Feb 3, 2015

இதெல்லாம் ஒரு பயக்கமா?

அலுவலகத்தில் ஒருவர் இருக்கிறார். பேசினார் என்றால் நம் காதைத் தாண்டி அரை இஞ்ச் கூட சப்தம் நகராது. அவ்வளவு மெதுவாகப் பேசுவார். எனக்கு ஓட்டைத் தொண்டை இல்லையென்றாலும் இவ்வளவு அமைதியாகவெல்லாம் பேச முடியாது. இந்த நிறுவனத்தில் சேர்ந்த ஆரம்ப நாட்களில் அவரைப் போலவே பேச முயன்று பார்த்ததில் எனக்கே அசிங்கமாகத் தெரிந்து கைவிட்டுவிட்டேன். இரண்டு மூன்று பேர் ஒரு மார்க்கமாக வேறு பார்த்தார்கள். இது சரிப்பட்டு வராது என்று தெரிந்துவிட்டது. நமக்கு எது இருக்கிறதோ அது போதும்.

அடுத்தவர்களைப் பார்த்து எல்லாவற்றையும் செய்துவிட முடிவதில்லை. ஆனால் இப்படி யாரையாவது பார்த்துச் செய்யும் முயற்சிகளும் அல்லது யாராவது சொல்லித் தரும் ரகசியங்களும் காலங்காலமாக நம்மோடு ஒட்டிக் கொள்கின்றன.  என்னவெல்லாம் சொல்லித் தந்தார்கள் என்று முழுமையாகச் சொல்ல முடியாது. சென்சார் செய்துவிட்டு சிலவற்றை மட்டும் சொல்லலாம்.

பத்தாம் வகுப்பு வரையிலும் தொப்புளுக்கு மேலாகத்தான் பேண்ட் போட்டுத் திரிவேன். தொப்புளுக்கு கீழாக பேண்ட் போட்டால் படித்ததெல்லாம் அது வழியாகப் போய்விடும் என்று சரவணன் சொல்லித் தந்திருந்தான். அவன் தனது தியரியை நிரூபிக்கச் சொன்ன உதாரணம்தான் எந்தக்காலத்திலும் மனதில் நிற்கும். ‘இங்க ஒரு நடிகையாவது அறிவாளியா இருக்காளா?...ஏன்.. சொல்லு பார்க்கலாம்’ என்றான். அந்தக் காலத்தில் எந்த நடிகை அறிவாளி என்றெல்லாம் தெரியாது. கிட்டத்தட்ட அத்தனை படங்களிலும் நடிகைகள் நடிகர்களிடம் தோற்றவர்களாகத்தான் இருந்தார்கள். என்ன பதிலை அவன் எதிர்பார்த்திருந்தானோ அதே பதிலைச் சொன்னேன். ‘அதனால்தான் சொல்லுறேன்...தொப்புளுக்கு மேலாக பேண்ட்டை போடு’. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்குச் செல்லும் போது கெட்டியான பனியனை அணிந்து ஜட்டியைக் கூட தொப்புள் வரைக்கும் ஏற்றி போட்ட வகையறாவாகத் திரிந்தேன்.

இது ஒரு பழக்கம் என்றால், தேர்வுகளுக்குச் செல்லும் போது எதிர்படும் ஒவ்வொரு கோட்டைத் தாண்டும் போதும் வலது காலை எடுத்து வைத்துத்தான் தாண்டுவேன். கல்லூரி வராண்டாவில் கருங்கல் பதித்திருப்பார்கள் அல்லவா? அந்த ஒவ்வொரு கருங்கல் கோடுகளையும் கூட வலது காலை எடுத்து வைத்துத்தான் தாண்டுவேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சென்னிமலையைச் சேர்ந்த பிரபு என்ற நண்பன்தான் சொல்லிக் கொடுத்தான். வெகு காலம் வரைக்கும் இந்த பழக்கத்தைவிடவே முடியவில்லை. விதியை மீறி ஏதாவது சொதப்பிவிடுமோ என்ற பயம் ஒட்டிக் கொண்டேயிருந்தது. பிரபுதான் பாவம். கல்லூரி முடிவதற்குள்ளாக தூக்கில் தொங்கிவிட்டான். எல்லாவற்றிலும் இப்படி சாங்கியம் பார்த்துக் கொண்டிருந்தவன் அவன்.

ஆயா இருந்தவரைக்கும் கருடன் மேலே பறந்தால் எழுந்து நின்று  ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என்று திரும்பத் திரும்பச் சொல்வார். ஆயா மறைந்த பிறகு இந்தப் பழக்கம் மறந்துவிட்டது. மறந்துவிட்டது என்று சொல்ல முடியாது. வயலில் வேதியியல் உரங்கள் வந்த பிறகு கிட்டத்தட்ட எங்கள் ஊர்ப்பக்கம் கருடனையே பார்க்க முடிவதில்லை. ஆனால் பெங்களூரில் கருடன் பறப்பதைப் பார்க்கலாம். ஆனால் அந்த நினைப்பே வரவில்லை. அம்மையார் சிறைச்சாலையில் இருந்த போது பரப்பன அக்ரஹாராவில் ஒரு எம்.எல்.ஏவிடம் பேசிக் கொண்டிருந்தேன். திடீரென்று செருப்பைக் கழட்டிவிட்டு ‘கும்பிட்டுக்க...கும்பிட்டுக்க’ என்றார். மேலே கருடன் பறந்து கொண்டிருந்தது. என்ன இருந்தாலும் எம்.எல்.ஏ சொல்கிறார். கும்பிடாமல் இருந்தால் நன்றாக இருக்குமா? அப்பொழுதிருந்து ஒட்டிக் கொண்டது. பைக்கில் வரும் போதெல்லாம் கருடனைப் பார்த்து கும்பிட்டு வருகிறேன். இனி இந்தப் பழக்கம் வெகு காலத்திற்கு ஒட்டியிருக்கும் என்று நினைக்கிறேன்- இந்த ஊரில் கருடன் இருக்கும் வரைக்குமாவது அல்லது வானத்தைப் பார்த்தபடியே வந்து முன்னால் இருக்கும் வண்டி மீது மோதும் வரைக்குமாவது.

இத்தகையை நம்பிக்கைகள் ஏதோவொரு விதத்தில் நம் விரல்களைப் பற்றியிருக்கின்றன. மதம், சாதி என்ற பூச்சு பற்றியெல்லாம் கவலைப்படாமல் யோசித்துப் பார்த்தால் அடுத்தவரைச் சிரமப்படுத்தாத பெரும்பாலான பழக்கங்கள் சுவாரஸியமாகத்தான் இருக்கின்றன.

கல்லூரிக் காலத்தில் அருள் என்றொரு ஜூனியர் இருந்தான். எதற்கெடுத்தாலும் ‘ஜெய் ஹனுமான்’ என்பான். ‘என்ன தம்பி இவ்வளவு ஆஞ்சநேயர் பக்தனா?’ என்றால் ‘ஆமாண்ணா கடைசி வரைக்கும் கட்டை பிரம்மச்சாரி’ என்பான். ஆஞ்சநேயரை நினைத்தபடிதான் எந்தவொரு காரியத்தையும் செய்வான். அதை எங்களிடமெல்லாம் காட்டியும்விடுவான். ‘காலையில் எழுந்தால் வெறும் பீளையும் கண்களுமாக இருக்கிற இந்த பொண்ணுங்களுக்காக இவ்வளவு ஏங்கணுமா?’ என்று கேட்டு என்னையும் கெடுத்துவிடுவான் போலிருந்தது. அதன் பிறகு தொடர்பை குறைத்துக் கொண்டேன். 

அவனுக்கு இருந்ததை நம்பிக்கை என்று சொல்ல முடியாது. அது ஒரு பழக்கம். எதெற்கெடுத்தாலும் ஆஞ்சநேயர்தான். 

கடந்த மாதத்தில் பெங்களூர் செண்டரலிலிருந்து வெளியே வந்தான். கை நிறைய டிஷ்யூ காகிதங்கள். இடுப்பில் இருக்கும் தனது பெண் குழந்தைக்கு மூக்குச் சிந்திவிட்டுக் கொண்டிருந்தான். அடையாளம் கண்டவுடன் ‘ஜெய் ஹனுமான்’ என்றேன். உள்ளுக்குள் கடுப்பாகியிருப்பான். வெளியில் சிரித்துக் கொண்டான். வீட்டில் மிரட்டினார்களாம். திருமணம் செய்து கொண்டானாம். ‘இதே டயலாக்கைத்தான் தம்பி நானும் பல பேருகிட்ட சொல்லியிருக்கேன்’ என்றேன். ‘இல்லண்ணா உண்மையாகத்தான்’ என்கிறான்.

அவனோடு பழகிக் கொண்டிருந்த போதுதான் சமஸ்கிருத ஸ்லோகங்களைச் சொன்னால்தான் இறைவன் செவி சாய்ப்பான் என்று புரளியைக் கிளப்பிவிட்டிருந்தான். ‘ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹனுமதே ராம தூதாய லங்கா வித்வம்ஸனாய அஞ்சனா கர்ப்ப ஸம்பூதாய சாஹினி டாஹினி வித்வம்ஸனாய கில கில பூ காரினே விபீஷணாய ஹனுமத் தேவாய ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ராம் ஹ்ரீம் ஹூம்’ போன்ற சில ஸ்லோகங்களை குருட்டடி போட்டு வைத்திருந்தேன். இதுநாள் வரைக்கும் அர்த்தம் தெரியாது. ஆனால் ஆஞ்சநேயரைக் கண்டால் இந்த ஸ்லோகத்தை நினைத்துக் கொள்வதுண்டு. அதுவொரு பழக்கமாகியிருக்கிறது. ஆஞ்சநேயரைக் கும்பிட்டால் சைட் அடிப்பதில் இருக்கும் ஆசை குறைந்து படிப்பில் கெட்டியாகிவிடலாம் என்ற நம்பிக்கையிருந்தது. ஆனால் அப்படியெல்லாம் உபாயம் செய்துவிட மாட்டார். 

நேற்றுக் கூட சோனி வேர்ல்ட் சிக்னலில் இருக்கும் ஒரு ஆஞ்சநேயரைப் பார்த்து இந்த மந்திரத்தைச் சொன்னேன். எங்கே மதிக்கிறார்? ஜீன்ஸ் பேண்ட் அணிந்த பெண்களாக அனுப்பி கண்களை ஓட விடுகிறார். ‘ஆஞ்சநேயா என்னே உன் பக்தனுக்கு வந்த சோதனை’ என்று சொல்லி வாயை மூடவில்லை. பச்சை நிற புடவையணிந்த தேவதை- இந்த வார்த்தையை மேம்போக்காகச் சொல்கிறேன் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்- தேவதையேதான். நடந்து வந்து கொண்டிருக்கிறாள். இந்த ட்ராபிக் போலீஸ்காரன் பச்சைக்கு மாற்றினாலாவது கவனத்தை மாற்றலாம். ம்ஹூம். நேராக ஆஞ்சநேயரைப் பார்க்க கோவிலுக்குள் சென்றுவிட்டாள். வண்டியை நிறுத்தி நாமும் ஒரு கும்பிடு போட்டுவிடலாம் என்ற நினைப்பு அப்பொழுதுதான் உதித்தது. வண்டியை ஓரங்கட்ட முயற்சிக்கிறேன். ஃபோன் அடிக்கிறது. எடுத்துப் பார்த்தால் வேணி. ‘ஆபிஸிலிருந்து கிளம்பி முக்கால் மணி நேரமாகிறது..இன்னுமா வந்து சேரவில்லை’ என்கிறாள். ‘இப்படியே பராக்கு பார்த்துக் கொண்டே வந்தால் இன்னமும் கூட அரை மணி நேரம் ஆகத்தான் செய்யும். உனக்கு இது பொறுக்காதா?’ என்று பற்கள் வரைக்கும் வார்த்தைகள் வந்துவிட்டன.  வம்பை விலை கொடுத்து வாங்கியதாகிவிடும் என்று நல்ல பையனாக வீடு போய்ச் சேர்ந்தேன். 

இன்று விடிந்ததிலிருந்தே ‘ஓம் ஐம் ஹ்ரீம்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். அந்தப் பக்கமே போகக் கூடாது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் விதி வலியது. விதி வலியது என்பதைவிடவும் ஆஞ்சநேயரின் சேட்டை வீரியம் மிக்கது.