Feb 5, 2015

எதுக்கு ஊர் வம்பு?

பிரிட்டிஷ்காரர்கள் 1800களின் தொடக்கத்தில் திப்பு சுல்தானை போரில் வென்று கதையை முடிக்கும் வரை மைசூர் சமஸ்தானத்துக்கு ஸ்ரீரங்கப்பட்டணாதான் தலைநகரம். திப்புவுக்குப் பிறகு கர்நாடகா கிட்டத்தட்ட ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. அதற்கு முன்பாகவே பெங்களூர் நகரம் உருவாக்கப்பட்டிருந்தாலும் திப்புவின் வீழ்ச்சிக்குப் பிறகுதான் பிரிட்டிஷ்காரர்களின் பார்வை இந்த நகரத்தின் மீது விழுந்திருக்கிறது. அதுவரையிலும் இல்லாத சமாச்சாரங்கள் ஒவ்வொன்றாக பெங்களூருக்கு வந்து சேரவும் நகரம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடையத் தொடங்கியது. வியாபாரிகளும் கடை பரப்பத் தொடங்கியிருந்தார்கள். அந்தச் சமயத்தில் இந்தியாவுக்கு வைஸ்ராயாகவும் கவர்னர் ஜெனரலாகவும் மாயோ என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் மிகப்பெரிய திறமைசாலியாம். வெகு காலத்திற்கு இந்த தேசத்தை பிரிட்டிஷ் ஆள வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தவர். ஆனால் அதையெல்லாம் பார்க்க அவருக்குக் கொடுத்து வைத்திருக்கவில்லை. ஏதோவொரு போரில் தனது தந்தை இறந்ததற்கு பழி வாங்கும் விதமாக ஒருவன் மாயோவை முடித்துவிட்டான்.

மாயோவின் வாழ்க்கை இப்படி முடிந்து போனதில் பிரிட்டிஷ்காரர்களுக்கு சொல்லொண்ணா துன்பம். அவருக்கு நினைவஞ்சலியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தவர்கள் பெங்களூரில் ஒரு கட்டிடத்தைக் கட்டினார்கள். மகாத்மா காந்தி சாலை (MG Road) பக்கமாக வந்தவர்கள் மாயோ ஹால் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். இந்த மாயோ ஹால் பற்றி ஏகப்பட்ட கதைகளைச் சொல்கிறார்கள். பக்கத்திலேயே ஒரு கடைக்காரத்தாத்தா இருக்கிறார். அவர்தான் இந்த கதைகளை ஒவ்வொன்றாகச் சொல்கிறார். அந்த இடத்திலேயே வெகுகாலமாக கடை நடத்திக் கொண்டிருக்கிறார். வீடு வாடகைக்குத் தேடுபவர்களுக்கு காலியான வீடுகளை அறிவிக்கும் அலுவலகமாக- அப்பொழுதெல்லாம் மிகப்பெரிய பங்களாவுக்குக் கூட நூறு ரூபாய்தான் வாடகை- இருந்திருக்கிறது. அதன் பிறகு திருமணப் பதிவுகள் நடக்கும் அலுவலகம் என இந்தக் கட்டிடம் உருமாறியபடியே இருந்திருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் இந்தக் கட்டிடத்தைச் சுற்றிலும் எழுப்பப்பட்ட பிற கட்டிடங்கள், சாலைகளின் விஸ்தரிப்பு போன்றவையெல்லாம் மாயோ ஹாலின் முக்கியத்துவத்தை காலி செய்துவிட்டன.

மாயோ ஹாலின் கதையை இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம்-

அந்தத் தாத்தாவின் கடைக்கு முன்பாக நேற்று ஒரு பெரியவரை அடித்துவிட்டார்கள். சாயந்திரமாகத்தான் நடந்தது. பெரியவர் என்றால் மிக எளிமையான மனிதர். வறியவர் என்பதைப் பார்த்தவுடனே தெரிந்து கொள்ளலாம். கீழே விழுந்ததில் மூக்குக் கண்ணாடி நொறுங்கிப் போயிருந்தது. தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்தார். அருகிலேயே நான்கைந்து பையன்கள் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். பெருநகரத்தின் பொறுக்கிகள் எப்படி இருப்பார்கள் என்று ஒரு வினாடி கண்களை மூடி யோசித்துப் பாருங்கள். நமது பொதுப்புத்தியில் ஒரு உருவம் தோன்றும் அல்லவா? அப்படியேதான் இருந்தார்கள். ஆளாளுக்கு ஒரு விதமான சிகையலங்காரம், கைகளில் வண்ணவண்ண ரப்பர் பட்டைகள், உடலை ஒட்டிய டீ ஷர்ட், ஜீன்ஸ் பேண்ட், பொருத்தமேயில்லாத ஷூ. ஒரேயொரு விதிவிலக்கு அவர்களோடு ஒரு பெண்ணும் இருந்தாள். அவர்களுக்கு இருபது வயதுக்குள்தான் இருக்கும். மிஞ்சிப்போனால் ஒன்றிரண்டு கூடுதலாக இருக்கலாம்.

அந்த இடத்தை நான் அடையும் போது அடித்து முடித்திருந்தார்கள். முதலில் அவர்கள்தான் அடித்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அந்தப் பாதையில் நடந்து செல்பவர்கள் அந்தப் பெரியவரை சில வினாடிகள் நின்று பார்க்கிறார்கள். எதுவுமே பேசாமல் கடக்கிறார்கள். எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் அந்த இளைஞர்கள் மிக இயல்பாகப் பேசிக் கொண்டிருந்ததால் அவர்கள் அடித்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் நினைத்தேன். இது போன்ற சமயங்களில் மற்றவர்கள் எதைச் செய்கிறார்களோ அதையேதான் நானும் செய்வேன். அந்தக் கடைக்காரத் தாத்தாவிடம் செல்வதற்கும் கூட தயக்கமாக இருந்தது. சில நிமிடங்கள் ஏதோ அழைப்பு வந்திருப்பதான பாவனையில்  சற்று தள்ளி ஃபோனைக் காதில் வைத்தபடி அங்கேயே நின்றிருந்தேன். ஒருவேளை மீண்டும் யாராவது அந்தப் பெரியவரை அடிக்க முயற்சி செய்தால் கமுக்கமாக  100 ஐ அழைக்கலாம் என்று யோசித்திருந்தேன். அதுதான் என்னுடைய அதிகபட்ச ஹீரோயிஸமாக இருக்க முடியும். ஆனால் பெரியவர் யாரிடமும் உதவி கோரவில்லை. இரண்டு மூன்று நிமிடங்களில் எழுந்து சென்றுவிட்டார். 

இன்னுமொரு நானூறு மீட்டர் நடந்து சென்றால் ஸப்னா புத்தகக் கடை இருக்கிறது. அவ்வப்போது நான் அந்தக் கடைக்குள்ளாகச் சென்று வருவதுண்டு. புத்தகம் வாங்குகிறேனோ இல்லையோ ஒரு நடை. அவ்வளவுதான். இருபது நிமிடங்களில் திரும்பி வந்தேன். இவன் வேலைக்குப் போகிறானா இல்லை ஊர் சுற்றப் போகிறானா என்று இந்த இடத்தில் நினைத்துக் கொள்ள வேண்டாம்- மதிய உணவுக்கு அதிகபட்சம் பதினைந்து நிமிடங்கள்தான். மிச்சம் பிடிக்கும் நாற்பத்தைந்து நிமிடங்களை இப்படியான ஒரு நடைக்கு பயன்படுத்திக் கொள்கிறேன். 

புத்தகக் கடையிலிருந்து பதினைந்து நிமிடங்கள் கழித்துத் திரும்பி வந்த போது அந்தப் பையன்கள் குழாமைக் காணவில்லை. கடைக்காரரிடம் விசாரிக்கத் தொடங்கினேன். அந்தப் பெரியவர் வேறு யாருமில்லை- அந்தக் குழுவிலிருந்த பையன்களில் ஒருவனுடைய அப்பாதான். ‘அப்பனையே அடிக்கிறானுவ..நாதாரிங்க’ என்றார். அதிர்ச்சியாகத்தான் இருந்தது. 

அந்தப் பெண் இந்தப் பையன்களுடனேயே சுற்றிக் கொண்டிருக்கிறாளாம். பையன்களின் தோற்றத்துக்கும் அவளுக்கும் சம்பந்தமேயில்லாமல் இருந்தது. நடுத்தரக் குடும்பப் பெண் போல இருந்தாள். அந்தக் குழுவுக்கு போதைப்பழக்கமும் உண்டு போலிருக்கிறது. இதையெல்லாம் சொல்லித்தான் அந்தப் பெரியவர் தனது மகனை அடிக்கடி கண்டித்திருக்கிறார். பையன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான். இப்பொழுது சாலையில் யதேச்சையாகப் பார்த்தவுடன் மனது பொறுக்காமல் கேட்டுவிட்டார். ‘என்னை வீட்டை விட்டு அனுப்பிட்டு உனக்கு என்னடா கேள்வி?’ என்று அடித்துவிட்டு கேஷூவலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

நகரம் ஒரு குடும்பத்தை எப்படியெல்லாம் சிதைக்கிறது? மனிதத்தை எப்படியெல்லாம் சீரழிக்கிறது? அன்பு, நெகிழ்ச்சி, செண்டிமெண்ட் போன்ற நெஞ்சுருக்கி உணர்ச்சிகளுக்கெல்லாம் நகரத்தில் இடமே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால்  எவ்வளவுதான் பிரச்சினை என்றாலும் அப்பாவை நான்கைந்து பேர் சேர்ந்து பொது இடத்தில் அடிப்பதை ஜீரணிக்க முடியவில்லை. அடித்தாலும் தொலைகிறது. அந்த இடத்தைவிட்டாவது நகர்ந்து தொலைத்திருக்கலாம் அல்லவா? அதே இடத்தில் நின்று புகைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மனிதர் எவ்வளவுதான் வேதனைப்பட்டிருப்பார். தனது நொறுங்கிய கண்ணாடியைப் பொறுக்கிக் கொண்டு அந்த மனிதன் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் போது எதையெல்லாம் நினைத்திருப்பார்? பையன்கள்தான் எருமை மீது மழை பெய்வதைப் போலத் திரிகிறார்கள் சரி. அந்தப் பெண்ணுக்கு எப்படி இவ்வளவு நெஞ்சழுத்தம்? பெண் பூவுக்குச் சமமானவள் என்பதையெல்லாம் எவ்வளவோ தூரம் தாண்டி வந்துவிட்டோம். இல்லையா?

பையன்கள் சரியில்லை. அந்தப் பெண் சரியில்லை. வேடிக்கை பார்த்தவர்கள் சரியில்லை. எல்லாம் போகட்டும். நானாவது அந்தப் பெரியவரிடம் ஒரு வார்த்தை பேசியிருக்கலாம் அல்லவா? எந்தப் பயம் தடுத்தது? ஏன் விலகிச் செல்ல வேண்டும்? எவ்வளவோ கேள்விகள் எழுகின்றன. குறைந்தபட்சம் அவரது கையைப் பிடித்து எழுப்பி விட்டிருக்கலாம்.

ஆனால் ஒன்று- எல்லாவற்றையும் விட என் குடும்பம் முக்கியம். என் மகனுக்கு சேதாரமில்லாத அப்பன் அவசியம் என்று ஏதோவொருவிதத்தில் சமாளித்துவிட முடிகிறது. அப்படிச் சமாளிப்பதில் பெரிய சிரமமே இல்லை. என்னை நானே சமாளித்துவிட்டு ஆனந்தவிகடனை வாங்கிப் புரட்டியபடியே எம்.ஜி.ரோட்டைத் தாண்டி அலுவலகத்திற்குச் சென்றுவிட்டேன்.

உலகம் மிகக் கசப்பானதுதான்.  அதி கொடூரமானதுதான். ஆனால் அதை ஒரு உச்சுக் கொட்டலுடன் தாண்டி வந்துவிட்டு அறம், நேர்மை என்றெல்லாம் எழுதுவதற்கும் பேசுவதற்கும் என்ன யோக்கிதை இருக்கிறது? ஆனால் அப்படித்தானே செய்து கொண்டிருக்கிறோம்!