Jan 21, 2015

காகிதக் கொக்கு பறக்குமா?

சசாகி என்ற ஜப்பானியப் பெண்ணை சிலர் கேள்விப்பட்டிருக்கக் கூடும். ஹிரோஷிமா நகரத்தில் வாழ்ந்த சிறுமி. அந்நகரத்தின் மீது அமெரிக்கக்காரன் குண்டு போட்ட பிறகு- அது ஒரு தனிக்கதை- நாஜிக்களிடமிருந்து தப்பித்துப் போன விஞ்ஞானி ஒருவர் தனது நண்பரான ஐன்ஸ்டீனைச் சந்தித்து ‘இந்த மாதிரி..இந்த மாதிரி....ஜெர்மனிக்காரன் அணுகுண்டு தயாரிக்கிறானாமா...தயாரிச்சுட்டான்னு வை...சோலி சுத்தம்...நீ உடனே அமெரிக்காகாரனுக்கு லெட்டர் போடு’ என்று வற்புறுத்தியிருக்கிறார். அப்பொழுது அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் ரூஸ்வெல்ட். விஷயத்தைக் கேள்விப்பட்டு அவரும் உடனடியாக குண்டு தயாரிக்க உத்தரவிடுகிறார். அமெரிக்காவில் விடிய விடிய கண் விழித்து யுரேனியம் மற்றும் புளுடோனியத்தில் குண்டு தயாரித்துவிட்டார்கள். அதைச் சோதனை செய்ய வேண்டுமல்லவா? அதற்கு தோதாக வாய்த்த நாடுதான் ஜப்பான். இளிச்சவாய நகரங்களாக ஹிரோஷிமாவும் நாகசாகியும் சிக்குகின்றன. ஹிரோஷிமா மீது யுரேனிய குண்டையும் நாகசாகி மீது புளுடோனிய குண்டையும் போட்டு பரிசோதனை செய்து பார்த்துவிட்டார்கள்.

மொத்தமாக மூன்றரை லட்சம் ஜப்பானியர்கள் உயிரை விட்டார்கள். ஏன் இந்த இரண்டு நகரங்களைத் தேர்ந்தெடுத்தார்கள், அமெரிக்காவின் வெறிக்கு ஜப்பான் எப்படி இரையானது என்ற கேள்விகளுக்கு பதில்களாக மிகப்பெரிய அரசியல் சதிவலைகள் பின்னணியில் இருக்கின்றன. அந்த அரசியல் பற்றி நறுக்குத் தெரித்தாற் போல தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு புத்தகம் வெளிவந்திருக்கிறது. சசாகியின் காகிதக் கொக்கு. 

சசாகியை விட்டுவிட்டு புத்தகத்திற்கு வந்துவிட்டேன் பாருங்கள். 

சசாகி கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டவள். ஹிரோஷிமா மீது குண்டு விழுந்த போது அவளுக்கு வயது இரண்டு. குண்டுவெடிப்பில் உறவினர்களையெல்லாம் இழந்துவிட்டு உயிர் தப்பித்தவளுக்கு வெகுகாலம் வாழக் கொடுத்து வைத்திருக்கவில்லை. கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு அணு குண்டு நோயான புற்று நோய் அவளது உடலில் வீரியம் பெற்றது. நோய் கண்டறியப்பட்ட போது வெறும் பன்னிரெண்டு வயது சிறுமி அவள்.  உடைந்து போகிறாள். அவளது தோழியொருத்தி ஒரு காகிதக் கொக்கைக் கொடுத்து அதைப் போலவே ஆயிரம் கொக்குகளைச் செய்யச் சொல்கிறாள். ஜப்பானியர்களுக்கு ஒரு நம்பிக்கை உண்டு. ஆயிரம் காகிதக் கொக்குளைச் செய்தால் தங்களின் கோரிக்கை நிறைவேறும் என. இப்படி காகிதத்தில் உருவங்களைச் செய்யும் கலைக்கு ஒரிகாமி என்று பெயர்.

தோழி சொன்னதைக் கேட்டதும் சசாகிக்கு நம்பிக்கை வருகிறது. கிடைக்கும் நேரத்தில் கிடைக்கும் காகிதங்களில் கொக்குகளைச் செய்கிறாள். ஆனால் அணுகுண்டைவிடவா கடவுள் பெரியவர்? கடவுளால் ஜெயிக்க முடியவில்லை. அறுநூற்றுச் சொச்சம் காகிதக் கொக்குளைச் செய்த பிறகு புற்று நோய் சசாகியை எடுத்துக் கொண்டது. அவளது தோழிகளும் பிறரும் சேர்ந்து அவளுக்காக மிச்சமிருந்த முந்நூறு ப்ளஸ் கொக்குகளைச் செய்தார்களாம். இப்பொழுதும் ஹிரோஷிமாவில் சதாகோ சசாகி அணுகுண்டுக்கு எதிரான அமைதிச் சிலையாக நின்று கொண்டிருக்கிறாள் என்று புத்தகத்தின் முதல் கட்டுரை முடிகிறது.

கோ.சுந்தர்ராஜன் எழுதிய இந்த துக்கினியூண்டு புத்தகத்தை நேற்றிரவு வாசித்து முடித்தேன். சுந்தர்ராஜன் அடிப்படையில் பொறியாளர். சூழலியல் தொடர்பான விவகாரங்களில் ஊக்கத்துடன் செயல்படும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பில் இருக்கிறார். இடிந்தகரை மக்களுக்கான சட்டப் போராட்டங்களை நடத்தியவர்களில் முக்கியமானவரும் கூட.

2011 ஆம் ஆண்டு சுனாமி தாக்கிய பிறகு ஜப்பானின் புகுஷிமா நகரில் இருந்த ஆறு அணு உலைகளில் மூன்று உருகத் தொடங்கின. கதிரியக்கம் பரவத் தொடங்கியதும் லட்சக்கணக்கான மக்கள் ஊரை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டன. அந்த ஊர் மக்கள் தங்களது சொத்துக்களையெல்லாம் விட்டுவிட்டு ஓடினார்கள். அந்த ஊரே நாசமானது. உலகின் அணு உலைகளுக்கு அந்தச் சம்பவம் ஒரு பாடம். அந்த ஊருக்கு நேரில் சென்று வந்து தனது அனுபவங்களை இடிந்தகரை மக்களோடு பகிர்ந்து கொண்டவர் சுந்தர்ராஜன். 

அணு உலைகள் வேண்டாம் என்ற அணியில் நான் இல்லை. ஆனால் அதற்காகக் கண்களை மூடிக் கொண்டு அணு உலைகளை ஆதரிக்கிறேன் என்றும் அர்த்தம் இல்லை. 

அணு உலைகளின் பாதிப்புகள், அவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வரலாறுகள், தனி மனித அனுபவங்கள் என பலவற்றையும் ஏதாவதொரு விதத்தில் தெரிந்து கொள்வது அவசியம். இது போன்ற தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ‘நான் புடிச்ச மொசலுக்கு மூணே கால்தான்’ என்று கண்களை மூடிக் கொண்டு எதிர்க்கவோ அல்லது ஆதரிக்கவோ செய்யாமல் இருதரப்பு விவாதங்களையும் உள்வாங்கிக் கொள்வதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும் என நம்புகிறேன். அந்தவிதத்தில்தான் சசாகியின் காகிதக் கொக்கு என்ற இந்தப் புத்தகத்தை வாங்கியிருந்தேன். 

மொத்தமாகவே ஐம்பத்து நான்கு பக்கங்கள்தான். அதில் வாழ்த்துரை, அணிந்துரை எல்லாம் தவிர்த்துவிட்டால் நாற்பது பக்கங்கள்தான் கணக்கு. சசாகி குறித்தான கட்டுரை, ஹிரோஷிமா நாகசாகி தாக்கப்பட்டது பற்றிய கட்டுரை, அணுகுண்டின் கதை, புகுஷிமா பற்றிய கட்டுரை உள்ளிட்ட ஆறு கட்டுரைகள்தான் மொத்தப் புத்தகமும். நாற்பது ரூபாய்தான். அணுவின் விளைவுகள் குறித்து சாமானிய மனிதனுக்கு புரிதலைக் கொடுக்கும் விதமான கட்டுரைகள். அந்தவிதத்தில் இது முக்கியமான புத்தகம்.

புத்தகக் கண்காட்சியில் கிடைத்த இந்த புத்தகத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடியாது போலிருக்கிறது. தேடிப்பார்த்துவிட்டேன். info@poovulagu.org என்ற மின்னஞ்சல் வழியாகவோ அல்லது 98410 31730 என்ற எண் வழியாகவோ விசாரித்து புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம்.