Feb 9, 2015

ஏதாவது எழுதி ஒட்டியிருக்கிறதா?

நானூற்று அறுபது பக்கங்கள். பூமியின் மொத்த வரலாற்றையும் இந்தப் புத்தகத்தில் எழுதினால் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு கோடி வருடங்களின் வரலாற்றை எழுத வேண்டும். பூமிக்கு நானூற்று அறுபது கோடி வயது ஆகிறது. அப்படியே எழுதுகிறோம் என்று வையுங்கள். முதல் நூறு பக்கங்கள் முழுவதும் பூமி எப்படி தன்னை உயிர்களுக்குத் தகுந்தபடி மாற்றிக் கொண்டது என்பதை மட்டும்தான் எழுத வேண்டியிருக்கும். அதன் பிறகுதான் முதல் உயிரியைப் பற்றி எழுத வேண்டும். நானூற்று முப்பத்தியேழாவது பக்கத்தில்தான் டைனோசரைப் பற்றிய குறிப்பு இடம் பெறும். நானூற்று ஐம்பத்து மூன்றாவது பக்கத்தில்தான் மனிதனின் முதல் சுவடு இடம் பெறும். கடைசிப் பக்கத்தின் மூன்றாவது பத்தியில்தான் நம்மைப் போன்ற உருவமுடைய மனிதன் இடம் பெறுவான். கடைசிப் பத்தியின் நான்காவது வரியில்தான் நாகரீக மனிதனைப் பற்றி எழுத வேண்டும். கடைசி வரியின் நான்காவது வார்த்தையில்தான் பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டது பற்றிய குறிப்பு வரும். கடைசி வார்த்தைக்கு முந்தைய வார்த்தையில்தான் அணு ஆயுதங்கள் பற்றிய குறிப்பு வரும். இவ்வளவு பெரிய வரலாற்றை உடைய இந்த பூமியை கிட்டத்தட்ட ஆறு முறை அழித்துவிடுவதற்கான அணு ஆயுதங்களும், குரூரமும் மனிதனிடம் வந்து சேர்ந்துவிட்டது என்பதைக் கடைசி வார்த்தியில் எழுதி மூன்று தொடர்புள்ளிகளை வைக்கலாம்....

இப்படி ஒரு அட்டகாசமான பேச்சை நேற்று கேட்டேன். நாகேஷ் ஹெக்டே. கன்னடத்தில் மூத்த பத்திரிக்கையாளர். சாகித்ய அகடமி உள்ளிட்ட விருதுகளை வாங்கியவர். 

நிரலு என்ற அமைப்பினர் பற்றி சொல்லியிருக்கிறேன் அல்லவா? பெங்களூரில் மரங்களைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் மிக முக்கியமான அமைப்பு. இந்த வருடத்திற்கான நிகழ்வை சனி, ஞாயிறுகளில் ஒழுங்கு செய்திருந்தார்கள். வல்லுநர்களின் பேச்சு, படங்கள் திரையிடல் என்று இரண்டு நாட்களும் மரங்களுக்காகத்தான். அப்படியான நிகழ்வில்தான் நாகேஷ் ஹெக்டேவும் பேசினார். முகவரி வாங்கி வைத்திருக்கிறேன். ஒரு முறை அவரைத் தனியாகச் சந்தித்துப் பேச வேண்டும்.

கடந்த பத்து வாரங்களாக சனி,ஞாயிறுகளில் ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி வெளியூருக்குச் சென்றிருந்தேன். கடந்த வாரமும் இந்த வாரமும் குடும்பத்திற்காக. குடும்பத்திற்காக என்று சொல்வது பந்தாவுக்காக. ஒருவேளை இந்த சனி, ஞாயிறும் கிளம்புவதாக இருந்தால் காலை முறித்து படுக்கையில் போடுவதாக வீட்டில் இருப்பவர்கள் முடிவு செய்திருப்பதாக உளவுத்துறை தகவல் கொடுத்திருந்தது. அதனால் அடங்கிக் கொண்டேன் என்பதால் குடும்பத்துடன் இந்த நிகழ்வுக்குச் சென்றிருந்தோம். 

குழந்தைகளுக்காகவும் ஏகப்பட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தார்கள். வனவியல் சார்ந்த நிழற்படங்களின் காட்சி, குழந்தைகளுக்கான ஓவியப் போட்டிகள், காகிதத்தில் பறவைகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளை செய்யச் சொல்லி என எவ்வளவோ செய்தார்கள். குழந்தைகள் உற்சாகமாக இருந்தார்கள். Magical Forest என்றவொரு குறும்படம் திரையிடப் போவதாகச் சொல்லியிருந்தார்கள். அதை எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அதற்கு பதிலாக The forest Man என்ற படத்தைத் திரையிட்டார்கள். இது யூடியூப்பிலேயே இருக்கிறது. ஏற்கனவே பார்த்திருக்கிறேன். ஜாதவ் பயேங் என்ற மனிதரைப் பற்றிய ஆவணப்படம் அது. மாஜுலி என்பதுதான் உலகிலேயே மிகப்பெரிய நதியில் அமைந்த தீவு. பிரம்மபுத்திரா நதியில் இருக்கிறது. இந்தத் தீவு கடந்த சில வருடங்களாக- குறிப்பாக மழைக்காலங்களில் படு வேகமாகச் சுருங்கி வருகிறது. மண் அரிப்புதான் காரணம்.  மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. அதனால் பிடிப்பற்ற மண் நீரோடு ஓடுகிறது. அந்தத் தீவில்தான் இந்த மனிதர் தன்னந்தனியாக வனம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். அத்தனையும் அவர் நட்டு வைத்த மரங்கள். கிட்டத்தட்ட ஆயிரத்து நானூறு ஏக்கர் பரப்பளவுடைய வனம்.

வேறொரு குறும்படத்தையும் திரையிட்டார்கள். ஆனால் அது அவ்வளவாக பிடிக்கவில்லை.

இப்படி இயற்கை, வனம் போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் போது ஏதாவதொரு வகையில் சந்தோஷமாக இருக்கிறது. Nostalgia என்றுதான் சொல்ல வேண்டும். பதினைந்து வருடங்களுக்கு முன்பாக பார்த்த பல வண்ணத்துப் பூச்சிகளை இப்பொழுது காண முடிவதில்லை. சிட்டுக்குருவிகள் அருகிவிட்டன. மழைத் தட்டான்கள் அரிதிலும் அரிது. இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம். நிகழ்வில் நூற்றுக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகளின் படங்களை வைத்திருந்தார்கள். அதில் நாற்பது அல்லது ஐம்பது வகைகளையாவது நான் பார்த்திருக்கிறேன். மகன் இரண்டு மட்டுமே பார்த்திருக்கிறான். அதிகபட்சமாக இன்னமும் நான்கைந்து வகைகளைப் அவன் பார்த்தாலே பெரிய விஷயம். அத்தனையும் அழிந்துவிட்டன அல்லது வேகமாக அழிந்து கொண்டிருக்கின்றன.

இதுதானே இயற்கை? Survival of the fittest தெரியாதா? வலுவுள்ளவை மட்டுமே தப்பிப்பிழைக்கும் என்று வசனத்தை அடித்துவிடலாம். சரிதான். ஆனால் வெறும் இருபது வருடங்களில் இத்தனை உயிர்களை அழித்திருக்கிறோம் என்பதுதான் உண்மை. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்த உயிரினங்களை இருபது முப்பது ஆண்டுகளில் வழித்து வீசிவிட முடிகிறது மனிதனால். 

1970களில் பெங்களூரில் கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் அதிகமான ஏரிகள் இருந்திருக்கின்றன. இப்பொழுது நூறு கூட இல்லை. எங்கே போயிற்று மற்ற ஏரிகள் எல்லாம்?  மிச்சமிருக்கும் ஏரிகளிலும் அரசாங்கமே கழிவு நீரைக் கொண்டு வந்து கலக்கவிடுகிறது. தூரத்தில் இருந்து பார்த்தால்தான் ஏரி. கிட்ட நாட முடியாது. குடலைப் பிடுங்கிவிடும். வெளிநாடுகளில் நகர்ப்புற வனம்(Urban forest) என்பதை மிகத் தீவிரமாக அமுல்படுத்துகிறார்கள். இங்கே அதெல்லாம் சாத்தியமே இல்லை. நாட்டுக்குள் இருக்கிற வனத்தையே அழித்துவிட்டார்கள். 

சில இயற்கை ஆர்வலர்கள் திடீரென்று ‘பழங்குடிகளை வனத்தை விட்டு வெளியேற்றக் கூடாது’ என்று குரல் கொடுப்பார்கள். ஆனால் வேறு சில இயற்கை ஆர்வலர்களிடம் பேசினால் வேறு மாதிரியாகச் சொல்வார்கள். ‘எந்த இந்தியப் பழங்குடி அமேசான் காடுகளில் இருப்பவர்களைப் போல இருக்கிறார்கள்? இவர்கள் நாகரீக வளர்ச்சியடைந்திருக்கிறார்கள். எல்லோரிடமும் டிஷ் டிவி இருக்கிறது. பைக் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்காக வனத்துக்குள் சாலை போடப் படுகிறது. மின்சாரம் கொண்டு செல்லப் படுகிறது. வாகனங்கள் பெருகின்றன. இறுதியில் வனச்சுருக்கம்தான் (deforestation) ஏற்படுகிறது. அவர்களை வனத்தை விட்டு வெளியில் கொண்டு வர வேண்டும்’ என்பார்கள். அவர்கள் சொல்வதும் ஒரு வகையில் சரி என்றுதான் படுகிறது. அரசாங்கம்தான் முடிவெடுக்க வேண்டும்.

அரசாங்கம் முடிவெடுத்துவிட்டாலும்....கிளுகிளுதான்!

என் கதைக்கு வருகிறேன். கடந்த இரண்டு நாட்களாகவே கணினியைத் தொடப் போவதில்லை என்று உறுதியளித்திருந்தேன். முடிந்தவரை காப்பாற்றிவிட்டேன். ஆனால் விதி வலியது. நேற்று மாலையில் ஒருவர் அழைத்து தினமலர் பத்திரிக்கையில் மசால் தோசை புத்தகத்தைப் பார்த்ததாகவும் தனது புத்தகக் கடைக்கு பத்து பிரதிகள் அனுப்பி வைக்க முடியுமா என்று கேட்டிருந்தார். சந்தோஷமாக இருந்தது. ‘என்ன எழுதியிருக்காங்க?’ என்றேன். ‘எதுவும் எழுதவில்லை ஆனால் அட்டைப்படத்தை மட்டும் போட்டிருக்கிறார்கள்’ என்றார். உறுதியைக் கொஞ்சம் தளர்த்திக் கொண்டு லேப்டாப்பைத் திறந்து தேடிப் பார்த்தேன். மசால் தோசை 38 ரூபாய்- பிரிவு சமையல் என்று வகைப்படுத்தியிருந்தார்கள். சமையல் புத்தகம் எப்படியும் விற்றுவிடும் என்கிற நம்பிக்கையில் கேட்டிருப்பார் போலிருக்கிறது. கமுக்கமாக அனுப்பி வைத்துவிடலாம் என்றிருக்கிறேன். அவர் ஏதாவது சாபம் விட்டால் தினமலர் பத்திரிக்கைக்குத்தான் சேரும். 

என்னை ஏன் இப்படிக் கலாய்க்கிறார்கள்? என் நெற்றியில் ஏதாவது எழுதி ஒட்டியிருக்கிறதா? கிராதகர்கள்.