Feb 28, 2015

சந்தோஷம் தராத மழை

சுற்றிச் சுற்றி ஆழ்குழாய் கிணறுகளைத் தோண்டுகிறார்கள். எங்கள் வீட்டில் ஒரு குழாய். எதிர்வீட்டில் ஒன்று அதற்கு பக்கத்துவீட்டில் ஒன்று. வெறுமனே தோண்டுவதில்லை. தோண்டிக் கொண்டிருக்கும் போது அவ்வப்போது அழுத்தமான காற்றை உள்ளே அனுப்புகிறார்கள். ‘புஸ்ஸ்’ என்ற பெரும் சப்தத்துடன். உடைந்த கற்கள் மண்கட்டிகளையெல்லாம் சிதறடிக்கும் ஒரு நுட்பம் அது.  ‘நான் நல்லா இருந்தா போதும்’ என்கிற கான்செப்டும் அதில் உண்டு.

எங்கள் ஆழ்குழாயில் நூற்றியிருபது அடியிலேயே தண்ணீர் வந்துவிட்டது. மூன்று வருடங்களுக்கு முந்தைய கதை இது. ஆனால் எதற்கும் இருக்கட்டும் என்று ஐந்நூறு அடிக்கு தோண்டி இருநூறு அடிக்கு இரும்புக் குழாயை இறக்கியிருந்தோம். தரையிலிருந்து இருநூறு அடி வரைக்கும் உதிரி மண். விழுந்து குழியை மூடிவிடக் கூடாது என்பதற்காக பாதுகாப்பு அஸ்திரம் அந்த இரும்புக் குழாய். அந்த அஸ்திரத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள் அம்பு எறிந்துவிட்டார்கள். எங்களுக்குப் பிறகு அவர்கள் போர்வெல் தோண்டினார்கள்.

கற்களையும் மண் துகளையும் சுத்தம் செய்வதற்காக அழுத்தம் கொடுக்கிறார்கள் அல்லவா? அந்த அழுத்தத்தின் போது அவர்கள் குழியிலிருந்து வந்த கல் ஒன்று எங்கள் வீட்டு ஆழ்துளைக் கிணற்றின் இரும்புக் குழாய் மீது மோதியிருக்கிறது. சோலி சுத்தம். குழாய் நசுங்கிப் போய்விட்டது. மோட்டாரை மேலே இழுக்கவும் முடியவில்லை கீழே பார்க்கவும் முடியவில்லை. சலனப்படக்கருவியை கயிற்றில் கட்டி உள்ளே அனுப்பிப் பார்த்துவிட்டார்கள். வேலைக்கு ஆகவில்லை. கடைசி முயற்சியாக ஒரு பெரிய இரும்பை உள்ளே விட்டு இடிக்கப் போகிறார்கள். வந்தால் தண்ணீர் போனால் கண்ணீர். கண்ணீரேதான். வராதா பின்னே? ஒரு லாரி தண்ணீர் வாங்கினால் ஐந்நூறு ரூபாய். ஏழெட்டு பேர் இருக்கிற கூட்டுக் குடும்பம் எங்களுடையது. வாங்குகிற சம்பளத்தை இரண்டாம் தேதியானால் தண்ணீர் டேங்க்காரருக்கு மாற்றிவிட வேண்டும் போலிருக்கிறது.

சொந்தக் கதை இருக்கட்டும். 

இந்தப் பிரச்சினை சம்பந்தமாக ஒருவரைப் பார்ப்பதற்காக நகரத்திற்குள் செல்ல வேண்டியிருந்தது. டவுன்ஹால் என்றொரு இடம் இருக்கிறது. அவ்வப்போது இந்த இடத்தில் தர்ணாக்களை நடத்துவார்கள். இன்றும் ஒரு தர்ணா. ஏதோ பிரச்சினை. காவலர்கள் தடியடி நடத்திக் கொண்டிருந்தார்கள். பெரிய அளவிலான தடியடி என்று சொல்ல முடியாது. கூட்டத்தை ஒழுங்குக்குக் கொண்டு வருவதற்கான முயற்சி அது. வெயில் அடித்துப் பிளந்து கொண்டிருந்தது. போக்குவரத்தும் ஸ்தம்பித்திருந்தது. ஏற்கனவே தண்ணீர் பிரச்சினை மண்டைக்குள் நர்த்தனம் நடத்திக் கொண்டிருந்தது கூடவே இந்த வெயில். இப்பொழுது வழியையும் மறைத்துவிட்டார்கள். 

வழக்கமாக எதையாவது வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். ஆனால் இன்று யாரையாவது அழைத்துப் பேசலாம் என்று தோன்றியது. விரல்கள் செல்போனில் எண்களைப் பிசைந்தன. ரகுவின் எண் அது. நான் பெங்களூர் வந்த புதிதில் ரகு என்னுடன் பணியாற்றினார். கர்நாடகக்காரர். ஹசன் பக்கமாக ஒரு கிராமம். ஆரம்பத்தில் சண்டையிட்டுக் கொள்வோம். சண்டையென்றால் அரசியல் கச்சடாக்கள். அவருக்கு அரசியல் ஆர்வம் அதிகம். தமிழர்களை விமர்சிப்பார். தமிழக அரசியல்வாதிகளை பிடிக்கவே பிடிக்காது. இப்படித்தான் பெரும்பாலும் இழுத்துக் கொண்டிருப்போம். 

ரகுவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உண்டு. கர்நாடக தலித் பெண்ணொருத்தியை திருமணம் செய்திருக்கிறார். இந்த விவகாரத்தினால் இருவரது வீட்டிலும் ஆதரவில்லை.

காவிரியின் குறுக்காக அணை கட்டும் வேலை படுவேகமாக நடந்து வருவதாக கர்நாடக அமைச்சர் அறிவித்திருந்த செய்தி ஒன்றை இன்று காலையில் படித்திருந்தேன். அதைப் பற்றி பேசுவதற்காகத்தான் ரகுவை அழைத்தேன். அவரோடு பேசியே பல மாதங்களாகிவிட்டன. எப்படியும் சண்டைப் பிடிக்கலாம். அந்த கசகசப்புக்கு அது ஒருவித ஆறுதலைத் தரும் என்று தோன்றியது. அழைத்த போது மறுமுனையில் எந்த பதிலும் இல்லை. இணைப்பு துண்டிக்கப்பட்ட அடுத்த நிமிடமே எனக்கு அழைப்பு வந்தது. நந்தினிதான் பேசினார். ரகுவின் மனைவி. நந்தினிக்கு தமிழ் நன்றாக பேச வரும். பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். 

‘எப்படி இருக்கீங்கண்ணா?’ என்றார். நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு ரகு பற்றிய பேச்சு வந்தது. ரகு இல்லை. இறந்துவிட்டார். இன்றைய தினத்தில் இவ்வளவு பெரிய அதிர்ச்சியான செய்தியைக் கேட்க வேண்டியிருக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. ரகு இறந்து இரண்டு மாதங்களாகிவிட்டன. எப்படி எனக்குத் தகவல் வராமல் போனது என்று ஏதோவொரு யோசனை ஓடிக் கொண்டிருந்தது. இப்பொழுது வீடு எங்கேயிருக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்பினேன். அதே ஏரியாதான். மடிவாலாவிலிருந்து பிடிஎம் லேஅவுட் செல்லும் வழியில் இருக்கிறார்கள். அவர்களது வீட்டுக்குச் செல்லும் வழியெங்கும் ரகுவின் யோசனைகளால் மனம் வழிந்து கொண்டிருந்தது.

ரகு வசதியான குடும்பம் இல்லை. எண்பதுகளில் வந்த திரைப்படங்களில் பார்த்த புரட்சிவாதி. கம்யூனிஸம் பேசுவார். எம்.சி.ஏ முடித்துவிட்டு பெங்களூர் வந்துவிட்டார். ‘ஐடியில் வேலை செஞ்சுட்டு எப்படி பாஸ் கம்யூனிஸம் பேசறீங்க?’ என்று நக்கலடித்திருக்கிறேன். ‘இதையெல்லாம் விட்டுட்டு போய்டுவேன்’ என்று சொல்வார். நந்தினியும் அப்படிதான். ஏதோவொரு கம்யூனிஸ மாநாட்டில் சந்தித்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ரகுவோடு நான் அறிமுகமான சமயத்தில் அவர்களுக்கு குழந்தை பிறந்திருந்தது. அப்பொழுதும் இருவரின் வீட்டிலும் யாரும் வரவில்லை. தாங்களே குழந்தையை பராமரிப்பதாக பெருமையாகச் சொல்வார்.

வீட்டை அடைந்த போது ஒரு முதிய பெண்மணி இருந்தார். யாரென்று தெரியவில்லை. கேட்டுக் கொள்ளவில்லை. ‘எப்படி இறந்தார்?’ என்பதுதான் என்னுடைய முக்கியமான கேள்வியாக இருந்தது. மாரடைப்பு. முப்பத்தைந்து வயதாகிறது. வேலை அழுத்தம். சரியான தூக்கம் இல்லை. கண்ட நேரத்தில் சாப்பாடு. எந்நேரமும் எதையாவது யோசித்துக் கொண்டேயிருப்பது என்று பல பிரச்சினைகள். முதல் முறையிலேயே ஆளை முடித்துவிட்டது. தூக்கத்தில் எழுப்பி நெஞ்சு வலிப்பதாகச் சொன்னாராம். எவ்வளவுதான் அவசரப்படுத்தியும் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பாகவே எல்லாம் முடிந்து போனது.  ‘யாருக்குமே தகவல் சொல்ல முடியலைண்ணா’என்றார். அது பிரச்சினையாகத் தெரியவில்லை. இப்பொழுது செலவுக்கு என்ன செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பினேன்.

நந்தினி பொறியியல் முடித்திருக்கிறார். ரகு இருக்கும் போதே ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட்டாராம். குழந்தையை அந்தப் பாட்டி பார்த்துக் கொள்கிறார். வாழ்க்கை அந்தக் குழந்தைக்காக நகர்ந்து கொண்டிருக்கிறது. நந்தினியின் முகத்தில் தீர்க்கவே முடியாத சோகம் படிந்திருப்பதாகத் தோன்றியது. ஆனால் அதை அவர் பெரிதாகக் காட்டிக் கொள்ளவில்லை. எவ்வளவோ கற்பனைகளுடன் தொடங்கிய வாழ்க்கை அவர்களுடையது. தீவிரமான லட்சியவாத இளைஞர்கள் அவர்கள். ஆனால் எப்பொழுதுமே நாம் நினைக்கிற வகையில் வாழ்க்கை அமைந்துவிடுவதில்லை. நமது லட்சியங்கள், உணர்ச்சிகள் என எல்லாவற்றையும் சீண்டிப்பார்த்துக் கொண்டேயிருக்கிறது. சீண்டிப்பார்ப்பதோடு நின்றுவிட்டால் நாம் பாக்கியசாலிகள். ஆனால் அடித்து நொறுக்கிவிட்டுப் போய்விடுவதும் நடந்துவிடுகிறது- பெரும் காட்டாறு ஒன்று ஊருக்குள் புகுந்து கிடைத்ததையெல்லாம் வழித்து எடுத்துக் கொண்டு போவதைப் போல. ஆனால் அதை வேடிக்கை பார்ப்பதைத் தவிர நமக்கு வேறு வழி இருக்கிறதா என்ன?

நந்தினி காபி கொடுத்தார். கிளம்பும் போது ‘உங்களுக்கு நான் ஏதாச்சும் உதவி செய்ய முடியும்ன்னு நினைக்கறீங்களா?’ என்றேன். ‘வீட்டுக்கு வந்து பேசிட்டு போறீங்க இல்லயா? அதுவே பெரிய உதவிண்ணா...குடும்பத்தோட வாங்க’ என்றார். வருவதாகச் சொல்லிவிட்டு வந்து எதுவுமே செய்யாமல் எதை எதையோ யோசித்துக் கொண்டிருந்தேன். இன்று மாலையில் வெகு நாட்களுக்குப் பிறகு இந்த ஊரில் மழை பெய்தது. ஆனால் எந்தவிதத்திலும் சந்தோஷம் தராத மழை இது.