Feb 11, 2015

இந்த நாள்...காலண்டரில் குறித்துக் கொள்ளுங்கள்

இந்த ஊரில் வாசகர்களுக்கான கூட்டமொன்றைத் தொடர்ச்சியாக நடத்த வேண்டும் என்பது நீண்ட நாட்களாகத் திட்டமிடப்பட்டது. பெங்களூரைத்தான் சொல்கிறேன். இடம்தான் பிரச்சினை. கிழக்கில் ஒரு இடத்தைப் பிடித்தால் தெற்கில் இருப்பவர்களுக்குச் சிரமம். தெற்கில் பிடித்தால் வடக்கில் இருப்பவர்களுக்கு அலைச்சல். அப்படியும் கப்பன்பூங்காவில் ஒரு கூட்டத்தை நடத்தினோம். கொசுக்கடி பின்னியெடுத்துவிட்டது. அதுவுமில்லாமல் கூட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது போலீஸ்காரர்கள் குறுக்கும் மறுக்குமாகச் செல்வார்கள். நோட்டமிடுகிறார்களாம். வேலைக்கு ஆகவில்லை.

அடுத்த முறை கோரமங்களாவில் ஒரு அரங்கைத் தேர்ந்தெடுத்து நடத்திய போது இந்த மாதிரியான பிரச்சினைகள் எதுவும் இல்லை. ஆனால் மாதம் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ரூபாய் செலவாகும் போலிருந்தது. வாடகை ஆயிரத்து ஐந்நூறு அது போக டீ, காபி செலவு. ஒரு முறை என்றால் பரவாயில்லை. வருடம் பன்னிரெண்டு கூட்டங்கள்; இருபத்தைந்தாயிரம் என்பது பெரிய தொகை. யாராவது இல்லாவதவர்களுக்கு கொடுத்தாலாவது அர்த்தமிருக்கிறது. அதனால் அதுவும் சரிப்பட்டு வரவில்லை.

அல்சூர் தமிழ்ச்சங்கம் சரியான இடம். பெங்களூரின் வெவ்வேறு திசைகளிலிருந்தும் எளிதில் வந்துவிடலாம். ஆனால் தமிழ்ச்சங்கத்தில் யாரையும் தெரியாது என்பதால் இழுத்துக் கொண்டே போனது. இன்று தமிழ்ச்சங்கத்தில் பேசி ஒரு அறையை பதிவு செய்தாகிவிட்டது. சீனிவாசனும் திருவும் சேர்ந்து நல்லதம்பி அவர்களை அழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். எனக்கு அலுவலகத்திலிருந்து வெகு பக்கம். நடந்தே சென்றுவிட்டேன். ஆட்டோ பிடித்தால் அவனுக்கு ஐம்பது ரூபாய் தண்டம் அழ வேண்டும். திரும்ப வந்து கால் வலிக்கும் போதுதான் எனது கஞ்சத்தனம் தெரிகிறது. போகட்டும். நல்லதம்பிக்கு தமிழ்ச்சங்கத்தில் சிலரோடு பரிச்சயம் உண்டு. அதனால் வேலை சுளுவாகிவிட்டது.

இனி ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணியிலிருந்து இரண்டு மணி நேரங்கள் நடத்துவதாக அனுமதி வாங்கியிருக்கிறோம். மார்ச் 8 முதல் கூட்டம். முதல் ஒரு மணி நேரம் ஒரு கலந்துரையாடல். பத்து நிமிட இடைவெளி. அடுத்த ஒரு மணி நேரம் இன்னொரு உரையாடல். அவ்வளவுதான்.

இந்த முறை முதல் ஒரு மணி நேரத்தை எஸ்.ராமகிருஷ்ணனிலிருந்து தொடங்கலாம். அவர் தேர்ந்தெடுத்த நூறு சிறுகதைகளில் முதல் பத்து சிறுகதைகளை வாசித்துவிட்டு வந்தால் அதைப் பற்றி விவாதிக்கலாம். வாசிக்காவிட்டாலும் பரவாயில்லைதான். வாசித்திருந்தால் உசிதம். விவாதம், கலந்துரையாடல் என்றெல்லாம் சொல்வதால் பயங்கரமான இலக்கியக் கூட்டம் என்றெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. Casual discussion. வாசித்ததை எப்படி புரிந்து கொண்டோம் என்பது பற்றிய வெளிப்படையான உரையாடல். எப்படியெல்லாம் மற்றவர்கள் வாசிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு. அவ்வளவுதான்.

கதைகளைப் பற்றி பேசிவிட்டு ஒரு டீ குடித்துவிட்டு வரலாம். திரும்ப வந்து ஒரு மணி நேரம். ஒரு தொகுப்பிலிருந்து சில கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வாசித்துக் காட்டிவிட்டு கவிதைத் தொகுப்பு பற்றிய உரையாடலாக வைத்துக் கொள்ளலாம். பா.வெங்கடேசனின் நீளா தொகுப்பை முதல் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளலாம். நீளா இந்த வருடம் வெளியான தொகுப்பு. தாண்டவராயன் கதை உள்ளிட்ட நாவல்களை எழுதியிருக்கும் பா.வெ முக்கியமான எழுத்தாளர். அவரையும் வரச் சொல்லிவிடலாம். அந்தத் தொகுப்பு எதைப் பற்றி பேசுகிறது, தொகுப்பின் கவிதைகள் எப்படியிருக்கின்றன என்பது பற்றி ஒரு விவாதம். முடித்துவிட்டுக் கிளம்பிவிடலாம்.

முதல் முறை இந்த pattern. சரிப்பட்டு வராதபட்சத்தில் அடுத்த முறை மாற்றிக் கொள்ளலாம். சில மாதங்கள் கழித்து சிறப்பு விருந்தினர்கள் யாரையாவது அழைத்து வரலாம். திடீர்க் கூட்டங்கள் நடத்தி கிலியூட்டலாம் என்பது போன்ற பயங்கரமான திட்டங்கள் உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருக்கின்றன. 

சில விஷயங்களை உறுதியாகச் செய்ய வேண்டும்-

யார் வந்தாலும் வராவிட்டாலும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையில் கூட்டம் நடந்துவிட வேண்டும். இப்படியான கூட்டங்களுக்கு மட்டுமில்லை பொதுவெளியில் நாம் செய்யும் எந்தச் செயலுக்கும் consistency முக்கியம். இன்றைக்கு ஒருவர் கூட்டத்துக்கு வருகிறார் என்றால் அடுத்த முறையும் அவர் வருவார் என்று நம்ப முடியாது. அதற்காக வருந்த வேண்டியதில்லை. ஒரு முறை பத்து பேர் வந்த கூட்டத்தில் அடுத்த முறை மூன்று பேர்தான் கலந்து கொள்கிறார்கள் என்றால் பம்மிவிடக் கூடாது. தொடர்ந்து நம் பாதையில் சென்று கொண்டேயிருக்க வேண்டும். யாராவது புதிதாக வருவார்கள். யாராவது கழண்டு கொள்வார்கள். ஆனால் அதையெல்லாம் நாம் யோசிக்கவே கூடாது. இணையத்தில் எழுதத் தொடங்குபவர்களுக்கு என்ன சொல்கிறீர்கள் என்று என்னையும் கருத்து கருப்புசாமியாக மதித்துக் கேட்டால் இதைத்தான் சொல்வேன். Consistency. அது  எல்லாவற்றிற்கும் பொருந்தும்.

இன்னொரு விஷயத்தையும் முதலிலேயே சொல்லிவிட வேண்டும். இது இலக்கியக் கூட்டம் எல்லாம் இல்லை. பெங்களூரில் இருக்கும் தமிழ் நண்பர்களுக்கிடையேயான சந்திப்பு. பொதுவான விஷயத்தைப் பேசுகிறோம். அவ்வளவுதான். மேடை, கூட்டத்துக்குத் தலைவர், வட்டச் செயலாளர், செவ்வக வாசகர் என்ற கலாச்சாரம் எதுவும் இருக்காது. வட்டமாக அமர்ந்து பேசலாம். வாசகர் வட்டம் என்ற பெயர் வந்துவிடும் என பயந்தால் அறுங்கோணமாகவோ அல்லது நீள் சதுரமாகவோ அமைந்து கொள்ளலாம். நாம் வைப்பதுதான் சட்டம். தேவைப்பட்டால் யாராவது ஒருவரை ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட வைக்கலாம். அதுவும் கூட அவசியமில்லை என்று தோன்றினால் ஒருங்கிணைப்பாளரை அருகில் இருக்கும் அல்சூர் ஏரிக்குள் கல்லைக் கட்டி வீசிவிடலாம். கவனித்துப் பார்த்துவிட்டு முடிவு செய்து கொள்ளலாம்.

தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு யாரும் வெகு சிரீயஸாக இல்லாதபடிக்கு பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் விரும்புகிறேன். 

எஸ்.ரா தேர்ந்தெடுத்த நூறு சிறுகதைகளில் முதல் பத்து சிறுகதைகளுக்கான இணைப்புகள் கீழே:

1. காசி - பாதசாரி
2) செல்லம்மாள் - புதுமைப்பித்தன்
3) காஞ்சனை - புதுமைப்பித்தன்
5) வெயிலோடு போய்- ச.தமிழ்ச்செல்வன்
10) மஹாராஜாவின் ரயில் வண்டி- அ.முத்துலிங்கம்

புத்தகத்தை ஆன்லைனிலும் ஆர்டர் செய்யலாம்.