Feb 26, 2015

ஊசி போட்டு கொன்றுவிடுவார்கள்

செல்லப்பிராணிகளில் கடைசியாக ஒரு புறா வைத்திருந்தேன். அது ஆண் புறாவா அல்லது பெண் புறாவா என்று தெரியாது. பெண் புறாவாக இருந்தால் ஆண் புறாவொன்றை இழுத்து வந்துவிடும் என்றார்கள். இது உல்டா ஆகிவிட்டது. ரொமான்ஸ் முற்றி ஓடிப் போய்விட்டது. அடுத்த தெருவிலேயேதான் அதன் காதலி இருந்தாள். அந்த வீட்டுக்காரப் பெண்மணியிடம் சென்று ‘என்ர புறாவைக் கொடுங்க’ என்று கேட்ட போது ‘புடிச்சுட்டு போ’ என்று சொன்னார். எப்படிப் பிடிப்பது? இரவில் கூண்டுக்குள் வந்தபிறகு பிடித்தால்தான் உண்டு. ‘சாயந்திரமெல்லாம் வந்து கதவைத் திட்டாத..எம்புருஷனுக்கு கோவம் வந்துடும்’ என்றார். அப்பொழுது எனக்கு அரும்பு மீசை முளைத்திருந்தது. இது என்ன புதுக்கரடி என்று விட்டுவிட்டேன். வெகு நாட்களுக்குப் பிறகு காதல் சலித்துப் போய்விட்டது போலிருக்கிறது. வீட்டுக்கு திரும்ப வந்துவிட்டது. எங்கள் ஆயாவுக்கு அறிவு ஜாஸ்தி. இறகைப் பிடுங்கி விட்டுவிடலாம். அது நன்றாக முளைப்பதற்குள் நம் வீட்டிலேயே இருந்து பழகிவிடும் என்றார். நல்ல ஐடியா என்று அவரது திட்டத்தை அமுல்படுத்தினோம். மூன்றே நாட்கள்தான். பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் போது இட்லிக்கு புறாக்குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது. பக்கத்து வீட்டு நாயொன்று கடித்துக் கொன்றுவிட்டது. ஆயாதான் செத்துப் போன புறாவை சுத்தம் செய்து கொடுத்தார் என்று அம்மா சொன்னார். ஆயாவை பார்த்தேன். சிரித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது வந்த கோபத்துக்கு ஆயாவின் நடு உச்சியில் நங்கென்று கொட்ட வேண்டும் போலிருந்தது.

அதோடு சரி.

ஒரு காலத்தில் செல்லப்பிராணிகள் மீது அலாதி பிரியத்துடன் இருந்தேன். பொடியனாக இருந்த காலத்தில் பொன்வண்டு வளர்த்துப் பார்த்தேன். ஏழெட்டு முட்டைகளைக் கொடுத்துவிட்டு செத்துப் போனது. கலர்கலராக முட்டையிடும் என்று கனவுகளை கலர்கலராக வைத்திருந்தேன். ஆனால் எப்படித் திருப்பினாலும் ஒரே வண்ணத்தில்தான் இருந்தது. தீப்பெட்டிக்குள் வைத்து அடக்கம் செய்து இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் எடுத்துப் பார்த்தேன். மண் அரித்துவிட்டதா என்று பார்க்க வேண்டும் என்பதுதான் நோக்கம். இரண்டு நாட்கள் புதைத்து வைத்தால் மணக்கவா செய்யும்? முகத்தில் அறைந்த அந்த நாற்றத்திற்குப் பிறகு மண்ணைத் தோண்டுவதையே விட்டுவிட்டேன்.

அதற்கு வெகு நாட்கள் கழித்து கிளிக்குஞ்சு பிடித்து வந்திருந்தேன். அடுத்த நாள் காலையில் ஒரேயொரு இறகு மட்டும் கிடந்தது.  ‘கிளிக்கு றெக்கை முளைச்சிட்ச்சு....பறந்து போயிடுச்சேப்பா’ என்று சிவாஜியின் வசனத்தைச் சொல்லி சமாதானப்படுத்தினார்கள். ஆனால் உண்மையில் பூனை பிடித்துப் போய்விட்டது என்று வெகுநாட்கள் கழித்துத்தான் தெரியும். இப்படி ஓடிக் கொண்டிருந்த செல்லப்பிராணிகளின் சாப்டரில் கடைசியாகத்தான் புறா. இப்படியே கோழி, குருவி என்று நிறைய முயற்சித்துப் பார்த்தாலும் ஒன்றுமே உருப்படியானதில்லை என்பதால் இப்பொழுதெல்லாம் எதையும் கண்டு கொள்வதில்லை.

அப்பாவுக்கு அப்படியில்லை. இன்னமும் உள்ளுக்குள் நாய் மீதான பிரியம் உண்டு. அவ்வப்போது ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் கறிக்கடையிலிருந்து கால்களையும் தோல்களையும் வாங்கி வந்து ரேஷன் அரிசியோடு சேர்த்து வேக வைத்து தெருநாய்களுக்கு போடுவார். அவை வாலைச் சுழற்றிக் கொண்டு கூடவே திரியும். அப்படித்தான் பால்காரர் வீட்டிலிருந்து ஒரு நாய்க்குட்டியை வாங்கி வந்திருந்தார். பால் குடி மறக்காத குட்டி. கறுப்பும் செம்மியுமாக கீச் கீச்சென்று கத்திக் கொண்டிருந்தது. அதற்காகத் தனிக் கூண்டு தயாரித்து சாக்குப்பையினால் ஒரு மெத்தை என்று ஏதேதோ செய்து கொண்டிருப்பார். அம்மாவுக்கு பயங்கரக் கடுப்பாகிவிடும். ‘அதைப் போய் இந்தக் கொஞ்சு கொஞ்சுறீங்க’ என்றாலும் கண்டு கொள்ளவே மாட்டார். எங்கள் தெருவில் வாகனப்போக்குவரத்து அதிகம். முதல் வாரத்திலேயே குட்டியை தெருவில் விட்டு விளையாடிக் கொண்டிருந்த போது பைக்காரன் ஒருவன் மேலேயே ஏற்றிவிட்டான். எதுவும் ஆகவில்லை. ஆனால் அப்பா அவனை ஏதோ வசைபாட அவன் சண்டைக்கு வந்துவிட்டான். சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. 

வெகுநாட்களுக்குப் பிறகு சங்கிலியிலிருந்து கழட்டிவிட்டிருந்தார். அதற்கு முன்பாக ரேபிஸ் தடுப்பூசி போட்டு சான்றிதழ் ஒன்றை வாங்கி வைத்திருந்தார். யாராவது கடி வாங்கி அது நம்முடைய நாய்தான் என்று நிரூபித்துவிட்டால் மாநகராட்சி ஊழியர்கள் நம்மிடம் நஷ்ட ஈடு வாங்கிவிடுவார்கள் என்பதால் இந்தச் சான்றிதழ் வாங்கி வைத்திருந்தார். சங்கிலியிலிருந்து கழற்றி விட்ட பிறகு வீட்டிற்கு அருகிலேயேதான் சுற்றிக் கொண்டிருக்கும். ஆரம்பத்தில் மட்டும் எங்கேயோ போய் கறிக்கடைக்காரர்கள் வீசும் கோழி இறகுகளைத் தின்றுவிட்டு வந்துவிடும். அதன் அருகிலேயே போக முடியாது. அவ்வளவு நாற்றம். குடலை புரட்டிக் கொண்டு வரும். அப்பொழுதும் கூட அதைப் பிடித்துக் குளிப்பாட்டி அம்மாவிடம் அப்பா வாங்கிக் கட்டிக் கொண்டதைப் பார்த்திருக்கிறேன். இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுவார்.

கு.க அறுவை சிகிச்சை செய்யாத ஒரே இளவட்டம் எங்கள் நாய்தான். அதனால் எந்தப் பெண் நாயையும் விடுவதில்லை. இதைப் பார்த்தாலே அவையெல்லாம் பம்மிக் கொண்டிருந்தன. இரண்டு மூன்று முறை நாய்வண்டிக்காரர்கள் வந்திருந்தார்கள். ஆனால் பெரும்பாலும் அவர்களுக்குத் தோல்விதான். எப்படியாவது தப்பித்துவிடும். அப்பாவும் இதைப் பார்த்துவிட்டார். ‘இதைப் புடிச்சுட்டு போனீங்கன்னா கொண்டு வந்து விட்டுடுங்க..நூறு ரூபாய் தர்றேன்’ என்று பேரம் பேசி வைத்திருந்தார்.

நாய் பிடிக்க வரும் சமயத்தில் அவர்களிடம் விசாரித்தால் ‘கொண்டு வந்து இங்கேயே விட்டுடுவோம் சார்’ என்பார்கள். ஆனால் உள்ளூர்க்காரர்கள் வேறு மாதிரியாகச் சொல்கிறார்கள். தூரமாகக் கொண்டு போய் கொன்று புதைத்துவிடுகிறார்கள் என்று ஓரிருவர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். வேறு சிலர் அதை மறுத்து ‘ஊருக்கு வெளியில் விட்டுவிடுகிறார்கள்’ என்பார்கள். எது உண்மை என்று தெரியவில்லை.

அப்பாவுக்கு அந்த நாய்க்குட்டியின் மீது தனிப்பாசம் இருக்க காரணமிருக்கிறது. மிகப் பொறுப்பான நாய் அது. இரவு பத்து மணிக்கு மேலாக வாசற்படியை விட்டு நகராது. காலையில் யாராவது கதவைத் திறந்த பிறகுதான் வெளியே சுற்றச் சொல்லும். அப்பா கட்டி வைத்திருக்கும் கூட்டின் அடியிலேயே பெரும்பாலான நேரம் படுத்திருக்கும். தெருவில் ஏதாவது பெண் நாய் சுற்றினால் மட்டும் இடத்தைக் காலி செய்யும். சோலி முடிந்தவுடன் திரும்பவும் வந்து படுத்துக் கொள்ளும். இது வரையிலும் கொடுத்து வைத்த வாழ்க்கைதான். 

ஆனால் வாழ்க்கை எல்லா நேரத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை அல்லவா? 

அப்படித்தான் ஆகிவிட்டது. மூன்று நாட்களுக்கு முன்பாக தனது வழக்கமான இடத்தில் படுத்துத் தூங்கியிருக்கிறது. வண்டிக்காரர்கள் சப்தமில்லாமல் வந்து அமுக்கிச் சென்றுவிட்டார்கள். அப்பா இதைப் பார்க்கவில்லை. பக்கத்து வீட்டுக்காரர்கள்தான் நாய் வண்டிக்காரர்களோடு சண்டைப் போட்டிருக்கிறார்கள். கொண்டு வந்து விட்டுவிடுவதாகத்தான் சொன்னார்களாம். ம்ஹூம். நேற்று எனக்கு அங்கலாய்ப்பாக இருந்தது. கார்போரேஷன்காரர்களிடம் அழைத்துப் பேசினால் சரியாக பதில் சொல்லவில்லை. ‘எங்கேயாவது கொண்டு போய் விட்டிருப்பார்கள்’ என்று சொல்கிறார்கள். அப்படி விட்டிருந்தால் சனிக்கிழமை போய் பிடித்து வந்துவிடலாம். ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் ‘ஊசி போட்டு கொன்னுருப்பாங்க சார்’ என்கிறார். தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போதெல்லாம் சாலையைத் தாண்டத் தெரியாமல் வாகனச் சக்கரத்தில் சிக்கிக் கூழாகிக் கிடக்கும் நூற்றுக்கணக்கான நாய்களுக்காக வெறும் ‘ப்ச்’ மட்டும் கொட்டுவேன். இப்பொழுது ஒரு படி அதிகம். அவ்வளவுதான்.