Feb 23, 2015

நம்மால் முடியும்


கல்யாணசுந்தரிக்கு போலியோவினால் கால்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இப்பொழுது வைத்திருக்கும் சக்கர நாற்காலியில் அவரை அமர வைத்து வண்டியை நகர்த்தும் போது அவ்வப்போது கால்கள் நிலத்தில் உரசிவிடுகின்றன. வேறு வண்டி வாங்குவதற்கான முயற்சிகளைச் செய்திருக்கிறார்கள். டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் ‘நிசப்தம் வழியாக உதவ முடியுமா?’ என்றார். இத்தகைய உதவிகளை இதுவரை செய்ததில்லை என்பதால் எங்கே நாற்காலி வாங்குவது, என்ன மாதிரியான நாற்காலி சரியானதாக இருக்கும் என்கிற குழப்பம் இருந்தது. கல்யாணசுந்தரி சென்னையில் வசிக்கிறார். சக்கர நாற்காலிகளைத் தயாரிக்கும் பல்வேறு நிறுவனங்களில் விலை விசாரிப்பதிலிருந்து, நாற்காலிக்கான demo காட்டச் சொல்லி தோதான நாற்காலி ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வரை எல்லாவற்றையும் முன்னின்று பார்த்துக் கொண்டார். ஐந்தாயிரம் ரூபாயில் ஆரம்பித்து லட்சக்கணக்கான ரூபாய் வரைக்கும் சக்கர நாற்காலிகள் கிடைக்கின்றன. ஓரளவு நல்ல தரத்துடனேயே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட இருபத்தோராயிரம் ரூபாய் விலை. நிறைய பேரத்திற்கு பிறகு பதினாறாயிரம் ரூபாய் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நிறுவனத்தின் பெயரிலேயே காசோலை எழுதி கல்யாணசுந்தரியிடமும் அவரது அம்மாவிடமும் கொடுத்துவிட்டு வந்தோம்.

                                                                                        (2)

ஈரோடு மாவட்டம் நல்லகவுண்டன்பாளையம் அரசுப் பள்ளியில் குழந்தைகளுக்கான நாற்காலிகள் வாங்குவதற்காக உதவி கோரியிருந்தார்கள். சமச்சீர் கல்வித் திட்டத்தின் அடிப்படையில் ஒரு மேசையைச் சுற்றி நான்கைந்து குழந்தைகள் வரிசையாக அமர்ந்து படிப்பார்கள். ப்ளாஸ்டிக் நாற்காலிகளைவிடவும் இரும்பிலான நாற்காலிகள் நீண்ட காலத்திற்கு உழைக்கும் என்பதால் இரும்பு நாற்காலிகளே வாங்குவது என பள்ளியில் முடிவு செய்திருக்கிறார்கள். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் திரு.நவநீதன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். பெரும்பாலும் தலித் குழந்தைகள் படிக்கிற பள்ளி அது. ஓரளவு வசதியானவர்கள் வேறு பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பிவிடுவதாகச் சொன்னார். இத்தகைய பள்ளிகளுக்குத்தான் உதவ வேண்டும்.  ஒரு நாற்காலிக்கு ஐந்நூறு ரூபாய் விலை ஆகிறது. புதிதாக நாற்காலி, மேசை, கட்டில் உள்ளிட்ட இரும்பு சம்பந்தமான வேலையைத் தொடங்கும் உள்ளூர் இளைஞர் ஒருவரிடம்தான் இந்த வேலை ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவருக்கும் ஒரு பெரிய ஆர்டர் கிடைத்திருக்கிறது என்கிற சந்தோஷம். இருபதாயிரம் ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் நாற்காலிகள் தயாராகிவிடும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

                                                                                     (3)

நலங்கிள்ளி இருதய அறுவை சிகிச்சை முடித்து தேறிவிட்டார். நண்பர்கள் நிறைய உதவிகளைச் செய்திருக்கிறார்கள். இப்பொழுது குடும்பச் செலவுகள்தான் சிரமம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இரண்டு பெண் குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் படிக்க வைப்பதால் அதில் பெரிய செலவு இல்லை. மருந்துகள் தொடர்ந்து வாங்க வேண்டியிருக்கிறது. அதற்குத்தான் மாதம் கிட்டத்தட்ட மூன்றிலிருந்து நான்காயிரம் வரைக்கும் தேவைப்படும் போலிருக்கிறது. அவை தவிர குடும்பச் செலவுகள். இன்னமும் ஓரிரண்டு மாதங்களுக்கு எந்த வேலையும் செய்ய முடியாது போலிருக்கிறது. ‘இதை உதவி என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். தமிழுக்கு நீங்கள் செய்து வரும் பங்களிப்புக்கான வெகுமதி’ என்று சொன்னேன். 1998 ஆம் ஆண்டிலேயே தமிழ் வழிக்கல்விக்கென  ஐம்பதாயிரம் ரூபாயை நன்கொடையாகக் கொடுத்தவர். அன்றைக்கு ஐந்து செண்ட் நிலம் வாங்கிப் போட்டிருந்தாரென்றால் மருத்துவச் செலவை அது பார்த்திருக்கும். ஆனால் நலங்கிள்ளி அப்படியான மனிதர் இல்லை. இருக்கிற அத்தனை வாய்ப்புகளையும் தட்டிவிட்டு மொழியாக்கம், எழுத்து என்று உடலை நசித்துக் கொண்டிருக்கிறார். காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் நூலை வாசித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். எவ்வளவு அறிவியல் கலைச்சொற்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் என்று. இருபத்தைந்தாயிரத்துக்கு காசோலை எழுதிய போது ‘தமிழிலேயே எழுதிடுங்க’ என்றார். உற்சாகத்துடன் எழுதிக் கொடுத்துவிட்டு வந்தோம்.
             

                                                                 
                                                                                       (4)

ஊட்டிச் சிறுவன் தினேஷ் இன்று மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குச் செல்கிறான். எட்டு நாட்களுக்கு பெங்களூரிலேயே இருக்கச் சொல்லியிருக்கிறார்கள். பிரச்சினை எதுவும் இல்லையென்றால் அதன் பிறகு ஊட்டி செல்வார்கள். இப்போதைக்கு சிறுநீர் வெளியேறுவதில் சிறு சிரமம் இருப்பதால் உறிஞ்சித்தான் எடுக்கிறார்கள். அது ஓரளவுக்கு சரியாக வேண்டும் போலிருக்கிறது. சொற்பத் தொகையை எடுத்துக் கொண்டு பெங்களூர் வந்திருக்கிறார்கள். ‘ஏதோவொரு நம்பிக்கையில் வந்துவிட்டோம்’ என்றார்கள். நிசப்தம் கொடுத்த ஐம்பதாயிரத்தைக் கட்டி அறுவை சிகிச்சை முடித்துவிட்டார்கள். இன்னமும் நாற்பதாயிரம் வரைக்கும் தேவைப்படும் போலிருக்கிறது. ஊட்டியிலிருந்து பத்தாயிரம் ரூபாய்க்கு காசோலையை யாரோ தெரிந்தவர்கள் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் அது வந்து சேரவில்லை. கூரியரில் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். எழுத்தாளர் செல்லமுத்து குப்புசாமி ஒரு அறக்கட்டளை நடத்துகிறார். குருத்தோலை நல அறக்கட்டளை என்று பெயர். அவர் ஒரு தொகையைத் தருவதாகச் சொல்லியிருந்தார். சனிக்கிழமை அவரைச் சென்னையில் சந்தித்து பதினைந்தாயிரம் ரூபாய்க்கான காசோலையை பெற்றுக் கொண்டேன். அதை இன்று(திங்கட்கிழமை) காலையில் ஒப்படைத்தாகிவிட்டது. தினேஷ் இன்று மருத்துவமனையிலிருந்து வெளியேறிவிடுவான்.

                                                                          ***

நண்பர்கள் நிறையக் கோரிக்கைகளை வைக்கிறார்கள். அவர்கள் கேட்டபிறகு மறுப்பதற்குச் சங்கடமாக இருக்கிறது. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒரேயொரு வேண்டுகோள்தான். உதவி கோருபவர்கள் உண்மையிலேயே உதவி தேவைப்படுபவர்களா என்பதை மட்டும் ஒரு முறை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மருத்துவமனை என்று சென்றுவிட்டால் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் பணம் தண்ணீராகத்தான் கரையும். பணத்தட்டுப்பாடு வந்து சேரும்தான். ஆனால் பலரால் எப்படியாவது கஷ்டப்பட்டு சமாளித்துவிட முடியும். அப்படியானவர்களை விட்டுவிடலாம். எந்தவிதத்திலுமே சமாளிக்க முடியாத மனிதர்கள் இருக்கிறார்கள் அல்லவா? தெரிந்தவர்கள், உறவினர்கள் என்கிற எந்தவழியிலும் உதவி பெற முடியாதவர்கள், அடுத்து யாரை அணுக வேண்டும் என்று கூடத் தெரியாத எளிய மனிதர்கள் - அப்படியானவர்களை அடையாளப்படுத்துங்கள். அப்படியான சாமானியர்களிலும் சாமானியர்களுக்கு கை கொடுத்துத் தூக்கிவிடலாம். அதுதான் உண்மையிலேயே அர்த்தமுள்ள உதவி.

நன்றி.