Jan 21, 2015

என்னய்யா முடிவு எடுக்கிறது?

‘காலையில் இருந்து ஏகப்பட்ட டென்ஷன்....அந்த டென்ஷன்லேயே வண்டியில் வந்தேன்...கீழே விழுந்துட்டேன்’ என்பது சாதாரணமாகக் கேட்கக் கூடிய வாக்கியம். யாராவது சொல்வார்கள். நாமே கூட சொல்லியிருக்கலாம். பைக்கில் இருந்து விழுவது என்பது ஒரு உதாரணம்தான். அதற்கு பதிலாக வேறு ஏதேனும் கசப்பான சம்பவம் நடந்திருக்கலாம். ஆனால் ஏன் அப்படி ஆனது என்று யோசித்துப் பார்த்தால் பிடிபடாது. ‘முடிவெடுத்தல்’ பற்றி சில தகவல்களைத் தேடிக் கொண்டிருந்த போது மூளையும் மற்ற தசைகளைப் போன்றதுதான். ரொம்பவும் வேலை கொடுத்தால் தளர்ந்துவிடும் என்று சொல்லியிருந்தார்கள். decision fatigue. காலையில் இருந்து நிறைய முடிவுகளை எடுத்திருந்தால் மாலையில் இந்தப் பிரச்சினை வரக் கூடும்.

விற்பனைத் துறையில் இருக்கும் அதிகாரிகளிடம் பேசினால் தெரியும். வழக்கமாக ஐந்து சதவீதம்தான் தள்ளுபடி தருவார்களாக இருக்கும். ஆனால் ஒரு வாடிக்கையாளர் எட்டு சதவீதம் தள்ளுபடி கேட்பார். அதைத் தரலாமா வேண்டாமா என்று குழம்ப வேண்டியிருக்கும். ஒருவேளை தள்ளுபடி தராவிட்டால் வாடிக்கையாளர் வேறு விற்பனையாளரிடம் சென்றுவிடுவார். தள்ளுபடி தந்தால் மேலதிகாரி ஏதாவது கேள்வி கேட்க வாய்ப்பிருக்கிறது. முடிவெடுத்தே தீர வேண்டும். ஒரு நாளில் இரண்டு மூன்று முடிவுகள் என்றால் பரவாயில்லை. இருபது முப்பது முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தால்? ‘போடா புண்ணாக்குதாசா’ என்று சொல்லிவிட்டு மூளை குப்புறப் படுத்துக் கொள்ளும். மாலையில் வரும் போது ஆட்டோக்காரனை வலது பக்கமாக முந்திச் செல்லலாமா அல்லது பின்னாலேயே செல்லலாமா என்று முடிவெடுக்க முடியாமல் கீழே விழ வேண்டியதுதான்.

பெரிய முடிவுகள்தான் எடுக்க வேண்டும் என்பதில்லை-  ஒரு நாளில் மிகச் சாதாரணமான முடிவுகள் எவ்வவளவு எடுக்கிறோம்? இப்பொழுது எழலாமா இன்னும் பத்து நிமிடங்கள் தூங்கலாமா என்று காலையில் ஆரம்பித்து எந்தத் துணி அணியலாம், எந்த வழியாக அலுவலகம் செல்லலாம், மதிய உணவுக்கு எந்தக் கடைக்குச் செல்லலாம், பெட்ரோல் இன்று நிரப்ப வேண்டுமா அல்லது நாளை வரை தாங்குமா, வீட்டுக்கு பழம் வாங்கிச் செல்லலாமா வேண்டாமா? அப்படியென்றால் என்ன பழம்? நிறைய அடுக்கலாம்.

மகன் படிக்கும் பள்ளிக்குச் செல்ல வேண்டியிருந்தது. அவனது வகுப்பில் ஆசிரியரை மாற்றிவிட்டார்கள். புதிதாக வந்திருக்கும் ஆசிரியர் எதற்கோ திட்டிவிட்டாராம். வீட்டில் வந்து அழுதிருக்கிறான். முன்பொருமுறை பழைய ஆசிரியரிடம் பேசிய போது ‘சக மாணவர்களிடம் பழகுவதில்லை’ என்று சொல்லியிருந்தார். இதை அப்படியே விடக்கூடாது. ஆரம்பத்திலிருந்தே சரி செய்துவிட வேண்டும். என்னால் இன்னமும் எல்லோரிடமும் சகஜமாக பழக முடிவதில்லை. என்னை விட உயர்ந்த நிலையிலோ அல்லது சமமாகவோ இருப்பவர்களிடம் அதிகமாக பேச்சு வைத்துக் கொள்ள மாட்டேன். அந்த ஜீன் எங்கேயோ அவனுக்கும் கடந்துவிட்டது போலிருக்கிறது. இப்பொழுதெல்லாம் தினமும் ‘யாரிடம் பேசின?’ என்று கேட்கிறேன். கொஞ்சம் பரவாயில்லை. நிறையப் பெண்களிடம் பேசுகிறான். என்னால் முடியாத காரியம் அது. சந்தோஷமாகத்தான் இருந்தது. நேற்று விவிதா என்றொரு பெண்ணிடம் பேசியிருக்கிறான். பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்ட புது டீச்சர் ‘இனிமேல் என் க்ளாஸூக்கு வராத’ என்று சொல்லித் திட்டியிருக்கிறார். அதுதான் அவனுக்கு பிரச்சினை. 

சாதாரண விஷயம்தான். இதைப் பெரிதுபடுத்தி அந்த ஆசிரியை அடுத்த இரண்டு மாதங்களுக்கு அவனை வேறு மாதிரி நடத்தத் தொடங்கினால் என்ன செய்வது என்ற தயக்கம்தான். அப்படியே விட்டுவிட்டாலும் அவனை அடிக்கடி திட்டக் கூடும். அது ஒருவிதத்தில் இவனை பாதித்துவிடும். இரண்டாம் வகுப்பு படிக்கும் போது ஏதோ வீட்டுப்பாடம் எழுதவில்லை என்று ஒரு ஆசிரியை எனது சட்டையைக் கழட்டி விட்டு மைதானத்தைச் சுற்றி வரச் செய்தார். அதுவும் ஒரு பெண்ணை வைத்து கழட்டச் சொன்னார். அந்தப் பெண்ணுக்கும் எனக்கும் தள்ளுமுள்ளு நடந்து பொத்தான்கள் எல்லாம் அறுந்து கடைசியில் அவள் வென்றுவிட்டாள். அரை நிர்வாணமாக மைதானத்தைச் சுற்றி வந்தேன். உண்மையில் ட்ரவுசருக்கும் சேர்ந்துதான் திட்டமிட்டார்கள். கடவுள் புண்ணியத்தில் காப்பாற்றிவிட்டேன். இல்லையென்றால் காகமோ கழுகோ கொத்திச் சென்றிருக்கும்- தலையைச் சொல்கிறேன். நினைவு தெரிந்து அவமானப்பட்ட முதல் தினம் அது. அதன் பிறகு கல்லூரி வரைக்கும் எந்த அசைண்மெண்ட்டும் மனப்பூர்வமாக எழுதியதாக ஞாபகம் இல்லை. பள்ளிகளில் எந்த நோட்டுப்புத்தகமும் சரியாக வைத்திருக்கவில்லை. இப்பொழுது யோசித்துப் பார்த்தால் அந்த டீச்சர்தான் காரணம் என்று தோன்றுகிறது. 

இத்தகைய யோசனைகளால் மகனின் ஆசிரியையைச் சந்தித்து கேட்க வேண்டுமா? அப்படியே விட்டுவிட வேண்டுமா என்பதுதான் குழப்பம். 

‘ஐ.ஐ.எம்ல படிச்சா என்ன அவ்வளவு பெரியவனா? எதுக்கு இவ்வளவு கொட்டிக் கொடுக்கிறாங்க’ என்று கேட்டால் முடிவெடுத்தலைத்தான் முதலில் சொல்வார்கள். ஹைதராபாத்தில் என்னுடன்  ஒரு தெலுங்குப்பையன் செய்தான். ஒரு வருடம்தான் ஒன்றாக வேலை செய்தோம். 2006 ஆம் ஆண்டு CAT தேர்வு எழுதி ஐ.ஐ.எம் அகமதாபாத்தில் சேர்ந்தான். இரண்டே வருடங்கள்தான். வெளியே வரும் போது முப்பத்தியிரண்டு லட்சங்கள் சம்பளம் வாங்கினான். எப்பொழுதுமே நம்முடன் இருப்பவர்கள் மேலே செல்லும் போதுதானே வயிறு எரியும்? எங்கோ இருப்பவன் நோபல் பரிசு வாங்கினால் பாராட்டுவார்கள். இங்கே இருப்பவன் ஒரு சாகித்ய அகாடமி வாங்கிவிடக் கூடாது. ‘ஹா...குப்பை...அவன் எப்படி வாங்கினான்னு எனக்குத் தெரியாதா?’ என்பார்கள். எல்லா மட்டத்திலும் இது உண்டுதானே? அப்படித்தான் வயிறு எரிந்து கிடந்தேன். பத்தாயிரம் ரூபாய் வாங்குவதற்காக நம்மோடு சேர்ந்து ஹெச்.ஆரில் சண்டை போட்டுக் கொண்டிருந்தவன். இப்பொழுது எங்கேயோ போய்விட்டான்.

ஆறு மாதங்கள் கழித்து ஹைதராபாத் வந்திருந்தான். ‘மீக்கு எந்துக்கு அந்தா இஸ்தாரு?’ என்றேன். 

எதுவுமே யோசிக்காமல் ‘அவ்வளவு அழுத்தம். தெரியுமா?’ என்றான். 

ஷேர் மார்கெட் நிறுவனம் அது. அமெரிக்க நிறுவனம். இந்தியாவின் பங்குச்சந்தையில் வழித்தெடுப்பதற்காக கால் வைத்திருந்தார்கள். அங்கு உடனுக்குடன் முடிவெடுத்தாக வேண்டும். ஏகப்பட்ட முடிவுகளை அவ்வளவு விரைவாக எடுப்பதற்குத்தான் அவ்வளவு சம்பளம். சீக்கிரம் decision fatigue வராமல் இருக்கிற மூளைக்குத்தான் அந்த வேலை சரிப்பட்டு வரும். அதற்காகத்தான் அகமதாபாத் வந்து பொறுக்கியெடுத்துச் சென்றிருந்தார்கள். அந்த வருடம் ஐ.ஐ.எம் அகமதாபாத்தின் சராசரிச் சம்பளமே இருபத்தியாறு லட்சம். இவன் ஒரு பூ ஏறி மிதித்திருந்தான் என்பதால் முப்பதைத் தாண்டியிருந்தான். 

பணம்தானே பிரதானம்? அதனால் பணம் சார்ந்த வேலைகளைச் செய்பவர்களுக்குத்தான் சம்பளம் அதிகம். வங்கியில், ஷேர் மார்க்கெட்டில் முக்கியமான பதவியில் இருப்பவர்களுக்கு வேறு எந்தத் துறையைக் காட்டிலும் சராசரிச் சம்பளம் அதிகமாக இருப்பதன் காரணம் அதுதானே? பணம் குறித்தான முடிவுகள்தான் மிகப்பெரிய ரிஸ்க் உடையவை என்று உலகம் நம்புகிறது. அதனால் அந்த முடிவை நல்லபடியாக எடுப்பவனுக்கு நிறைய சம்பளம் கொடுத்து வைத்துக் கொள்கிறார்கள். 

இது ஒன்றும் ஒரே நாளில் வந்துவிடக் கூடிய சூத்திரம் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக வளர வேண்டும். உள்ளுக்குள் ஒரு கெத்து இருக்க வேண்டும். ‘இது க்ளிக் ஆகும்’ என்கிற நம்பிக்கை. கவனித்துப் பார்த்தால் வாழ்க்கையில் வென்றவர்களும் சரி, தோற்றவர்களும் சரி- ஒற்றை முடிவில்தான் வாழ்க்கையின் திசையை மாற்றியிருப்பார்கள். ஆனால் இந்த இரண்டு பிரிவினருமே உலகில் மிகக் குறைவான சதவீதம்தான். மிச்சமிருக்கும் பெரும்பாலானவர்கள் ‘இருப்பதே போதும்’ என பம்மிக் கொண்டிருப்பவர்கள்தான்.