Feb 10, 2015

திருநங்கைகள் பரிதாபத்திற்குரியவர்களா?

பத்து வருடங்களுக்கு முன்பாக சபரி எக்ஸ்பிரஸில் ஹைதராபாத் சென்று கொண்டிருந்தேன். விஜய் எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் வேலையில் சேர வேண்டும். அதுதான் எனக்கு முதல் வெளிமாநிலப் பயணம். மொழி தெரியாத பிரதேசம். தனியாகத்தான் செல்ல வேண்டியிருந்தது. ஒன்றரை நாட்கள் பயணம். திகிலாக இருந்தது. ஊர், உறவுகளையெல்லாம் விட்டுப் பிரிகிறோம் என்கிற வருத்தம் வேறு அவ்வப்போது கண்ணீரை வரச் செய்தது. அடிக்கடி உடமைகளை சரிபார்த்துக் கொண்டேயிருந்தேன். இறங்கி எங்கே தங்கப் போகிறேன் என்பது கூட உறுதியாகத் தெரியவில்லை. பள்ளித்தோழன் ஒருவன் கோட்டி என்கிற இடத்தில் இருந்தான். அவன் அப்பொழுதுதான் சென்னை இடமாறிச் செல்வதாகவும் அவனது நண்பர்களோடு தங்கிக் கொள்ளலாம் என்று சொல்லியிருந்தான். அதெல்லாம் தனிக்கதை.

வண்டி முந்தின ஸ்டேஷனில் நின்ற போது பாதிக்கும் மேலான கூட்டம் கீழே இறங்கிவிட்டது. அடுத்த மூன்றாவது நிமிடத்தில் இரண்டு மூன்று திருநங்கைகள் வந்திருந்தார்கள். பணம் கேட்டார்கள். வழக்கமாக யாராவது பிச்சை கேட்டால் ‘இல்லை’ எனச் சொல்லிப் பழகியிருந்தேன். அப்படித்தான் சொன்னேன். அடுத்த வினாடி முகத்துக்கு நேராக நின்று புடவையைத் தூக்கிக் காட்டினார்.  நினைவு தெரிந்த பிறகு முதன் முறையாக அடுத்தவரின் நிர்வாணத்தைப் பார்க்கிறேன். அதுவும் அவ்வளவு அருகில். பேயறைந்தது போலிருந்தது. அதே பெட்டியில் இரண்டு பெண்களும் இருந்தார்கள் என்பதால் எனக்கு அது மிகப்பெரிய அவமானமாக இருந்தது. பணம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஐந்து ரூபாயை பர்ஸிலிருந்து எடுத்துக் கொடுத்தேன். ‘இது முன்பே கொடுத்திருந்தால்’ என்று தெலுங்கில் சொல்லிவிட்டு பர்ஸிலிருந்த ஐம்பது ரூபாயை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றார்கள். அப்பொழுது ஐம்பது ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை எனக்கு. அழுகை பொத்துக் கொண்டு வந்தது. பற்களைக் கடித்துக் கொண்டேன். அதன் பிறகு எப்பொழுது சபரி எக்ஸ்பிரஸில் சென்றாலும் ஐந்து ரூபாயைத் தனியாக சட்டைப்பையில் வைத்துக் கொள்ளப் பழகியிருந்தேன்.

சபரி எக்ஸ்பிரஸ் ஒரு உதாரணம். 

சேலம் பேருந்து நிலையத்தை இரவு நேரத்தில் கவனித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். பிரதான சாலையுடன் பேருந்து நிலையத்தை இணைக்கும் படிக்கட்டின் அருகில் எப்படியும் ஐந்தாறு திருநங்கைகள் இருப்பார்கள். ஆட்டோக்காரர்களும் அவர்களுக்காகத் தயாராக இருப்பார்கள். அந்தப் பாதையில் நடக்கும் ஆண்களை அழைப்பார்கள். பெரும்பாலும் வெளியூர் பயணிகள்தாம். இரை சிக்கியவுடன் காத்திருக்கும் ஆட்டோவில் நடுவில் ஏற்றி இரண்டு திருநங்கைகள் ஆளுக்கு ஒரு பக்கமாக அமர்ந்து கொள்வார்கள். அதில் ஒருவர் வாடிக்கையாளரை அழைத்தவராக இருக்கும். மற்றொரு பக்கத்தில் அமர்பவரும் திருநங்கைதான் ஆனால் படு முரட்டுத்தனமாக இருப்பார். தங்களின் இடத்துக்கு அழைத்துச் செல்வார்கள். அந்தப் பயணிக்கு அது புதிய ஊர். ஆட்டோ இருளையும் வெளிச்சத்தையும் மாற்றி மாற்றி தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் போதே பயம் கவ்வத் தொடங்கியிருக்கும். ஏதோவொரு இடத்தில் வைத்து அவனை இறக்கி நான்கைந்து பேராகச் சேர்ந்து கிட்டத்தட்ட ஓட்டாண்டி ஆக்கிவிட்டுத்தான் திருப்பி அனுப்புவார்கள். இதில் இட்டுக்கட்டுதல் எதுவும் இல்லை. சேலம் பற்றிய பரிச்சயமுள்ள யாரை வேண்டுமானாலும் விசாரித்து உறுதிப் படுத்திக் கொள்ளலாம். இது இப்பொழுதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 

பெங்களூர் மட்டும் என்ன சளைத்துவிட்டது? எங்கள் வீடு இருக்கும் கூட்லு கேட் ஏரியாவில் ஒரு பார் இருக்கிறது. கர்நாடகத்தில் தனியார் பார்களுக்கு அனுமதியுண்டு. ஆனாலும் தமிழகத்தைப் போல சாராய ஆறு ஓடுவதில்லை. அந்த பாருக்கு அருகிலேயே ஒரு பாழடைந்த வீடு இருக்கிறது. இரவு கவியத் தொடங்கும் போது மார்பகப் பிளவுகள் தெரியும்படியாக ஆடையணிந்து வந்து நான்கைந்து திருநங்கைகள் நின்று கொள்வார்கள். எதிர்படும் ஒவ்வொரு ஆணையும் ஏதாவது சைகை செய்து அழைப்பார்கள். அங்கு பெட்டிக்கடை வைத்திருக்கும் நபர் பழக்கமானவர். ‘உள்ளே வரும் வரைக்கும் சிரிப்பவர்கள் உள்ளே வந்துவிட்டால் மிரட்டியே பிடுங்குவார்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.

பிச்சை எடுப்பது, விபச்சாரம் என எல்லாவிடங்களிலும் நகரத்துத் திருநங்கைகள் வன்முறையை ஏவுகிறார்கள் என்பதுதான் நிதர்சனம். சேலத்திலும் பெங்களூரிலும் இவர்களிடம் சிக்குகிறவர்களை விட்டுவிடலாம். அவர்கள்தான் தேடிச் செல்கிறார்கள். ஆனால் சபரி எக்ஸ்பிரஸில் சிக்குபவன் என்ன பாவம் செய்தான்? சபரி எக்ஸ்பிரஸ் மட்டுமில்லை- சிக்னலில் பணம் கேட்க வருபவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் ஐந்து ரூபாயாவது கொடுக்க வேண்டும். குறைவாகக் கொடுத்தாலோ அல்லது பணமே கொடுக்கவில்லையென்றாலோ சாபம் விட்டுவிட்டுச் செல்வார்கள். இல்லையென்று மறுக்க முடியுமா?

பொத்தாம் பொதுவாக ‘திருநங்கைகள் பரிதாபத்திற்குரியவர்கள்’ என்று எழுதுவதெல்லாம் அபத்தம். அவர்கள் மரியாதைக்குரியவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எல்லோருமே பாவம் என்றும் பரிதாபம் என்றும் சொல்வதெல்லாம் வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் என்கிற மாதிரியான பொதுப்படையான வாசகம். இந்தச் சமூகம் இவர்கள் மீது செலுத்தும் வன்முறையை ஏதாவதொருவிதத்தில் ஏமாந்தவர்கள் மீது செலுத்துகிறார்கள் என்பதுதான் உண்மை.

அவர்களுக்கென குடும்பம் இல்லை, மற்றவர்கள் நக்கலடிக்கிறார்கள், அரசாங்கமும் சமூகமும் மதிப்பதில்லை என எவ்வளவோ கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் இருக்கின்றனதான். ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்களின் செயல்பாடுகள் இப்படி இருக்கும் போது சாமானியர்கள் எப்படி மரியாதை செலுத்துவார்கள்? அரசாங்கமும் கவனிப்பதில்லை, சமூகமும் மதிப்பதில்லை அப்படியென்றால் திருநங்கைகளுக்கு வேறு எப்படி வருமானம் கிடைக்கும்என்று எதிர்க்கேள்வி கேட்கலாம்தான். ஆனால் வருமானம் இல்லையென்பதற்காக சிக்னலிலும் பொதுவிடங்களிலும் அடுத்தவர்களின் மீது வன்முறையை ஏவுவது சரியான செயலாகிவிடுமா என்ன? அவர்களைவிட பரிதாபத்திற்குரியவர்கள் கூட இப்படியெல்லாம் அடுத்தவர்களை மிரட்டுவதில்லை.

லிவிங் ஸ்மைல் வித்யா எழுதிய ‘நான் சரவணன் அல்ல வித்யா’ என்ற நூல் கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட்டு சாகித்ய அகடமி விருது வாங்கியது. இப்பொழுது அதே தலைப்பில் ‘நான் அவனல்ல அவளு’ என்ற பெயரில் திரைப்படமாகவும் வெளி வருகிறது. நேற்று கன்னடத்தின் பல நாளிதழ்களிலும் இது குறித்தான செய்தி வந்திருந்தது. இதைப் பற்றியும் புத்தகத்தைப் பற்றியும் எழுதுவதாக நினைத்துத்தான் இந்தக் கட்டுரையை ஆரம்பித்தேன். ஆனால் வேறொரு இடத்தில் முடிகிறது.

வரி செலுத்தாத நிறுவனங்களின் முன்பாக திருநங்கைகளை ஆடச் செய்து சென்னை மாநகராட்சி அலுவலர்கள் வரி வசூல் செய்தார்கள் என்று நிறையப் பேர் மாநகராட்சி நிர்வாகத்தை திட்டியிருந்தார்கள். ‘ஏற்கனவே திருநங்கைகளுக்கு மரியாதை இல்லை. இப்படியெல்லாம் ஆடச் செய்வது அவர்களை இன்னமும் ஏளனம் செய்யும் செயல்’ என்று அலறியிருந்தார்கள். இந்த வாதத்தை ஒருவகையில் ஏற்றுக் கொண்டாலும் இதில் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இதே நிறுவனங்களின் முன்பாக பறை அடித்திருந்தாலோ, நாதஸ்வரக் கச்சேரி நடத்தியிருந்தாலோ அல்லது பெண்கள் நடனமாடியிருந்தாலும் கூட பணம் வசூலாகியிருக்கும் என்றுதான் நினைக்கிறேன். மாநகராட்சியின் வழியாக பத்து திருநங்கைகளுக்குத் தொடர்ச்சியாக கிடைக்கும் வருமானத்தைத்தான் இவர்கள் சிதைக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இப்படியெல்லாம் ஆடச் செய்வதை நிறுத்திவிட்டால் மட்டும் வெகுமக்கள் அவர்களுக்கு மரியாதை கொடுத்துவிடுவார்கள் என்று அர்த்தமில்லை. தனிமனிதனும் சரி இனமும் சரி தங்களுக்கான மரியாதையை தங்களின் நடத்தையினால்தான் சம்பாதிக்க முடியுமே தவிர அடுத்தவர்கள் தானாகத் தருவார்கள்  என்று நம்புவது  சரியாகப்படவில்லை.