Feb 27, 2015

சாதிக்குள்ள ஒற்றுமையே இல்லை

அன்பு மணி,

நீங்கள் கூறியதுபோல புலியூர் முருகேசன் செய்தது தேவை இல்லாதது என்றே நானும் எண்ணுகிறேன். ஆனால் எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன.

கி.ரா கூட அதிகமாக தெரிந்தவர்களின் கதையை எழுதி இருக்கிறார், முறை தவறிய உறவைக் கூட  எழுதி இருக்கிறார், ஒரு கட்டுரையில் (நண்பனின் கதை -பெருமாள்) ஆனால் வக்கிரமாக அல்ல. எல்லையை எங்கே வரையறுப்பது? இதை ஏன் சட்ட பூர்வமாக அணுக மறுக்கிறார்கள்? இப்படி வன்முறை என்று ஆரம்பித்தால் வேளாளர், தேவர், வன்னியர் என்று குறிப்பிடாமல் எவ்வாறு கூளமாதாரி போன்ற நாவல்களை எழுதுவது? ஆச்சரியமாக இருக்கிறது. யார் இவர்களுக்கு சிறுபத்திரிகை தொடர்பாக தகவல் அளிப்பது?

ஏனைய சாதிக் கட்சித் தலைவர்களோடு  ஒப்பிடும்போது ஈஸ்வரன், தனியரசுக்கு மட்டும் ஏன் ஊடகங்களில் மிகுத்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது? கொங்கு வேளாளர்கள் ஏன் இப்படி ஆரம்பித்து விட்டார்கள்? புரியவில்லை. 

இந்தளவுக்கு எப்போதும் சாதி வீரியமாக தமிழ்நாட்டில் இருந்ததில்லை.

எளிமை, வெள்ளந்தி, அன்பு, விருந்தோம்பல் என்றெல்லாம் நான் பார்த்த ஒரு முகம்தானோ? அந்த கொங்கு மக்கள் எங்கே? ஒரே குழப்பம். 

அன்புடன்,
மணிமொழி ரத்தினம்

கொங்கு வேளாளர்களை பெருமொத்தமாகவெல்லாம் வகைப்படுத்த முடியாது. சகலவிதமான குணங்களும் நிறைந்த ஒரு ஆதிக்க சாதியினர்தான் அவர்களும். இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் நீங்கள் குறிப்பிடும் விருந்தோம்பலில் பல்லடத்து கவுண்டனுக்கும் ஈரோடு கவுண்டனுக்கும் கூட ஏகப்பட்ட வேற்றுமைகள் உண்டு. எனவே பொதுமைப்படுத்துதல் எதுவும் வேண்டியதில்லை என நினைக்கிறேன்.

கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள், மில்கள், தொழிற்சாலைகள், விவசாயம், நிதிவளம் என்று அசைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வலுவான சாதியினராக இருக்கிறார்கள். அதிமுக அரசு அமைந்தாலும் சரி, திமுக அரசு அமைந்தாலும் சரி- குறைந்தபட்சம் ஆறேழு அமைச்சர்கள் இந்தச் சாதியிலிருந்து இருப்பார்கள். எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுக் கொள்ளலாம். கொங்குப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில் அரசு அலுவலர்களில் அவர்கள்தான் பெரும்பான்மையினராக இருப்பார்கள். ஆசிரியர்களில் அதிகம் அவர்கள்தான் இருப்பார்கள். உள்ளாட்சி பிரதிநிதிகள் அவர்கள்தான். இப்படி சகலவிதமான செல்வாக்குடனும் இருக்கும் சாதி அது.

இன்னொரு முக்கியமான அம்சமும் இருக்கிறது. தமிழகத்தின் பிற பகுதிகளை கவனித்தால் அந்தப் பகுதியின் பெரும்பான்மையாக இருக்கும் ஆதிக்க சாதியை எதிர்க்கும் அளவுக்கு வலுவான வேறு சாதிகள் இருக்கும். ஆனால் கொங்குப்பகுதியில் கவுண்டர்களை எதிர்க்கும் அளவுக்கு வலுவான சாதியென்று எதுவும் இல்லை. வேட்டுவக்கவுண்டர்கள், தலித்துகள் என ஆங்காங்கே சிலர் எதிர்த்தாலும் பெரிய அளவில் எதிர்க்க முடியாத சூழல்தான். எதிர்ப்பது என்றால் அரிவாளைத் தூக்கிக் கொண்டு எதிர்ப்பதைச் சொல்லவில்லை. பொருளாதாரம், விவசாயம், தொழில் போன்றவற்றில் கவுண்டர்களுக்கு போட்டியாக நிற்கும் வலுவுள்ள சாதி என்று எதையும் சுட்டிக்காட்ட முடிவதில்லை.

சமீபகாலத்தில் கவுண்டர்கள்  வெளியில் தெரியாத சாதிய மோதல்களில் ஈடுபடாத சாதியினர் என்பது உண்மைதான் என்றாலும் மிகத் தீவிரமான சாதிவெறியுடையவர்கள் என்பதை எந்தவிதத்திலும் மறுக்க முடியாது. பெருமாள் முருகனின் மாதொருபாகன் பிரச்சினை எழுவதற்கு சில ஆண்டுகாலம் முன்பாக ஈரோடு மாவட்டம் நம்பியூரில் தலித்துகள் தங்களுக்குத் திருமண மண்டபத்தை வாடகைக்கு விட வேண்டும் என்று கோரிய போது பிரச்சினை எவ்வளவு தீவிரமானது என்பது அந்தப் பகுதியினருக்குத் தெரிந்திருக்கும். தலித்துகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் ஆன வரைக்கும் முயன்று பார்த்தார்கள். ஆனால் சகல திசைகளிலுமிருந்து களமிறக்கப்பட்ட கவுண்டர்களின் பலத்தின் முன்பாக தலித்துகள் அடங்கிப் போனார்கள் என்பதுதான் நிதர்சனம்.

இயல்பாகப் பேசும் போது கொங்குவேளாளர்கள் ‘சாதிக்குள்ள ஒற்றுமையே இல்லை’ என்பார்கள். கவுண்டர்கள் வீரத்தைக் காட்ட வேண்டும் என்றும் எதற்கும் துணிய வேண்டும் என்பதையும் திரும்பத் திரும்பச் சொல்வதை நேர்பேச்சில் கேட்க முடியும். இத்தகைய உள்மன ஆசைகள்தான் சாதி சார்ந்த பிரச்சினைகளின் போது தீவிரமாக வெளிப்படுகின்றனவோ என்ற சந்தேகம் எழுகிறது.

கொங்குப்பகுதியில் இந்தச் சாதியின் பலம் குறித்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றாகவே தெரியும். அதனால்தான் தனியரசு, ஈஸ்வரன் போன்றவர்கள் அவர்களுக்குத் தேவைப்படுகிறார்கள். ஒரு அணி அதிமுக பக்கம் நிற்கும் போது இன்னொரு அணி திமுக பக்கம் நிற்கிறது. 

பிற சாதிகளில் கலப்புத் திருமணம் அனுமதிக்கப்படும் அளவுக்கு கொங்கு வேளாளர்களில் சாதியக் கலப்பு நிகழ்வதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். சாதியத் தூய்மை, தங்களின் சாதி புனிதமானது போன்ற பிம்பங்களின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மீது அடி விழுவதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. 

இத்தகைய பொருளாதார, சாதிய மற்றும் எண்ணிக்கை சார்ந்த சூழலில்தான் இந்தப் பிரச்சினைகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது. தங்களின் சாதி சீண்டப்படுவதை ஜீரணித்துக் கொள்வதில்லை. காலங்காலமாக கோலோச்சிக் கொண்டு வந்த தங்களின் மரியாதை கீழே விழும் துண்டு போல ஆகிவிடும் என்று பயப்படுகிறார்கள். அதை தங்களின் அரசியல் மற்றும் அரசு சார்ந்த செல்வாக்கு மற்றும் அதிகாரத்தின் வழியாக தடுப்பதற்கான வழிகளை நாடுகிறார்கள். அதன் வழியாக பிரச்சினையை முன்னெடுப்பவர்கள் தங்களின் சொந்த செல்வாக்கையும் ஸ்திரப்படுத்திக் கொள்ள முனைகிறார்கள். சாதிய வெறியுடன், வாக்கு வங்கி அரசியலும் சேர்ந்து கொள்கிறது. நிலைமையும் சூழலும் வேறு மாதிரியாக மாறிக் கொண்டிருக்கின்றன.

தகவல் தொடர்பு மிகச் சாதாரணமாகிவிட்ட இந்தக் காலத்தில் ‘இதையெல்லாம் யார் சொல்லித் தருகிறார்கள்’ என்கிற கேள்வி வலுவில்லாததாகத்தான் தெரிகிறது. ‘ம்ம்’ என்றால் கூட தகவல் சென்றுவிடும்.