Feb 3, 2015

சிடுக்கு

"என்னாச்சுங்க?"  தீபிகா இரண்டு முறை கேட்டாள். 

செல்போனின் அடுத்த முனையில் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அருகிலிருந்து பார்த்திருந்தால் அவளது கேள்வியிலிருந்த பதற்றத்தை உணர்ந்திருக்க முடியும். அருகில் யாரும் இல்லை. இணைப்பைத் துண்டித்த போது அவளது விரல்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. 

அது மிகச் சிறிய வீடுதான். சிறிய வரவேற்பறை, கட்டிலைத் தவிர வேறு எதற்கும் இடமில்லாத படுக்கையறையும் அதனுடன் சேர்த்த ஒரு சமையலறை. அவ்வளவுதான். எட்டு வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் குழந்தை வந்தனா மட்டும் வரவேற்பறையில் விளையாடிக் கொண்டிருந்தாள். தீபிகாவுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை. சித்தார்த்துடனான திருமணத்திற்கு பிறகு தீபிகாவையும் இந்த நகரம் இழுத்துக் கொண்டது. இன்றிலிருந்து கணக்குப் போட்டால் நான்கு வருடங்களைப் பூர்த்தி செய்ய இன்னமும் இரண்டு மாதங்கள் பாக்கியிருக்கின்றன. அவன் சாப்ட்வேர் மாப்பிள்ளை. சினிமாவில் காட்டப்படுகிற சாப்ட்வேர்காரன் இல்லை. வாங்குகிற சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை வாடகையாகக் கொடுத்துவிட்டு மிச்சமிருப்பதை குழந்தைக்கும், லூயி பிலிப் சட்டைக்கும், வுட்லேண்ட்ஸ் ஷூவுக்குமாக செலவழித்துக் கொண்டு வெளியில் ராஜாவும் உள்ளே ஓட்டாண்டியாகவும் திரியும் வகையறா. இருந்தாலும் சந்தோஷமாகத்தான் இருந்தார்கள். மாதத்தில் இரண்டு சினிமா உண்டு. தமிழ் படங்கள்தான். எப்பவாவது இலியானாவுக்காகவோ அல்லது மகேஷ்பாபுவுக்காகவோ தெலுங்குப் படத்திற்குச் செல்வார்கள். தீபிகாவுக்கு மகேஷ்பாபுவைப் பிடிக்கும். மாதத்தில் ஒரு ரெஸ்டாரண்ட் செலவு உண்டு. அது போக எப்பவாவது சிமோகாவோ கூர்க்கோ சென்றுவருவார்கள். கடைசியாகச் சென்றிருந்தபோது கூர்க்கில் கடும் மழை. வந்தனாவுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்பதால் கடந்த ஆறேழு மாதங்களாக வெளியூருக்குச் செல்லவில்லை என்பதைத் தவிர வேறு எந்தக் குறையும் இல்லை.

அவ்வப்போது சிறு சச்சரவுகளும் உண்டு. யார் வீட்டில்தான் இல்லை? வீட்டுக்கு வீடு வாசப்படி. அதுவும் அலுவலகத்தில் இருந்து சித்தார்த் வரும் போது வீட்டில் விளக்கு எரியவில்லை என்றாலோ தீபிகா தாலியைக் கழட்டி வைத்திருந்தாலோ டென்ஷன் ஆகிவிடுவான். இதெல்லாம் ஒரு பிரச்சினையா? பிரச்சினையில்லைதான். அவனுக்கும் அது தெரியும். ஆனால் பசியோடு இருப்பான் அல்லவா? கண்ணை மறைத்துவிடும். பொங்கல் வைத்துவிடுவான். அந்தச் சமயங்களில் தீபிகாவும் அமைதியாக இருப்பதில்லை. எதையாவது பேசிவிடுகிறாள். போன சண்டையின் போது ‘என் கழுத்து...எனக்கில்லாத உரிமையா? நான் தாலி போட்டிருந்தா என்ன போடாட்டி என்ன’ என்று கத்திவிட்டாள். உச்சந்தலையில் நான்கு முடி நட்டுக் கொள்ள சித்துவும் எகிறி தீர்த்துவிட்டான். இப்படி ஆளாளுக்கு பெட்ரோலை ஊற்றிக் கொண்டிருக்க வந்தனா பெரும்பாலும் எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் விளையாடிக் கொண்டிருப்பாள். இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு புரியாத சமாச்சாரம் என்று ஏதாவது இருக்கிறதா என்ன? அவளுக்கு அரைகுறையாகப் புரிந்து அழத் துவங்கும்போது அடங்கிக் கொள்வார்கள். 

தீபிகாவின் அப்பாவுக்கு கஷ்டமான ஜீவனம்தான். சேலம் பேருந்து நிலையத்தில் இரவில் பத்து மணிக்கு மேலாக ஆம்னி பேருந்துகளுக்கான டிக்கெட் விற்பார். பயணிகள் எங்கேயோ பார்த்தபடி நின்று கொண்டிருக்கும் போது ‘புதுக்கோட்டையா சார்? ஏசி ஸ்லீப்பர் இருக்கு’ என்றோ ‘கோயமுத்தூர் நான்-ஸ்டாப் ஏசி சார்’ என்றோ சொல்லி ஆளைப் பிடித்துவிடுவார். ஒரு டிக்கெட்டுக்கு இருபத்தைந்து ரூபாய் கிடைத்தால் பெரிய விஷயம். ஒவ்வொரு நாளும் அதிகாலை மூன்று அல்லது நான்கு மணி வரைக்கும் அலைய வேண்டும். அந்த ஜீவனத்திலும் தீபிகாவை பொறியியல் படிக்க வைத்திருந்தார். இப்பொழுது பொறியியல் படிப்பது பெரிய விஷயம் இல்லைதான். ப்ளஸ் டூ முடித்தவர்கள் எல்லாம் நான் இஞ்சினியர் நீ சுக்குனியர் அவன் மிளகுனியர் என்று திரிகிறார்கள். ஆனால் செலவு செய்ய வேண்டும். லட்சக்கணக்கில் கட்ட வேண்டும். தீபிகாவின் அப்பா கடன் வாங்கிக் கட்டினார். வங்கிக் கடன். 

தனது தொழிலின் காரணமாகவோ என்னவோ முகத்தை வைத்தே ஆளை எடைப் போட்டுவிடுவார். அவர் கணிப்பது அவ்வளவு துல்லியமாக இருக்கும். தீபிகாவை பெண் பார்த்துவிட்டுச் சென்ற பிறகு சித்தார்த்தைப் பற்றி அவர் சொன்னது தீபிகாவுக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது. ‘பையனைப் பார்த்தால் நல்ல மாதிரியாத்தான் தெரியுதும்மா...கொஞ்சம் கோபம் வரும் போல’ என்றார். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். அன்றைக்கு கோபம் என்பது அவளுக்கு பெரிய விஷயமாகவே தெரியவில்லை. சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்தாள். நம்பினாள் என்று என்று சொன்னால் இன்னமும் பொருத்தமாக இருக்கும். அதன்பிறகு ஒவ்வொரு முறையும் சண்டை வரும் போது அப்பா சொன்னதுதான் ஞாபகத்துக்கு வரும். கோபம் என்றால் சாதாரணக் கோபம் இல்லை. கண்டபடி திட்டிவிடுவான். தீபிகாவை நோக்கி கை நீட்டியதில்லை. ஆனால் தனது கையை கிழித்திருக்கிறான். ஓங்கி நிலத்தில் குத்தி வெகுநாட்களுக்கு சுண்டுவிரலில் கட்டோடு சுற்றினான். பல கெட்டவார்த்தைகளும் வந்துவிழும். ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்தவள் போகப் போக பழகிக் கொண்டாள். ‘திட்டுங்க...நல்லா திட்டுங்க’ என்று அவனை வெறுப்பேற்றி பழகிக் கொண்டாள்.

செல்போன் அழைப்பு வந்த அடுத்த நிமிடத்தில் ராதிகாவின் வீட்டுக்குத்தான் ஓடினாள்.  வீட்டில் ராதிகா மட்டும்தான் இருந்தாள். அவர்கள் அதே அபார்ட்மெண்ட்டின் இரண்டாவது தளத்தில் இருக்கிறார்கள். ராதிகாவும் அவளது கணவனும் வேலைக்குச் செல்கிறார்கள். இருவருமே ஐடி துறை. இன்னமும் ராதிகாவின் கணவன் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை. எப்பவாவது குழந்தையைப் பற்றிக் கேட்டால் ‘இன்னும் டைம் இருக்கு..அவர் எப்போ காண்டம் வாங்கிட்டு வர மறந்துட்டு வர்றாரோ அப்போ பார்த்துக்கலாம்’ என்று கண்ணடிப்பாள். கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு தீபிகா இப்படி வெளிப்படையாக யாருடனும் பேசுவதில்லை. அதற்கான வாய்ப்பும் கிடைத்ததில்லை. ராதிகாவுடன் மட்டும் அவ்வப்பொழுது பேசிக் கொள்கிறாள்.

சித்தார்த்தின் ஃபோனிலிருந்துதான் யாரோ தீபிகாவை அழைத்திருந்தார்கள். அவனுடைய செல்போனில் கடைசி அழைப்பு தீபிகாவுடையதுதான். அதனால் ஃபோனை எடுத்தவர்கள் இவளைத்தான் அழைத்திருந்தார்கள். இவளது பெயரை குட்டி என்று சேமித்து வைத்திருந்தான். 

‘இந்த ஃபோன் வைத்திருப்பவரை உங்களுக்குத் தெரியுமா?’ என்று கன்னடத்தில் கேட்டது அந்த ஆண் குரல்.

‘கொத்து’ என்றாள். அவளுக்கு கன்னடத்தில் தெரிந்த மூன்றே முக்கால் வார்த்தைகளில் அதுவும் ஒன்று.

அவர் கன்னடத்தில் சொல்வதை புரிந்து கொள்வதில் பெரிய சிரமம் இருக்கவில்லை. எலெக்ட்ரானிக் சிட்டி பாலத்தின் கீழாக விபத்து நடந்திருக்கிறது. தலையில் அடிபட்டிருக்கிறது. விழுந்த வேகத்தில் ஞாபகம் தவறிவிட்டது. இப்பொழுது 108ல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார்கள். இந்தத் தகவலைத்தான் மறுமுனையில் இருந்தவர் சொன்னார். தீபிகாவுக்கு அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை. பதறியடித்து ஓடி வந்தவள் இம்மிபிசகாமல் ராதிகாவிடம் ஒப்பித்தாள். ராதிகாவுக்கு வண்டி ஓட்டத் தெரியும். அலுவலகத்துக்கு தனது இரு சக்கர வாகனத்தில்தான் செல்வாள். குழந்தையை என்ன செய்வது? நகரங்களில் இது பெரிய பிரச்சினை. ஆத்திர அவசரத்துக்குக் கூட யாரிடமும் விட்டுச் செல்ல முடிவதில்லை. எடுத்து மடியில் அமர வைத்துக் கொண்டாள். ராதிகா அருகில் இருந்தது எவ்வளவோ பரவாயில்லை. அவளும் இல்லையென்றால் என்ன செய்திருப்பாள்? வீட்டை பூட்டியதாகக் கூட ஞாபகம் இல்லை. அது தொலையட்டும். சித்தார்த்தைவிடவுமா வீடும் அந்தச் சாமான்களும் முக்கியம்?

தீபிகாவுக்கு என்னென்னவோ மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது. அத்தனையும் துண்டிக்கப்பட்ட காட்சிகளாகத் தெரிந்தன. ராதிகாவும் பதறியிருந்தாள். இன்று காலையில் வண்டியை எடுக்கும் போது கூட மெலிதாக புன்னகைத்துச் சென்றிருந்தான். அந்த அபார்ட்மெண்டிலேயே இவர்கள் மட்டும்தான் தமிழர்கள். அந்த நேசம்தான். 

கூட்லு கேட் சிக்னலில் வண்டிகளின் நெரிசலில் சிக்கிக் கொண்டார்கள். சித்தார்த்தின் எண்ணுக்கு அழைத்துப் பார்த்தாள். எந்த மருத்துவமனைக்குச் செல்கிறார்கள் என்று தீபிகாவிடம் ராதிகா கேட்ட போதுதான் அந்த விவரத்தை கேட்காமல் விட்டிருந்தது புரிந்தது. சித்தார்த்தின் எண்ணைத் திரும்ப அழைத்தபோது யாரும் எடுக்கவேயில்லை. நேராக ப்ளாஸம் மருத்துவமனைக்குச் செல்லலாம் என்று ராதிகாவே சொன்னாள். எலெக்ட்ரானிக் சிட்டியில் நிகழும் விபத்துகளில் சிக்குபவர்கள் பெரும்பாலானோரை அங்குதான் எடுத்து வருவார்கள். ராதிகா அலுவலகம் முடித்து வரும் போது கவனித்திருக்கிறாள்- அந்த மருத்துவமனை இருக்கும் சாலையிலேயே ஆம்புலன்ஸை நிறுத்தி அடிபட்டவர்களை உள்ளே எடுத்துச் செல்வார்கள். அந்த சில நிமிடங்களில் ட்ராபிக் ஸ்தம்பிக்கும்.

இன்னமும் சித்தார்த்தின் அம்மாவுக்கும் தீபிகாவின் அப்பாவுக்கும் தகவல் சொல்லவில்லை. என்ன பிரச்சினையென்றே தெரியாமல் அவர்களையும் குழப்ப வேண்டியதில்லை என நினைத்திருந்தாள். ஏதாவது பெரிய பிரச்சினை என்றால் செலவுக்கு என்ன செய்வது என்பதுதான் பெரிய யோசனையாக இருந்தது. தாலியை விற்றுவிடலாம். அவளிடமிருக்கும் அதிகபட்ச ஆபரணம் அதுதான். வளையல்களை அடமானம் வைத்துத்தான் எல்.ஈ.டி டிவி வாங்கியிருந்தார்கள். அவனது நிறுவனத்தில் Mediclaim மூன்று லட்ச ரூபாய் வரைக்கும் கிடைக்கும். மனது கண்டதையும் யோசித்துக் கொண்டிருந்தது. திடீரென்று ‘ச்சே பணமா முக்கியம்?’ என்று அவளை அவளே உள்ளுக்குள் திட்டிக் கொண்டாள். முக்கியமில்லைதான். ஆனால் அதுதானே நிதர்சனம். அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பணத்தை கட்டச் சொன்னால் வேறு என்ன வழியிருக்கிறது? ஒன்றுமில்லை. சித்தார்த்துக்கும் அப்பா இல்லை. இவளது அப்பாவையும் கேட்க முடியாது. அப்படியே கேட்டாலும் அந்த மனுஷன் என்னதான் செய்வார்? பாவம். 

ஜி.நாகராஜனின் கதை திடீரென்று ஞாபகத்துக்கு வந்தது. அதில் கணவன் நோய்வாய்ப்பட்டுக் கிடப்பான். கிட்டத்தட்ட மரணப்படுக்கை. அவன் ஏதோ தின்பதற்கு வேண்டுமென ஆசையாகக் கேட்பான். மனைவியின் கையில் காசு இருக்காது. எவனோ ஒருவனுடன் ஒதுங்கி காசு வாங்கிக் கொண்டு வருவாள். இதெல்லாம் ஏன் ஞாபகத்திற்கு வருகிறதென்று தெரியவில்லை. சிந்தனையை மாற்ற வேண்டும் என்று நினைத்தாள். வண்டிகளின் நெருக்கத்தில் புழுக்கம் தாங்காமல் வந்தனா அழுது கொண்டிருந்தாள். வந்தனா இன்னமும் சாப்பிட்டிருக்கவில்லை. வழக்கமாக இந்நேரம் தீபிகா ஏதாவது ஊட்டி விட்டிருப்பாள். களோபரத்தில் அதையெல்லாம் செய்ய முடியவில்லை. ராதிகா வாகன நெரிசலில் வண்டியை ஓட்ட முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள். தீபிகாவுக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது.

இன்றைய சண்டையும் வழக்கம் போலத்தான் ஆரம்பித்தது. பழைய சண்டை ஒன்றை சித்து ஞாபகப்படுத்தினான். கடைக்குச் செல்ல வேண்டும் என்பதான சண்டை அது. ராதிகாவுடன் கடைக்குச் செல்ல வேண்டும் என்று தீபிகா சொல்லிக் கொண்டிருந்தாள். அது சித்தார்த்துக்கு பிடிக்கவில்லை. ‘எனக்கு இந்தச் சுதந்திரம் கூட இல்லையா?’ என்று இவள் தொடங்க ‘எப்படியோ தொலைஞ்சு போ’ என்று அவன் எரிந்து விழுந்திருந்தான். இந்தச் சண்டையை அவன் ஞாபகப்படுத்திய போது அலுவலகத்தின் பார்க்கிங்கில் வண்டியை எடுத்துக் கொண்டிருந்தான். அவன் எப்பொழுதுமே இப்படித்தான். வண்டி ஓட்டும் போதுதான் செல்போனில் பேசுவான். இன்று கொஞ்ச நேரத்திலேயே ரத்த அழுத்தம் எகிறிவிட்டது. அலுவலகத்தின் அத்தனை பிரச்சினைகளையும் இறக்கி வைக்க ஒரு ஜீவன் தேவை. தீபிகாவிடம் இறக்கி வைக்கிறான். பசி வேறு சேர்ந்து கொண்டது. என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசிக் கொண்டிருந்தான். தீபிகாவும் பதிலுக்கு பேச அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை. ‘இப்பவே ஏதாச்சும் லாரிச்சக்கரத்தில் விழுகிறேன்’ என்று இணைப்பைத் துண்டித்தான். வழக்கமாக இப்படிச் சொல்வான். ஆனால் பிரச்சினை எதுவும் இருக்காது. அவன் வந்து சேர்வதற்குள் ஏதாவது சட்னி வேலையை முடித்துவிட வேண்டும். பசியோடு வந்து மீண்டும் சண்டையைத் தொடங்க அனுமதிக்கக் கூடாது என்று தக்காளியை அரிந்து கொண்டிருக்கும் போதுதான் செல்போன் சிணுங்கியது. அவனாகத்தான் இருக்கும் என்றுதான் அருகில் சென்றாள். ‘ஸாரிடா குட்டி’ என்று சமாதானம் சொல்வானாக இருக்கும் என்று நினைத்தாள். ஆனால் ‘இவரை உங்களுக்குத் தெரியுமா?’ என்று கன்னடத்தில் அந்தக் குரல் கேட்டது.

இனி அவனால் வேலைக்குச் செல்ல முடியவில்லை என்றால் என்ன செய்வது என்ற கேள்விக்கு பதில் தேடத் துவங்கினாள். ஆனால் அது ஒன்றும் அவ்வளவு எளிமையான கேள்வியாக இல்லை. இந்த நகரத்தில் என்ன செய்ய முடியும்? வாடகையும் செலவுகளும் ஆளை அரித்துவிடும். தான் ஆரம்பத்திலேயே ஏதாவதொரு வேலையில் சேர்ந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. திருமணமான சில மாதங்களிலேயே வந்தனா கருவாகிவிட்டாள். பிறகு குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வேலைக்குச் செல்லவில்லை. சித்தார்த்தின் அம்மாவை பெங்களூருக்கு அழைத்தார்கள். தனது ஊரை விட்டுவிட்டு வர முடியாது என்று சொல்லிவிட்டார். அவரவருக்கு அவரவர் விருப்பங்கள். இப்பொழுது என்ன செய்வது? மாமியார் மீது  கோபம் வந்தது. தன்னை நட்டாற்றில் விட்டுவிட்டார்கள் என்று உதடுகளைக் கடித்துக் கொண்ட போது ஃபோனில் சித்தார்த்தின் பெயர் சிணுங்கியது. மீண்டும் கன்னடக் குரல்தான். வாகனங்களின் சப்தத்தில் தெளிவாகப் புரியவில்லை. திரும்பத் திரும்ப கத்தினாள். ப்ளாஸம் மருத்துவமனை என்று சொன்னான். அரைகுறையாகக் காதில் விழுந்தது. ‘என்னாச்சுங்க...ஏனாயித்து?’ என்று ஏதேதோ கேட்டாள். ‘சொல்ப சீரியஸ்...நுவ்வு பன்னி’ என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டான்.

‘சீரியஸ்ன்னு சொல்லுறாங்க’ என்று ராதிகாவின் ஹெல்மெட் வழியாக அவளது காதுக்குள் சொன்ன போது ராதிகாவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ‘பயப்படாத’ என்று மட்டும் திரும்பத் திரும்பச் சொன்னாள். எப்படி பயப்படாமல் இருப்பது? எந்த நிறுவனத்தில் பி.ஈ முடித்தவளுக்கு வேலையை எடுத்துக் கொண்டு நிற்கிறார்கள்? அப்பாவும் திறனில்லை. மாமனாரும் உயிரோடில்லை. மாமியார் ஒண்டிக்கட்டைத்தான். சொந்தமாக ஒரு வீடு கூட இந்த நகரத்தில் இல்லை. குழந்தையை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் இந்த பயமெல்லாம் வராமல் இருக்குமா? இப்படியான பெண்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்தான் என்றாலும் தனக்கு மட்டும் ஏன் ஒரு பிடிப்புமே இல்லை என்று யோசிக்கத்தானே தோன்றும்?

மங்கமன்பாளையா வந்துவிட்டார்கள். அந்தச் சாலையைத் தாண்டிவிட்டால் மருத்துவமனை வந்துவிடும். எவ்வளவுதான் சண்டை வந்தாலும் இப்படியா தற்கொலைக்கு முயற்சிப்பான்? குழந்தைக்காகவாவது யோசித்திருக்கலாம். இப்படியொரு கோழையுடன் வாழ்ந்திருக்கிறோமே என்று கோபம் வந்தது. ஆனால் தன்னிடமும் தவறு இருக்கிறதல்லவா? கொஞ்சம் பற்களைக் கடித்துக் கொண்டு பொறுத்திருக்கலாம் அல்லது அவன் துண்டித்தவுடனே திரும்ப அழைத்திருக்கலாம். பைத்தியகாரி. நான் மட்டுமா? அவனும்தான். பைத்தியகாரன்.  ‘இது வாழ்நாள் தண்டனையாக இருக்கக் கூடாது கடவுளே’. சில்க்கூர் பாலாஜியை மனதில் நினைத்துக் கொண்டாள். எதுவும் ஆகாதிருந்தால் சில்க்கூர் வந்து நூற்றியெட்டு சுற்று சுற்றுவதாக வேண்டிக் கொண்டாள். வந்தனாவின் அழுகை அதிகமாகிக் கொண்டிருந்தது. அந்தக் குழந்தையைப் பார்க்கும் போது இன்னமும் பதில் தெரியாத ஆயிரம் கேள்விகள் தனக்குள் இருப்பதாக தீபிகாவுக்குத் தோன்றியது. 

எதிரில் பைக்கில் வருபவர்களில் யாராவது சித்தார்த்தாக இருந்துவிடக் கூடாதா என்று பார்த்துக் கொண்டிருந்தாள். கோவிலில் செருப்பைத் தொலைத்துவிட்டு ஒவ்வொரு காலாக பார்த்தது சட்டென்று மனதில் வந்து போனது. அவள் எதிர்பார்ப்பு பொய்த்துக் கொண்டேயிருந்தது. எந்த முகமும் சித்துவினுடையதாக இல்லை. மருத்துவமனையை நெருங்கும் போது பயம் அதிகமாகிக் கொண்டிருந்தது. அவ்வப்போது தனது செல்போனைப் பார்த்துக் கொண்டாள். இன்னும் ஐந்து நிமிடங்களில் மருத்துவமனையை அடைந்துவிடக் கூடும். அப்பொழுது ராதிகாவின் கணவர் அழைத்திருந்தார். அவருக்கு அலுவலகத்திலிருந்து மருத்துவமனை பக்கம்தான். வீட்டிலிருந்து வண்டியை எடுக்கும் போதே அவரை மருத்துவமனைக்கு வந்துவிடச் சொல்லி ராதிகா சொல்லியிருந்தாள். மருத்துவமனையிலிருந்துதான் பேசினார். இன்னமும் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்திருக்கவில்லை என்றார். 

அடுத்த சில நிமிடங்களில் ராதிகாவும் தீபிகாவும் மருத்துவமனையை அடைந்துவிட்டார்கள். அப்பொழுதும் ஆம்புலன்ஸ் வந்திருக்கவில்லை. குழப்பமாகத்தான் இருந்தது என்றாலும் இந்த நகரத்தின் வாகன நெரிசல் அப்படி. ஆம்புலன்ஸ் என்றாலும் கூட வழி கொடுக்காத ஜென்மங்களை சர்வசாதாரணமாக பார்க்க முடியும். சித்தார்த்தின் எண்ணுக்கு மீண்டும் அழைத்துப் பார்த்தார்கள். அணைக்கப்பட்டிருந்தது. குழப்பம் அதிகரித்தது. மருத்துவமனையில் விசாரித்தார்கள். வரவேற்பறையில் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தாள். அவள் எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் பதில் சொன்னாள். ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பெரும்பாலான சமயங்களில் இந்த மருத்துவமனைக்கு வருவார்கள் என்றும் சில சமயங்களில் வேறு மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கும் வாய்ப்பிருக்கிறது என்றாள். அவளே 108 ஐ அழைத்து விசாரித்தாள்.  அவளது முகம் தெளிவற்றதாக மாறிக் கொண்டிருந்தது. எலெக்ட்ரானிக் சிட்டி பாலத்தின் கீழ் எந்த விபத்தும் நடக்கவில்லை என்பது போலச் சொல்கிறார்களே என்றாள். இதற்காக சந்தோஷப்படுவதா அல்லது வருத்தப்படுவதா என்று தீபிகா குழம்பினாள். அப்படியானால் சித்தார்த்தின் ஃபோனிலிருந்து எப்படி அழைப்பு வந்தது? உண்மையிலேயே விபத்து நடந்ததா அல்லது விளையாட்டுக்குச் செய்திருக்கிறார்களா? ஒருவேளை சித்து தன் செல்போனைத் தொலைத்திருப்பானோ? அப்படியே இருந்தாலும் ஃபோனை எடுத்தவர்கள் இதில் எல்லாம் விளையாட்டு காட்டுவார்களா என்ன? 

விளையாட்டாகவே இருக்கட்டும் என தீபிகாவின் மனம் விரும்பியது. ராதிகாவின் கணவருக்கும் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. சித்தார்த் வந்துவிட்டானா என்று வீட்டில் சென்று பார்த்தால் குழப்பம் தீர்ந்துவிடும் என நினைத்தார். ‘நீங்க போய் பார்த்துட்டு ஃபோன் செய்யுங்க...நாங்க இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருந்து பார்க்கிறோம்’ என்று ராதிகா சொன்னாள். 

‘அவரை இங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு நாம் போகலாமா?’ என்று தீபிகா கேட்டாள். குழந்தை ஏற்கனவே கசங்கியிருக்கிறாள். அவளை மேலும் அலைகழிப்பதாக இருக்கும் என்றும் தோன்றியது. 

ராதிகாவின் கணவர் கிளம்பினார். குழந்தைக்கு ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை கொடுத்துவிட்டுச் சென்றிருந்தார். தீபிகாவுக்கு மனதின் ஓரத்தில் நம்பிக்கை துளிர்த்திருந்தது. எதுவும் ஆகியிருக்காது என்று ராதிகாவும் நம்பத் தொடங்கியிருந்தாள். ராதிகாவின் கணவர் வீடு சேர்வதற்கு இன்னமும் அரை மணி நேரம் ஆகிவிடும். ஆனால் இந்த அரை மணி நேரத்தை கடத்துவது பெரிய சோதனையாக இருக்கும் என்று நினைத்தார்கள். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளாமல் நின்றிருந்தார்கள். குழந்தை அங்கிருந்த மீன் தொட்டியின் மீன்களை அழைத்துக் கொண்டிருந்தது.  அப்பொழுது ரிஷப்ஷனில் வேறொரு மனிதர் வந்திருந்தார். அவருக்கு நைட் ஷிஃப்ட். மருத்துவமனையில் நடமாட்டம் குறைவாக இருந்தது. இவர்களிடம் என்ன வேண்டுமென்று விசாரித்தார். ராதிகாதான் பிரச்சினையை விவரித்தாள். ‘அப்படியா...ஒருவேளை டெத்தா இருந்தா நேரா ஜி.ஹெச்சுக்கு எடுத்துட்டு போயிருப்பாங்களே’ என்று எந்த நாசூக்கும் இல்லாமல் சொன்னார். ‘ஜி.ஹெச்சில் கேட்கட்டுமா?’ என்று ஃபோனில் எண்களை பிசையத் தொடங்கினார். தீபிகாவும் ராதிகாவும் இந்த அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லை. தீபிகாவுக்கு மூச்சடைத்தது. தலையைச் சுற்றிக் கொண்டு வருவது போலிருந்தது. கண்களில் இருள் பாய்ந்து கால்கள் தடுமாறின. யாரோ தரையை இழுப்பது போல இருந்தது. கீழே விழும் போது வந்தனாவை மட்டும் ராதிகா பிடித்துக் கொண்டாள். ராதிகா உளறத் தொடங்கினாள். நர்ஸ் ஒருத்தி வேகமாக ஓடி வந்தாள். முகம் தெரியாத ஒருவர் தனது பையில் இருந்த தண்ணீரை எடுத்து தீபிகாவின் முகத்தில் தெளித்தார். தீபிகாவைச் சுற்றிலும் பேச்சுச் சத்தம் கேட்கத் துவங்கியது. அப்பொழுது தொட்டியை நெருங்கியிருந்த வந்தனா தனக்கு வண்ண மீன்கள் வேண்டும் என்று அழத் தொடங்கியிருந்தாள். மீன்களை அழைத்தபடியே அழுது கொண்டிருந்தாள்.யாருமே செவிமடுக்காத அந்த அழுகை இந்நகரத்தின் வாகன இரைச்சலில் கரைந்து கொண்டிருந்தது.