Jan 22, 2015

யாருக்கு பைத்தியம்?

இப்பொழுதெல்லாம் அலுவலக நேரத்தில் தினமும் இருபது நிமிடங்களாவது ஒரு நடை போய்விட்டு வருகிறேன். டிரினிட்டி சர்ச்சிலிருந்து பத்து நிமிடங்கள் வேகமாக நடந்தால் அல்சூர் மார்கெட்டுக்குச் சென்றுவிடலாம். திரும்ப பத்து நிமிடங்கள் நடந்தால் அலுவலகத்திற்கு வந்துவிடலாம். அல்சூர் வரைக்கும் சென்று வரக் காரணமிருக்கிறது. அல்சூரில் திரும்பிய பக்கமெல்லாம் தமிழர்கள்தான். பழங்காலத்திலிருந்தே இது தமிழர் பகுதி. யாரிடமாவது கதை அடிக்கலாம்.

அல்சூரில் ஒரு கொய்யாக்கடைக்காரர் இருக்கிறார். தள்ளுவண்டி வியாபாரி. வழக்கமாக ஒரு கொய்யாக்காய் வாங்கிக் கொள்வேன். வெள்ளைக் கொய்யா ஐந்து ரூபாய். சிவப்பு என்றால் ஏழு ரூபாய். சில நாட்களுக்கு முன்பாக காலையில் ஆளைக் காணவில்லை. மாலையில் இருந்தார்.  ‘உங்களைக் காலையில் காணோமே?’ என்ற போது ஒரு கதையைச் சொன்னார். பக்கத்து வீட்டில் ஒரு பையனுக்கு பைத்தியம் முற்றிப் போய் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றிருக்கிறார்கள். மயக்க ஊசி போட்டு அங்கேயே படுக்க வைத்துவிட்டார்களாம். இப்பொழுது கையில் ஒரு விலங்கு மாட்டியிருப்பதாகச் சொன்னார்.

‘இத்தனை நாள் நல்லாத்தான் இருந்தான்..திடீர்ன்னு என்னவோ ஆகிடுச்சு’ என்றார்.

இதே போன்ற இன்னொரு நபரை பார்த்திருக்கிறேன். பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையின் அருகில். அந்த சிறைச்சாலை வளாகத்திற்குள் பிரதான வழியில்தான் செல்ல வேண்டும் என்றில்லை. பின்பக்கம் வழியாகவும் செல்லலாம். ஜெயலலிதா இங்கிருந்த போது போலீஸ் கெடுபிடி அதிமாக இருக்கும் நாட்களில் அந்த வழியில் சென்று விடுவேன். குறுகலான பாதையொன்றில் சில வீடுகளைத் தாண்டிச் சென்றால் சிறைச்சாலையின் முதல் வாயிலைத் தாண்டிவிடலாம். அந்த வீடுகளில் ஒன்றில் ஒரு மனிதரைக் கட்டி வைத்திருப்பார்கள். அதை வீடு என்று சொல்ல முடியாது. குடிசை. நிலத்தில் மாடு கட்டுவதற்கு முளைக்குச்சி நட்டு வைத்திருப்பார்கள் அல்லவா? அப்படியான ஒரு கம்பியை நிலத்தில் அடித்து அதில் கயிறின் ஒரு நுனியைக் கட்டி அதன் இன்னொரு நுனியை அந்த மனிதனின் கையில் கட்டியிருப்பார்கள். இறுக்கமாகவெல்லாம் கட்டியிருக்கமாட்டார்கள். கழட்டுவது பெரிய காரியமே இல்லை. ஆனால் அவனுக்கு அதைக் கழட்டக் கூடத் தெரியாது. எந்நேரமும் ஏதோ உளறிக் கொண்டிருப்பான். வாயில் எச்சில் ஒழுகிக் கொண்டிருக்கும். முதலில் பார்ப்பதற்கு பயமாகத்தான் இருந்தது. ‘எதுவும் செய்ய மாட்டான் போங்க’ என்று அந்த வீட்டிற்குள்ளிருந்து ஒரு பெண்குரல் வந்த பிறகு மெதுவாகத் தாண்டிச் சென்றேன். அநேகமாக அந்த மனிதனின் அம்மாவின் குரலாக இருக்கக் கூடும்.

அதன் பிறகு சிறைச்சாலைக்குள் செல்லும் போதெல்லாம் சற்று தள்ளி நின்று ஐந்து நிமிடங்களாவது பார்த்துச் செல்வது வழக்கமாகியிருந்தது. அந்த மனிதனுக்கு ட்ரவுசர் மட்டும்தான் அணிவித்திருப்பார்கள். சிறுநீர் கழிக்கும் போது ட்ரவுரைக் கீழே இறக்கிவிட்டு அதே இடத்திலேயே சிறுநீர் கழிப்பான். ட்ரவுசரைக் கழட்டத் தெரிகிறது ஆனால் கைக்கட்டை அவிழ்க்கத் தெரிவதில்லை- ஆச்சரியமாக இருக்கும். அந்தத் தெருவில் அத்தனை வீடுகள் இருக்கின்றன. அவன் நிர்வாணமாக இருக்கும் போதும் கூட பெண்கள் சர்வசாதாரணமாக நடமாடுகிறார்கள். புதிதாக வருபவர்களுக்குத்தான் சங்கடமாக இருக்கும். 

ஒரு நாயைக் கட்டி வைப்பது போல மனிதனைக் கட்டி வைப்பது எவ்வளவு கொடுமை? சில சமயங்களில் அதே இடத்தில் படுத்துக் தூங்கிக் கொண்டிருப்பான். விரல் நகங்கள் வெகு நீளமாக வளர்ந்திருக்கும். அவனை எப்படி அமர வைத்து நகங்களை நறுக்க முடியும்? இதெல்லாம் மனித உரிமை மீறல் இல்லையா? சரியான மருத்துவ வசதி தர வேண்டாமா என்றெல்லாம் கேட்கலாம்தான். ஆனால் அந்தக் குடும்பத்தின் நிலையைப் பார்த்தால் கேட்க முடியாது.

கொய்யாக்கடைக்காரர் சொன்னதும் அந்த மனிதனின் ஞாபகம்தான் வந்தது. 

நமது மனம் சஞ்சலப்பட்டு சீரழிந்து போவதற்கு எவ்வளவோ விஷயங்கள் நம்மைச் சுற்றிலும் நடக்கின்றன. தேவையில்லாத கோபம், தேவையில்லாத பதற்றம் என்பதெல்லாம் கூட மனநலம் கெட்டுக் கொண்டிருப்பதன் அறிகுறிதான். ஒரு நாளில் எத்தனை மனிதர்களின் முகம் பார்த்துச் சிரிக்கிறோம் என்று யோசித்தால் பயமாக இருக்கிறது. ஒரே நிறுவனத்தில் வேலை செய்வார்கள்; ஒரே பேருந்தில் செல்வார்கள். ஆனால் ஆளாளுக்கு ஹெட்போன் வழியாக ஃஎப்.எம்மில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். பக்கத்தில் இருப்பவர்களுடன் பேசுவதில்லை. பேச்சு இருக்கட்டும்- ஒரு புன்முறுவல் கூட இருப்பதில்லை. மனநலம் நன்றாக இருக்க வேண்டுமானால் சக மனிதர்களிடம் நிறையப் பேச வேண்டும் என்கிறார்கள். ஆனால் நாம்தான் சுருங்கிக் கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் தனிமனிதனின் மனநலம் சார்ந்த பிரச்சினை என்பதைவிடவும் சமூகத்தின் மனநலம் சார்ந்த பிரச்சினை எனலாம். மொத்தமாகவே அப்படித்தானே இருக்கிறோம்?

செந்தில் பாலன் என்றொரு மருத்துவர் நிசப்தம் வழியாக நண்பரானார். எலும்பு முறிவு மருத்துவர். கல்லூரி காலத்தில் விகடனின் மாணவ நிருபராக இருந்தவராம். இப்பொழுது நாவல் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். ஆர்த்தோ மருத்துவர் எழுதுகிறார் என்றாலே எனக்கு டாக்டர். பிரகாஷ்தான் ஞாபகத்துக்கு வரும் என்றேன். அது உண்மைதானே? பிரகாஷ் பற்றிய கட்டுரை ஒன்றை சமீபத்தில் வாசித்தேன். எங்கு வாசித்தேன் என்பது சரியாக ஞாபகமில்லை. பிரகாஷ் நிறைய காப்புரிமைகள் வாங்கியிருக்கிறார், அறுவை சிகிச்சையின் புதிய நுட்பங்களை அறிமுகப்படுத்தியவர் என்றெல்லாம் அவரை அந்தக் கட்டுரை பாராட்டியிருந்தது. எலும்பு முறிவுத் துறையில் எவ்வளவோ சாதித்திருக்க வேண்டியவர். வீணாகப் போய்விட்டார். எங்கள் ஊரில் ஒன்று சொல்வார்கள். இரண்டை அடக்கவில்லை என்றால் நாசமாகப் போய்விடுவோம் என்று. ஒன்று வாய். பிரகாஷ் கோட்டைவிட்டது இரண்டாவது சமாச்சாரம்.

அவர் கிடக்கட்டும்.

செந்தில்பாலனிடம் பேசிக் கொண்டிருந்த போது ‘Delusional Disorder' பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். எளிமையாகச் சொன்னால் நடக்காத ஒன்றைப் பற்றி கனவு காண்பது. எப்படியும் இலியானாவை திருமணம் செய்துவிட வேண்டும் ஹைதராபாத் சாரதி ஸ்டுடியோவில் ஒரு நாள் வெகு நேரம் நின்று கொண்டிருந்தேன். இலியானாவுக்கு கொடுத்து வைத்திருக்கவில்லை. என்னைக் கண்டுகொள்ளாமல் ரவிதேஜாவுடன் கடலை போட்டுக் கொண்டிருந்ததால் ‘இது சரிப்பட்டு வராது’ என்று முடிவு செய்து கொண்டேன். அதுவே அவர் கண்டுகொள்ளாவிட்டாலும் கூட ‘கட்டினால் இலியானா இல்லையென்றால் மணி பிணமானான்’ என்று சொல்லிக் கொண்டு திரிந்திருந்தால் அதுதான் Delusional Disorder-ன் முதல் படி.

அந்தக் கொய்யாக்காரருக்கு சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் அல்சூரில் இருக்கும் தமிழ் பையன்களுடன் சேர்ந்து கொண்டு சாதாரணமாகச் சுற்றிக் கொண்டிருந்தவன்தான் என்று சொன்னார். ரசிகர் மன்றம், சினிமா என்று திரிந்த நண்பர்களுக்கிடையில் தனது அபிமான நட்சத்திரம் பற்றிய பேச்சு வந்து அது பிரச்சினையாகி அதுவே கைகலப்பாகி மயங்கி விழுந்தவன்தான். அதன் பிறகு எல்லோரிடமும் எரிந்து விழுவதும், வீட்டில் இருப்பவர்களை நோக்கி கை நீட்டுவதுமாகவும் தொடர்ந்து வீரியம் அதிகமாகி கடந்த இரண்டு வாரங்களில் கட்டுப்படுத்தவே முடியாமல் ஆகிவிட்டதாகச் சொன்னார்.

அந்தப் பையனுக்கு Delusional Disorderதானா என்று தெரியவில்லை. ஆனால் செந்தில்பாலன் சொல்லிக் கொண்டிருந்த போதுதான் பையனுக்கும் அதுவாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. இங்கு யாருக்குத்தான் disorder இல்லை. எனக்கு பிரச்சினையை மறைத்து நடிக்கத் தெரிகிறது. உலகம் நம்புகிறது. அதனால் பேண்ட் சர்ட் போட்டுக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறேன். அந்தப் பையன்கள் பாவம். கொஞ்சம் முற்றிவிட்டது. தெருவிலேயே ட்ரவுரைக் கழட்டிக் கொண்டிருக்கிறான் ஒருவன். கையில் விலங்கு பூட்டப்பட்டுக் கிடக்கிறான் இன்னொருவன்.