Feb 6, 2015

பெரிய அரசியலாக இருக்கும் போலிருக்கே

சமீபத்தில் ஒரு கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. பதிப்பக அரசியல் பற்றிய கட்டுரை அது. முதல் புத்தகத்தை வெளியிடும் பதிப்பாளரிடம் எழுத்தாளன் விசுவாசத்தைக் காட்ட வேண்டும் என்கிற ரீதியில் ஒரு பத்தி இருந்தது. எழுத்தாளன் பதிப்பாளனுக்கிடையேயான உறவு ரயில் ஸ்நேகிதம் மாதிரி இல்லை அது ஒரு நீடித்த நட்பு என்று கட்டுரையாளர் எழுதியிருந்தார். சிரிப்பு வந்துவிட்டது. ஏற்கனவே பல பதிப்பாளர்கள் இப்படித்தான் வெறியெடுத்துத் திரிகிறார்கள். ஒருவன் தன்னை விட்டு விலகிச் சென்றுவிட்டால் விரியன் பாம்புக்கு பாலூற்றினேன் முட்டை வைத்தேன் என்று புலம்பித் தீர்க்கிறார்கள். இந்த லட்சணத்தில் இப்படியெல்லாம் கட்டுரை எழுதி உசுப்பேற்றிவிட்டுவிடுகிறார்கள். 

ஒரு எழுத்தாளனின் முதல் புத்தகத்தை பதிப்பித்துவிட்டால் அந்த எழுத்தாளன் பதிப்பாளனுக்கு அடிமை சாசனத்தை எழுதிக் கொடுக்க வேண்டுமா என்ன? அப்படித்தான் இத்தகைய பதிப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். வேறு எந்தத் துறையிலாவது இப்படியான எதிர்பார்ப்பு இருக்கிறதா? ஒரு இயக்குநரை அறிமுகப்படுத்தும் தயாரிப்பாளர் எந்தக் காலத்திலும் அவன் எனக்கு மட்டும்தான் படம் இயக்க வேண்டும் என்று கேட்பதில்லை. ஒரு நடிகனை அறிமுகப்படுத்தும் இயக்குநர் அவன் தொடர்ந்து தன்னிடம் மட்டும்தான் நடிக்க வேண்டும் என்று கோருவதில்லை. மற்றவர்களுக்கும் படம் இயக்கட்டும், மற்றவர்களின் படத்திலும் நடிக்கட்டும். நேரமும் வாய்ப்பும் இருந்தால் நம்மோடு சேர்ந்து பணிபுரியட்டும் என்கிற புரிதல் இருக்கிறது. அந்த இயக்குநரும், நடிகரும் கடைசிவரைக்கும் தங்களை அறிமுகப்படுத்தியவர்கள் மீது மரியாதை வைத்திருக்கிறார்கள்.

ஆனால் பதிப்பாளர்களைப் பாருங்கள். வேறொரு பதிப்பாளரிடம் சென்றுவிட்டால் அவ்வளவுதான். அந்த எழுத்தாளன் எதிரியாகிவிடுவான். ‘நீ ஆக்டோபஸ்டா’ என்று வன்மமான புன்னகையைப் புரிவார்கள். பின்னணியில் எவ்வளவோ வேலைகளைச் செய்வார்கள். அதோடு அந்த உறவு காலி ஆகிவிடும். அப்புறம் எப்படி விளங்கும்? குழு சேர்த்தல், ஜால்ராக்களை வைத்து எதிராளிகளிடம் சதிராடச் செய்வது போன்ற அல்பமான அரசியல் எல்லாம் எழுத்துலகில்தான் உண்டு.

அத்தனை துறையிலும் அலைந்து திரிந்தவர்கள்தான் வெற்றியடைந்திருக்கிறார்கள். ஆனால் இந்தத் துறையில் மட்டும்தான் ‘அவன் முதல் புத்தகத்தை நான்தான் போட்டேன்...இப்ப கொஞ்சம் கூட விசுவாசம் இல்லாமல் திரியறான்’ என்கிறார்கள். என்ன விசுவாசத்தைக் காட்ட வேண்டும்? காலைச் சுற்றிக் கொண்டே திரிய வேண்டும். ஆமாஞ்சாமி போட வேண்டும். ‘நீங்க சொன்னா சரிண்ணே’ என்று ‘சொய்ங் சொய்ங்’ தட்ட வேண்டும். அரசியல்வாதிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது? எழுதுகிறவனின் முதுகெலும்பை உருவி மாலையாகப் போட்டுக் கொண்டால்தான் மனம் அனுஷ்கா அடையும் போலிருக்கிறது.

எழுத்தாளர்களுக்கென தனியான வாசகர் வட்டம் இருக்கிறதா என்றொரு காமெடியான வாசகமும் அந்தக் கட்டுரையில் இருந்தது. சுஜாதா, கல்கியை விட்டுவிடலாம். அவர்கள் முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள். இப்பொழுது ஜெயமோகன் உருவாக்கி வைத்திருப்பது என்ன? அவரை மட்டுமே வாசிக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். மறுக்க முடியுமா என்ன? சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களும் எந்தவிதத்திலும் சளைத்தவர்களில்லை. அவர்களுக்கான தனித்தனி வாசகர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் விட்டுவிடலாம். அதற்கடுத்த தலைமுறையில் லட்சுமி சரவணக்குமாருக்கு என்ற தனி வாசகர்கள் இல்லையா என்ன? விநாயகமுருகனின் பெயரைத் தேடி வருகிற வாசகர்கள் இருக்கிறார்கள்தானே? ஜெயமோகன் அளவுக்கு இல்லையென்றாலும் லட்சுமி சரவணக்குமார், விநாயகமுருகன் போன்றவர்கள் தங்களுக்கான தனித்த வாசகப்பரப்பை வெற்றிகரமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஜெயமோகன், சாரு, எஸ்ரா போன்றவர்கள் இந்த இடத்தை அடைவதற்காகக் கொடுத்திருக்கும் உழைப்பு அபாரமானது. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகாலமாக தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார்கள். அடுத்த தலைமுறை எழுத்தாளர்களுக்கு இன்னமும் வெகுகாலமிருக்கிறது. இந்த அடிப்படையில்தான் எழுத்தாளர்களுக்கென தனியான வாசகர் வட்டம் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டும்.

வருடம் மூன்றே முக்கால் கவிதையை எழுதிவிட்டு தன்னை இந்த உலகம் மதிக்கவில்லை, கொண்டாடவில்லை என்றால் எப்படிக் கொண்டாடும்? வெறும் சிற்றிதழ்கள் மட்டுமே எழுத்தாளர்களை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த காலம் இல்லை இது. புத்தகக் கண்காட்சியில் பார்த்திருக்கலாம். சிற்றிதழைப் பற்றி எந்தவிதமான அறிவும் இல்லாத இன்றைய வாசகன் நவீன எழுத்தாளர்களின் புத்தகங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு எழுத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்கான எவ்வளவோ மூலங்கள்(Source) இருக்கின்றன. தொடர்ச்சியான உழைப்பினால் மட்டுமே தனக்கான இத்தகைய வாசகர்களை உருவாக்க முடியும் என ஒரு எழுத்தாளன் உறுதியாக நம்ப வேண்டிய காலம் இது. இப்படிச் சொன்னால் ‘எழுத்தை உற்பத்தி செய்கிறார்கள்’ என்பார்கள். இதெல்லாம் ஒருவிதமான மாயை. எழுத்தோ படைப்போ கடுமையான உழைப்பு தேவை. அதில்லாமல் எதுவுமே சாத்தியமில்லை. எழுதுவதை எழுதிக் கொண்டேயிருக்க வேண்டியது அவசியம். நிறைய எழுதுவதற்கு வாசிப்பு தேவைப்படுகிறது. ஆக, இந்த இரண்டும் எழுதுபவனுக்கு மிக அவசியமானவையாக இருக்கின்றன. இந்த இரண்டையும் எழுத்தாளன் செய்து கொண்டிருந்தால் போதும். அரசியல் எதுவும் செய்ய வேண்டியதில்லை. எழுத்து ஒரு தொடர்ச்சியான பயிற்சி. எதைப்பற்றியும் கவலையில்லாமல் எழுதிக் கொண்டேயிருக்கும் போது வாசகர்கள் தானாக உருவாகுவார்கள். 

மற்றபடி அந்த எழுத்துக்கள் க்ளாஸிக்கா அல்லது வெறும் பேஸிக்கா என்பதையெல்லாம் காலம்தான் முடிவு செய்யும்.

அப்புறம் இன்னொரு குற்றச்சாட்டும் இங்கே அடிக்கடி முன்வைக்கப்படுவதுண்டு. ‘கவிதைப் புத்தகம் விற்பனையாவதில்லை’. எப்படி விற்பனையாகும்? கவிதையைப் பற்றிய விவாதம் எங்கே நடக்கிறது? யாரைப் பார்த்தாலும் கவிதை எழுதுகிறார்கள். ஆனால் எது கவிதை என்கிற புரிதல் இங்கே இருக்கிறதா? கவிதை என்றாலே புரியாத வஸ்து என்ற பயத்தைத்தானே உருவாக்கி வைத்திருக்கிறார்கள்? இலக்கியக் கூட்டம் என்பதெல்லாம் புரிதலுக்கான கூட்டமில்லை. பெரும்பாலும் சொறிதலுக்கான கூட்டம்தான். திறந்த மனதோடு விவாதம் நடக்கும் கூட்டம்  என்பதெல்லாம் அரிதினும் அரிது. விமர்சனக் கட்டுரைகளும் அப்படித்தான் இருக்கின்றன. தன் கவிதையைத் தவிர அடுத்தவன் கவிதையை வாசிக்க மாட்டேன் என்கிற ஈகோதானே இங்கே முக்கால்வாசிக் கவிஞர்களிடம் இருக்கிறது? புதிதாக வெளிவரும் ஒரு கவிதைத் தொகுப்பை ஒவ்வொரு கவிஞனும் ஒரு பிரதி வாங்கினாலும் கூட பல்லாயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்துவிடுமே. அத்தனை ஆயிரம் கவிஞர்கள் குவிந்து கிடக்கிறார்கள். ம்ஹும். அதைச் செய்ய மாட்டார்கள். ஆனால் ஆளாளுக்கு புலம்புவார்கள்- ‘கவிதைத் தொகுதி விற்பதில்லை’ என்று.

இந்த விவகாரங்கள் எல்லாம் உயிர்மையில் வந்திருந்த ந.முருகேசபாண்டியனின் கட்டுரையில்தான் இருக்கிறது. கட்டுரையை முழுமையாகவெல்லாம் எதிர்க்கவில்லை. நிறையக் கருத்துகளுடன் ஒத்துப் போகிறேன். முருகேசபாண்டியன் மீது தனிப்பட்ட மரியாதையும் உண்டு. ஆனால் வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல பதிப்பாளரை இவ்வளவு தூரம் ஏற்றிவிட வேண்டியதில்லை எனத் தோன்றியது.  இதை இரண்டு மாதங்களுக்கு முன்பாகப் பேசினால் ‘புத்தகக் கண்காட்சி வருது இல்லையா? புத்தகத்தை விற்பதற்காக பரபரப்பாக பேசுகிறான்’ என்பார்கள். இப்பொழுது அப்படியில்லை. புத்தகத்தை விற்பதற்காக பேச வேண்டிய அவசியமில்லை. ஆகவே நெருக்கடியில்லாமல் பொறுமையாகவே பேசலாம்.

பெரும்பாலான பதிப்பகங்கள் ராயல்டி தருவதில்லை என்று கட்டுரையாசிரியர் எழுதியிருந்தார். அந்த ‘பெரும்பாலான’ பதிப்பகங்களின் பட்டியல் ஒன்றும் வெகு நீளமானது இல்லை. எனக்குத் தெரிந்து வெகுசில பதிப்பகங்கள்தான் ஏமாற்றுகிறார்கள். ராயல்டியெல்லாம் தராவிட்டால் பரவாயில்லை. குறைந்தபட்சம் எத்தனை பிரதிகள் விற்றிருக்கின்றன என்ற பட்டியலைக் கூடத் தராத பதிப்பகங்களின் பட்டியலைப் பற்றியும் கட்டுரையாசிரியர் யோசித்திருக்கலாம்.

இதழைப் புரட்டிக் கொண்டிருக்கும் போது லீனா மணிமேகலையின் படத்தைக் கட்டுரையில் போட்டிருந்தார்கள். லீனாவுக்கு இந்த இதழில் இடம் தர மாட்டார்களே என்ற சந்தேகத்துடன் தான் வாசிக்கவே ஆரம்பித்தேன். கட்டுரைக்குள் இருந்த லீனா பற்றிய விஷயம் இதுதான் -  லீனாவின் கவிதைத் தொகுப்பை இருநூறு பிரதிகள் மட்டும் அச்சடிக்கச் சொல்லி கட்டுரையாசிரியர் அறிவுறுத்தினாராம். ஆனால் கேட்காமல் பதிப்பாளர் ஐந்நூறு பிரதிகள் அச்சடித்தாராம். கடைசியில் நூறு கூட விற்கவில்லையாம். இந்தப் புகழாரத்திற்காக லீனாவின் படத்தை அச்சடித்திருக்கிறார்கள்.

இவ்வளவுதான் எழுத்துலக அரசியல்.