Feb 25, 2015

என்ன படிக்கலாம்?

பிப்ரவரி மாத மத்தியிலிருந்து கல்லூரி பற்றியும் மேற்படிப்பு பற்றியதுமான பேச்சு ஆரம்பிக்கிறது. சமீபத்தில் தேனியிலிருந்து ஒருவர் அழைத்திருந்தார். முதல் கேள்வியே ‘இஞ்சினியரிங்கில் என்ன கோர்ஸ் நல்லா இருக்கும்?’ என்றுதான் ஆரம்பித்தார். அவரது மகளுக்கான விசாரணை அது. ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருக்கிறார். 

அந்தக் கேள்விக்கு உடனடியாக பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தோன்றியது. ‘உங்க பொண்ணுக்கு எந்த பாடம் பிடிக்கும்?’ என்ற போது அவரிடம் பதில் இல்லை. ‘இஞ்சினியரிங்கே போகணும்ன்னு இல்லைங்க’ என்று நான் ஆரம்பித்தது ஒருவேளை அவருக்கு பிடிக்காமல் போயிருக்கக் கூடும். ஆனால் சில விஷயங்களைத் தெளிவுபடுத்திவிட வேண்டும்.

தேர்வுகள் முடிவதற்கும் கல்லூரியின் சேர்க்கை ஆரம்பிப்பதற்கும் இன்னமும் இரண்டு மூன்று மாதங்கள் இருக்கின்றன. பொறுமையாக முடிவெடுக்கலாம். இப்பொழுதே அவசரப்பட வேண்டியதில்லை. மாணவர்கள் தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் பெற்றோர்கள் உள்ளே புகுந்து ‘அதுதான் நல்ல படிப்பாம்..இதுதான் நல்ல படிப்பாம்’ என்று குட்டையைக் குழப்புவது மாணவர்களின் கவனச்சிதறலுக்கு வழிவகுக்கும். அவர்கள் போக்கில் விட்டுவதுதான் இப்போதைக்கு சரியான செயலாக இருக்கும்.

இதுவரைக்கும் அடுத்து என்ன சேர்வது என்பது பற்றி யோசிக்காமல் விட்டிருந்தால் இப்பொழுது யோசிக்க ஆரம்பிப்பது சரியான தருணம் இல்லை. பொதுத் தேர்வுகள் முடியும் வரைக்கும் வெறும் தேர்வுகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். அது மிக முக்கியம். தேர்வுகள் முடிந்த முதல் நாள் மாலையிலிருந்து அடுத்து என்ன சேரலாம் என்பதைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிடலாம்.

சில மாணவர்கள் ப்ளஸ் ஒன் படிப்பின் போதே ‘அடுத்து என்ன படிப்பது?’என்று முடிவு செய்திருப்பார்கள். ஒருவேளை அவர்கள் ‘அடுத்தது பொறியியல் படிப்புதான்’ என்று முடிவு செய்திருந்தால் வேண்டுமானால் ‘பொறியியலில் எதைப் படிக்கலாம்?’ என்று யோசிக்கத் தொடங்குவதில் தவறில்லை. ஆனால் அதைக் கூடத் தேர்வு முடிந்த பிறகு யோசித்துக் கொள்ளலாம் என்றுதான் பரிந்துரைக்க வேண்டும்.

‘படிப்பது அவர்கள் வேலை....பாடத்தைப் பற்றி விசாரித்து வைப்பது பெற்றவர்களின் கடமை’ என்று நினைத்தால் அது நல்ல நினைப்புதான். யோசிக்கத் தொடங்கலாம்தான். ஆனால் இப்போதைக்கு இந்தச் சிந்தனைகளை நமக்குள்ளேயே வைத்துக் கொள்வது நல்லது.
  • அறிவியல் படிப்புகளுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன. வேறு பாடங்களில் மாணவர்கள் ஆர்வமாக இருந்தால் ‘நீ பொறியியல்தான் படிக்க வேண்டும்’ என்று தடை போட வேண்டியதில்லை. இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களைப் படித்து முனைவர் பட்டம் வாங்கும் நோக்கமிருந்தால் எப்படியும் ஏழெட்டு வருடங்கள் ஆகிவிடும். ஆனால் ஏழெட்டு வருடங்கள் தாங்குமளவுக்கு குடும்பப் பொருளாதாரம் இருந்தால் தைரியமாக அனுமதிக்கலாம். மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது.
  • மாணவர்களுக்கு உண்மையிலேயே சிவில் சர்வீஸ் உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் மீதான விருப்பமிருப்பின் அந்தத் தேர்வுகளைப் பற்றிய புரிதலை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை பெற்றோர்கள் உருவாக்கித் தரலாம். எந்தெந்த பாடங்களில் தேர்வுகள் எழுதலாம், தேர்வு முறைகள் என்ன என்பது பற்றி விவரம் தெரிந்தவர்களைச் சந்திக்கச் செய்து பேச வைக்கலாம். மாணவர்கள் அது சம்பந்தமான பாடங்களை கல்லூரிகளில் தேர்ந்தெடுக்க விரும்பக் கூடும். அதற்கு முட்டுக்கட்டை போட வேண்டியதில்லை.
  • உதாரணமாக மாணவர் சைக்காலஜி படிப்பை படிக்க விரும்புகிறார். அதன் பிறகு போட்டித் தேர்வு எழுத விரும்புகிறார் என்றால் ஒருவேளை தேர்வில் வெற்றியடைய முடியாவிட்டால் சைக்காலஜி படிப்பை வைத்துக் கொண்டு அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருங்கள்.
  • புள்ளியியல், நிலவியல்(ஜியாலஜி) உள்ளிட்ட வெளியில் பரவலாக கவனம் பெறாத படிப்புகளைப் பற்றி விசாரித்து வைக்கலாம். புள்ளியியலும் அதோடு சேர்த்து SAS போன்ற மென்பொருளும் படித்தவர்களுக்கு மிகச் சிறந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன.
  • வெளிநாடு செல்வதற்கு பொறியியல்தான் படிக்க வேண்டும் என்பதில்லை. வரலாறு முடித்துவிட்டு ஹரப்பா நாகரிகத்தை ஆராய்ச்சி செய்துவிட்டு இப்பொழுது இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் ஒரு மலையாள நண்பரைச் சந்தித்திருக்கிறேன்.
  • குறைந்தபட்சம் நான்கைந்து பாடங்களைப் பற்றியாவது தெளிவான புரிதல் வேண்டும். அதிலிருந்து ஒன்றிரண்டை முடிவு செய்து கொள்ளலாம்.
இனிமேல் நிறையப் பாடங்களைப் பற்றியும் அவற்றின் வாய்ப்புகளைப் பற்றியும் விரிவாகப் பேசலாம். தனிப்பட்ட பாடங்கள் எதையாவது பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். எனக்குத் தெரியாவிட்டாலும் கூட விசாரித்துவிட்டு எழுதுகிறேன். அந்தத் தகவல் பிறருக்கும் பயன்படக் கூடும். வெளியில் அதிகம் தெரியாத படிப்புகளைப் பற்றிய தகவல் ஏதாவது உங்களுக்குத் தெரிந்திருந்தாலும் அனுப்பி வைக்கவும். அந்தத் தகவலை பரவலாக்குவதற்கான முயற்சிகளைச் செய்யலாம். ஜூன் வரைக்கும் இந்த வேலையைச் செய்ய வேண்டும். ப்ளஸ் டூ மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளுக்கு ஒரு வகையில் விஜய்யாகவோ அல்லது அணிலாகவோ இருக்கலாம். 

இப்போதைக்கு பெற்றோர்கள் ஒரேயொரு விஷயத்தில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். தனியார் கல்லூரிகளும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் இப்பொழுதிலிருந்தே அவசரப்படுத்துவார்கள். ‘உடனடியாகச் சேராவிட்டால் அத்தனை இடங்களும் தீர்ந்துவிடும்’ எனச் சிக்க வைக்க முயற்சிப்பார்கள். பல கல்லூரிகள் ஊர் ஊராக கூடாரம் போட்டு ஆள் பிடிக்கத் தொடங்குவார்கள். பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு இயல்பாக இருக்கும் பதற்றத்தை அறுவடை செய்வதற்காகவே காத்திருப்பவர்கள் அவர்கள். பணத்தைக் கட்டச் சொல்வார்கள். அவசரத்தில் நிறையப் பேர் கட்டிவிட்டு ‘சரி ஆண்டவன் கொடுத்த வழி’ என்று இருப்பதை கவனித்திருக்கிறேன். நிறையக் கல்லூரிகள் இருக்கின்றன. நிறையப் பாடங்கள் இருக்கின்றன. எனவே இந்த விஷயத்தில் பதற்றப்படாமல் நிதானமாக முடிவு செய்ய வேண்டும். 

ஒன்று மட்டும் நிச்சயம். பொறியியல் படித்தவர்களெல்லாம் வாழ்க்கையில் வென்றுவிடுவதில்லை. மற்ற பாடங்களைத் தேர்ந்தெடுத்தவர்கள் எல்லாம் தோல்வியடைந்துவிடுவதுமில்லை. ஆர்வம்தான் வெற்றியின் அடிப்படை. ஆர்வமிருப்பின் எந்தப் பாடத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் அந்த ஆர்வம் குருட்டாம்போக்கான ஆர்வமாக இருந்துவிடாதபடிக்கு புரிதலை உருவாக்குவது பெற்றோர்களின் கடமை. ஒருவேளை பெற்றவர்களுக்கு அந்தளவுக்கு விவரம் போதாது என்றால் விவரம் தெரிந்தவர்களைச் சந்தித்து பேசுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தால் போதும். மற்றவற்றை மாணவர்களே பார்த்துக் கொள்வார்கள்.