Jan 7, 2015

பெங்களூரிலிருந்து சென்னை செல்கிறீர்களா?

ஐந்து லட்சத்து பதினாறாயிரத்து அறுபத்தெட்டு ரூபாய். நேற்றிரவு வரைக்கும் நிசப்தம் வங்கிக் கணக்கில் வந்து சேர்ந்துள்ள தொகை இது. கிட்டத்தட்ட எழுபத்தைந்து பேர் தந்திருக்கிறார்கள். அதிகபட்சமாக ஐம்பதாயிரமும் குறைந்தபட்சமாக நூறு ரூபாய் வரைக்கும் அனுப்பியிருக்கிறார்கள். மதுரை முகேஷூக்கு கொடுத்த ஒரு லட்ச ரூபாயையும் சேர்த்தால் மொத்தத் தொகை ஆறு லட்சத்து பதினாறாயிரம். நவம்பர் பதினைந்தாம் தேதி ஆனந்த் அனுப்பி வைத்த முதல் தொகையான ஆயிரத்தொரு ரூபாய் ஜனவரி பதினைந்தாம் தேதி வருவதற்குள் ஆறு லட்சமாகியிருக்கிறது. இரண்டு மாதத்தில் இது எதிர்பார்க்காத தொகை என்பதைவிடவும் பயமூட்டக் கூடிய தொகையாக இருக்கிறது என்பதுதான் நிஜம்.

ஜனவரி பதினைந்தாம் தேதி ஊருக்குச் செல்கிறேன். கோவை ஞானி அவர்களுக்கு நாற்பதாயிரம் ரூபாயும், அரவிந்தனின் அறுவை சிகிச்சைக்காக ஐம்பதாயிரம் ரூபாயும் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்த வாரம் புத்தகச் சந்தை ஆரம்பிக்கவிருப்பதால் சென்னை செல்ல வேண்டும். அதனால் அடுத்த வாரம்தான் இந்த வேலைகளைச் செய்ய முடியும். விரிவான பயணத் திட்டத்தை அடுத்த வாரம் எழுதுகிறேன்.

கடந்த இரண்டு நாட்களாக இன்னொரு மனிதரின் குடும்பத்தோடு பேசிக் கொண்டிருக்கிறேன். உமாநாத். இருபத்தொன்பது வயதாகிறது. ஒரு கட்டிட நிறுவனத்தில் நிதி கணக்காளராக இருக்கிறார். திருமணமாகி ஒன்பது மாதக் குழந்தை ஒன்றிருக்கிறது. கொஞ்ச நாட்களாக கை வலிக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தாராம். அதிகமாக வண்டி ஓட்டுவதால் வலிக்கும் என்று தைலம் பூசிவிட்டதாகச் சொன்ன போது அவரது மனைவியின் குரல் உடைந்துவிட்டது. அது சாதாரணக் கைவலி இல்லை. மாரடைப்பு. இருபத்தொன்பது வயது மனிதருக்கு மாரடைப்பு வரும் என்று யாருக்குத் தெரியும்?

உடனடியாக சென்னை பில்ரோத் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். ஃபேஸ்மேக்கரிலேயே இரண்டு மூன்று வகைகள் இருக்கும் போலிருக்கிறது. இவருக்கு வைக்க வேண்டிய ஃபேஸ்மேக்கருக்கு எல்லாச் செலவுகளும் சேர்த்து ஒன்பதரை லட்சம் வரை ஆகும் என்று சொல்லியிருக்கிறார்கள். உமாநாத்தின் மனைவி சரண்யா தன்னிடமிருந்த நகைகளை எல்லாம் விற்று உறவினர்களின் நகைகளை அடமானம் வைத்து, உமாநாத்தின் நண்பர்கள் புரட்டிக் கொடுத்த தொகை என எல்லாமும் சேர்த்து ஆறரை லட்சம் கட்டிவிட்டார்கள். மீதமிருக்கும் தொகைக்கு வழியில்லை.

சரண்யா ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலையில் இருந்திருக்கிறார். குழந்தை பிறந்ததிலிருந்து வீட்டில்தான் இருக்கிறார். அதற்குள் இந்தப் பிரச்சினை.

இன்று ஐசியூவிலிருந்து வார்டுக்கு மாற்றியிருக்கிறார்கள். உடனடியாக மிச்சத் தொகையைப் புரட்டியாக வேண்டும்.

‘ஏதாவது உதவ முடியுமா?’ என்றார். சரண்யாதான் கேட்டார்.

‘எவ்வளவு தேவை?’ என்றேன். இந்தக் கேள்விக்கு பெரும்பாலானவர்கள் ‘உங்களால் எவ்வளவு முடியுமோ கொடுங்கள்’ என்றுதான் சொல்கிறார்கள். சரண்யாவும் அப்படித்தான் சொன்னார்.

‘வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன். நீங்கள் கேட்கும் தொகையைக் கொடுத்துவிடுகிறேன். ஆனால் உங்களைப் போன்றே இன்னமும் ஏகப்பட்ட பேர்கள் இருக்கிறார்கள். அதனால் உங்களுக்கு எவ்வளவு தேவையோ அந்தத் தொகையை மட்டும் சொல்லுங்கள். தயவு செய்து ஒரு ரூபாய் கூட அதிகமாகக் கேட்க வேண்டாம்’ என்றேன். 

தயங்கியபடியே ‘ஐம்பதாயிரம் கொடுங்க’ என்றார். மீதமிருக்கும் தொகைக்கு சில நண்பர்களிடம் சொல்லி வைத்திருக்கிறாராம். இன்னமும் பதில் வரவில்லை என்றார். நம்பிக்கையில்லாமல்தான் இருக்கிறார்.  ஆனால் ‘அடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டியிருக்கிறது’ என்று நான் சொன்னதால் ஐம்பதாயிரம் போதும் என்கிறார். கொடுமைதான். ஒன்பது மாதக் குழந்தையை வைத்துக் கொண்டு எப்படி சமாளிப்பார்?

சரண்யாவுக்கு ஒரு லட்சம் கொடுத்தால்தான் அவரால் நிலைமையைச் சமாளிக்க முடியும் என்று தோன்றுகிறது. அவருடைய இடத்தில் யார் இருந்தாலும் ‘ஐம்பதாயிரம் போதும்’ என்று சொல்லியிருப்பார்கள் என்று தோன்றவில்லை. ஆனால் சரண்யா சொல்கிறார். பில்ரோத் மருத்துவமனையின் பெயரில் காசோலையை எழுதி வைத்திருக்கிறேன். இன்னமும் தொகை நிரப்பவில்லை. நாளை காலை சரண்யாவுடன் ஒரு முறை பேசிவிடுகிறேன். மிகுந்த சிரமப்படுவதாகத் தெரிந்தால் ஒரு லட்சமாகக் கொடுத்துவிடலாம். யாராவது ஒரு தொகையைக் கொடுத்திருந்தால் ஐம்பதாயிரமாகக் கொடுத்துவிடலாம் என்றிருக்கிறேன்.

காசோலை நேரடியாக வங்கிக் கணக்குக்குச் சென்றுவிடும். சரண்யா கட்ட வேண்டிய தொகையிலிருந்து இதைக் கழித்துக் கொள்வார்கள். 

இப்பொழுது ஒரு உதவி தேவைப்படுகிறது-

வெள்ளிக்கிழமையன்று உமாநாத்தை வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள் போலிருக்கிறது. அதற்குள் இந்தக் காசோலையைச் சென்னையில் சேர்க்க வேண்டும். கூரியரில் அனுப்பினால் அடுத்த நாளே சென்று சேருமா என்று தெரியவில்லை. 

யாராவது பெங்களூரிலிருந்து சென்னை செல்வதாக இருந்தால் தெரியப்படுத்தவும். வியாழக்கிழமை இரவு கிளம்புபவர்களாக இருந்தாலும் சரி. வெள்ளிக்கிழமை காலையில் சென்னையில் சேர்த்தால் போதும். வியாழன் காலை பத்து மணி வரையிலும் பார்க்கிறேன். யாரும் வரவில்லையென்றால் கூரியரில் அனுப்பிவிடுகிறேன். அதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.