Feb 25, 2015

வாழ்த்த வயதில்லை

பெங்களூரில் வழக்கமாக இரண்டு கடைகளில்தான் விசிடிக்களை வாங்குவேன். இரண்டு கடைக்காரர்களுமே தமிழர்கள் இல்லை. ஆனால் நன்றாகத் தமிழ் பேசுவார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்திப் படங்கள் அதிகமாக இருக்கும். லூசியா மாதிரியான ஏதாவது முக்கியமான கன்னடப் படங்களை வலியுறுத்திக் கேட்டால் உள்ளுக்குள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு நிற பாலித்தீன் பையைப் பிரித்து எடுத்துத் தருவார்கள். சிடி பற்றி பிறகு பேசிக் கொள்ளலாம். இரண்டு கடைகளிலுமே தமிழக அரசு வழங்கும் இலவசத் தொலைக்காட்சி உண்டு. தமிழகத்தில் இலவசமாக வழங்கப்பட்ட தொலைக்காட்சி கர்நாடக மாநிலம் பெங்களூரில் தமிழ் பேசத் தெரியாதவர்களின் கடைகளுக்கு எப்படி வந்தன? 

இது ஜூஜூபி.

இந்த நகரத்தின் சாலைகளில் இலவச சைக்கிள்களை சாதாரணமாகப் பார்க்கலாம். கொள்ளேகால் பக்கமாக கர்நாடகத்தின் எல்லைக்குள் அம்மாவின் படம் ஒட்டிய மின்விசிறியைப் பார்த்திருக்கிறேன். அரசின் இலவச லேப்டாப்களை பெங்களூரின் பழைய கணினிக்கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. தமிழக அரசின் இலவசத் திட்டங்கள் உண்மையிலேயே சரியான ஆட்களைத்தான் சேர்கின்றனவா என்பது கூட இரண்டாம்பட்சம். இத்தகையை திட்டங்கள் அவசியமானவையா என்று கூட ஏன் யோசிப்பதில்லை? இத்தகையை திட்டங்களில் பல லட்சம் கோடிகளை தண்ணீராகக் கரைக்கிறார்கள். கரைத்து தங்கள் வீட்டு அண்டாவை நிரப்புகிறார்கள்.

தமிழகத்தின் கிராமப்புற பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை. கழிப்பறை வசதிகள் கூட இல்லாத ஆயிரக்கணக்கான பள்ளிகள் இருக்கின்றன. சுகாதாரமான குடிநீர் வசதி கிடைக்காத கிராமங்கள் பல்லாயிரக்கணக்கில் தேறும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் திணறிக் கொண்டிருக்கின்றன. பொதுக்கழிப்பிடங்களில் சங்கடமில்லாமல் கால் பதித்துவிடுங்கள் பார்க்கலாம். இப்படி கல்வி, மருத்துவம், சுகாதாரம் என எல்லாவற்றிலும் தாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கூட உணராதவர்களா அரசை நடத்திக் கொண்டிருக்கும் தலைவர்களும் அதிகாரிகளும்?

நேற்று தமிழகம் முழுவதும் ‘ஜெ’க ஜோதிதான். நெடுஞ்சாலை முழுவதுமாக வாழ்த்த வயதில்லாமல் வணங்கிக் கொண்டிருந்தார்கள். எத்தனை விதமான கவன ஈர்ப்புகள்? எவ்வளவு கொண்டாட்டங்கள்? இதன் வழியாக எதை நிரூபிக்க விரும்புகிறார்கள்? யாருடைய ஆட்சி நடக்கிறது என்பதைக் கூட புரிந்து கொள்ளாத அளவுக்கு தமிழக மக்கள் மடையர்களா என்ன? அப்புறம் எதற்காக இவ்வளவு நிரூபணங்கள். இன்னும் ஒரு வருடத்தில் தேர்தல் வரப் போகிறது. எப்படியும் கட்சியில் இடம் பிடித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டுத் திரிகிறார்கள்.

இந்த வருடம் கிட்டத்தட்ட முப்பதாயிரம் கோடி ரூபாய்க்கு மேலாகத் தமிழக அரசின் பட்ஜெட்டில்  துண்டு விழப் போகிறது என்ற செய்திக்குறிப்பை வாசித்தேன். அரசின் கடன் சுமை இப்போதைக்கு தீர்க்க முடியாத அளவுக்கு இருக்கிறதாம். பல லட்சம் கோடிகளில். அடுத்த வருடம் தேர்தல் வரப் போகிறது. அதற்காக நிறைய கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்க வேண்டியிருக்கும். மேலும் சுமை கூடப் போகிறது. என்ன செய்யப் போகிறார்கள்? என்னவோ செய்யட்டும். இவையெல்லாம் எந்தச் செய்தித்தாளிலும் வெளிப்படையாக வருவதில்லை. ரஜினியின் இளையமகள் ஐஸ்வர்யாவுக்கு வளைக்காப்பு என்பதுதான் நாங்கள் வாங்கும் தினத்தந்திக்கு முக்கியமான செய்தி. 

தேர்தலுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம், எல்லாத் திட்டங்களிலும் தம் பெயரை பதிக்கும் கலாச்சாரம், குடி கலாச்சாரம், பிறந்தநாள் கொண்டாட்ட கலாச்சாரம் என்று கடந்த பத்து அல்லது பதினைந்து வருடங்களில் தமிழகம் எவ்வளவு சீரழிந்து கொண்டிருக்கிறது என்று திரும்பிப் பார்த்தால் புரிந்துவிடும். நாசக்கேடாகிக் கொண்டிருக்கிறது. சென்ற ஆட்சியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் குறுநில மன்னர்களாகத் திரிந்தார்கள் என்றால் இந்த ஆட்சியில் வாயைத் திறந்து பேசும் ஒரு அமைச்சரைப் பார்க்க முடியவில்லை. இரண்டுமே இரண்டு extreme. நல்லதுக்கில்லை.

மிக்ஸி, கிரைண்டர் கொடுக்கும் திட்டத்துக்கு இரண்டாயிரம் கோடி வரை செலவு பிடிக்கிறது. இலவச மடிக்கணினிக்கு ஆயிரம் கோடி ரூபாய். இலவச வேட்டி சேலைக்கு தனிக்கணக்கு. இலவச சைக்கிள், ஆடு, மாடு என்கிற வகையில் ஐநூறு கோடி வரை ஆகும் போலிருக்கிறது. தாலிக்குத் தங்கம், மின்விசிறி போன்றவையெல்லாம் வேறு கதை. இலவச நோட்டுப் புத்தகங்கள், இலவச பஸ் பாஸ் போன்றவற்றையெல்லாம் பெரிதாக விமர்சனத்துக்கு உட்படுத்தத் தேவையில்லை அது கல்விக்கான செலவு என்று விட்டுவிடலாம். ஆனால் இந்த டிவி, கிரைண்டர், மிக்ஸியெல்லாம் கொடுத்தே ஆக வேண்டுமா? இவர்கள் கொடுக்கும் தொலைக்காட்சிப் பெட்டி அதிகபட்சமாக இரண்டாயிரம் ரூபாய் பெறும். எதற்காக அத்தனை பேருக்கும் கொடுக்கிறார்கள்? ஏற்கனவே இருப்பவர்கள் எல்லாம் வாங்கி வைத்திருக்கிறார்கள். ‘அறைக்கு ஒரு டிவி இருந்துவிட்டுப் போகட்டுமே’ என்று காரணம் சொல்கிறார்கள். 

லேப்டாப்பிலிருந்து ஆடு வரைக்கும் அனைத்தையும் இந்தப் பக்கம் வாங்கி அந்தப் பக்கமாக விற்கும் ஒரு குழு இருக்கிறது. வரி வருவாயிலிருந்துதானே கொடுக்கிறோம் என்ற சால்ஜாப்பு சொல்வார்கள். யாரிடமிருந்தோ வரியை வாங்கி யாருடைய பையையோ நிரப்புகிறார்கள். அட ஏழை மக்கள்தானே வாங்குகிறார்கள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. டெண்டர் எடுப்பதிலிருந்து பயனாளிகளிடம் ஒரு பங்கு வசூலிப்பது வரை அரசு அதிகாரிகளும் கட்சிக்காரர்களும் பையை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசு அதிகாரி வாங்காமல் என்ன செய்வான்? ஒரு RTO பதவியின் இடமாறுதலுக்கு எவ்வளவு தொகை கொடுக்க வேண்டும் என்று விசாரித்துப் பாருங்கள். அதுவும் ஓசூர் போன்ற வருமானம் கொழிக்கும் இடங்கள் என்றால் அரைக் கோடியைக் கூடத் தாண்டும் என்கிறார்கள். கொடுத்துவிட்டு வருபவர்கள் சும்மா இருப்பார்களா? கிடைக்கிற இடங்களிலெல்லாம் சுருட்டத்தான் செய்வார்கள். அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஆள் எடுக்கிறார்கள். இரண்டரை லட்சத்திலிருந்து ஏழு லட்சம் வரை பணம் கொடுக்கிறார்கள். நிரந்தரப் பணி எல்லாம் இல்லை. ஆரம்பத்தில் தற்காலிகப் பணிதான். ஆறாயிரம் ரூபாய் சம்பளம். வட்டிக்கணக்கு போட்டால் கூட கட்டுபடியாகாது. ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் கூட இல்லை. சுருட்டாமல் என்ன செய்வார்கள்?

கிட்டத்தட்ட எல்லாத் துறைகளிலுமே இந்த நிலைதான். ஒவ்வொரு அரசு அலுவலகமும் இப்படியே புழுத்துக் கொண்டிருந்தால் அரசு நிர்வாகம் எப்படியிருக்கும்? இதையெல்லாம் ஒழுங்குபடுத்தும் பொறுப்பு அரசுக்கு இல்லையா? ஏன் எந்த சீரமைப்புமே நடைபெறுவதில்லை? அரசு என்பது அதிகாரத்திற்கும் பணம் சேர்ப்புக்குமான ஒரு நிறுவனமாகிவிட்டது அல்லவா?

இலவசத் திட்டங்கள் இருந்துவிட்டுப் போகட்டும். எளியவர்கள் பயன் பெறுகிறார்கள்; இவர்களுக்கும் வாக்கு வங்கி உருவாக வேண்டும் என்கிற காரணங்கள் இருக்கின்றன. ஆனால் வருமானத்திற்கு டாஸ்மாக் தவிர வேறு என்ன ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள்? போக்குவரத்துத் துறையைப் பற்றி கேட்கவே வேண்டியதில்லை. நட்டத்தில் இயங்குகிறது. மின்சார வாரியத்தை விட்டால் கீழே விழுந்துவிடும் போலிருக்கிறது. சுற்றுலாத்துறை எந்த நிலைமையில் இருக்கிறது? ஒன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரியில்லை. தொழில் ஈர்ப்புக்கென ஏதாவது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றனவா?  மூடப்பட்ட தொழிற்சாலைகளை விட்டுவிடலாம். இளம் தொழில் முனைவோருக்கான திட்டங்கள் ஏதேனும் வெற்றியடைந்திருக்கின்றனவா? பெரும்பாலும் பூச்சியம்தான். சமீபத்தில் தமிழக அரசு கூட்டிய தொழில் முனைவோருக்கான கருத்தரங்கு படுதோல்வி என்கிறார்கள். 

மண் சோறு தின்னுதல், தீச் சட்டி ஏந்துதல், இலவசத் திருமணங்கள் என்று எதையாவது செய்துவிட்டுப் போகட்டும். ஆனால் சில திட்டங்களையாவது தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்தலாம் அல்லவா? எல்லாத் திட்டங்களுமே வாக்குக் கவர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக வைத்திருந்தால் எப்படி தமிழகம் தேறும்?

அம்மா உணவகம் நல்ல திட்டம்தான். அம்மா குடிநீர் பாராட்டப் பட வேண்டும். ஆனால் ஆட்சி மாறினால் காட்சி மாறிவிடும். உழவர் சந்தை நல்ல திட்டம். இப்பொழுது என்ன ஆனது? மகளிர் சுய உதவிக்குழுக்களில் ஆயிரத்தெட்டு அரசியல் இருந்தாலும் ஓரளவுக்கு கிராமப்புற பெண்களுக்கு பயனளித்தன. ஆனால் இப்பொழுது அவையும் நசிந்துவிட்டன. இத்தகைய கவர்ச்சித் திட்டங்களின் ஆயுள் அதிகபட்சம் ஐந்தாண்டுகள்தான். இவை நீண்ட கால நோக்கமற்றவை. 

புதியதாக உருவாக்கப்படும் நீர் பாசன வசதிகள், கல்வி மேம்பாடு, தொழிற்சூழலை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மது ஒழிப்பு போன்ற திட்டங்களின் விளைவுகள் பத்தாண்டுகளுக்குப் பிறகு பயனளிக்கும். ஆனால் இப்படியான திட்டங்கள் ஏதேனும் சமீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றனவா?

இந்த வருடம் அறுபத்தேழு லட்சம் மரக்கன்றுகளை தமிழகம் முழுவதும் நடப்போகிறார்களாம். அற்புதமான திட்டம். ஆனால் சென்ற வருடம் நட்டு வைத்த அறுபத்தாறு லட்சம் மரக்கன்றுகள் என்னவாயின? இரண்டு சதவீதம் கூட தப்பித்திருக்காது என்பதுதான் உண்மையாக இருக்கும். இலக்கை அடைய வேண்டுமென வனத்துறையை நெருக்குவார்கள். அவர்களும் கிடைத்த இடங்களில் எல்லாம் நட்டு வைப்பார்கள். இது பிப்ரவரி மாதம். அடுத்த மூன்று நான்கு மாதங்களுக்கு வெயில் கருக்கப் போகிறது. நட்டு வைத்த செடிகளுக்குத் தண்ணீருக்கு எங்கே போவார்கள்? மழையா பெய்கிறது? அப்படியே கருகித்தான் போகும்.

அறுபத்தேழு லட்சம் வேண்டாம். வெறும் ஆறு லட்சத்து எழுபதாயிரம் நட்டு வைக்கலாம். அதைத் தொடர்ந்து கண்காணித்து வளரச் செய்தாலே கன வேலை செய்யும். ஆனால் அதிலும் கூட பிரம்மாண்டம். அறுபத்தேழு லட்சம். என்ன முடிவு கிடைக்கப் போகிறது? இப்படியே மக்களின் பணத்தை எடுத்து தமிழகத்தைப் பள்ளத்துக்குள்ளாகவே இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாம் நம் விதி. தலையெழுத்து என்றெல்லாம் வீர தீரமாக எழுதுவதாக மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. திடீரென்று விழித்துப் பார்த்தால் அத்தனையும் கனவு. நல்லவேளை. கனவாகப் போய்விட்டதால் எந்த வம்பும் இல்லை. அப்படியே மறந்துவிட்டு ‘வாழ்த்த வயதில்லை தாயே வணங்குகிறேன்’ என்று முடித்துக் கொள்கிறேன்.