Mar 3, 2015

குட்டி தல

கடந்த பத்தாண்டுகளில் வணிக ரீதியிலான ஊடகங்களை கவனித்தவர்களுக்கு இரண்டு விஷயங்கள் புலப்படும். ஒன்று பயமூட்டும்படியான செய்திகள், இரண்டாவது கொண்டாட்டமான மனநிலையை  உண்டாக்கும் செய்திகள். இவை இரண்டும் வெகு எளிதில் பரவலான கவனம் பெற்றுவிடுவதை கவனிக்கலாம். இரண்டுமே mass psychology யின் முக்கியமான அம்சங்கள். இவற்றை வைத்துக் கொண்டுதான் கார்போரேட் ஊடகங்கள் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டிலும் கவனம் செலுத்தினால் போதும். பெரும்பாலான வாசகர்களை தங்கள் பக்கமாகவே கட்டிப் போட்டுவிடலாம். 

பயமூட்டும்படியான செய்திகள் என்பதற்கு உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால் பன்றிக்காய்ச்சல் குறித்தான செய்திகளைச் சொல்லலாம்- இப்பொழுது சற்று பரவாயில்லை இதற்கு முன்பாக 2009 ஆம் ஆண்டு பன்றிக்காய்ச்சல் பரவத் தொடங்கிய போது உலகமே அழிந்துவிடப் போகிறது என்கிற ரீதியில் செய்திகளைப் பரப்பினார்கள். எந்தச் செய்தித்தாளைப் பார்த்தாலும் இதுதான் செய்தி. பன்றிக்காய்ச்சலுக்கான தடுப்பூசி, முகமூடிகள் என வியாபாரம் கொழுத்தது. வெகுநாட்களுக்குப் பிறகுதான் ‘ஊடகங்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு மருந்து நிறுவனங்கள் வியாபாரத்தை அதிகரிக்கிறார்கள்’ என்ற பேச்சு எழுந்தது. பிறகு இந்தச் செய்தி அமுங்கிவிட்டது. சமீபத்தில் எபோலா நோய் பரவத் தொடங்கிய போதும் இப்படித்தான் பயமூட்டினார்கள். இப்படி ஏதாவதொரு பிரச்சினையை பூதாகரமாக்கி மக்களை ஒரு முறை பயப்படுத்திவிட்டால் போதும். பெரும்பாலானவர்கள் அவர்களையும் அறியாமல் அந்தச் செய்தியைத் தேடத் தொடங்கிவிடுவார்கள். 

பொருளாதார மந்த நிலையின் காரணமாக பஞ்சம் வந்து அத்தனை பேரும் சாகப் போவது போலவும், ஒரு நிறுவனம் சரிவது என்பது உலகத்தையே காலி செய்வது போலவும் செய்திகளை ஊதிப் பெருக்குவது இந்த அடிப்படையில்தான். உண்மையில் அப்படியெல்லாம் எதுவுமே நடக்காது. உலகம் வழக்கம் போலவேதான் சுற்றிக் கொண்டிருக்கும். ஆனால் அப்போதைக்கு ஒரு பயம் வருகிறது அல்லவா? அதுதான் அவர்களின் தேவை. அந்த பயத்தின் வழியாக வாசகரை தங்களோடு பிணைத்துக் கொள்வார்கள்.

இரண்டாவது ஐட்டம்- கொண்டாட்ட மனநிலையை உருவாக்குவது. excitement. அர்னாப் கோஸ்வாமி, பர்க்கா தத், ராஜ்தீப் சர்தேசாய் போன்ற கார்போரேட் ஊடகவியலாளர்களை கவனித்தவர்களுக்குத் தெரியும். தாங்கள் சொல்லும் செய்தியில்தான் பிரபஞ்சத்தின் மொத்த இயக்கமும் நிகழ்வது போலவும், ஒரே செய்தியில் இந்த தேசத்தையே புரட்டிப் போடுவதாகவும் முக்கி மூச்சுவிடுவார்கள். எவ்வளவுதான் நம்முடைய பேஸ்மெண்ட் உறுதியாக இருந்தாலும் நம்மை அசைத்துவிடுவார்கள். அவர்களது உடல்மொழியும் குரலும் அப்படி இருக்கும். அதுவும் இந்த அர்னாப் மாதிரியான சிகாமணிகள் சமூக ஊடகங்களில் தம்முடைய செய்திதான் திரும்பத் திரும்ப பேசப்படுவதாக சங்கு ஊதுவார்கள். ‘அப்படித்தான் இருக்குமோ?’ என்று யோசிக்கத் தொடங்குவோம். இது ஒரு ஊடக நுட்பம். வெறும் செய்திகளை மட்டும் வெளியிட்டுக் கொண்டிருந்தால் அதுக்கு என்ன மரியாதை இருக்கிறது? அதெல்லாம் அந்தக் காலம். இப்பொழுது பரபரப்பை உண்டாக்கிக் கொண்டேயிருக்க வேண்டும். தமக்கான சந்தை மதிப்பு குறைந்துவிடவே கூடாது. அதைத்தான் ஊடகங்களில் செய்து கொண்டிருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்கள் பரவலான பிறகு ஊடகங்களுக்கு இன்னமும் சவால் அதிகரித்திருக்கிறது. மக்களை எந்நேரமும் தங்களின் வசமாக்கிக் கொள்வதற்காக இவர்களுக்கிடையில் மிகப்பெரிய போட்டி நடந்து கொண்டேயிருக்கிறது. அது ஒருவகையில் மனோவியல் போர். ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் மனோதத்துவ நிபுணர்களை பணியில் அமர்த்தி பயனாளிகளை கட்டுக்குள் வைத்திருப்பது பற்றிய ஆராய்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தால், ஊடகங்கள் அதே சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பார்வையாளர்களைக் கவர்வதற்கான முஸ்தீபுகளில் இறங்கியிருக்கின்றன. பெரும்பாலான ஊடகங்கள் தங்களது ஃபேஸ்புக் ட்விட்டர் கணக்குகளை பரமாரிக்க தனி ஆட்களை நியமித்திருக்கிறார்கள். தொடர்ந்து செய்திகளை வெளியிட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். செய்திகளை வெளியிடுவது தவறு இல்லை. ஆனால் அது அதிகபட்சமான விருப்பக் குறிகளைப் பெறும் செய்தியாக இருக்க வேண்டும்; அதிகம் பேரால் பகிர்ந்து கொள்ளப்படும் செய்தியாக இருக்க வேண்டும். ஆளாளுக்கு போட்டி.

இப்படி ஏதாவதொரு வகையில் ஆட்களை கட்டிப் போடுகிறார்கள் அல்லவா? அப்படியான ஒரு வழிமுறைதான் hashtag. #tag என்பது செய்திகளை வகைப்படுத்துவதற்கான வழிமுறை மட்டுமில்லை. அது ஒரு பிரச்சினையுடன் தன்னை இறுகப் பிணைத்துக் கொள்ளும் நுட்பம். நமக்குத் தெரிந்த ஒரு செய்தியை அல்லது தகவலை இந்த உலகத்துக்கு கொண்டு செல்வதில் தனக்கும் பங்கிருக்கிறது என்பதான மனோபாவம் ஒரு மனிதனுக்குள் உற்சாகத்தை உண்டாக்குகிறது. மிகப்பரவலாக பேசப்படும் ஒரு விஷயத்தைப் பற்றி தானும் பேசியாக வேண்டும் என்ற உந்துதலை அவனுக்குள் உருவாக்குகிறது. கூட்டம் கூட்டமாக கலந்து கொள்கிறார்கள். 

தனக்குத் தெரிந்த ஒரு தகவலை இன்னொருவருக்கு பரப்புவது என்பது மனிதனுக்குள் காலங்காலமாக இருக்கும் ஆழ்மன பழக்கம் அல்லது ஆசை. விலங்குகளுக்கும் இந்தப் பழக்கம் உண்டு. புதிய மனிதர் ஒருவரைப் பார்க்கும் போது தான் படுத்திருக்கும் இடத்திலிருந்து துளி கூட அசையாமல் நாய் குரைப்பதை பார்த்திருக்கலாம். அதன் நோக்கம் அந்த மனிதரை விரட்டுவதைவிடவும் மற்றொரு நாய்க்கு தகவல் தெரிவிப்பது. எங்கிருந்தோ மற்றொரு நாய் திரும்பக் குரைக்கும். அந்த நாய் இந்த மனிதரை இன்னமும் பார்த்திருக்காது ஆனால் தமக்குத் தெரிந்த தகவலை இன்னொரு நாய்க்கு பரப்புகிறது. நம்முடைய மனநிலையும் அப்படித்தானே?

திண்ணையில் அமர்ந்து அடுத்தவர்களைப் பற்றி கிசுகிசு பேசுவதிலிருந்து சமூக வலைத்தளங்களில் நமக்குத் தெரிந்தவற்றைப் பகிர்ந்து கொள்வது, citizen journalist என்ற பெயரில் நம்முள் உறங்கிக் கொண்டிருக்கும் தகவல் பரப்புவரைத் தூண்டிவிடுவது என எல்லாமே இப்படியான தகவல் பரப்புவதில் நமக்கு இருக்கும் விருப்பம்தான். அத்தனையும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட கண்ணிகள். மனோவியல் கண்ணிகள்.

இத்தகைய மனோவியல் கண்ணிகள் பற்றிய பரவலான விவாதங்கள் இங்கு நடப்பதில்லை. ஆனால் Hashtag Activism குறித்தான மனோவியல் ஆராய்ச்சிகள் மேலை நாடுகளில் தொடங்கப்பட்டிருப்பது பற்றிய கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கின்றன. எதனால் இப்படி நம்மை பிணைத்துக் கொள்கிறோம்? இதனால் நாம் இழக்கும் நேரம், மன அமைதி போன்றவை குறித்தெல்லாம் யோசிப்பதற்கு பெரிய அளவில் நமக்கு விருப்பமிருப்பதில்லை. நேற்று கூட kuttythala என்கிற hastag பரபரப்பாகிக் கொண்டிருந்தது. அஜீத்துக்கு குழந்தை பிறந்திருக்கிறது. சந்தோஷமான செய்திதான். ஆனால் இவ்வளவு பரபரப்பு தேவையா? எதனால் கொண்டாடித் தீர்க்கிறோம்? தமிழகத்தில் வேறு பிரச்சினைகளே இல்லையா என்ன? Cash for votes, Acting Chiefminister என்று ஆரம்பித்து Tasmac வரை என்று எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. ஏன் கண்டு கொள்வதேயில்லை. அதெல்லாம் விவாதத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களா? ரஜினியும், விஜய்யும், அஜீத்தும்தான் நம் தலையெழுத்தை நிர்ணயிக்கிறார்களா? பேசிப் பேசி சலித்து போன விஷயம்தான். ஆனால் இன்னமும் பேச வேண்டிய தேவை இருக்கிறது. முன்பெல்லாம் ஊடகங்கள்தான் ட்ரெண்ட் என்பதை நிர்ணயித்துக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது நாம்தானே நிர்ணயிக்கிறோம்? இவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தும் ஏன் இன்னமும் சினிமாக்கலைஞர்களை மட்டுமே கொண்டாடித் தீர்க்கிறோம்? குழப்பமாகத்தான் இருக்கிறது.  நம்மூரில் மட்டும்தான் குழந்தை பிறப்பதையெல்லாம் பெரும்சாதனையாகக் கொண்டாட முடியும்.  சாதாரண ரசிகன்தான் இதைச் செய்கிறான் என்று சொல்ல முடியாது தினகரன், தி இந்து உள்ளிட்ட ஊடகங்களும் இந்தக் கொண்டாட்ட மனநிலையைச் சுரண்டி குளிர்காய்கின்றன. கண்ணையே திறவாத பச்சிளம் குழந்தை நமக்கு தலையாக மாறுவது தமிழகத்தில் மட்டும்தான் நடக்க முடியும்.