Feb 9, 2015

ப்ரவுசரை மூடிடாதீங்க...

சமீபத்தில் ஒரு பெண் கவிஞரின் கவிதைகளை விமர்சகர் ஒருவர் ஆஹோ ஓஹோவென்றிருந்தார். தெரியாத்தனமாக தலையை உள்ளே கொடுத்துவிட்டேன். முதல் வரி கூட முழுமையாகப் புரியவில்லை. என் குருவிக் குஞ்சு மண்டையில் அதையெல்லாம் ஏற்றிக் கொள்வதற்கு இடமில்லை என்று ஒரே ஓட்டம்தான். இங்கே வந்துதான் நிற்கிறேன். இப்படியெல்லாம் எழுதக் கூடாது என்று சொல்வதற்கு நமக்கு என்ன உரிமையிருக்கிறது? ஆனால் கண்களையும் காதுகளையும் இறுக மூடிக் கொள்ளலாம்.

எளிமையான கவிதைகள்தான் பிடிக்கின்றன. அவைதான் சட்டென மனதுக்கு நெருக்கமாகின்றன. கவிதையில் எந்த பாசாங்கும் அவசியமில்லை. நேரடியாகவும் வெளிப்படையாகவும் இருந்தால் போதும். கவிஞனின் அறிவுஜீவித்தனத்தை எல்லாம் வாசகன் மீது இறக்கி வைத்தால் வாசகன் கடுப்பாகத்தான் செய்வான். ஆனால் இதையெல்லாம் சொன்னால் கவிஞர்கள் கேட்பார்களா? அடிக்க வந்துவிடுவார்கள். இந்த இடத்தில் கவிதை குறித்து வோர்ட்ஸ்வொர்த் சொல்லியதைக் குறிப்பிட்டாக வேண்டும். எதற்கு வேர்ட்ஸ்வொர்த் என்றெல்லாம் கேட்கக் கூடாது. வாய்ப்பு கிடைக்கும் போது இப்படியெல்லாம் ஒரு பிட்டை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். ஆகவே வேர்ட்ஸ்வொர்த் என்ன சொல்கிறார் என்றால்....வலிமையான எண்ணங்களின் திடீர் பிரவாகமே கவிதை (Poetry is a spontaneous overflow of powerful feelings). 

மின்னல் மாதிரி மனதில் தோன்றுவதுதான் கவிதை. அதற்கு பிறகு எவ்வளவு நகாசு வேலைகளைச் செய்கிறோமோ அவ்வளவு தூரம் கவிதை விலகிக் கொண்டேயிருக்கும். எவ்வளவு தூரம் கவிதை விலகுகிறதோ அவ்வளவு பிரதிகள் விற்காமல் பரணில் கிடக்கும். பிறகு சரக்கடித்துவிட்டு ‘என்னை மாதிரியான கவிஞனை ஒரு நாதாரிப்பயல் மதிக்கிறதில்லை’ என்று புலம்புகிற நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுவிடும். 

எளிமையாக இருந்தால்தான் கவிதையா? அப்படியானால் நாளிதழ்களின் இலவச இணைப்பில் இருக்கிற கவிதைகள் அவ்வளவு எளிமையாகத்தான் இருக்கின்றன. எனில் அவைதான் சிறந்த கவிதைகளா? என்று யாராவது வாளைச் சுழற்றும் முன் சரண்டர் ஆகிவிடுகிறேன். கவிதையில் ஏதாவதொருவிதத்தில் உண்மை இருக்க வேண்டாமா? வாசிக்கிறவனை ‘டச்’ செய்ய வேண்டும். இது ஒரு பழக்கம்தான். நூறு கவிதைகளை வாசித்துவிட்டால் போதும். நூற்றியொன்றாவதாக வாசிப்பதை கவிதையா இல்லையா என்று போகிற போக்கில் சொல்லிவிடலாம். 

அசோக் பழனியப்பனின் சில கவிதைகள் கிடைத்தன. புதியவர். எங்கேயாவது பிரசுரமாகியிருக்கின்றனவா என்று தெரியவில்லை. மிக எளிமையாக எழுதியிருப்பதாகத் தோன்றியது. இதுவரைக்கும் ப்ரவுசரை மூடாமல் படித்ததற்கு நன்றி. கவிதைகளையும் வாசித்துவிட்டால் கோடானு கோடி நன்றி.

                                                          (1)
நாய்க்கு
பால் சாதம் 
வைப்பான் தம்பி
பூனைக்கு 
நாயின் 
மிச்ச 
சாதத்தை 
எடுத்து வைப்பாள் அம்மா
நாய் 
எப்போதும்போல் 
சாப்பிட்டுவிட்டு 
வாசலில் 
படுத்து தூங்கும்
பூனை அப்படி இல்லை 
முன்பெல்லாம்
அடுப்பங்கரை
பக்கம் படுத்து தூங்கும்
இப்போதெல்லாம் 
புதிதாக வாங்கப்பட்ட 
பிரிட்ஜின் 
பக்கத்திலே 
படுத்து கொள்கிறது

                                                      (2)

நேற்றிரவு
நீயும் 
நானும் 
மிச்சம் 
வைத்த 
காமத்தை
இன்று 
இருவரின் 
உள்ளாடைகளும் 
வாஷிங்மிஷினில்
தின்று தீர்க்கின்றன 

                                                               (3)

எல்லாம் 
முடிந்து விட்டது 
இனி வாழ்ந்து 
என்ன ஆகப்போகிறதென்று 
யாருமற்ற ஒரு இடத்தில் 
தன்னந்தனியாய் 
அமர்ந்திருந்த 
பொழுதில் 
காலுக்கடியில் 
எறும்பு ஒன்று 
எதையோ தேடிக்கொண்டிருக்கிறது