Feb 11, 2015

துளி சந்தோஷம்

இன்று மதியம் அலுவலகத்தில் இருக்கும் போது அழைப்பு வந்தது. மாலையே வருவதாகச் சொல்லியிருந்தேன். எங்கள் அலுவலகத்தில் ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரம் அலுவலகத்தில் இருந்தே ஆக வேண்டும். இதுவரை ஒரு நாள் கூட ஏமாந்ததில்லை. ஆனால் இன்று முன்னதாகவே கிளம்ப வேண்டியதாகிவிட்டது. மேலாளரிடம் ‘இந்த மாதிரி இந்த மாதிரி..அதனால போகணும்’ என்றேன். சரி என்று சொல்லிவிட்டார். 

ஊட்டியிலிருந்து தினேஷை அழைத்துக் கொண்டு அவனது பெற்றோர் வந்திருக்கிறார்கள். ஐம்பதாயிரம் ரூபாய் எடுத்து வந்திருக்கிறார்கள். பரிசோதனைகளுக்கே பல்லாயிரம் ரூபாய் செலவாகியிருக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டுமானால் ஐம்பதாயிரம் ரூபாய் கட்டச் சொல்லியிருக்கிறார்கள். அதற்காகத்தான் அழைத்திருந்தார்கள். எழுத்தாளர் செல்லமுத்து குப்புசாமி பெங்களூர் வந்திருந்தார். ‘ஆஸ்பத்திரி போக வேண்டிய வேலை இருக்கு..கூட யாரும் வரலைண்ணா...நீங்க வர்றீங்களா?’ என்று கேட்டேன். எந்த ஊருக்குச் சென்றாலும் யாராவது ஒருவரைப் பிடித்துவிட முடிகிறது. இத்தனை வருடங்களாக இருக்கும் இந்த ஊரில் பிடிக்க முடியவில்லை. பெரிய வருத்தமில்லை என்றாலும் துளி வருத்தம்தான். சீனியையும் அழைத்திருந்தேன். அவரும் வருவதாகச் சொல்லியிருந்தார். அலுவலகத்திலிருந்து வந்தவுடன் வீட்டில் பையை வைத்துவிட்டு காசோலையை எடுத்துக் கொண்டேன்.

நாரயண ஹிருதயாலயாவை அடையும் போது மணி எட்டு ஆகிவிட்டது. தினேஷின் அம்மாவை முன்னதாகவே அழைக்கவில்லை. மருத்துவமனைக்கு முன்பாக நின்றுதான் அழைத்தோம். ஒரு கிலோமீட்டர் தள்ளி ஒரு அறை எடுத்திருக்கிறார்கள். மருத்துவமனைக்கு அருகாமையில் நாள் வாடகைக்கு என ஏகப்பட்ட அறைகள் கிடைக்கின்றன. அத்தனையிலும் நோயாளிகள். ‘உடம்பு நல்லா இருக்கிற வரைக்கும்தான் மணி எல்லாமும்’ என்று குப்புசாமி தத்துவம் பேசினார். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. அந்த விடுதியில் புற்றுநோயில் முகம் விகாரமாக மாறிப் போனவரைத் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தது. அறைக்கு வெளியிலேயே தினேஷின் அப்பா நின்றிருந்தார். எளிய மனிதர்கள். டீ எஸ்டேட்டில் கூலித் தொழிலாளியாக இருக்கிறார்.

அந்த சுமாரான அறைக்கு ஒரு நாள் வாடகை நானூற்றைம்பது ரூபாய். மிக அதிகம். ஆனால் என்ன செய்ய முடியும்? கொடுத்துத்தான் தீர வேண்டும். அது போக உணவுச் செலவு. மருத்துவமனைக்கு சென்று வர என்று செலவு. நினைத்தாலே ஒரு மாதிரியாகிவிட்டது. அறக்கட்டளையின் காசோலையில் ஐம்பதாயிரம் ரூபாயை நிரப்பி சீனி மற்றும் குப்புசாமியிடமும் கொடுத்து தரச் சொன்னேன். தினேஷ் திடீரென்று அவர்களது காலில் விழுந்துவிட்டான். எனக்கு கொஞ்சம் அழுகை வந்துவிட்டது. எதையும் காட்டிக் கொள்ளவில்லை. அவனது பெற்றோரைப் பார்த்து ‘ஏதாவது தேவைப்பட்டா சொல்லுங்க’ என்றேன். குப்புசாமி சற்று எமோஷனலாகியிருந்தார். ‘நாளைக்கு வந்து ஒரு பத்தாயிரம் தர்றேன்’என்று சொன்னார்.


ஐந்து நிமிடங்கள்தான் அங்கு இருந்திருப்போம். சீனி எதுவுமே பேசவில்லை. கிட்டத்தட்ட இருபது கிலோமீட்டர் தூரம் இதற்காகவே பைக் ஓட்டி வந்தவர் அமைதியாகவே நின்று கொண்டிருப்பது வித்தியாசமாகத் தெரிந்தது. கிளம்பும் போது தினேஷின் அம்மாவும் அப்பாவும் ‘டீ குடிச்சுட்டு போங்க’ என்றார்கள். அங்கே டீ இல்லை. வெளியில் வந்து வாங்கித் தருவதாகச் சொன்னார்கள். ‘பையனைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு வந்தோம். பாலநந்தகுமாரை அழைத்து ‘வேறு ஏதாவது தேவைப்பட்டால் சொல்லச் சொல்லுங்கள்’ என்று சொல்லியிருக்கிறேன். இந்தக் குடும்பத்தைப் பார்த்தால் நேரடியாகக் கேட்கக் கூடியவர்களாகத் தெரியவில்லை. ஒரு முறை கேட்பதற்கு முன்பாக நூறு முறை யோசிப்பார்கள். பாலாவுக்கு அவர்களின் தேவை என்னவென்று தெரியும். பாலாதான் இந்தக் குடும்பத்தைப் பற்றி முதலில் பேசினார்.

முதுகெலும்பு அதிகமாக வளர்ந்து சிறிநீரகத்தை அழுத்தும் தினேஷின் இந்தப் பிரச்சினைக்கான அறுவை சிகிச்சையின் வெற்றி விகிதம் வெகு குறைவு என்கிறார்கள். இந்தக் குடும்பத்துக்கு அந்த விஷயம் தெரியுமா என்று தெரியவில்லை. தெரிந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. மிகுந்த வருத்தத்தோடுதான் இருந்தார்கள். செலவுக்கு செலவு வேறு; நம்பிக்கையும் இல்லை. மொழி தெரியாத இந்த ஊரில் ஏதோவொரு நம்பிக்கையைப் பற்றிய படி காத்திருக்கிறார்கள். எங்களுக்காக வலுக்கட்டாயமாக முகத்தில் சிரிப்பைக் கொண்டு வந்திருந்தார்கள். வறண்ட புன்னகை அது.

நம்மால் முடிந்த ஒரு சிறு துரும்பைக் கிள்ளிப்போட்டு வந்திருக்கிறோம். பையன் தேறி வரட்டும் என்று ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்ளலாம். திரும்பி வரும் கண்களும் மனமும் கலங்கலாக இருந்த போதும் துளி திருப்தியில்லாமல் இல்லை. வேறு எந்தவிதத்திலுமே உதவியை புரட்ட முடியாத குடும்பம் இது. துளி படிப்பறிவும் இல்லாத வெகு சாமானிய மக்கள். இத்தகைய ஒரு குடும்பத்தைச் சார்ந்த குழந்தைக்கு உதவுவதுதான் உண்மையான உதவியாக இருக்க முடியும். இனி அவர்களைத் திரும்பப் பார்க்கப் போகிறோமா என்று கூடத் தெரியாது. அவர்களிடம் நாமும் நம்மிடம் அவர்களும் வேறு எதையும் எதிர்பார்க்கப் போவதில்லை. மின்னல் மாதிரி ஒரு வினாடி வெளிச்சக் கீற்றைக் காட்டிவிட்டு வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அவர்களும் நாமும் தத்தம் மனதில் துளி இடத்தை பரஸ்பரம் ஒதுக்கி வைப்போம் அல்லவா? அதுதான் சந்தோஷம். அதுதான் வாழ்வின் அர்த்தம். 

3 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//பையன் தேறி வரட்டும் என்று ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்ளலாம்//
பணம் கொடுத்து தான் உதவ முடியவில்லை.தினேஷுக்கு சுகமாகட்டும் என மனம் ஒன்றி பிரார்த்தித்து விட்டேன்.

Anonymous said...

கமெண்ட் பெட்டியா... எப்பலேர்ந்து?

Uma said...

இத்தனை நல்ல உள்ளங்களின் உதவிக்கரங்களுக்கும், பிரார்தனைகளுக்கும் பலன் கண்டிப்பாக கிடைக்கும். தினேஷ் பூரண நலமடைவான்.துளி ஆனந்தம் பொங்கி வழியும் நாளுக்காக என் ஜெபமும்.