Feb 5, 2015

கொலைகளால் எதைச் சாதிக்கிறார்கள்?

ஐ.எஸ் தீவிரவாதிகள் ஜோர்டான் நாட்டின் பைலட்டை எரித்த காட்சியைப் பார்த்தேன். விகாரமாக இருக்கிறது. எல்லாவிதங்களிலும் மனிதத்தன்மையை இழந்துவிட்டோம். நீங்கள் இன்றைய கட்டுரையில் எழுதியிருந்ததைப் போல நெகிழ்ச்சி, அன்பு என்பதற்கெல்லாம் இடமே இல்லையா? 

                                                                                                                                             - ஸ்ரீதரன்.

முந்தைய கட்டுரையில் நெகிழ்ச்சி, அன்பு என்பதற்கான இடமே அழிந்துவிட்டதாகச் சொல்லவில்லை. நகரத்தில் அவற்றிற்கான இடம் அருகி வருவதான அர்த்தத்தில் எழுதியிருந்தேன். ஜோர்டான் பைலட் எரிக்கப்பட்ட சம்பவத்தை பார்த்த போது முதன் முறையாக பார்ப்பது போன்ற அதிர்ச்சி எதுவும் இல்லை. ஏற்கனவே பார்த்து பழகிவிட்டது போன்ற உணர்வுதான் இருந்தது. 

ஒரே குடும்பத்தில் இருக்கும் அத்தனை உறுப்பினர்களின் கழுத்தையும் இதே தீவிரவாதிகள் அறுப்பதை வீடியோவாக பார்த்திருக்கிறேன். கண் முன்னால் தனது தந்தையின் கழுத்து அறுபடும் போது பத்து வயது பையன் என்ன நினைத்திருப்பான்? அந்தப் பத்து வயது பிஞ்சுக்குழந்தையின் கழுத்தை கருணையேயில்லாத கத்தி தொடும் போது உள்ளங்காலில் ஏதோ ஊர்வதைப் போல இருந்தது.

இதே தீவிரவாதிகள் தங்களிடம் சிக்கியவர்களை வரிசையாக மண்டியிடச் செய்து ஒவ்வொருவரின் பின்னந்தலையிலும் சுடுவதையும் பார்த்திருக்கிறேன். முதல் தலையில் சுடப்படும் சப்தம் கேட்கும் போது கடைசியாக மண்டியிட்டிருந்தவனின் மனநிலை எப்படியிருந்திருக்கும்? ஏதோவொரு ஞாயிற்றுக்கிழமையின் காலையில் வந்திருந்த இணைப்பின் வழியாக அந்த வீடியோக்களைப் பார்த்து பைத்தியம் பிடித்தது போல ஆகியிருந்தது.

இவர்களையெல்லாம் எப்படி மனிதர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியும்? தனது சொந்த நாட்டில், தனது மதத்தைச் சார்ந்தவர்களையே ஈவு இரக்கமில்லாமல் தீர்த்துக் கட்டும் இவர்களை எந்தவிதத்தில் மனிதர்களின் பட்டியலில் சேர்த்துக் கொள்வது? மிருகங்கள் என்று சொல்வது கூட மிருகங்களை அவமானப்படுத்துவது போலத்தான். அவை தங்களது உணவுத் தேவைக்காகக் கொல்கின்றன அல்லது தங்களது உயிருக்கு பிரச்சினை வரும் போது கொல்கின்றன. இவர்களைப் போல கணக்கு வழக்கில்லாமல் தீர்த்துக் கட்டுவதில்லை. 

இந்தக் கொலைகளால் எதைச் சாதிக்கிறார்கள்?

ஜோர்டான் பைலட் சிரியாவில் இருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளின் அலுவலகத்தின் மீது விமானத்தாக்குதல் நடத்தியிருக்கிறார். அந்தச் சமயத்தில் விமான விபத்து நடந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக அதில் தப்பியவர் துரதிர்ஷ்டவசமாக இவர்களிடம் சிக்கிக் கொண்டார். வெறியெடுத்துத் திரியும் இவர்கள் பெட்ரோலை ஊற்றிக் கொளுத்திவிட்டார்கள். பொதுவாக இத்தகைய இஸ்லாம் தீவிரவாதத்திற்கு நம்மவர்கள் அதிதீவிரமாக எதிர்ப்புக் காட்டமாட்டார்கள். மேம்போக்காக கண்டிப்பதோடு நிறுத்திக் கொள்வார்கள். சார்லி ஹெப்டோ அலுவலகத்தின் மீதான கொடூரத் தாக்குதலை அப்படித்தானே தாண்டி வந்தோம்? இந்தச் சம்பவத்தையும் அங்கொருவரும் இங்கொருவருமாக பேசிக் கொண்டிருப்பார்கள். ஓரிரு நாட்களில் ‘என்னை அறிந்தால்’ படமோ அல்லது ‘சமிதாப்’ படமோ மறைத்துவிடும். பிறகு விட்டுவிடுவோம்.

இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. சற்றேனும் மனிதத்தன்மையுடையவர்கள் என்றால் கண்டனங்களுக்கு செவிசாய்ப்பார்கள். ஐஎஸ் தீவிரவாதிகளைப் பார்த்தால் அப்படியா தெரிகிறது? எவரது சப்தங்களையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் கொன்றபடியே முன்னேறும் வெறிபிடித்தவர்கள். கண்டனம் செய்து மட்டும் என்ன ஆகப் போகிறது? சலிப்பாக இருக்கிறது. 

இவர்களையெல்லாம் வைத்து அன்பு, மனிதம் என்பதெல்லாம் முற்றாக மரித்துப் போய்விட்டன என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டியதில்லை. 

இன்று காலையில் நாடகக் கலைஞர் தம்பிச்சோழனிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் புத்தகங்களையும் திரைப்படங்களையும் வேறொரு கோணத்தில் எடுத்துப் பேசுவார். அதற்காகவே அவரிடம் அவ்வப்போது பேசுவதுண்டு. அவர் சொன்ன விஷயம் மிக முக்கியமானதாகத் தெரிந்தது. நெகிழ்வான விஷயங்களை ஒரு படைப்பாளி தொட வேண்டியதில்லை. மிகக் குரூரமான உண்மைகளை எந்தப் பாசாங்குமில்லாமல் அப்பட்டமாகக் காட்டுவதும் ஒரு கலைதான் என்றார். அதாவது திரைப்படத்திலும், எழுத்திலும் இன்னபிற கலைகளிலும் அன்புக்கும் நெகிழ்வுக்கும் முற்றும் எதிரான கதாபாத்திரங்களை உருவாக்குவதுதான் அந்தக் கலை. அந்தக் கதாபாத்திரம் பொய் பேசும், கருணையே இல்லாமல் கொலை செய்யும், எதைப் பற்றியும் யோசிக்காமல் வன்புணரும். இப்படியே தனது ஒவ்வொரு செயலிலும் பார்வையாளனுக்கு திகில் ஊட்டி மனிதத்துக்கு முற்றும் எதிரான சித்திரத்தை உருவாக்கும். இது போன்ற அருவருப்பூட்டும் அல்லது பார்வையாளனை ஒவ்வாமையான மனநிலைக்கு கொண்டு செல்லும் கதாபாத்திரங்களின் வழியாக அன்பின் வலிமையை உணர்த்தும் கலை பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

இவ்வளவு குரூரத்தை பச்சையாக பார்க்கும் போது வன்முறை மீது பார்வையாளனுக்கு மிகப்பெரிய அலர்ஜி உண்டாகும் அல்லவா? ஐஎஸ் தீவிரவாதிகளை அப்படித்தான் புரிந்து கொள்கிறேன். 

மனிதத்தின் மறுமுனையில் நிற்கும் இவர்களைப் போன்ற பேய்களின் வழியாக மனிதம் என்பதன் அவசியத்தையும் அன்பின் தேவையையும் புரிந்து கொள்வதற்கான மனநிலையை நாம் பெற முடியும். மனித உயிருக்கு துளி மதிப்பு கூட அளிக்காத இவர்களைப் போன்ற பிசாசுகளின் வழியாக ஒரு உயிரின் உன்னதத்தை நம்மைப் போன்ற எளிய மனிதர்கள் உணர முடிகிறது. இவர்களை சாமானிய மனிதர்களால் எந்தவிதத்திலும் எதிர்க்க முடிவதில்லை. காறி உமிழ்ந்துவிட்டு அடுத்த வேலை சோற்றுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் சாலையோர மனிதனின் கண்களில் தெரியும் ஒளியை புரிந்து கொள்ளலாம். ஓங்கிய காலை நிலத்தில் வேகமாக வைத்து விட்டு எந்தவித ஆதரவுமில்லாத குழந்தையின் வலியை சற்று வாங்கிக் கொள்ளலாம். வேறு என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?