Feb 23, 2015

குபீர் இலக்கியவாதிகள்

ஒரு கூட்டத்திற்குத் தெரியாத்தனமாக கூப்பிட்டாலும் கூப்பிட்டார்கள் சிலர் அக்கப்போர் செய்கிறார்கள்.  சென்னையில் நடந்த கூட்டத்தைத்தான் சொல்கிறேன். அப்படியென்ன அலைகடலெனத் திரண்டு வந்துவிட்டார்களா? மீறிப் போனால் ஐம்பது பேர்கள் இருப்பார்கள். அதற்கே இப்படித் துள்ளுகிறார்கள். அதிலும் ஒரு மனிதர் ‘இவனைக் கூப்பிடுறது குத்தாட்டம் நடத்தி கூட்டம் சேர்க்கிற மாதிரியில்லையா’ என்றிருக்கிறார். அந்த மனிதர் யாரென்று விசாரித்துப் பார்த்தால் மயிரிழையில் நோபல் பரிசைக் கோட்டை விட்டவர். இன்ச் இழையில் ஞானபீடம் இவருக்கு இல்லாமல் போயிருக்கிறது. அடுக்கிக் கொண்டே போகலாம். வெங்காயம்.

தமிழ் எழுத்துக்கு இவர்களிடமிருந்து பத்து பைசா பங்களிப்புக் கிடையாது. அப்படியே எதையாவது எழுதினாலும் சீந்துவாரில்லை. ஆனால் நாக்கு மட்டும் அவ்வளவு நீளம். ‘எங்கள் எச்சிலில்தான் தமிழ்த்தாய் தலைக்குக் குளிக்கிறாள்’ என்ற வெட்டி ஜம்பத்துக்கு மட்டும் குறைச்சல் இல்லை.

எப்படியோ தொலையட்டும் என்று விட்டுவிடலாம்தான். ஆனால் இவர்களுக்கு எப்பொழுதிருந்து கொம்பு முளைக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது. நான்கு சிறுபத்திரிக்கைகளின் பெயர்களைத் தெரிந்து கொண்ட போதா? தம்மைப் போன்ற நான்கு ஆட்களுடன் சேர்ந்து சரக்கடிக்கும் போதா? அல்லது கவிதையைச் சப்தம் போட்டு வாசிக்கப் பழகிக் கொண்ட போதா? 

அக்கிரமமாக இருக்கிறது. 

வருடம் முழுக்கச் சேர்த்து மூன்றே முக்கால் பக்கம் எழுத மாட்டார்கள். ஆனால் நாங்கள்தான் இலக்கியத்தை தூக்கி செங்குத்தாக நிறுத்துகிறோம் என்கிற சவடால் விடுவார்கள். ‘நிறைய எழுதாவிட்டால் என்ன? நாங்கள் எவ்வளவு வாசிக்கிறோம் தெரியுமா?’ என்ற திலுப்பாமாரித்தனத்தை பார்க்க வேண்டுமே. வாசித்தீர்கள் சரி. வருடத்திற்கு பத்து விமர்சனமாவது எழுதியிருப்பீர்களா? நாற்பது பேருக்காவது வாசித்ததை பொதுவெளியில் அறிமுகப்படுத்தியிருப்பீர்களா? ஒரு எழவும் கிடையாது.  எங்கள் அமத்தாவிடம் பேசினால் ஒரு பழமொழி சொல்வார். ‘நாய்கிட்ட சிக்குன தென்னம்பழம்’ மாதிரி என்று. மட்டை உரிக்காத தேங்காய் சிக்கினால் நாய் என்ன செய்யும்? அப்படித்தான். உருட்டிக் கொண்டே திரிய வேண்டியதுதான். அமத்தா பழமொழி சொன்னால் ஆயா விடுவாரா? அவரிடமும் ஒரு பழமொழி இருக்கிறது. ‘பூனை பீ மூடுன மாதிரி’ என்று. மூடி வைத்துக் கொள்ளும். இவர்களது செயல்பாடுகள் வெளியில் ஒரு பயலுக்குத் தெரியாது. 

‘அதையெல்லாம் நாங்கள் ஏன் செய்ய வேண்டும்? இலக்கியத்தை வாசகன் தேடிப் படிக்க வேண்டும்’ என்கிற அலட்டல் விடுவார்கள். இப்படி பேசிப் பேசியேதான் வறட்டு வீம்பும் வீராப்புமாகத் திரிவார்கள். திருத்தவே முடியாது. முந்நூறு பேரைத் தாண்டி இலக்கியம் போய்விடக் கூடாது என்பதில் அவ்வளவு வெறி. விளங்காதவர்கள்.

இவர்கள் எல்லாம் குபீர் இலக்கியவாதிகள். நான்கு இலக்கியக் கூட்டங்களில் கலந்துவிட்டு திடீரென்று அத்தாரிட்டியாகிவிடுகிறார்கள். எப்பவாவது ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டிருப்பார்கள் அல்லது ஏதாவது சிறுபத்திரிக்கையில் இரண்டு மூன்று கட்டுரைகளை எழுதியிருப்பார்கள். ஃபேஸ்புக் மோசம் என்று சொல்லிக் கொண்டே ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு லைக் விழுந்துவிடாதா என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டிருப்பார்கள். இணையம் ஆகாதது என்று அலறுவதாக நடித்துக் கொண்டே இருபத்து நான்கு மணி நேரமும் இதிலேயே குடியிருப்பார்கள். இப்படி வெட்டிப் பேச்சினாலேயே இன்ஸ்டண்ட்டாக தாதாவாகிவிடுகிறார்கள். நான்கு பேர் கவனிக்கிறார்கள் என்றால் கையில் பிடிக்க முடியாது. அதன் பிறகு அவ்வளவுதான். ரவுடிதான். டாண்தான். பிஸ்தாதான். அடுத்த முப்பது வருடங்களுக்கு ஊருக்குள் மைனர் குஞ்சாகவே திரிந்து கொண்டிருக்கலாம். எந்தவிதத்திலும் கையாலாகாத இவர்கள்தான் அடுத்தவனைப் பார்த்து பல்லைக் காட்டுகிறார்கள்.

எழுதுகிறவன் எழுதிக் கொண்டேதான் இருக்கிறான். வெறும்பேச்சு வீராசாமிகள் இப்படி ‘அவன் மோசம்...இவன் மோசம்’ என்று பேசிக் கொண்டே திரிகிறார்கள்.

அபிலாஷையும் திட்டுகிறார்கள். அவரை எந்த அடிப்படையில் திட்டுகிறார்கள்? ஒரு அடிப்படை மண்ணும் கிடையாது. கும்பி கருகுகிறது. அதனால் திட்டுகிறார்கள். கருகாமல் இருக்குமா? கொஞ்சமாவது எழுதுவதற்கு கையாலாக வேண்டும் அல்லது அடுத்தவன் எழுதுகிறான் என்பதைப் பற்றி காழ்ப்புணர்ச்சியாவது இல்லாமல் இருக்க வேண்டும். இரண்டும் கிடையாது. வேறு என்ன செய்ய முடியும்? புகை விட வேண்டியதுதான். அபிலாஷ் தொடர்ந்து வாசிக்கிறார். தொடர்ந்து உரையாடலை உருவாக்குகிறார். மிகத் தீவிரமாக உழைக்கிறார். கவனிக்கத் தக்க கட்டுரைகளை எழுதிக் கொண்டேயிருக்கிறார். எதிர்த்துப் பேசுகிறவர்கள் எதைக் கிழித்தார்கள் என்று புரியவில்லை.

‘நாங்க எல்லாம் தீவிர இலக்கியவாதிகளாக்கும்’ என்று அளக்கிற இளையவர்களைக் கவனித்தால் தெரியும். துளி உழைப்பு கிடையாது. எழுதுவதற்கான மனநிலையும் இருக்காது. ஆனால் பேச்சுக்கு மட்டும் குறைச்சல் இருக்காது. குதிக்க வேண்டியதுதான். வெறும் புறுக்கு விளக்கெண்ணெய்க்குத்தான் கேடு என்று தெரியாதா என்ன? இது அப்பாரு சொன்ன பழமொழி. பேதிக்காக எவனோ ஒருத்தன் விளக்கெண்ணெயைக் குடித்தானாம். ரிசல்ட் ஜீரோ. வெறும் சத்தம்தான். அடுத்தவனுக்கும் பிரச்சினை. விளக்கெண்ணையும் வீண்.

ஒரு கூட்டத்தில் பேசுவதற்கு எனக்குத் தகுதியில்லை என்று சொன்னதற்காக இதை எழுதவில்லை. தகுதியில்லை என்று ஒத்துக் கொள்வதில் எனக்கு பிரச்சினையே இல்லை.  ஆனால் எந்த உழைப்புமே இல்லாமல் வயிற்றையும் புட்டத்தையும் பெருக்கிக் கொண்டிருக்கும் இவர்கள் ஏன் இதே வேலையாகத் திரிகிறார்கள் என்றுதான் புரியவில்லை.

constructive ஆன வேலை என்று எதையாவது செய்துவிட்டு பேசலாம் அல்லவா? இதுவரை என்ன செய்திருக்கிறோம் என்று இந்தப் பிதாமகன்கள் கண்ணாடியில் முகம் பார்த்திருப்பார்களா?

மீறிப் போனால் வட்டமாக அமர்ந்து சாராயத்தைக் குடித்து சைட் டிஷ்ஷைத் தின்று அடுத்த நாள் காலையில் வயிறு எரிந்து மோர் குடித்துத் திரியும் இவர்கள்தான் இலக்கியவாதிகள். குடித்த சாராயத்தை லிட்டர் லிட்டராக மூத்திரமாக ஊற்றி தமிழ் இலக்கியத்தை வளர்க்கிறார்கள் பாருங்கள். வெட்டிப்பயல்கள். ‘இவனுக்கான இலக்கிய மதிப்பீடு என்ன?’ என்று கேட்பதற்கு முன்பாக தமக்கான இலக்கிய மதிப்பீடு பற்றி ஒரு முறையாவது யோசித்திருப்பார்களா? இப்படி சத்தே இல்லாமல் வெறும் சக்கையைப் பேசிப் பேசியேதானய்யா இலக்கியம் என்றாலே தலை தெறிக்க ஓட வைத்திருக்கிறீர்கள்? எவனோ ஒருவன் மனைவி தாலியை அடமானம் வைத்து சிறுபத்திரிக்கை நடத்திக் கொண்டிருப்பான். அதில் ஒன்றரைக் கவிதையை எழுதிவிட்டு கார்போரேட் நிறுவனங்களிலும் கந்துவட்டிகாரன்களிடமும் ஊழியம் செய்தபடியே தொண்டையக் கனைத்து ‘நாங்கள் அல்லவா இலக்கியக் குஞ்சுகள்?’ என்று நீட்டுகிற பீலாவுக்காக உங்களை மாதிரியான ஆட்களை மெச்சித்தான் ஆக வேண்டும்.

புரியாமல் எழுதி அடுத்தவர்களை மிரளச் செய்வது இலக்கியம் என்று எவன் சொல்லிக் கொடுத்தான்? அதே நினைப்பில் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு ஃபோட்டோவுக்கு ஃபோஸ் கொடுத்துவிட்டால் நீங்கள் செய்வது இலக்கியம் என்றாகிவிடுமா? எழுத்து என்பது இயக்கம். எல்லாவகையான எழுத்தும் கலந்து ஓடுகிற காட்டாற்று வெள்ளம் அது. அதில் முந்நூறு பேர் மட்டும் எழுதுவதுதான் இலக்கியம் என்று பேசித் திரியாதீர்கள். எல்லாக்காலத்திலும் எல்லாவிதமான எழுத்தாளர்களும் அவசியம். அப்பொழுதுதான் மொழி செழிக்கும். வெட்டிச் சண்டைக்கு சட்டையைத் தேடாமல் உருப்படியாக ஒன்றிரண்டு வாக்கியங்களை எழுதிவிட்டு வாருங்கள். அதற்குள் நானும் எதையாவது உருப்படியாக எழுதிவிடுகிறேன். அப்புறமாக விவாதிக்கலாம். முளைத்து மூன்று இலை விடுவதற்குள்ளாகவே இவ்வளவு அழிச்சாட்டியம்மாய்யா?