Feb 10, 2015

ரசீது தேவைப்படுகிறதா?

நிசப்தம் அறக்கட்டளைக்கு பணம் அனுப்புபவர்களில் முப்பதிலிருந்து நாற்பது சதவீதம் பேர் தங்களைப் பற்றிய தகவல்களைத் தருவதில்லை. பணம் வந்திருப்பதாக எஸ்.எம்.எஸ் வந்திருக்கும். எப்படியும் மின்னஞ்சல் வந்துவிடும் என்று காத்திருந்தால் ம்ஹூம். இரண்டொரு நாட்கள் கழித்து யாராக இருக்கும் என்று தேடிப்பார்த்தால் ஒரு க்ளூவும் கிடைக்காது. வங்கியின் பரிவர்த்தனை விவரங்களில் இருக்கும் பெயரை மட்டும் வைத்து பணம் கொடுத்தவர்களைக் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை அல்லவா? ‘வாழ்க வளமுடன்’ என்று நினைத்துக் கொள்வேன்.

‘கடவுள் அருள்புரியட்டும்’ என்றுதான் உண்மையில் நினைத்துக் கொள்வேன். ஆனால் இதை வெளிப்படையாகச் சொன்னால் கோசின்ரா அழைப்பார். கோசின்ரா மத்திய அரசில் பெரும் பதவியில் இருக்கிறார். எப்படியும் அரை மணி நேரமாவது பேசுவார். பேச்சுவாக்கில் ‘ஒரு கதை இருக்கு மணி’ என்று தொடங்குவார். ‘ஒருத்தன் ரொம்ப கஷ்டப்பட்டு உழைக்கிறான்...எழுதறான்னே வெச்சுக்குங்களே...நிறைய எழுதறான்...நல்ல பேர் சம்பாதிக்கிறான்...கடைசியில் ஆண்டவன் அனுக்கிரகம் இருந்துச்சு...அந்த அருளால்தான் இதெல்லாம் நடந்துச்சுன்னு சொல்லிட்டாங்கன்னா அவ்வளவுதான்....அவனுடைய உழைப்பு, திறமை எல்லாம் பின்னாடி போய்டும்.....எல்லாப் புகழும் இறைவனுக்குத்தான்’ என்று நிறுத்தமாட்டார் ‘கடவுள் பெயரை இஷ்டத்துக்கு பயன்படுத்தாதீங்க’ என்பார். அதனால் ‘வாழ்க வளமுடன்’ என்றே வெளியில் இருக்கட்டும். உள்ளுக்குள் வேறு மாதிரி நினைத்துக் கொள்கிறேன்.

இன்று காலையில் வந்து சேர்ந்த ஐந்தாயிரம் ரூபாயையும் சேர்த்தால் ஐந்து லட்சம் கணக்கில் இருக்கிறது. ஐந்துலட்சத்து இருநூற்றி முப்பத்தியிரண்டு ரூபாய். 

ஆரம்பத்தில் ஒவ்வொருவருக்கும் ரசீது அனுப்பிக் கொண்டிருந்தேன். இடையில் சில பரிவர்த்தனைகள் பற்றிய விவரங்கள் இல்லாததால் சிலருக்கு அனுப்ப இயலவில்லை. நடுநடுவே ரசீது எழுதாமல் விட்டுவிடுவது சரியா என்று தெரியவில்லை என்பதால் அப்படியே நின்றுவிட்டது. ஒரு வகையில் சோம்பேறித்தனம் என்றும் சொல்லலாம். பெயர் கண்டுபிடித்து ரசீது எழுதி அதை கம்யூட்டர் செண்டரில் ஸ்கேன் செய்து மின்னஞ்சல் முகவரி கண்டுபிடித்து அனுப்புவதற்கு வெகு நேரத்தை இழுத்துவிடுகிறது. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ரசீது தேவைப்படுபவர்கள் மனம் கோணாமல் மின்னஞ்சல் அனுப்பி வைக்க முடியுமா? உடனடியாக ரசீது அனுப்பி விடுகிறேன். 

அடுத்த இரண்டு மாதங்களில் சில வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. முதல் வேலையாக தேவையான ஆவணங்களைத் தயார் செய்து வருமான வரி அலுவலகத்தில் விவரங்களைத் தந்துவிட வேண்டும். 80G க்கு விண்ணப்பிக்கும்படி சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகு நன்கொடையளிப்பவர்கள் ரசீதைக் காட்டி வருமான வரிவிலக்கு பெற்றுக் கொள்ளலாம். ஆனால் 80G வாங்குவது லேசுப்பட்ட காரியமா என்று தெரியவில்லை. விண்ணப்பித்துவிட்டால் மிச்சமிருக்கிற பணத்துக்கு வரி கட்ட வேண்டியதில்லையாம். இல்லையென்றால் இரண்டு லட்ச ரூபாய்க்கும் மேலாக கைவசம் இருந்தால் வரி கட்ட வேண்டும். நல்லவர்கள் சிறுகச் சிறுக கொடுத்த பணத்தை வாங்கி அரசாங்கத்துக்கு எதுக்கு கொடுக்க வேண்டும்? அவனவன் பல்லாயிரக்கணக்கான கோடிகளை சுவிட்சர்லாந்தில் புதைத்து வைத்திருக்கிறான். அதை விட்டுவிட்டு இல்லாதவர்களுக்கு போய்ச் சேரும் பணத்தில் எதற்கு அரசாங்கத்திற்கு பங்கு தர வேண்டும்? ஜெட்லியும் மோடியும் கேட்கட்டும். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று வீராப்பு பேசலாம்தான். ஒத்தை நாடி உடம்பை வைத்துக் கொண்டு எனக்கெல்லாம் எதற்கு வெட்டி பந்தா?

அதனால் கமுக்கமாக 80G க்கு விண்ணப்பித்துவிட்டு வருடக் கடைசியில் வருமான வரித்தாக்கலையும் செய்துவிட்டால் கணக்கு தெளிவாகிவிடும். பட்டயக் கணக்கர் கேட்கும் சில ஆவணங்களை வாங்குவதிலும் சிரமம் இருக்கிறது. ‘யாருக்கு உதவி செய்கிறீர்களோ அவர்கள் அறக்கட்டளையிடம் உதவி கோரும்படியான கடிதம் ஒன்று தேவைப்படுகிறது’ என்று பட்டயக்கணக்கர் சொன்னால் அதை இப்பொழுது எப்படி வாங்குவது என்று தெரிவதில்லை. அந்தச் சமயத்தில் இதெல்லாம் தேவைப்படும் என்று தெரியவில்லை என்பதால் உதவி தேவைப்படுபவர்களைச் சந்தித்துக் காசோலையைக் கொடுத்துவிட்டு திரும்பிவிடுவேன். 

நாம் உதவிய பெரும்பாலானவர்கள் திரும்பத் தொடர்பு கொள்வதேயில்லை. எப்படியிருக்கிறார்கள் என்ற விவரம் கூடத் தெரிவதில்லை. சில மின்னஞ்சல்களில் ‘அந்த அறுவை சிகிச்சைக்கு பணம் கொடுத்தீர்களே அவர் எப்படியிருக்கிறார்?’ என்று யாராவது கேட்பார்கள். எனக்கும் பதில் சொல்லத் தெரியாது. பயனாளிகளைக் குறை சொல்லவில்லை. அவர்கள் நம்மோடு தொடர்பில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவும் இல்லை. அவர்கள் எளிய மனிதர்கள். மனதுக்குள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். எதற்காகச் சொல்கிறேன் என்றால் இப்பொழுது வருமான வரித்துறையை அணுகும் போது நமக்கு சில சிக்கல்கள் வந்து சேர்கின்றன. இவையெல்லாம் ஒருவிதத்தில் அனுபவங்கள்தானே? இப்பொழுதுதான் முளைத்து மூன்று இலை விடுகிறது. போகப் போக சரி செய்து கொள்ளலாம்.

அப்படியே ஓரிரு மாதங்களில் இந்தத் தளத்தையும் கொஞ்சம் மாற்றிவிடும் எண்ணம் இருக்கிறது. யாரோ சில முறை இந்த தளத்தை Hack செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். மின்னஞ்சல் வந்திருந்தது. உள்ளுக்குள் ஏதாச்சும் எசகுபிசகான chat இருக்கும் என்று நம்புகிறார்கள் போலிருக்கிறது. அப்படியெல்லாம் தவறாக கணக்கு போட்டுவிடாமல் புண்ணியவான்கள் நேரடியாகக் கேட்டால் கடவுச் சொல்லையே கொடுத்துவிடுகிறேன். ஆனால் கேட்கமாட்டார்கள். திருட்டு மாங்காய்க்குத்தானே ருசி அதிகம்? கூட்டத்தில் அண்டர்வேரைக் காப்பாற்றிக் கொள்வது போல எப்பொழுதும் இறுகப் பிடித்துக் கொண்டே இருக்க முடியாது. தளத்துக்கு Fresh Look கொண்டு வந்துவிடலாம். நிசப்தம் அறக்கட்டளைக்கென்று ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டால் வசதியாக இருக்கும். nisaptham.com தான். ஆனால் தனியொரு பக்கம். இதில் அனுபவமுள்ள நண்பர்களிடம்தான் உதவி கேட்கவிருக்கிறேன்.

ஊட்டி தினேஷின் அம்மா இன்று காலையில் அழைத்தார். பையனையும் அழைத்துக் கொண்டு நாராயண ஹிருதயாலயாவுக்கு வந்துவிட்டார்கள். சென்ற வாரமே வந்திருக்க வேண்டியவர்கள். பணத்தைப் புரட்ட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்களாம். இன்றுதான் வந்து சேர்ந்திருக்கிறார்கள். எப்பொழுது அறுவை சிகிச்சை நடத்த வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசிக்கிறார்களாம். நாளை மாலை காசோலையைக் கொடுத்துவிட வேண்டும். யாராவது பெங்களூர்வாசிகள் வருவதாக இருப்பின் தெரியப்படுத்தவும். காசோலை கொடுத்துவிட்டு தினேஷின் பெற்றோர்களிடம் ஆறுதலாக நான்கு வார்த்தைகள் பேச வேண்டும். இத்தகைய அறுவை சிகிச்சைகளின் வெற்றி சதவீதம் மிகக் குறைவு என்று செந்தில் பாலன் உள்ளிட்ட சில மருத்துவர்கள் சொன்னார்கள். அவனது பெற்றோர்களுக்கும் இந்த விவரம் தெரியுமாம். இருந்தாலும் முயற்சித்துப் பார்க்கிறார்கள். வெறும் பணம் கொடுப்பது மட்டும் பெரிய விஷயமில்லை. அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டமுடிந்தால் அதுதான் சிறப்பு.

இதை எழுதுவதற்கு முக்கியக் காரணமே பணம் அனுப்பியவர்களில் யாருக்கெல்லாம் ரசீது தேவை என்று கேட்பதற்குத்தான். அப்படியே இன்னும் கொஞ்சம் சரக்கு சேர்ந்து சற்றே நீண்டு விட்டது.