Jan 5, 2015

பொறியியல் கல்வி

                                                   இலங்கையில் உயர்கல்வியின் நிலைமை

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளின் அவலநிலை பற்றி பல கட்டுரைகள் எழுதி வருகிறீர்கள். அவற்றோடு ஒப்பிடும்போது இலங்கையில் கல்லூரிகளின் நிலை எவ்வளோ மேல் என்று தோன்றுகிறது.

இலங்கையில், முதலாம் வகுப்பிலிருந்து M.Sc வரை முழுமையான, தரமான இலவசக் கல்வித்திட்டம் அமுலில் இருப்பது தெரிந்திருக்கலாம். எந்த இனத்தையும், எந்தச் சாதியையும் சேர்ந்தவராக இருந்தாலும், கழிவகற்றும் தொழிலில் இருப்பவரின் பிள்ளை கூட, எந்தப் பாரபட்சமும் இல்லாமல் இலவசமாகவே முதலாம் வகுப்பிலிருந்து கல்விகற்று Masters Degree செய்யக்கூடிய நிலை, இங்கே வெறும் கொள்கைரீதியாக மட்டுமல்லாமல், அமுலிலும் இருக்கின்றது.

இவ்வருடம் +2 வுக்கு நிகரான A/L (Advanced Level - உயர்தரம்) எனும் பரீட்சையில் கணிதப் பிரிவில் அகில இலங்கையில் சித்தி பெற்ற மாணவன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழன். மாவட்டங்களின் பரீட்சைத்தாள்கள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு திருத்தப்படுவதால், இவரின் பரீட்சைத்தாளும் சிங்களவர்களாலேயே திருத்தப்பட்டிருக்கும். அவர்களுக்கும் இது யாழ்ப்பாணத்து விடைத்தாள் என்பது தெரிந்தே இருக்கும். இருந்தும் பாரபட்சங்கள் காட்டப்படவில்லை.

இந்த A/L பரீட்சையில் பெறப்படும் z புள்ளிகளைக் கொண்டு ஒவ்வொரு மாணவனதும் rank தீர்மானிக்கப்படுகின்றது. அதில், கணிதப்பிரிவில் முதல் நானூறு பேரும் விரும்பிய அரச பல்கலைக்கழகத்தில் விரும்பிய துறையில் B.Sc செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்களிலும், ஒவ்வொரு மாவட்டத்தின் ஜனதொகைக்கு ஏற்ப, அந்தந்த மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களில், விரும்பிய பாடங்களுக்கு அவர்களது பெறுபேறுகளையும் கருத்தில் கொண்டு (இலவசமாக) அனுமதிக்கப்படுவார்கள். உயிரியல், வணிகம், கலை போன்ற பாடப்பிரிவுகளிலும் இதுபோன்ற முறை பின்பற்றப்படுகின்றது. (உதாரணமாக, யாழ் மாவட்டத்திலிருந்து முதல் 30 பேர் இலவசமாக உயிரியல் படிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்)

இந்த அரச பல்கலைக்கழகங்களின் தரம் பற்றிய கேள்வி, இதைப் படிப்பவருக்கு எழலாம். இலங்கையில் முதலாவது பல்கலைக்கழகங்கள் பிரிட்டிஷாரால் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, சமீப காலங்கள் வரை தனியார் கல்லூரிகள் (பல்கலைக்கழகங்கள்) என்ற பேச்சுக்கே இடமில்லை. விளைவாக, A/L பரீட்சையில் வடிகட்டப்படும் தரமான மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்கள் மூலமே பட்டம் பெற்றார்கள். அரச பல்கலைகளில் (கல்லூரிகளில்) ஒரு சிரேஷ்ட விரிவுரையாளரின் (senior lecturer) சம்பளம் மாதத்துக்கு ஒன்றரை லட்சம் இலங்கை ரூபாய் (எழுபத்து இரண்டாயிரம் இந்திய ரூபாய்). யாழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் விரிவுரையாளருக்கும் தென்னிலங்கையில் ஒரு சிங்கள விரிவுரையாளருக்கும் ஒரே சம்பளம்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, மிகத் தரமான கல்வி பல அரச பல்கலைக்கழகங்களில் வழங்கப்பட்டு வருகின்றது.

சமீப காலங்களில், தற்போதைய அரசாங்கத்தின் குளறுபடிகளால், தனியார் பல்கலைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு வருகின்றன. அவை, தரமற்ற மாணவர்களை உள்ளெடுப்பதோடு, அரச பல்கலைகளின் தரமான ஆசிரியர்களையும் பெரிய சம்பளத்தைக்காட்டி ஈர்க்க முனைகின்றன. உதாரணமாக, அரச பல்கலைக்கழகம் ஒன்றில் பொறியியல் படிப்பதற்கு, ஒரு மாணவன் பொதுவாக கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்று பாடங்களிலும் A சித்தி (மூன்று A) அல்லது 2A ஒரு B போன்ற அதிஉயர் பெறுபேறுகளை  பெறுதல் அவசியம். ஆனால், மூன்று பாடங்களிலும் சாதாரண சித்தி கூட பெறாத, fail அடைந்த மாணவர்கள் பல லட்சங்கள் பணம் கட்டினால், அவர்களை Aeronautical Engineering இல் பட்டம் பெறவும் அனுமதிக்கின்றன. 

இத்தகைய பிரச்சனைகளால், தனியார் கல்லூரிகளை மூடவேண்டும் எனும் போராட்டம் இலங்கையில் அவ்வப்போது தலைதூக்குகிறது. அரச பல்கலைக்கழகங்களின் (தமிழ், சிங்கள, முஸ்லிம்) விரிவுரையாளர்கள், மாணவர்கள் போன்றவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

என்னதான் தனியார் கல்லூரிகள் வந்தாலும், தனியார் கல்லூரிக்கு பணம் கட்டும் மாணவனை, சமூகத்தில் மதிப்பதில்லை. எல்லாப் பெற்றோருமே, தங்கள் பிள்ளைகள் உயர்தரப் பரீட்சை ஊடாக அரச பல்கலைக்கழகங்களில் (கல்லூரிகளில்) அனுமதி பெற வேண்டும் என்றே விரும்புகிறார்கள். இந்த ஆரோக்கியமான சமூக மனநிலைக்கு இலவசமாக கிடைக்கும் கல்வியும், அரச பல்கலைகளின் தரமும், வேலை வாய்ப்புக்களும் காரணம். 

எனவே, இலங்கையில், இலவச உயர்கல்வியின் நிலை தற்போது மிக நன்றாக இருக்கிறது. தனியார் கல்லூரிகளை இங்கே அனுமதித்தால், தமிழகத்தின் நிலைதான் இங்கேயும் ஏற்படும்.

- அபராஜிதன்.

                                                                      ****

                                         வங்கிகளும், கல்விக்கடன்களும்

பொறியியல் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு பற்றி நிறைய பதிவுகளை இட்டிருக்கிறீர்கள். ஒரு வங்கியின் முது நிலை மேலாளர் என்ற முறையில் கல்விக்கடன் பற்றியும் அதன் அரசியல் பற்றியும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

முந்தைய மத்திய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தனது துறைகளுடன் கல்விக்கடன் வழங்கும் துறையையும் தானே சேர்த்துக் கொண்டு தமிழ் நாட்டில் தீவிரமாக இயங்கி வந்தார். பொதுக் கூட்டங்களிலும் மற்றும் வாய்ப்புக் கிடைக்கும் இடங்களிலும் கல்வி நமது உரிமை என்பது போல முழங்கி வந்தார். அதன் அடிப்படையான எண்ணம் அனைவருக்கும் கல்வி என்பதை விட அனைத்து கல்லூரி முதலாளிகளுக்கும் ஆள் பிடிப்பது என்பது போலவே இருந்தது. கல்விக் கடன் வழங்காத மேலாளர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், ரிசர்வ் வங்கியிலும், அந்த அமைச்சரின் துறையிலும் புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. அவை குறித்தும் அவற்றை அவர் கையாண்ட விதம் குறித்தும் பத்திரிகைகளில் தினம் ஏதாவது ஒரு செய்தி இருக்கும். ஆனால், அனுமதிக்கப்பட்ட கட்டணத்திற்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களும் அக்கல்வி நிறுவனங்கள் குறித்து எந்த இடத்திலும் புகார் அளிக்கவில்லை. விளைவு என்ன ஆயிற்று? அடிப்படைகள் தெரிந்திருக்கிறதோ இல்லையோ அனைவரும் பொறியியல் படித்தனர். இரண்டாம் வருடக் கட்டணத்திற்கு கடன் பெற வரும் மாணவ மாணவியரில் 80 சதவிகிதம் பேர் Engineering Mathematics-1ல் அரியர் வைத்திருந்தனர். அவர்களுக்கு வங்கி கடன் அளிக்காமல் இருக்க முடியாது. கடன் வழங்கினால்தான் அவன் படிப்பைத் தொடர முடியும் படிப்பைத் தொடர்ந்தால்தான் அந்த அரியரை முடிக்க முடியும். முதல் வருடத்தில் ஒர் அரியர், இரண்டாம் வருடத்தில் இரண்டு என Geometric Progression ஆக அரியர்கள் ஏற எந்த நிறுவனம் அவர்களுக்கு வேலை வழங்கும்? Practical/Internalகளில் வரும் மதிப்பெண்களின் மூலமாக மட்டுமே படிப்பை முடித்தவர்கள் பெரும்பாலானவர்கள். 

முதல் தலைமுறை மாணவர்கள் உருவாக சாத்தியம் இல்லை என நான் கூற முற்படவில்லை. அதற்கு உழைப்பு அவசியம். கல்வி நிறுவனங்கள் அந்த உழைப்பை ஊக்குவிக்காமல், ஸ்போக்கன் இங்கிலீஷ், பெர்சனாலிட்டி டெவலப்மென்ட் என்று கூறி அவற்றிற்கும் பல்லாயிரக் கணக்கில் கூடுதல் கட்டணம் வசூலித்தன,

அரசின் தயவால் கல்லூரிகளும் அவற்றின் முதலாளிகளும் திளைத்தனர். பின்பு கல்லூரிகளை விற்றனர். மாணவர்கள் படிப்பை முடிக்காமல் கடன் சுமையுடன் இருக்கின்றனர். இதுதான் நிலைமை. வட்டிக்கு மானியம் அளிப்பதாக அமைச்சர் கூட்டங்களில் கூறினார். மக்கள் அனைவரும் வட்டி தள்ளுபடியாகி விட்டதாக நினைத்துக் கொண்டு வங்கியைத் திரும்பிப் பார்ப்பதில்லை. எங்களுக்கு அளிக்கப்படும் மானியம் முழு வட்டிக்குமானது இல்லை. 

இவற்றை விளக்க முற்பட்டால், ஏதோ வங்கிகள் மட்டுமே மக்கள் விரோதப் போக்கை கடைப் பிடிப்பதாக மக்கள் சண்டைக்கு வருகின்றனர் - தாங்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்பதை உணராமலேயே.

V.கண்ணன்