Feb 28, 2015

பொறியியல் Vs அறிவியல்

இயற்பியல்-பொறியியல் இரண்டில் எதை எடுப்பது எனும் என்னுடைய குழப்பத்தை இங்கே எழுதியிருக்கிறேன். அறிவுரை தர முடியுமா?

நான் இலங்கையில் ப்ளஸ் டூவுக்குச் சமமான Advanced Level எனும் பொதுப் பரீட்சை எழுதி, முடிவுகளும் வந்துவிட்டன. 

கணிதப் பிரிவில் பரீட்சை எழுதிய எனக்கு, இலங்கையின் மிகச் சிறந்த கல்லூரியில் இலவசமாக பொறியியல் கற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இருந்தாலும் ஒரு சின்னப் பிரச்சனை. எனக்கு அறிவியல் பாடங்களான Maths, Theoretical Physics (cosmology, particle physics) போன்றவற்றில் ஆர்வம் அதிகம் (ஆர்வமென்றால், அவை தொடர்பான Popular science கட்டுரைகளை படிப்பதிலும் விவாதிப்பதிலும் மட்டும்தான். Advance math ஐ சுயமாக கற்பதற்கு முயற்சி செய்யவில்லை. நான் child prodigy எல்லாம் கிடையாது ) 

இதனால் எனக்கு பொறியியலே பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது. இதுவரை படித்த பாடங்களுள் கணிதமும் இயற்பியலும் என்னைக் கவர்ந்திருக்கின்றன. பொறியியலை இதுவரை உள்ளே சென்று பார்த்திராததால் அது எப்படி என்று தெரியவில்லை. இருந்தும், பொறியியல் முழுவதும் problem solving இருக்குமென்பதால், அதுவும் சுவாரஸ்யமாகவே இருக்கும் என நம்புகிறேன்.

அத்துடன் படிப்பை முடித்துவிட்டு, அரசாங்க/தனியார் நிறுவனங்களில் வேலைக்கு அமர்வதில் எனக்கு அவ்வளவு விருப்பம் இல்லை. பொறியியல், இயற்பியல், கணிதம் எது படித்தாலும், அதில் ஆராய்ச்சி (Masters, Ph.D மேலும் மேலும்) வழியில் செல்லவும் தேவைப்பட்டால் பேராசிரியராக வரவுமே ஆசைப்படுகிறேன். 

இப்போது பிரச்சனை என்னவென்றால், மேலே சொன்னது போல இலங்கையின் ஆகச் சிறந்த பொறியியல் கல்லூரியில் இலவசமாக கற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை விடுவது முட்டாள்தனம் என்பது பெற்றோரின் கருத்து. அது மட்டுமல்லாமல் கணிதம் மற்றும் இயற்பியல் இலங்கை கல்லூரிகளில் இரண்டாம்தர பாடங்களாக கருதப்படுவதால் அவ்வளவு சிறப்பாக கற்பிக்கப்படுவதில்லை. அத்துடன், இயற்பியல் / கணித பாடங்களில் பிரகாசிக்கும் அளவுக்கு எனக்கு ஒரிஜினாலிட்டியும் கிரியேட்டிவிடியும் இருக்கிறதா என்பது எனக்கே சந்தேகமாக இருக்கிறது. (அப் பாடங்களை ஆழம் வரை சென்று புரிந்துகொள்வதில் எனக்கு கொஞ்சமும் பிரச்சனை இருக்காது. ஆனால், அவற்றில் ஆராய்ச்சி செய்து புதிதாக கண்டுபிடிக்கும் அளவுக்குஎனக்கு திறமை இருக்கிறதா என்பதான் சந்தேகம்.) என்னுடைய புரிதலின்படி, கணிதம்-இயற்பியலில் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிப்பதைவிட, பொறியியலில் ஆராய்ச்சி செய்வது சுலபம் போலிருக்கிறது. ஆனால், எங்கள் சமூகத்தின் பார்வையில் பொறியியலாளர்கள் இயற்பியலாளர்களை விட உயர்ந்தவர்களாக தெரிகிறார்கள்.

இதற்கு என் பெற்றோர், இப்போதைக்கு அந்த சிறந்த கல்லூரியில் பொறியியலை எடுத்து Bachelors டிகிரி செய்யுமாறும், பின்பு இயற்பியலில் ஆர்வம் அதிகம் இருப்பதாக நினைத்தால், Masters டிகிரியை இயற்பியலில் செய்து, தொடர்ந்த ஆராச்சிகளை இயற்பியலிலேயே செய்யுமாறும் கூறுகிறார்கள். இப்படிச் செய்வது சாத்தியமா? இல்லாவிட்டால் என்ன செய்யலாம்?

நன்றி,
அபராஜிதன்.

அன்புள்ள அபராஜிதன்,

வாழ்த்துக்கள். 

அறிவியல் பாடங்களைத்தான் படித்தாக வேண்டும் என்கிற தீவிரமான மனநிலை உங்களுக்கு இல்லையென்பதாலும், மிகச் சிறந்த பொறியியல் கல்லூரியில் படிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்வதாலும் தைரியமாக பொறியியல் படிப்பில் சேர்ந்துவிடுங்கள் என்றுதான் பரிந்துரை செய்வேன். இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களில் விருப்பமுள்ள மாணவர்களுக்கு பொறியியல் மிகச் சுவாரஸியமான பாடத்திட்டம். பொறியியல் என்பது மேற்படிப்புகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் ஏகப்பட்ட scope உள்ள படிப்பு பொறியியல். எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பது நம்மைப் பொறுத்ததுதான்.

நீங்கள் குறிப்பிடுவதோடு ஒப்பிட்டால் தமிழகத்தில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. அறிவியல் படிப்புகளை மிகச் சிறப்பாகச் சொல்லித்தரும் நிறைய கல்லூரிகள் இருக்கின்றன. ஆனால் பொறியியல் படிப்பை மிகக் கேவலமாக்கிக் கொண்டிருக்கும் பொறியியல் கல்லூரிகளில் சேர்கிறார்கள். சப்தகிரி என்றொரு பொறியியல் கல்லூரி இருக்கிறது. எம்.ஈ படிப்பில் சேர்த்துக் கொள்வார்கள். ஐயாயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டால் வருகைப்பதிவைக் கொடுத்துவிடுவார்கள். ஆறு மாதத்திற்கு ஒரு முறை சென்று தேர்வு மட்டும் எழுதிக் கொள்ளலாம். சப்தகிரி மட்டும்தான் என்றில்லை- இப்படி நிறைய பொக்கனாத்திக் கல்லூரிகள் இருக்கின்றன. தனியான பட்டியலே தயாரிக்க முடியும். யாருமே கண்டு கொள்வதில்லை. பி.ஈ முடித்துவிட்டு பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்களாகச் சேர்பவர்களில் பல பேர் இப்படித்தான் எம்.ஈ படிப்பை முடிக்கிறார்கள். பொறியியல் கல்வித்தரத்தின் லட்சணத்தை முடிவு செய்து கொள்ளலாம்.

அதுவே அண்ணா பல்கலைக்கழகம், கோவை அரசு தொழில்நுட்பக்கல்லூரி, பிஎஸ்ஜி போன்ற மிகச் சிறந்த பொறியியல் கல்லூரிகளும் இருக்கின்றன. இப்படியான கல்லூரிகளில் படிக்கும் போது மாணவர்களின் திறன்கள் பன்முகங்களில் வளர்க்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. கவனிக்கவும்- வாய்ப்புகள் இருக்கின்றன. பயன்படுத்திக் கொள்வது மாணவர்களின் கைகளில்தான் இருக்கிறது. பிஎஸ்ஜியில் படித்து ஐம்பது சதவீத மதிப்பெண்களோடு வீணாகப் போனவர்களும் இருக்கிறார்கள். ஐஐஎஸ்சியில் முனைவர் பட்டம் முடித்துவிட்டு மிகச் சிறந்த ஆராய்ச்சியாளர்களாக இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

ஆகவே சிறந்த கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்றால் பயன்படுத்திக் கொள்வதுதான் சிறந்த முடிவாக இருக்க முடியும்.

என்னிடம் ‘என்ன படிப்பது?’ என்று கேட்டால் பாடத்திட்டத்தைக் காட்டிலும் கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று சொல்வேன். மிகச் சிறந்த கல்லூரியில் நாம் அவ்வளவாக விரும்பாத பாடம் என்றாலும் எளிதாகக் கிடைக்கும் பட்சத்தில் அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது நல்லது. ‘இந்தப் படிப்புதான் வேண்டும்’ என முடிவு செய்து மேற்சொன்னது போன்ற ஏதாவது பொக்கனாத்திக் கல்லூரிகளில் சேர்வது என்பது குட்டைக்குள் விழுவது போலத்தான். ஆசிரியர்களும் சரியாக இருக்க மாட்டார்கள்; கல்லூரிகளில் வசதிகளும் சரியாக இருக்காது; உடன் படிக்கும் மாணவர்களும் திறன் வாய்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள்.

பொறியியலில் ஆராய்ச்சிகளைச் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. உங்கள் விருப்பப்பாடங்களான கணிதம், இயற்பியல் போன்றவற்றை பயன்படுத்தியே ஆராய்ச்சிகளைச் செய்ய முடியும். கல்லூரியில் சேர்ந்த பிறகு இந்தப் பாடங்களை தொடர்ந்து கற்று வாருங்கள். நான்கு வருடங்களில் உங்கள் மனநிலை எப்படி வேண்டுமானாலும் மாறக்கூடும். அப்படி மாறுவதை தவிர்க்கவே முடியாது. ஒருவேளை இதே மனநிலை இருக்குமானால் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து கொள்ளலாம். பிரச்சினை எதுவும் இருக்காது. 

உங்கள் குழப்பத்தை போக்குவதற்கு இந்த பதில் ஓரளவு உதவக் கூடும் என நம்புகிறேன்.