Jan 9, 2015

இது யாருக்கு?

அவரிடம் முதன் முதலாக ஏழாம் வகுப்பில்தான் பேசினேன். பள்ளி வணக்க வகுப்பில் ஆண்டு விழா போட்டிகளுக்கான தலைப்பை அறிவிக்கும் போது 6,7,8 ஆம் வகுப்புகளுக்கான தலைப்பு ‘பாரதியார்’ என்றார். மாணவர்கள் கலைந்த போது ஓடிச் சென்று “சார் எங்களின் தலைப்பு ‘பாரதியார்’ஆ அல்லது ‘பாரதி - யார்?’ஆ” என்றேன். அவருக்கு அநேகமாக அந்தக் கேள்வி பிடித்திருக்க வேண்டும். சிரித்தார். அதுவரை நினைத்திருந்தபடிக்கு அவர் ஒன்றும் முரட்டு ஆசாமி இல்லை என்று முடிவு செய்து கொண்டேன். அதன் பிறகு அவர் மீதான பயம் குறையத் தொடங்கியது. அடிக்கடி ஏதாவதொரு காரணத்தைச் சாக்காக வைத்துக் கொண்டு அவரைப் பார்க்கச் சென்றுவிடுவேன். கவிதை எழுதினேன்; சிறுகதை எழுதினேன் என்று எதை எழுதிக் கொண்டு போனாலும் வாங்கி வைத்துக் கொண்டு அடுத்த நாள் வரச் சொல்வார். அடுத்த நாள் சென்றால் வரிக்கு வரி பச்சை மையினால் திருத்தியிருப்பார். அவ்வளவு மொக்கையான கவிதைகளையும், கதைகளையும் அவர் அவ்வளவு சிரத்தை எடுத்து திருத்தியிருக்க வேண்டியதில்லை. ஆனாலும் செய்வார். விடாமல் நச்சரித்துக் கொண்டேயிருந்தேன்.

இனியன். அ.கோவிந்தராஜூ.

வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக இருந்தார். பி.எஸ்.ஸி இயற்பியல் படித்தவர். ஆனால் அதன்பிறகு தமிழ் படித்து தமிழாசிரியர் ஆகிவிட்டார். B.Sc.,M.A.,M.Ed., B.L.I.S., D.G.T., D.T.E.,Ph.D என்று அவருக்குப் பின்னால் எழுதப்பட்டிருந்த பட்டங்களின் வரிசை இன்னமும் ஞாபகம் இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் வெறும் ப்ரோமோஷனுக்காக படித்தார் என்று சொல்ல முடியாது. DGT என்பது Diploma in Gandhian Thoughts. இது எந்தவிதத்திலும் பதவி உயர்வுக்கு பயன்படாது. ஆனால் படித்திருந்தார். ஒரு நாள் கூட திருக்குறள் சொல்லாமல் வணக்க வகுப்பை நடத்தியதில்லை. காந்தியின் சிந்தனைகளைப் பற்றி பேசாமல் மேடைப்பேச்சு அமைந்ததில்லை. குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு பற்றி திரும்பத் திரும்ப அறிவுறுத்துவார். சுதேசி இயக்கத்தின் முக்கியத்துவத்தைப் பேசுவார்- இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். 

ஒவ்வொரு மனிதனின் ஆளுமையும் (personality) பள்ளிகளில்தான் கட்டமைக்கப்படுகிறது. அவன் சேர்க்கப்படுகிற பள்ளி, கிடைக்கும் ஆசிரியர்கள் என்பதில்தான் ஒருவனது தலையெழுத்தே நிர்ணயிக்கப்படுகிறது அல்லது அவனது தலையெழுத்துக்கு ஏற்பத்தான் அவனுக்கு இதெல்லாம் அமைகின்றன என்று கூடச் சொல்லலாம். மாணவப் பருவத்தில் ஏதாவதொரு ஒரு ஆசிரியரை நமக்கான ரோல்மாடலாக எடுத்துக் கொள்வோம். மெல்ல அவரது வார்த்தைகளைப் பின்பற்றத் தொடங்குவோம். வெகு காலத்திற்குப் பிறகு திரும்பிப்பார்த்தால் அவரது பாதிப்பு நமக்குள் இருப்பதை உணர முடியும். ஆசிரியருக்கு ஒரு மாணவன் பத்தோடு பதினொன்று. ஆனால் ஒரு மாணவனுக்கு அந்த ஆசிரியர் மட்டும்தான். ஆசிரியத் தொழில் புனிதமானது என்று வெறும் பேச்சுக்கு மட்டுமா சொல்லி வைத்திருக்கிறார்கள்? 

சமீபமாகத்தான் இந்தத் தொழிலையே சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். வெறும் மதிப்பெண் வாங்கிக் கொடுத்தால் போதும் போலிருக்கிறது. வேறு எதுவுமே அவசியமில்லை. ஒரு ஆசிரியர் பேசினார் ‘கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் தெரிந்த பையனைக் கொடுங்க..அவன் எவ்வளவு பொறுக்கியா இருந்தாலும் சரி...நான் பாஸ் செய்ய வைக்கிறேன்’ என்று. இதில் என்ன பெருமை வேண்டிக் கிடக்கிறது என்று தெரியவில்லை. இப்படியான நினைப்போடு ஆசிரியர்கள் இருந்தால் எப்படி இந்தச் சமூகம் உருப்படும்? அவனுக்கு எதுவுமே தெரியவில்லை என்றாலும் தொலைகிறது; அவனது கேரக்டரை மாற்ற வேண்டும் என்பதுதானே ஆசிரியரின் நினைப்பாக இருக்க வேண்டும்?

இனியன் அவர்கள் தலைமையாசிரியராக இருந்த போது ஒவ்வொரு வகுப்பும் ஒரு வாரத்திற்கு வணக்க வகுப்பை நடத்த வேண்டும். இந்த வாரம் ஆறாம் வகுப்பு ‘அ’ பிரிவு என்றால் அடுத்த வாரம் ‘ஆ’ பிரிவு. இப்படியே அனைத்து வகுப்புகளுக்கும் வாய்ப்பு கிடைத்துவிடும். அந்த வாரத்திற்குரிய வகுப்பிலிருந்து ஒருவன் தமிழ் பொன்மொழி சொல்ல வேண்டும்; ஒருவன் திருக்குறள்; ஒருவன் ஆங்கில பொன்மொழி சொல்லி அதற்கு தமிழாக்கம் தர வேண்டும்; இன்னொருவன் தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழி. இப்படி மாணவர்களைத் தொடர்ந்து மேடையேறச் செய்து வந்தார். மற்றவர்களுக்கு எப்படியென்று தெரியவில்லை- எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக மேடை பயம் குறைந்தது. சில திருக்குறள்களை மேடையிலேயே தப்பும் தவறமாகச் சொல்லி மாட்டியிருக்கிறேன். ஆனால் அதெல்லாம் ஒருவிதத்தில் படிக்கட்டுகள்தான். 

சொல்லவில்லை பாருங்கள்- 

அந்தப் போட்டியில் கலந்து கொண்டு ‘பாரதியார்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதிக் கொடுத்தேன். பரிசு கிடைக்கும் என்றெல்லாம் நம்பிக்கையில்லை. ஆனால் நான்காவது பரிசு கொடுத்தார்கள். எதற்காகக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அதன் பிறகு தலையில் இரண்டு முடி நட்டுக் கொண்டது. அதுதான் வாழ்க்கையில் முதல் பரிசு. ஆனால் அதுதான் தூண்டுகோல். ஒரு போட்டியை விட்டதில்லை. சில வருடங்களுக்குப் பிறகுதான் எப்படி நான்காம் பரிசு கிடைத்தது என்ற ரகசியம் வெளிப்பட்டது. அப்பாவின் சித்தப்பா அதே பள்ளியில் தமிழாசிரியராக இருந்தார். தமிழ் பண்டிட் க.கு.சுப்பிரமணியன். வீட்டு விசேஷம் ஒன்றில் ஆண்கள் கூட்டமாக அமர்ந்திருந்த சமயத்தில் ‘வாசு பையன் கட்டுரைப்போட்டிக்கெல்லாம் வர்றான்....என்கிட்டத்தான் திருத்த கொடுத்திருந்தாங்க’ என்றார். அவர் சொன்னது பாரதியார் கட்டுரையைத்தான். என் பெயரைப் பார்த்துவிடு உற்சாகமூட்டுவதற்காக எனக்கு பரிசளித்திருக்கிறார். அவர் இந்தத் தகவலைச் சொன்ன போது வெகுதூரம் முன்னேறியிருந்தேன். நிறையப் போட்டிகளில் கலந்த அனுபவம் கிடைத்திருந்தது.

பாரிமணியம் ராமசாமி, வி.பி.சுப்பிரமணியன், வைத்தியநாதன் போன்ற தமிழாசிரியர்கள் இல்லையென்றால் எழுதுவதிலும் வாசிப்பதிலும் பேசுவதிலும் ஆர்வம் வந்திருக்குமா என்றே தெரியவில்லை. தமிழாசிரியர்கள் வெறும் பாடம் மட்டும் நடத்தாமல் ஏதாவதொருவிதத்தில் உற்சாகமூட்டிக் கொண்டேயிருந்தார்கள். போட்டிகளுக்குச் செல்கிறேன் என்று கேட்டால் வீட்டில் விடமாட்டார்கள். அவர்களுக்கு மதிப்பெண் வாங்க வேண்டும். இப்படியெல்லாம் சுற்றிக் கொண்டிருந்தால் வாழ்க்கைக்கு உதவாது என்று நம்பினார்கள். பாரிமணியம் ராமசாமி ‘காலையில் போய்ட்டு சாயந்திரம் வந்துடலாம்’ என்று வீட்டுக்குத் தெரியாமல் அழைத்துச் சென்ற சம்பவங்கள் உண்டு. டிக்கெட் காசிலிருந்து, மதியச் சாப்பாடு வரை அவருடைய செலவுதான். இதெல்லாம் அவருக்கு அவசியமே இல்லை. பெற்றவர்களுக்குத் தெரிந்தால் சண்டைக்கு வந்துவிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் துணிந்து செய்தார்.

இப்படி எத்தனையோ ஆசிரியர்களை நினைத்துப் பார்க்க முடியும். இருந்தாலும் இனியன் அ. கோவிந்தராஜூவும், தமிழாசிரியர் க.கு.சுப்பிரமணியனும்தான் விதை போட்டவர்கள். இதையெல்லாம் இப்பொழுதே சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்னமும் பயணிக்க வேண்டிய தூரம் வெகு தூரமிருக்கிறது. ஆனால் மசால் தோசை புத்தகத்தை யாருக்கு சமர்ப்பணம் செய்வது என்று நினைத்த போது இவர்கள் இரண்டு பேரின் பெயரும்தான் நினைவுக்கு வந்தது. யாராவது புத்தகம் வாங்கினால் எதற்காக இவர்களுக்கு அர்பணித்திருக்கிறான் என்பது தெரிய வேண்டுமல்லவா? அதற்காகச் சொல்கிறேன்.

வெகு வருடங்களுக்குப் பிறகு தினமலர் நேர்காணல் ஒன்றில் இருந்த எனது எண் வழியாகத் இனியன் தொடர்பு கொண்டார். வெகு சந்தோஷமாக உணர்ந்தேன். பேசும் போது அவரிடம் பேசுவதற்கான வார்த்தைகள் வரவில்லை. பேசி முடித்துவிட்டு ‘எனது அத்தனை வெற்றிகளும் உங்களின் பாதங்களில் மரியாதையுடன் சமர்ப்பணம் சார்’ என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். அதில் எந்த பாசாங்கும் இல்லை. மனப்பூர்வமாக அனுப்பப்பட்ட செய்தி அது.