Feb 18, 2015

தட்டித்தான் பார்க்கலாம்

கலிபோர்னியாவில் ஒரு நிறுவனம் இருக்கிறது. Kutirtech என்று பெயர். சென்னையிலும் கிளை உண்டு. அந்நிறுவனத்தில் வைஸ் பிரெசிடெண்டாக பணிபுரியும் பிரதீபா கல்யாண் தங்கள் நிறுவனம் பயன்படுத்திய கணினிகளை அனுப்பி வைப்பதாகச் சொல்லியிருந்தார். அதை பெற்றுக் கொண்டு தேவைப்படுபவர்களுக்கு கொடுத்துவிடுவதாக உத்தரவாதம் அளித்திருந்தேன். அதன்பிறகு நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் பணி புரியும் சஞ்சீவ் எட்டு மடிக்கணினிகளை அனுப்பி வைத்திருந்தார்.

நான்கு மடிக்கணினிகள் நன்றாக இயங்கும் நிலையில் இருந்தன. மீதமுள்ள நான்கில் இரண்டில் ஆபரேடிங் சிஸ்டத்தை நிறுவ வேண்டும். இரண்டு வேலைக்கு ஆகாது. ஆனால் அவற்றில் உருப்படியான பாகங்கள் இருந்தால் பயன்படுத்திக் கொள்ளச் சொல்லியிருந்தார்கள். வந்து சேர்ந்து நாட்கள் ஓடிவிட்டன. எனக்குத்தான் நேரம் வாய்க்கவேயில்லை. 

சென்ற முறை கோபிபாளையத்தின் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர்களிடம் ஒரு கணினி இருந்ததாகவும் இப்பொழுது அதுவும் செயலிழந்துவிட்டதாகவும் சொல்லியிருந்தார். அந்தப் பள்ளியின் எழுபத்தைந்தாவது ஆண்டு இது. பள்ளியின் வரலாற்றைத் திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குக் கூட கணினி இல்லை என்றார். ஏதேனும் உதவி கேட்டு இதை அவர் சொல்லவில்லை. பேச்சுவாக்கில் சொல்லிக் கொண்டிருந்தார்.

‘பயன்படுத்திய கணினிகள் கைவசம் இருக்கின்றன. உங்களுக்கு சரிப்பட்டு வருமா?’ என்று கேட்டிருந்தேன்.

நமக்கு பயன்படாது என்று முடிவு செய்த பெரும்பாலான பொருட்கள் வேறு யாருக்கேனும் ஏதாவதொருவிதத்தில் பயன்படும். பெரும்பாலான நிறுவனங்கள் பயன்படுத்தி முடித்த கணினிகளை வீணடித்துவிடுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களுக்கு அவை electronic waste. அப்படியெல்லாம் இல்லை. ஓரளவு பயன்படுத்தும் வகையில் இருப்பின் அதைப் பெற்றுக் கொள்ள எத்தனையோ பேர் தயாராக இருக்கிறார்கள். பெரும்பாலான நிறுவனங்களுக்கு இது உபரி வேலை. வாங்கிக் கொள்ளும் ஆட்களைக் கண்டுபிடிக்க வேண்டும்; அதை சரியான இடத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இப்படி எவ்வளவோ சிக்கல்கள். அதற்கு பதிலாக ஒப்பந்ததாரர்களிடம் கொடுத்துவிடுகிறார்கள். அந்த ஒப்பந்ததாரர்கள் வகை பிரித்து மறுசுழற்சி, அழித்தொழித்தல் என்று ஏதேனும் ஒன்றைச் செய்துவிடுகிறார்கள்.

Kutiretech நிறுவனத்தினர் அப்படியில்லை. யாருக்காவது பயன்படட்டும் என்று நினைத்திருக்கிறார்கள். கேட்டவுடன் தலைமையாசிரியர் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்.

நன்றாக இயங்கக் கூடிய ஒரு மடிக்கணினியை பொறியியல் படித்துக் கொண்டிருக்கும் கல்லூரிப் பெண்ணுக்கு வழங்கியாகிவிட்டது. விவசாயி ஒருவரின் மகள் அவர். மீதமிருந்த மடிக்கணினிகளில் நான்கை அந்தப் பள்ளிக்கும் ஒன்றை மட்டும் பஞ்சலிங்கம்பாளையம் அரசுப்பள்ளிக்கும் வழங்கிவிடுவதாகத் திட்டமிடப்பட்டது. அவிநாசி வரைக்கும் சென்றிருந்தேன். ஆனால் அன்றைய தினம் பஞ்சலிங்கம்பாளையம் பள்ளி ஆசிரியரைச் சந்திக்க முடியவில்லை. இப்பொழுது எங்கள் வீட்டில்தான் வைத்திருக்கிறேன். அதைத் தவிர மீதமுள்ள நான்கு மடிக்கணினிகளும் (இரண்டு நன்றாக இயங்கக் கூடியவை + இரண்டில் ஆப்ரேடிங் சிஸ்டம் நிறுவப்பட வேண்டும்) கோபிபாளையம் தலைமையாசிரியரிடம் வழங்கப்பட்டுவிட்டது. 

வைரவிழாமேல்நிலைப்பள்ளியில் உதவித் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற திரு.வேலுச்சாமி அவர்கள் இவற்றை வழங்கினார். கோபிபாளையம் பள்ளியின் சார்பில் தலைமையாசிரியர் திரு.தாமசு அவர்களும் அந்தப் பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்து பிறகு இயற்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று இப்பொழுது ஸ்பெயினில் அறிவியலாளராக இருக்கும் திரு. குமார் அவர்களும் பெற்றுக் கொண்டார்கள். இத்தகையை பள்ளிகளுக்கு வழங்கும் உதவிகள் நிச்சயமாக வீணாகப் போய்விடாது என்று தைரியமாக உறுதியளிக்கலாம். ‘இந்தத் திரைச்சீலை பார்த்தீர்களா? 1972 ஆம் ஆண்டு வாங்கியது...நாற்பதாண்டு காலமாக பத்திரமாக வைத்திருக்கிறோம்’ என்றார். மேடையின் பின்னால் கட்டப்படும் திரைச்சீலை அது. அவ்வளவு கவனம் எடுத்துக் கொள்கிறார்கள். தாமசு அவர்களின் தந்தையார் அந்தப் பள்ளியின் தலைமையாசிரியராக இருந்தவர். விபத்தில் அவர் மரணமடைந்துவிட அந்தக் கிராமத்துக்காரர்கள் இவரையே பள்ளியின் தலைமையாசிரியர்களாக நியமித்துவிட்டார்கள். அவ்வளவு நம்பிக்கை இந்தக் குடும்பம் மீது. 

மடிக்கணினிகளை மனமுவந்து கொடுத்த நிறுவனத்தினருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். கூரியர் செலவு மட்டுமே ஆயிரக்கணக்கில் ஆகியிருக்கும். கூரியர்காரர்கள் ஒரு டெம்போ வேனில் கொண்டு வந்து சேர்த்தார்கள். 

பள்ளிகளுக்கு கணினி வழங்குவதற்கான முறைகளை ஆலோசனை செய்த போது சில நிறுவனத்தினர் ‘நாங்கள் வைத்திருக்கிறோம். தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள்’ என்று தகவல் அனுப்பியிருந்தார்கள். தொடர்பு கொண்ட பிறகு எந்த பதிலும் வரவில்லை. ‘இவன் ஃப்ராடாக இருக்கக் கூடும்’ என்று நினைதார்களோ என்னவோ. அது பற்றிய பிரச்சினை இல்லை. முயற்சித்தால் பெருநிறுவனங்களிடமிருந்து நூற்றுக்கணக்கான கணினிகளைப் பெற்றுவிட முடியும். ஆனால் அதைப் பெற்று விநியோகிக்கும் அளவுக்கு ஆள்பலமில்லை என்பதால் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக் கொள்ளலாம். எட்டிலிருந்து ஆரம்பித்திருக்கிறோம். பார்க்கலாம்.

தமிழகத்தின் வேறு சில பள்ளிகளிலும் கணினிகள் தேவைப்படுவதாகக் கேட்டிருக்கிறார்கள். ஆனால் கணினி எதுவும் கைவசம் இல்லை. ஓரளவு பயன்படுத்தக் கூடிய நிலையில் கணினிகள் இருப்பின் தெரிவிக்கவும். நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வாய்ப்பிருப்பின் மேல்மட்ட ஆட்களிடம் பேசிப் பார்க்கலாம். வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் பழைய கணினிகளைக் கொண்டு வருவது அவ்வளவு எளிதில்லை என்பதால் இந்தியாவில் இயங்கும் நிறுவனங்களால்தான் இது சாத்தியமாகும். தட்டிப்பார்க்கலாம். பத்துக் கதவுகளில் ஒன்றாவது திறந்துவிடும்.