Feb 4, 2015

போலீஸிடமிருந்து ஒரு உறை

காவல்துறையின் சீல் வைத்த கவர் வீட்டுக்கு வந்திருக்கிறது. அம்மாவும் அப்பாவும் அலறிவிட்டார்கள். பிரிக்கவேயில்லை. ஃபோன் செய்து பதறினார்கள். ‘அதெல்லாம் ஒண்ணும் இருக்காது பிரிச்சு பாருங்க’ என்ற பிறகு ‘ஏதோ கலர் கலரா பேப்பர் மடிச்சு வெச்சிருக்காங்க’ என்றார். அப்படியென்ன அனுப்பியிருப்பார்கள் என்று குழப்பமாகத்தான் இருந்தது. வீட்டுக்கு வந்த பிறகு பிரித்துப் பார்த்தால்  சிற்றிதழ்- பாஷோ. ஆசிரியர் குழுவில் ஒருவர் காவல்துறையில் இருக்கிறார். ‘போலீஸ்காரன் கவிதை எழுதினா எப்படி இருக்கும்?’ என்று தப்புக் கணக்கு போட்டுவிடக் கூடாது. இவ்வளவு சிறப்பான வடிவமைப்புடன் கூடிய சிற்றிதழ் ஒன்றை இதுவரை பார்த்ததில்லை. 

பலருக்கும் ஒரிகாமி என்ற சொல் பரிச்சயமாகியிருக்கக் கூடும். காகிதங்களில் விதவிதமான உருவங்களை மடித்தும் வெட்டியும் செய்யும் கலை. காகிதக் கப்பல், காகித கேமிராக்கள் எல்லாம் ஒரிகாமி என்ற ஜப்பானியக் கலையின் வெவ்வேறு வடிவங்கள்தான். இந்தச் சிற்றிதழே ஒரிகாமி வடிவம்தான். குறுக்கும் நெடுக்குமாக வெட்டி மடித்திருக்கிறார்கள். சிற்றிதழின் பெயரிலும் வடிவத்திலுமேயே ஜப்பான் ‘டச்’ கொண்டு வந்தவர்கள் உள்ளடக்கத்திலும் வைக்காமல் இருப்பார்களா? ஹைக்கூக்கள்தான் புத்தகம் முழுவதும். ஆசிரியர் கவினுடன் முன்பு ஓரிரு முறை பேசியிருக்கிறேன். இப்படியான புத்தகம் ஒன்றைக் கொண்டு வரப் போவது குறித்துக் கோடு காட்டியிருக்கிறார். ஆனால் திடீரென்று வந்து வீட்டில் திகில் கிளப்பும் என்று எதிர்பார்க்கவில்லை.

இதழைப் பார்த்துவிட்டு ‘இதுக்கா பயந்தீங்க’ என்றேன். ‘யார் கண்டா? கண்ட பக்கம் போய் பேசிட்டு வர்ற...யாராச்சும் கம்ப்ளய்ண்ட் பண்ணிட்டாங்களோ என்னவோன்னு பயந்துட்டோம்’ - அம்மா இப்படித்தான் சொன்னார். முடிந்த வரையில் கழுவிய மீனில் நான் நழுவிய மீனாக வெளியுலகில் இருப்பது அவருக்குத் தெரியாது அல்லவா? 

ஜென் தன்மை குறித்து தொடர்ந்து பகிர்வதும் பேசுவதும்தான் பாஷோவின் நோக்கம் போலிருக்கிறது. முதல் பக்கத்தில் அப்படித்தான் சொல்கிறார்கள். ஜென் தத்துவத்தின் அடிப்படையே புரியாமல் ஆளாளுக்குச் சிதைத்துக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் இப்படியான ஒரு சிற்றிதழ் மிக அவசியம் என்று தோன்றுகிறது. மிகச் சிறந்த ஜென் கவிதைகளாகத் தேர்ந்தெடுத்து பிரசுரித்திருக்கிறார்கள். மொழிபெயர்ப்பு கவிதைகளும் உண்டு.

ஜென்னின் அடிப்படை எப்பொழுதுமே ஒருவிதமான புதிர் விளையாட்டுதான். புரிந்த மாதிரியும் இருக்கும். புரியாத மாதிரியும் இருக்கும். ‘இதுதான் ஜென்’ என்று முரட்டு வாக்கில் யாராவது பேசினால் குறுக்குக் கேள்வி கேட்டு சிக்க வைப்பது எளிது என்பதால் அசட்டுத்தனமாக ஜென் தத்துவத்தை வரையறையெதுவும் செய்ய மாட்டேன். ஆனால் ஜென் ஒரு அனுபவம்.

இதழில் இருக்கும் ஒரு கவிதையைப் பாருங்கள்-

சலனமற்ற குளத்தில் பிம்பங்கள்
அய்யனார் சிலைக்கு மேல்
ரம்ஜான் பிறை
                                  -மா.கண்ணன்

கவிதை என்ன சொல்ல வருகிறது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அதை விளக்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. கவிதையை வாசித்துவிட்டு கண்களை மூடினால் வாசித்தவனுக்கு ஒரு அனுபவத்தை உருவாக்குகிறது அல்லவா? இதுதான் ஜென் கவிதைகளை நோக்கி மனதை நகரச் செய்கிறது. ஒரு கவிதையை வாசித்துவிட்டு கண்களை மூடினால் ஒரு நிழற்படம் ஒன்று மனதுக்குள் வந்துவிடும்.

மனம் கொந்தளிக்கும் போதெல்லாம் ஜென் கவிதைகளைப் போன்ற பற்றுக் கோல் வேறெதுவும் இல்லை என்று தைரியமாகச் சொல்லலாம்.

இன்னொரு கவிதை-

ஒரு பூவோடு
ஆக்ரோஷமாய் சண்டையிடும்
நாய்க்குட்டி.

நாய் சண்டையிட்டால் பெரிய விஷயமில்லை. நாய்க்குட்டி சண்டையிடுகிறது. அதுவும் பூவுடன். எவ்வளவு அற்புதம்? சுமதி தங்கபாண்டியன் இந்தக் கவிதையை மொழி பெயர்த்திருக்கிறார்.

நதியின் பாடல்
புத்தகம் மூடி
செவி சாய்த்து அமர்கிறேன்

இயற்கையைவிடவுமா புத்தகம் வாழ்க்கையில் புதிதாக எதையோ தந்துவிடப் போகிறது? மலையாளக் கவிதையின் மொழியாக்கம் இது. 

இதழிலிருந்து இன்னும் சில ஹைக்கூக்கள்-

டொப்பென்று சிறுகல்
விழுகிறது
மொய்த்துத் திரும்பும் மீன் கூட்டம்
                                           - ச.சென்றாயபெருமாள்

மிகச் சாதாரணமாக ஒரு ஏமாற்றத்தைச் சொல்லிவிட்டுச் செல்கிறது இந்தக் கவிதை.

பறவைகளுக்கு நீர் வைத்த
பாத்திரத்தில் மிதக்கின்றன
எறும்புகளின் சடலங்கள்
                                             -இரா.பூபாலன்

மிகச் சிறிய இந்தச் சிற்றிதழிலிருந்து இப்படியே இன்னமும் நிறைய ஹைக்கூ கவிதைகளைச் சுட்டிக்காட்ட முடியும். 

இந்த மாலைப் பொழுதானது உண்மையிலேயே மனதுக்கு நிறைவாக இருக்கிறது. 

‘கவிதைக்கும் எனக்கும் காத தூரம்’ என்று தப்பித்துக் கொள்பவர்கள் கூட தைரியமாக ‘நல்ல’ ஹைக்கூக்களிலிருந்து கவிதை வாசிப்பதை ஆரம்பிக்கலாம். அதற்கான எல்லாவிதமான திறப்புகளையும் பாஷோ சிற்றிதழ் உருவாக்கிவிடும் என நம்பலாம்.

ஐந்தாயிரம் பிரதிகள் அச்சடித்திருக்கிறார்கள். சிற்றிதழுக்கு இது மிகப் பெரிய எண்ணிக்கை. எனக்கு மட்டுமே நான்கு பிரதிகள் அனுப்பியிருக்கிறார்கள். எப்படியும் பெங்களூர் நண்பர்கள் நான்கு பேருக்குக் கொடுத்துவிடுவேன் என்கிற நம்பிக்கை போலிருக்கிறது.

கவிதையைப் பொறுத்தவரையில் வாசகர்களாகத் தேடி வர வேண்டும் என நினைக்கிற கட்சி நான். ஆனால் இது போன்ற சிற்றிதழ்- உண்மையிலேயே சிறிய இதழ்தான்- பல்லாயிரக்கணக்கானவர்களை அடைவது நல்லதுதான். இதுதான் ஹைக்கு என்பதையும் இதுதான் ஜென் என்பதையும் மிகத் தெளிவாக உணர்த்துகிற வேலையை இவர்களால்தான் செய்ய முடியும்.

முகவரி:
பாஷோ ஹைக்கூ இதழ்
இடையன் இடைச்சி நூலகம்
கிருஷ்ணா நகர், நடுப்பட்டி கிராமம்
பாப்பம்பட்டி, கோயமுத்தூர்
9942050065/9842426598

tamilhaiku@gmail.com