பழகும் தன்னார்வலர்களிடம் கேட்டால் கதை கதையாகச் சொல்வார்கள்.

இதைக் கடுமையான குற்றம் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. அந்தக் குடும்பத்தின் பொருளாதாரச் சிக்கல்கள், அவர்களின் அறியாமை, குடும்பச் சுமை என எல்லவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. மூன்று பெண் குழந்தைகள் இருப்பார்கள். முதல் குழந்தைக்கு பதினான்கு வயது ஆகும் போது சொந்தக்காரப் பையன் ஒருவனுக்கு பெண் கேட்டு வருவார்கள். ஒரு சுமையை இறக்கி வைப்பதாக நினைத்து சரி என்று சொல்லிவிடுகிறார்கள். அவர்களும் என்னதான் செய்வார்கள்? பதினெட்டு வயது வரைக்கும் காத்திருந்து தெரியாத ஒருவனுக்கு பவுன் போட்டு, மண்டபம் பிடித்து, விருந்து படைத்து திருமணம் செய்து வைப்பதையெல்லாம் நினைத்துப் பார்த்து மலைத்துப் போய்விடுகிறார்கள். 

அரசாங்கத்தின் மூலமாக அழுத்தம் கொடுத்து அரசு அதிகாரிகளின் வழியாக மிரட்டி திருமணத்தை நிறுத்துவதை கடைசி அஸ்திரமாகத்தான் பயன்படுத்த வேண்டும். அதற்கு முன்பாக வேறு வழிகள் ஏதேனும் இருக்கின்றனவா என்று யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. பதினான்கு வயதில் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் பெண்ணுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதைப் பற்றிய தகவல் தெரிந்த நண்பர் ஒருவர் இதைத் தடுக்க முடியுமா என்று ஒரு நண்பர் கேட்டிருந்தார். சில நண்பர்களிடம் விசாரித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரையிலும் நல்ல ஐடியா எதுவும் கிடைக்கவில்லை. காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தை அணுகாமல் வேறு வழியில் நிறுத்த முடியுமா? இருந்தால் சொல்லுங்கள். முதலில் திருமணத்தை தடுத்து நிறுத்தலாம். அதன்பிறகு அந்தப் பெண்ணால் படிக்க முடியுமென்றால் குறைந்தபட்சம் கல்லூரி வரை படிப்பதற்கான செலவுகளை ஏற்றுக் கொள்ளும் ஸ்பான்ஸர் ஒருவரைப் பிடிப்பது என் பொறுப்பு.