Jan 8, 2015

எங்கே ஒளிந்திருக்கிறது?

பழைய நிறுவனத்தில் செருப்பு அணிந்து செல்லலாம். ட்ரவுசர் போட்டுக் கொண்டு கூட வருவார்கள். ஆனால் இந்த புது நிறுவனத்தில் டீ சர்ட் கூட கழுத்துப்பட்டை வைத்துத்திருந்தால்தான் போட வேண்டுமாம். அதுவும் வெள்ளிக்கிழமை மட்டும்தான். மற்ற தினங்களில் ஷூ முழுக்கைச் சட்டை, பேண்ட். அக்கப்போராக இருக்கிறது. தினமும் ஷூ போட்டு வருவதைப் போன்ற கொடுமை எனக்கு வேறு எதுவுமே இல்லை. காற்றாட கழட்டிவிட முடிகிறதா? நாற்றம் கூரையைத் தூக்கிவிடும் போலிருக்கிறது. முந்தாநாள் ஒரு புண்ணியவான் பந்தாவாக காலாட்டிக் கொண்டிருந்தார். பக்கத்திலிருந்தவர்களுக்கெல்லாம் இரண்டு மூன்று மூக்கு முடிகள் கருகி விழுந்திருக்கும். வீட்டுக்குச் சென்றாலும் மணம் மூக்குக்குள்ளேயே டேரா போட்டிருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

சோழியன் குடுமி சும்மா ஆடுமா? இந்த ஷூ கதையைச் சொல்ல ஒரு காரணமிருக்கிறது. பாட்டா ஷூவை இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் கொடுத்து வாங்கி வைத்திருந்தேன். புது நிறுவனம் இல்லையா? பந்தாவுக்காக இருக்கட்டும் என்றுதான். சனி, ஞாயிறுகளில் வீட்டில் யாரும் இல்லை. இந்த ஊரில் என்ன திருட்டுப் போகிறதோ இல்லையோ- செருப்புகளைத் திருடிவிடுகிறார்கள். சுவர் ஏறி எட்டிக் குதித்து நிறம் மங்காத பாட்டா ஷூவை மூட்டைக் கட்டிக் கொண்டு சென்றுவிட்டார்கள். மூட்டை என்றால் மூட்டைதான். அம்மாவின் ஒரு சோடி செருப்பு, ஜாகிங் போவதற்காக வைத்திருந்த ஒரு ஷூ- அதை ஏன் கேட்கிறீர்கள்? கடந்த பத்து நாட்களாக காலையில் எழுந்து ஒரு ஓட்டம் ஓடி வருகிறேன். இது ஒரு தனிக் கொடுமை. அந்தக் கதையை இன்னொரு நாள் பேசிக் கொள்ளலாம் . அது போக வீட்டில் இருப்பவர்களின் ஷூ, செருப்பு என ஏழெட்டு ஜதை. மூட்டை கட்டாமல் இத்தனையைத் தூக்கிச் செல்வது சாத்தியம் இல்லை அல்லவா? 

தொலைந்து போகட்டும். 

பிரச்சினை என்னவென்றால் இங்கு ஹெச்.ஆர் ஆட்களுக்குத் தெரியாமல் காலை மறைப்பதுதான். பார்த்துவிட்டால் கேள்வி கேட்பார்களாம். ‘வீட்டில் செருப்பு திருட்டு போய்விட்டது’என்று சொல்தற்கும் சங்கடம். யாரும் பார்க்காமல் குடுகுடுவென்று ஓடி வர வேண்டும். வந்தவுடன் மேசைக்குக் கீழாக காலை விட்டுக் கொள்ள வேண்டும். இடையில் ‘அவசரம்’ என்றாலும் கூட ஒரே அலும்பாக இருக்கிறது. ‘இத்தனை பேசுகிற நீ ஒரு ஜோடி ஷூ வாங்க முடியாதா?’என்று கேட்கலாம்தான். அதற்கும் ஒரு பெரிய அடைப்பை ஏற்படுத்திக் கொண்டேன்.

எப்பொழுதோ வேணியிடம் ‘ப்ராண்டிங்’ பற்றி பேசிக் கொண்டிருந்தேன். ‘இவ்வளவு வீராப்பா பேசுற நீங்க ப்ராண்ட் இல்லாத ஒரு பொருளை வாங்குங்க’ என்றாள். யோசித்துப் பார்த்தால் கஷ்டம்தான். மொபலை வாங்க முடியுமா? இல்லை ஒரு டூத் பேஸ்ட்டைத்தான் வாங்க முடியுமா? ஆனால் ஷூவை வாங்க முடியும். அலுவலகம் இருக்கும் ரிச்மண்ட் சாலையில் ஒருவர் செருப்புக்கடை வைத்திருக்கிறார். செருப்புக்கடை என்றால் கடை எல்லாம் இல்லை. ஒரு இரும்புப்பெட்டி. அந்தப் பெட்டியைச் சுற்றிலும் ஷூக்களை வரிசையாக தயாரித்து அடுக்குகிறார். அந்தக்கடைப் பக்கமாகச் செல்லும் போதெல்லாம் அந்த மனிதரிடம் பேச்சுக் கொடுக்கிறேன். அந்த மனிதருக்கு இரண்டு கால்களும் இல்லை. சிறுவயதிலிருந்தே கால்கள் இல்லையாம். ஆனால் எப்படியோ செருப்புத் தொழிலைப் பழகிக் கொண்டார். நகை முரண். அவருக்குத் தமிழ் தெரியாது. எனக்கு கன்னடம் வராது. ஆனாலும் பேசிக் கொள்கிறோம். பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும் பேசிக் கொண்டா நட்பு பூண்டார்கள் என்று கேட்டால் நீங்கள் அடிக்க வரக் கூடாது.

அவரிடமே ஆர்டர் கொடுத்துவிட்டேன். அறுநூற்றைம்பது ரூபாய் சொன்னார். பேரம் பேசி ஐம்பது ரூபாயைக் குறைத்துவிட்டேன். எனக்கென்னவோ ஷூ அட்டகாசமாக இருக்கிறது. ஆனால் உடன் வேலை செய்பவர்கள்தான் ‘சீக்கிரம் போயிடுமே’ என்றார்கள். தாங்கும் வரைக்கும் தாங்கட்டும்.

செருப்பைத் திருடிக் கொண்டு போய் என்ன செய்வார்கள்? 

பெங்களூரில் கிட்டத்தட்ட அத்தனை பொருட்களுக்குமே second market இருக்கிறது. ஏதாவதொரு விடுமுறை நாட்களில் பைக்கை எடுத்துக் கொண்டு சுற்றினால் கவனிக்கலாம். ஜெர்க்கின்களை இருநூறு ரூபாய்க்கு விற்பார்கள். முதலில் விலை கூடுதலாகத்தான் சொல்வார்கள். பேரம் பேசுவது நம் திறமை. அவர்களிடம் கேட்டால் ‘கம்பெனி ரிஜெக்ட் செஞ்ச மெட்டீரியல்’என்பார்கள். அதாவது தயாரிப்புகளில் ஏதேனும் குறை இருந்தால் அதை விற்பனைக்கு அனுப்பாமல் நிரகாரிப்பார்கள் அல்லவா? அதுதான் என்பார்கள். ஆனால் உண்மையில் பெரும்பாலானவை திருட்டுப் பொருட்களாகத்தான் இருக்கும் என்கிறார்கள். கடையெல்லாம் இல்லை. இரு சக்கர வாகனத்தில் வருவார்கள். நடைமேடையின் மீது கீழே ஒரு விரிப்பை விரித்து விற்பனையை ஜோராக்கிவிடுகிறார்கள். இரண்டு மூன்று மணி நேரங்களில் விற்பனையை முடித்துவிட்டு கிளம்பிவிடுவார்கள்.

செல்போன்கள், எலெக்ட்ரானிக் சாதனங்கள், செருப்பு, ஷூ, தோல் பைகள் என சகல ஐட்டங்களும் கிடைக்கும். ஒரேயொரு பிரச்சினை அடுத்த நாள் அதே இடத்திற்குச் சென்றால் அவர் இருக்க மாட்டார். போலீஸ் தொந்தரவு என்று சொல்ல முடியாது. லோக்கல் ஆட்களுக்குத் தெரிந்தால் நெட்டி முறித்துவிடுவார்கள் அல்லவா?

ஷூ தொலைந்த கதையை நண்பர் ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அவரிடமும் ஒரு கதை இருந்தது. நண்பரின் அறைத்தோழனிடம் ஒரு நைந்து போன ஷூ இருந்ததாம். இப்படித்தான் அதையும் ஆட்டையைப் போட்டுவிட்டார்கள். திருமணம் ஆகாதவர். பொழுது போக வேண்டுமல்லவா? அடுத்த நாள் எங்கேயோ சுற்றிக் கொண்டிருந்த போது அவருடைய ஷூ இவரை ‘வா வா’ என்று அழைத்திருக்கிறது. நடைமேடையில் வைத்து விற்றுக் கொண்டிருந்தானாம். ‘எவ்வளவு?’ என்று கேட்டிருக்கிறார். ஐந்நூறு என்றானாம். வேண்டாம் என்று சொல்லிவிட்டுச் சென்றவர் போலீஸாரை அழைத்திருக்கிறார். அதே பகுதியில் ரோந்து சுற்றிக் கொண்டிருந்த போலீஸ்காரர்தான். போலீஸ்காரர் அவனது அங்க அடையாளங்களையெல்லாம் விசாரித்திருக்கிறார். விலாவாரியாகச் சொல்லிவிட்டு அவரையும் அழைத்துக் கொண்டு சென்ற போது அந்த இடத்திலிருந்து அந்தத் திருடன் கம்பி நீட்டிவிட்டான்.

அப்புறம்தான் உறைத்திருக்கிறது. அந்த போலீஸ்காரர் ஒரு ஃபோன் செய்துவிட்டுத்தான் அந்தத் திருடனைப் பற்றியே விசாரிக்க ஆரம்பித்தார் என்பது. அவ்வளவு விலாவாரியாக விசாரித்ததே அந்தத் திருடனுக்கு அவகாசம் கொடுக்கத்தான். இப்படித்தான் second market இங்கே செயல்படுகிறது என்றால் அது அந்தத் தொழிலின் பெருமையையே சிதைத்த மாதிரி ஆகிவிடும். இது ஒன்றும் சாதாரண உலகமாகத் தெரியவில்லை. அதன் பின்னணியில் இருக்கும் மிகப்பெரிய நெட்வொர்க், திருட்டுப் பொருட்களை எப்படி பரிமாறிக் கொள்கிறார்கள் என்பதையெல்லாம் தோண்டித் துருவினால் ஒரு சினிமாவே எடுக்கலாம்.

‘பாவம் உங்க ப்ரெண்ட்’ என்றேன்.

‘ச்சே..ச்சே தனது ஷூவைக் கூட ஐந்நூறு ரூபாய் சொல்லிவிட்டான் என்று உற்சாகத்தில் அவன் இரண்டு நாட்கள் தூக்கம் வராமல் கிடந்தான்’ என்றார். அது சரி. சந்தோஷம் எதில் ஒளிந்திருக்கும் என்று யாருக்குத் தெரியும்?