Jan 5, 2015

சூப்பர் ஃபாஸ்ட் 10

இன்றும் அடித்து நொறுக்கிவிட்டார்கள். முதல் போட்டியை நடத்திய போது வெள்ளிக்கிழமை. நிறையப் பேருக்கு புத்தாண்டு விடுமுறை. நேரமிருந்திருக்கும். ஆனால் இன்று வாரத்தின் முதல் நாள். காலை நேரம். எப்படியும் மாலை வரைக்கும் காத்திருக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆச்சரியமாக இருக்கிறது. பதினாறு பேர்கள் அனுப்பியிருக்கிறார்கள்.

இங்கு யாருமே  ‘நான் மட்டும்தான் எழுத்தாளர்’ என்றெல்லாம் பெரிதாக மார் தட்டிக் கொள்ள வேண்டியதில்லை என்பதை மிக அடக்கமாகச் சொல்கிறார்கள் என நினைக்கிறேன். ஏகப்பட்டவர்கள் இங்கு அமைதியாக இருக்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் தூள் கிளப்பிஃபையிங்!

வந்திருந்த கட்டுரைகளில் முதல் பதினொன்றை மட்டும் எடுத்துக் கொண்டேன். பதினோரு பேருக்கும் வாழ்த்துகள். முகவரியை அனுப்பி வைத்தால் புத்தகம் வந்தவுடன் அனுப்பி வைத்துவிடுகிறேன். 

கட்டுரைகளை அனுப்பியிருந்த அத்தனை பேருக்கும் மனப்பூர்வமான நன்றி. ஸ்பான்ஸர்களுக்கும் நன்றி. புத்தகக் கண்காட்சிக்கு முன்பாக இருநூறு பிரதிகள் விற்றால் பதிப்பாளர்களைச் சிக்க வைத்த பாவத்திலிருந்து தப்பிவிடுவேன் என்று நினைத்திருந்தேன். தப்பித்துவிடுவார்கள் போலிருக்கிறது.

                                                                         *******


1.எனக்கு வாய்த்த வாத்தியார்

எனக்கு வாய்த்த வாத்தியார்களில் பிடித்தமானவர் ராஜேஷ், திருசெங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரியில் பி.எஸ்.சி படித்தபோது இரண்டு பாடங்களுக்கு வகுப்பெடுத்தார். வகுப்புத் தொடங்குவதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்பே வகுப்பறைக்கு வெளியே வந்து நின்று கொள்வார்.  ‘எதற்காக இந்த ஓவரு அலப்பரை’ என்று நாங்கள் சீண்டுவதுண்டு. ஆனால் "எனக்கு நெறைய வேர்க்கும் டா, வேர்க்க விறுவிறுக்க உங்க முன்னாடி நின்னா நல்லாவா இருக்கும்" என்று அசால்ட்டாக எங்கள் சீண்டலை கடந்து செல்வார். 

அவரது வெற்றியாக நான் நினைப்பது "மாணவர்களில் ஒருவராக" அவரை அடையாளப்படுத்திக் கொண்டதை. வாத்தியார்களுக்கே உண்டான பிரத்யேக மொழி அவரிடம் இருந்ததில்லை, பதினெட்டு வயதில் நாங்கள் பேசிய ஒருவித குறும்பு மொழியையே அவரும்கையாண்டார். மூன்றாண்டுகளில் ஒருமுறை கூட அவர் காலம் தாழ்த்தி வகுப்புக்கு வந்தது கிடையாது. தன் சொந்த அனுபவங்களில் இருந்து நிறைய விசயங்களைப்பகிர்ந்து கொள்வார். பொதுவாகக் கல்லூரிகளில் இருக்கும் "நான் சொல்றேன், நீகேளு" என்னும் “Teacher Centric” வகுப்பறையை , பெரும்பான்மை வகுப்பறை நேரத்தை மாணவர்கள் முன்னெடுக்க செய்யும் "Student Centric” வகுப்பறையாக மாற்றிக் காண்பித்தார். கிரிக்கெட்டிலிருந்து, அரசியல் மற்றும்
காதல் வரையிலும் வகுப்புகளில் பேசியிருக்கிறார். 

அவர் செய்யக்கூடிய விசயங்கள் ‘கல்லுடைத்தவர்கள்’ திடீரென ‘கல்வித் தந்தை’களாக மாறிய இந்தக் காலக்கட்டத்தில் எவ்வளவு சவாலானவை என்பதைப் பின்னாளில் அதே ஆசிரியர்பணிக்குச்சென்றபோது தான் எனக்குப் புரிந்தது. 

ஒரு சந்தர்ப்பத்தில் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக எனக்குப் பணி கிடைத்தது. என்னையும் அறியாமல் அவரைப் பின்பற்றத் தொடங்கினேன். அவரது கற்பித்தல் முறையையே வகுப்பறையில் செயல் படுத்தினேன். அவர் பேசிய விசயங்களை நானும் பேச முயன்றபோது, அது ’கல்வித் தந்தைகள்" நம்பிக்கொண்டிருக்கும் கற்பித்தல் முறைக்கு எதிரானது என்று புரிந்தது. இத்தனை சவால்களுக்கு இடையில் புதியனவற்றை அவர் எப்படிச் சாத்தியப்படுத்தினார் என்று நினைக்கையில் இன்னும் அவர்மீது அன்பு கூடுகிறது.

- டி.என்.ஆர். ராகவேந்திரன்
                                                                     ***

2. இத்தினி அண்ணன்

இத்தினி அண்ணை என்றுதான் அழைக்கப்பட்டார். பிள்ளையார் கோவிலுக்குப்பக்கத்து வீடு. காலை, மாலை இரண்டு வேளைப்பூசைகளிலும் தவறாமல் மணியடித்துக் கொண்டிருப்பார். அமைதியானவர். வீபூதிக்குறியும், வேட்டியும் சில வேளைகளில் வெள்ளைச்சாரமுமாக மங்களகரமாக இருப்பார்.

தொண்ணூற்றைந்தாமாண்டு இடம்பெயர்வுக்குப் பிறகு மூன்று வருசங்கள் கழித்துப் பார்த்தபோது ஆளே மாறியிருந்தார். அதேமாதிரி அமைதியாகக் கோவிலில்தான் நின்றுகொண்டிருந்தார். எண்பதுகளின் ஹீரோ மாதிரி அழகாக கொஞ்சம் குண்டாக இருந்த அண்ணன், இப்போது இரண்டாயிரங்களின் கல்லூரியில் கூடப்படிக்கும் முப்பத்தைந்துவயதுக் கதாநாயகனின் எடுபிடி நண்பனாக ஒடிந்துவிடும் ஒல்லியாக வெடவெடப்பாகக் காற்றில் பறக்கும் சட்டையுடன் வரும் பாத்திரம்போல மாறியிருந்தார். வட்டமுகம் நீண்டுபோய் மொத்தமாக உருக்குலைந்து போயிருந்தார்..

எல்லாத்துக்கும் கிபீர் தான் காரணம் என்றார்கள். கிபீர் என்கிற இலங்கை விமானப்படையின் இஸ்ரேல் தயாரிப்பு சண்டை விமானத்தின் பெயரால் அழைக்கப்பட்டது கசிப்பு என்கிற சோமபானம். கிபீர் என்பது காரணப் பெயரா? அடித்தவுடன் மிக விரைவாக தாக்கும், உடனேயே தூக்கும் பலத்த விளைவுகளை உண்டுபண்ணும் இப்படியான குணங்களைக் கொண்டதால் ஏற்பட்டதா, தெரியவில்லை. சட்டவிரோத வடிசாராயமான கசிப்புவின் தயாரிப்பில் ஈய பற்றரி, செத்த ஓணான், இன்னபிற வஸ்துகள் சேர்க்கப்படுவதாகச் சொல்வார்கள். 'குறைந்த செலவில் அதியுச்சபயன்' என்பதுதான் கசிப்பின் தாரக மந்திரம் என்பார்கள். 

ஒரு ஜனநாயக நாட்டில் சட்டவிரோதமான பொருட்களெல்லாம், சட்டவிரோதமாகவே தொடர்ந்தும் தயாரிக்க ஒரு சட்டவிரோத சுதந்திரம் இருப்பதால் கசிப்பு உற்பத்தி பகிரங்கமாக அறியப்பட்ட இடங்களில் ரகசியமாகத் தயாரிக்கப்பட்டு வந்தன. இப்போதும் இருக்கலாம். மாலையில் சைவப்பழமாக மெல்லிய புன்னகையுடன் சற்றே தலையசைத்துக் கடந்துபோகும் இத்தினி அண்ணன் இரவு ஒன்பது மணிக்கு வேறு மனிதனாகக் குரல் கொடுக்க ஆரம்பிப்பார். கெட்ட வார்த்தைகள் எல்லாம் சொல்வதில்லை. 'அய்யோ' என்பதாக ஆரம்பித்து, அவ்வப்போது ஏதாவது புலம்பல்களாகத் தேயும் அவர் குரல் கேட்காத நாட்களில், 'எங்க சத்தத்தைக் காணேல்ல', 'இத்தினி குய்யோ முறையோ எண்டு கத்தும்' என்பதாக அயலவர்களால் அன்பாக விசாரிக்கப்பட்டார். வயிற்றில் பிரச்சினை அல்சரால் அவதிப்படுகிறார் என்றார்கள். ஏற்கனவே சாப்பிடுவது குறைவு, கசிப்பு வேறு அல்சர் வயிற்றில் பதம்பார்க்க, அந்த வலி ம(ர)றக்க மேலும் குடி என முழுமையான குடிமகனாக மாறிப்போனார்.

அந்தமுறை பிள்ளையார் கோவில் திருவிழா முடிந்து சிலநாட்கள் அண்ணன் தெளிவாகக் காணப்பட்டார். திருவிழாவின்போது குடியை நிறுத்தி அப்படியே தொடர்வதாகச் சொன்னார்கள். முகம் தெளிந்து கோவிலில் புத்துணர்ச்சியுடன் நின்றிருந்தார். அவருக்குத் திருமணத்துக்குப் பெண் பார்ப்பதாகவும் சொன்னார்கள். இரவில் அவர் சத்தம் போடுவதில்லை. அன்று நள்ளிரவு நேரம் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டோம். இத்தினி அண்ணன் வீட்டிலிருந்துதான் யாரோ கத்தினார்கள். சண்டையா? தெரியவில்லை. பின்னர் அப்பா, அப்பா என்று குரல் கேட்டது. அவரது அப்பாவுக்கு உடம்பு சரியில்லையா? போய்விட்டாரா? வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுவிட்டதாக நள்ளிரவில் சத்தம் கேட்டு வீதிக்கு வந்துநின்ற அயலவர் யாரோ பேசிக் கொண்டார்கள். காலையில் அமைதியாக இருந்த பிள்ளையார் கோவிலடியில் வாழைமரம் கட்டிக் கொண்டிருந்தார்கள். இத்தினி அண்ணன் இறந்து போயிருந்தார்.

- ஜீ உமாஜி

                                                 ***
3. ரஜினிகாந்த்

நான் பத்தாவது படித்துக்கொண்டிருந்த போது சென்னையில் டியூஷன் சென்று கொண்டிருந்தேன். அந்த வீட்டு ஹவுஸ் ஓனர் ஒரளவுக்கு பிரபலமான பிண்ணனி பாடகி. அவருக்கு ஒரு மகன் இருந்தான். என் வயது தான் இருக்கும். சரியாக படிப்பு வராது, ஆனால் பிரமாதமாக கீபோர்டு வாசிப்பான். பல நேரம் என்னிடம் வந்து கச்சேரி கதைகளை சொல்லிக் கொண்டிருப்பான். அவற்றில் எப்போதும் ரஜினிகாந்த் என்றொரு கேரக்டர் கண்டிப்பாக வந்துவிடுவான். யாரும் யோசிக்க முடியாத குறும்புகளை எப்போதும் செய்வதாக -அந்த வயசுக்கு ‘மீறிய’ சில்மிஷங்கள் அதில் இருக்கும். 
அதனால், எப்போது அந்த ரஜினிகாந்தை சந்திக்க முடியும் என நான் கேட்பதும், அவன் ‘இன்னொரு நாள் சொல்றேன்’ என்பதும் தொடர் கதையாக இருந்தது. சரி, அவனை நமக்கு அறிமுகம் செய்ய விருப்பமில்லை போல என விட்டு விடுவேன். ஒரு நாள், அவன் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் குடியிருந்த நண்பனிடம் ரஜினிகாந்த் பற்றி கேட்டபோது சொன்னான்:

 “அந்த ரஜினிகாந்த்தே அவன் தாண்டா!”

நவீன்
                                                 ***

4. சொத்தையில்லாத மனிதர்

நான் என்னுடைய நண்பர் அப்பா பற்றி எழுதப் போகின்றேன். அவரை நான் நேரில் பார்தது கூட இல்லை. அவர் ஒரு விவசாயி. காய்கறிகளைச் சந்தைக்கு கொண்டு செல்லும் ஒரு  விவசாயி. அவர் ஒரு சின்ன சொத்தை அல்லது வேறு பாதிப்பு இருந்தால் கூட அந்த காயயை சந்தைக்கு எடுத்து செல்ல மாட்டார்.  ‘ஏன் இப்படி பண்ணுறீங்க’ என்று யாராவது கேட்டால்.  ‘நீ சொத்தை காய் காசு கொடுத்து வாங்குவாய்யா’ என்று கேட்பார். அவர் காய் தான் முதலில் விற்பனையாகுமாம். ஒருநாள் காய் வரவில்லை என்றால் கடைக்காரர் ஏன் வரவில்லை என்று கேட்பார்களாம். அந்த அளவுக்கு மதிப்பு அவருடைய காய்க்கு. நம்மை சுற்றி எவ்ளோ ஆசிரியர்கள் இருக்கிறார்கள் பாருங்கள். அவருடை காய் வாங்கும் நுகர்வோர் மிக்க மகிழ்ச்சி அடைவார்களாம்.

-நித்தியானந்தன்
                                                
***


5. பம்பக்கொட்டு தாத்தா

எனக்கு விபரம் தெரிந்தநாள் முதல் எங்கள் ஊருக்கு சீப்பு, கண்ணாடி, பொட்டு, வளையல், ஜடைமாட்டி, கம்மல், கழுத்துபாசி, கண்மை, பெண்களின் உள்ளாடை, நைட்டி என்று பெண்கள் சமாச்சாரங்களை தேடிப்பிடித்து விற்க வருபவர்தான் குறும்புக்கார இளைஞர் பம்பக்கொட்டு தாத்தா. அவரது பெயர்க்காரணம் சொல்லாவிட்டால் இந்த சமூகம் பழித்து பேசும் என்பதால் முதலில் அதை கூறிவிடுகிறேன். அவரது முதல் அடையாளமே தளதளக்கும் தலைமுடிதான். சில்லென்று ஒரு காதல் படத்திலுள்ள ஜோதிகாவின் சிகையோடு அவரது சிகையை ஒப்பிட்டால் அது மிகையாகாது. அந்த கருப்பு,வெள்ளை கலந்த நீண்ட கூந்தலை விளக்கெண்ணெய் தேய்த்து.உச்சி வகுடெடுத்து சீவியிருப்பார் .கூந்தலின் மடிப்பு கலைந்து இதுவரை நான் பார்த்ததில்லை. அதுவும் பின்புறம் கூந்தல் முடியும் இடத்தில் மேல்நோக்கி சுருண்டு நிற்கும் அந்த சுருள்முடி பாகவதரை நினைவூட்டும். சட்டைக் காலர் அழுக்காகாமலிருக்க கைக்குட்டையை இலகுவாக மடித்து காலரில் வைத்திருப்பார்.

எங்கள் ஊரின் நுழைவுவாயிலான பாலத்தில் நுழைந்தவுடன் கையில் வைத்திருக்கும் சிறுகொட்டை அடிக்கத் தொடங்கிவிடுவார். வளர்ந்த கூந்தலை பம்பை என்று கிராமப்புறங்களில் அழைப்பர். பம்பையும் கொட்டும் இணைந்து அவருக்கு “பம்பக்கொட்டு தாத்தா” என்ற பெயராகியது.

அவரது மற்றொரு அடையாளம் சைக்கிள். டயர் ரிம்முக்கு கருப்பு, சிவப்பு கலந்து வண்ணம் தீட்டியிருப்பார். இருபக்க மட்காடுகளிலும் கலைஞர் சிரித்துக் கொண்டிருப்பார்.பிய்ந்துபோன இருக்கையில் சாக்கு வைத்து கட்டியிருப்பார் பிருஸ்டத்தை அழுத்தாமலிருக்க இரண்டு கைப்பிடியிலும் பிய்ந்துபோன ஒலிநாடா சுருள் தொங்கிக்கொண்டிருக்கும். பெரிய அகலமான பின்பக்க இருக்கையில் கருப்பு,சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட பெரிய மரப்பெட்டி கட்டப்பட்டிருக்கும்.கலைஞரின் வெறித்தனமான அபிமானி என்பதை வேஸ்டி, துண்டு, சைக்கிள் என எல்லாவற்றிலும் வெளிப்படுத்துவார். அவரின் மிகப்பெரிய பலம் எல்லோரிடமும் அன்னோன்யமாக பேசுவது.எல்லோரது பெயரும் தெரியும். பெண்களை “டீ” போட்டுதான் கூப்பிடுவார். அவர்களும் அதை ரசிப்பர்.

அதிலும் புஸ்பம் அத்தையை,“ஏடீ புஸ்ஸுபம் கண்டங்கரேன்னு இருக்கிய இந்த பவுடரு கிவுடரு வேங்கி பூசேன்.அந்த முருகம்பயல் பெறவு உங்கிட்டேயே தான் சுத்துவான்” என்பார்.

“ம்க்கும்..ஏற்கெனவே மூணுபிள்ள ஆயிட்டு. இதுல இது ஒண்ணுதான் குற”என்று கூறியவாறே அவளும் வாங்கிக் கொள்வாள்.

அப்படியே ஒவ்வொருவரிடமாய் வழக்களந்து செல்லச் செல்ல கூட்டம் கூடிவிடும். அவரின் நையாண்டிப் பேச்சை கேட்பதற்கென்றே ஒரு கூட்டம் கூடும். ஆளு பயங்கரமான வில்லன். பெண்களை நோட்டமிட்டவாறே உள்ளாடை அளவை சொல்லிவிடுவார். அந்த அளவுக்கு ஜகஜால கில்லாடி. அதுவும் சிலபேரிடம், “இந்த கோட்டிக்கார சிறுக்கிக்கு தொங்கி போச்ச. இனும எங்கெ இந்த மாடசாமி பய ஏத்து பாப்பான்.இத வேங்கி போடுடீ நல்லா விளஞ்ச கொய்யாக்காமாதி ஆவும்”

“உம்மெல்லாம் கட்டிக்கிட்டு அந்த கிழவி என்னபாடு படுதோ?”என்று தலையில் அடித்தவாறே செல்வாள் அந்தப் பெண்.

வாரத்திற்கொருமுறை தான் விஜயம் செய்வார். ஒரு நாளைக்கு இரண்டு ஊர் வீதம் சுற்று வட்டார பகுதி முழுவதையும் கவர்ந்து விடுவார். குட்டி குழந்தைகளுக்கு இலவசமாக அவரே கண்மை திட்டுவார். இளங்குமரிகளுக்கு எப்படி தங்களை அழகுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று டிப்ஸ் கொடுப்பார். ஆண்களிடம் அவர்களது தொழில் பற்றி விவாதிப்பார். கிட்டத்தட்ட எல்லோர் வீட்டிலும் ஏதாவது ஒரு ஆகாரம் அருந்திவிடுவார்.

கல்லூரிக்கு படிக்கச் சென்ற நாள்முதலே அவரை பார்ப்பது அரிதாகிப் போய்விட்டிருந்தது. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாகிவிட்டது அவரைப் பார்த்து. அடிக்கடி அவரைப்பற்றி நினைத்துக் கொள்வேன். ஒவ்வொருமுறை ஊருக்கு செல்லும் போதும் எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று எண்ணியவாறே மறந்துவிடுவேன். இந்தமுறை சரியாக நினைவில் வைத்துக் கொண்டு பக்கத்து ஊரிலிருக்கும் அவரது இல்லத்திற்கு சென்றேன். முற்றத்தில் கிடந்த நார்கட்டிலில் படுத்தவாறே விசிறிக் கொண்டிருந்தார். தோல் சுருங்கி எலும்புடன் ஒட்டி உருகிப்போயிருந்தது. தலைமுடி அப்படியே இருந்தது மடிப்பு கலையாமல்.

அவருக்கு என்னை துளியும் அடையாளம் தெரியவில்லை.அப்பா பெயரையும் ஊர் பெயரையும் சொல்லவும் நினைவுபடுத்திக் கொண்டார். எல்லோரையும் விசாரித்து விட்டு, ஐந்து வருடங்களாக முடக்குவாதத்தால் நடக்க முடியவில்லை என்றும், வியாபாரத்திற்கு செல்லமுடியவில்லை என்றும் கூறினார். வண்ணம் உரிந்து, கலைஞர் பாதியாகி துருப்பிடித்து வீட்டின் சந்தில் கிடந்தது அந்த சைக்கிள்.ஏனோ மனது கனத்து கிடந்தது. வீட்டிற்குள் கிடந்த பாட்டியின் கையில் நூறு ரூபாயை திணித்தவாறே விடைபெற்றேன்.

- செந்தில்குமார்
                                                            ***

6. மானம் பெரிதென கொள்

இரா.சம்பந்தம் பதினேழு வயதிலிருந்தே தன்னுடைய பெரிய குடும்பத்தை தன்னந் தனியாளாக சுமந்தவர். கம்யூனிசத்தால் சிவந்த மண்ணான கீழவெண்மணிக்கு நான்கு மைல் தொலைவிலுள்ள வண்டலூர் ஊர் தான் இவருக்கு. அப்பாவின் இறப்புக்கு பின்னால் உடன்பிறந்த மூன்று சகோதரிகள் மற்றும் மூன்று சகோதரர்களுக்கு என அனைவருக்கும் திருமணம் செய்து வைத்து தானும் முப்பத்தைந்தாவது வயதில் திருமணத்தை முடித்து கொண்டார். தன்னுடைய சம்பாத்தியத்தாலும் தனக்கடுத்த தம்பியின் உதவியாலும் ஓரளவு குடும்பத்தை சமாளித்து கொண்டிருக்க கூடிய சூழலிலும் அரசியல் பக்கமும் இருவரும் தலைக்காட்டினர். இந்த கதையெல்லாம் எழுபதுகளில் நடைபெற்றவை. 

அப்போது தான் திராவிடப்பிரிவினையும் தமிழ்நாட்டில் அரங்கேறியது. அன்றைக்கு எம்.ஜி.ஆர் என்ற புது அரசியல் எழுச்சிக்கு பிறகும் கூட டெல்டா பகுதியில் பெரிய பாதிப்பில்லாத பல கிராமங்கள் இருந்தன. அப்படிப்பட்ட கிராமங்களில் ஒன்றாக வண்டலூரும் இருந்த போது, படிப்படியாக தன்னுடைய ஆளுமையால் கம்யூனிச மண்ணில் அண்ணாவின் கொடியை ஏற்றி வைத்து பல முறை ஊராட்சி தலைமையை கைப்பற்றும் அளவுக்கு வளர்த்தெடுத்தார். முப்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அரசியல் பங்களிப்பில் பெரிய பதவி எதையும் பெற்றுக்கொள்ளவில்லை. கடைசி வரை கிளை பொறுப்பில் செயலாளராகவே இருந்துவிட, அதையும் சாதிய பின்புலத்தால் தன் மகனின் வயதை விட இளையோன் ஒருவன் தன் சொந்த பந்தங்களின் ஓட்டு எண்ணிக்கையை கணக்கில் காட்டி ஊராட்சி செயலாளர் பதவியையும் ஆக்கிரமத்துக்கொள்ள, மிச்சமுள்ள ஊர் மக்களெல்லாம் கூடி முடிவெடுத்தார்கள்.  “அடிதடி வெட்டு குத்துயென உயிரை பணயம் வைத்து அண்ணாவை செம்மண்ணான வண்டலூரில் அடையாளப்படுத்தினோம். ஆனால் நம்மையே உதாசினப்படுத்திய பிறகு இனியும் இங்கிருப்பது வீண்” என்று. மானம் பெரிதெனக் கொண்டு எதிரணியை பலம்கொள்ள செய்தனர். இத்தனை காலமாய் கட்டியிருந்த கட்சிக்கரை வேட்டிகளெல்லாம் சலவைசெய்யப்பட்ட பின்னாலும் பீரோவில் மட்டுமே அலங்கரிக்க போகின்றன.  கடைநிலை அரசியல்வாதியும் கட்சி மாறலாம். காட்சிகள் கலகம் செய்யும் போது எதுவுமே தப்பில்லை. இதையெல்லாம் சொல்வதால் இரா.சம்பந்தம் என்ற எளியவர் என் தந்தை என்ற அக்கறையால் மட்டுமல்ல. ஏனெனில் மானம் அனைத்தையும் விட பெரிது.

இரா.ச.இமலாதித்தன்

                                                         ***

7. என் தோழர்

நான் சந்தித்ததிலே என்னை கவர்ந்தவர் என் தோழர் கருணாகரன். என்னை விட 23 வயது மூத்தவர். அவருடன் தொலை பேசியில் உரையாடும் பொது ஒரு போதும் என்னை விட அவர் மூத்தவர் என்று உணர்ந்ததில்லை. அவர் உணர்த்தியதும் இல்லை. என் சித்தப்பாவின் கல்லூரி நண்பர் அவர். ஆனால் எனக்கு மிகவும் நெருங்கிப் போனார் .சென்னை போகும்போதெல்லாம் எனக்கு வழிகாட்டி, நண்பர் இரண்டுமே அவர்தான். என் கோமாளித்தனமான பயண பயங்களை போக்கியதும் அவர்தான்.

வாழ்க்கையில் மிகவும் வேதனைக்குள்ளானவர். பணக்காரனாய் பிறந்து வளர்ந்து வறுமையில் வாடும் நிலைக்கு உள்ளானவர் எல்லாவற்றிற்கும் காரணம் அவர் நல்ல குணம் தான். அவர் மாதிரி நல்லவரை நான் கண்டதும் இல்லை கேட்டதும் இல்லை. தன்னைக் கொண்டு வாழ்வில் முன்னேறி தன்னை கண்டு கொள்ளாதவர்களை கூட அவர் உயர்வாக தான் பேசுவார். ‘அவன் நிலை என்னவோ’ என்று தனுக்குத் தானே ஆறுதல் சொல்லி கொள்வாரே தவிர, மற்றவரைக் குறை சொல்ல மாட்டார். அதுதான் அவரிடம் என்னை கவர்ந்த ஒன்று. எப்போதும் தன் அப்பா பற்றியே பேசிக் கொண்டிருப்பார் . 

நான் இப்போது வருத்தப் படுகின்ற மாதிரி யாரும் பின்னால் வருத்த படக் கூடாது என்பது தான் அவர் அவா. என்னிடம் அதை அடிக்கடி சொல்வார். நட்பு என்ற ரீதியில் நிறையப் பேர் தெரிந்தே அவரிடம் பணம் பறித்ததுண்டு. அனால் யாரோ ஒருவனுக்கு உதவியதாய் அந்த ஏமாற்றத்தை எடுத்து கொள்வது கண்டு அதை கண்டு நான் அவரை திட்டியதுண்டு. ஆச்சர்யப்பட்டதுமுண்டு. 

எப்போதுமே தன்னை குழந்தையாய் பாவித்துக் கொள்ளும் அவர் புன்சிரிப்பு இன்னும் என் காதில் கேட்டு கொண்டே இருக்கிறது. அத்தைகைய மனிதர் மாரடைப்பில் இறந்தார் என்பது தான் ஆச்சர்யம். நல்லவனாய் இறப்பதுதான் மனிதனின் முதல் தகுதி என்றும், மகிழ்ச்சியாய் இருப்பது அவரவர் மன நிலை பொறுத்தது என்று சொல்லி காட்டியதோடு நில்லாமல் வாழ்ந்து காட்டியவர். வாழும் வரை மறக்க முடியாதவர் .

- ஜெயபால் கார்க்கி 

                                                       ***

8.அர்த்தமாயிந்தா?

తెలుగు లో మాట్లాడు என்று அவள் சொன்னாள். தலையை மட்டும் அசைத்துவிட்டு வந்துவிட்டேன். ஹிந்தி மாலுமா? என்றவளிடம் இல்லையென்றேன். தெலுங்கு ஒச்சாவா? என்றாள். மீண்டும் ம்ஹும் என்றேன். கன்னடா? என்று வாக்கியம் முடிக்காமல் கேட்டாள். அதற்கு நான் பதிலே சொல்லவில்லை.

Do you know english? என்றேன். அதில் ஆணவம் இருந்ததோ என்னவொ அவளும் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் எனக்கு நம்பிக்கை தந்த சில தோழர்கள் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டிருக்கிறேன். இந்தியும் ஒரு பக்கம் சோட்டாவாகத் தெரியும். என்றாலும் இந்தி தெரிவதைவிட தெலுங்கு புரிகிறது. நாளுக்குநாள் கேட்டுக்கொண்டே இருப்பதன் பின்னணியாகக் கூட இருக்கலாம்.

இன்றைக்கு காலை பெங்களூரு சிட்டி- அரக்கோணம் ரயிலை எதிர்பார்த்து காத்திருந்த முறுக்கு விற்கும் பெண்மணியின் முகபாவம் ரொம்ப என்னை பாதித்தது. அதே காத்திருப்பில் நானும் இருக்கிறேன். மீரு எல்லா உன்னாரு? நேனு பாஹூன்னானு மட்டும் எனக்கு பத்தாது! 

அர்த்தமாயிந்தா?

-தமிழ்
                                                            ***

9. அருக்காணியாத்தா

செக்கச் சிவந்த மேனி, கட்டுப் பல், ஒமட்ட வைக்கும் பச்சிலை நாற்றம், கிழிந்து நைந்த சேலையின் மேல்,துண்டுகளும் போர்வைகளும். ஊதா, பச்சை, மஞ்சள், வெள்ளையென நிறம் பிறிந்த வளவிகள். மடியில் அரைக்கிலோவுக்குக் குறையாமல் ஒரு பொட்டணம், ஐந்தேகாலடி உயரம்,  பச்சை நிறம் வலது காலிலும் நீல நிறம் இடது காலிலும் செருப்பாயணிந்த ஐம்பது வயசுக்காரிதான், அருக்காணி.

ஊருக்கெல்லாம் அருக்காணி என்றாலும், எனக்கு அருக்காணியாத்தா. என் அப்பாருவின் பங்காளி வகையறாவில் அவருக்குத் தங்கை முறையென என் அம்மா ஒருமுறை என்னிடம் கதையளந்திருக்கிறாள்.

ஆத்தாவுக்கு இருப்பிடம் மாரியம்மன் கோவில் சாவடிதான். அவளை இரண்டாவதாக மணமுடித்த முத்தையன், அவளுக்குக் குழந்தை பிறந்து நினைவு பிறழ்ந்ததிலிருந்து அவளைக் கைவிட்டுவிட்டான். வாக்கப்பட்டது பக்கத்து ஊர்தான் என்றாலும், திரும்பி வாழ வந்தாள் பிறந்த ஊருக்கே.

தொண்ணூற்றியாறின் ஆரம்பமென்று நினைவு. அப்போதுதான் நானும் மாரியப்பனும் பீடி குடித்துப் பழக ஆரம்பித்தோம். சண்டாளன் எங்கிருந்து ஆட்டையப் போடுவானோ தெரியாது, நிதமும் ஆறு ஏழு முழுப் பீடியை எடுத்து வருவான். மாரியம்மன் கோவிலுக்குப் பின்புறம்தான் நாங்கள் பீடி குடிக்குமிடம். வாரம் பத்து நாள் போல எங்களது புகைப் பயணம் தொடர்ந்தது. அது ஒரு ஆழ்ந்த அமாவாசை இரவு. தூரத்தே புளியம் விழுதுகளில் புளியம்பழங்கள் கிண்கிணி ஆட்டிக் கொண்டிருந்தது. 

தெரு விளக்கு வழக்கம் போல ஒளிராமல் தன ஜனநாயகக் கடமையை ஆற்றிக் கொண்டிருந்தது. பொன்னாத்தா வீட்டில் பாலை உருட்ட ஒரு குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்துகொண்டிருந்தது.
சூறைக் காற்று வீச்சில் புளியஞ்சருகுகள் மண் அப்பி மாரி பொழிந்தது. கோவில் சுவற்றினோரம் மாரியப்பன் தனக்கான பீடியைப் பற்றவைத்துக் கொண்டிருந்தான். நான் அவன் பற்றவைக்கும் கொள்ளிக்காய் வாயில் பீடியுடன் காத்திருந்தேன்.

எங்கிருந்து வந்தாலோ அருக்காணியாத்தா, நான் பீடி பற்றியதைப் பார்த்ததும் 'கூ..... தா.....' என்று ஓலமிட்டபடியே என்னை நெருங்கினாள். கண்களில் அக்னிப் பிரவேசம்.

"ஏண்டா சடையப்பம் பேரா! இதீக் குடிச்சுக் குடுச்சுத்தேன் முத்தையங்கிட்ட இருந்து இங்க வாழா வெட்டியா வந்தேன். தாயோலி, நீயுங் குடுச்சுக் குடுச்சு எந்த அருக்காணி வாழ்க்கையைக் குட்டிச் செவுரா ஆக்கப் போறியோ?" என்றவாறே இரு கன்னத்திலும் மாறி மாறி அறைந்தாள்.

மாரியப்பனை அவள் எள்ளளவும் கண்டுகொள்ளவில்லை.

நானும் அந்த நேரத்தில் பித்துப் பிடித்தவானாய், சுவற்றில் சாய்ந்த சிலையாய்ச் சமைந்திருந்தேன். பீடி போன இடம் தெரியவில்லை. கன்னத்தில் அவளின் ஐந்து விரல்களும் தப்புத் தப்பாய்ப் பதிந்திருந்தது. என்ன காரணமோ அவள் ரஸ்தாவில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள். நானும் மாரியப்பனும் ஓட்டம் பிடித்துவிட்டோம்.

சில ஆண்டுகளில் நான் பொழப்பு நிமித்தமாய் ஊர்கடந்தேன். வருடங்களுக்கு இரண்டு மூன்று முறை ஊர் அடைவேன். மாரியப்பன் தான் காதலித்தவளையே மணந்து ஒரு ஆண்குழந்தைக்கு அப்பனாகியிருந்தான்.

ரெண்டாயிரத்து ஒன்பதின் இறுதிகளில் அருக்காணியாத்தாவிற்கு உடல்நலம் குன்ற ஆரம்பித்திருந்தது. ஏப்ரல் மாதத்தில் நான் ஊரடைந்தேன். சுற்றத்தார் நலம் விசாரிப்புகள், விருந்துகள், விசேஷங்கள் என ஊர்சுற்றிக் கொண்டிருந்தேன். அது நடந்தபோது, தெக்காலக் காட்டுக்கு தண்ணீர் பாய்க்கப் போய்த் திரும்பிக் கொண்டிருந்தேன்; பைக்கில்தான். இருட்டிக் கொண்டிருந்தபோது  எதிரில் மாரியப்பன் அவனது பைக்கில் வந்து கொண்டிருந்தான்.

அதே மாரியம்மன் கோவில் பின்புறச் சுவர். பிரக்ஞ்ஞையற்று ஆளுக்கொரு சிகரெட்டாய்ப் பற்ற வைத்து ஊதிக்கொண்டும், பேசிக்கொண்டும் இருந்தோம்.

நான்காவது பப் இழுக்கும்போது எதிரே அதே சண்டாளி. இப்போது அவள் உடல் மிகவும் குறுங்கி இருந்தது. செருப்பு அணியவில்லை. கண்களை கோபமில்லை. பதிலாக சாந்தப் பார்வை.       இப்போது நானோ, மாரியப்பனோ சிகரெட்டைக் கீழே போடவில்லை. அவளும் எங்களை நெருங்கினாள்.

"நீ சடையப்பம் பேரந்தானே?" கண்களைக் கூர்ந்து கேட்டாள்.

மவுனமாய்த் தலையசைக்க, அவள் மேற்கு நோக்கி நகர்ந்து மறைந்தாள்.

மேலே, பவுர்ணமி நிலவு பல்லிளித்துக்கொண்டிருந்தது.             

- இலக்கியச் செம்மல் வெளங்காதவன்
           
                                                               ***

10.தாத்தா

அசாருதீனை ஆஷருடீன் என்றும் கங்குலியை கேங்குலி என்றும் ஜெப்ரி பாய்காட் மாதிரி உச்சரிப்பார். வாத்தியார் வேலை பார்த்தவர். முப்பது வயதிலேயே பரம்பரை காரணமாக மண்டையில் எல்லா முடிகளையும் முப்பத்தைந்து வயதிலேயே கிரிக்கெட் காரணமாக எல்லாப் பற்களையும் இழந்தவர்.

கண் பார்வை மங்கி படிக்க முடியாமல் போகிற வரைக்கும் விகடன், குமுதம், கல்கி முதற்கொண்டு சரவணாஸ்டோர்ஸ் வார இதழ் வரை மானாவாரியாக வாங்கி நுணுக்கு நுணுக்கிப் படித்துக் கொண்டிருப்பார்.

எல்லாவற்றுக்கும் "டீ கங்கா" என்று சிலேட்டை பிளேடால் கீறினாற் போன்ற குரலில் பாட்டியைத் தான் அழைப்பார். அந்தக் குரலில் ரொம்பக் காலம் பாட்டு வேறு பாடிக் கொண்டிருந்தார்.ஏனோ ( நல்லவேளை ) நிறுத்தி விட்டார். 

மிட்டாய், எண்ணெய்ப் பலகாரங்கள் என்றால் கொள்ளைப் பிரியம். நல்ல நடுநிசி ஆழ்ந்த உறக்கத்தில் கூட அவர் கை தானாக மிட்டாய்கள் போட்டு வைத்திருக்கும் டப்பாவை கச்சிதமாகத் திறந்து மிட்டாய் எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும். பின் மிச்சமிருக்கும் மிட்டாய்களை எண்ணியும் வைக்கும்.

எண்ணெய்ப் பலகாரங்களைப் பல்லில்லாததால் ஊற வைத்துத் தின்பார்.போகும் காலம் வந்ததும் அவரின் ஏறுமாறான நடவடிக்கைகள் பாட்டியிடம் ஏற்படுத்திய கோபத்தில் அறுபது வருடங்கள் குடும்பம் நடத்திய அயற்சி தெரிந்தது.

தாத்தா போன போது அழாத பாட்டியின் முகத்திலும் அப்பா சித்தப்பாவின் முகத்திலும் தாத்தா எப்படிப்பட்ட கணவனாகவும் தகப்பனாகவும் இருந்தார் என்பதற்கான சான்று தெரிந்தது

- ஹரீஷ்
                                                           ***

11. என் அப்பா எப்பொழுதும் எனது செல்லம்...

வழக்கமா எல்லாரும் அம்மாவிற்கே ஓட்டு போடூவார்கள். அப்பாவின் மீது கரிசனம் இருந்தாலும், நெக்ஸ்ட் டூ மதர் என்ற ரீதியில் தான் கவனம் இருக்கும்.  என்னைப் பொறுத்தவரையில் எனது முதல் கவனம் அனைத்தும் அப்பாவிற்கே சேரும்.

 ஏன்.. எப்படி?  சிம்பிள்... 

அம்மாவிற்கு நேரமில்லை என்ற ரீதியில் எப்பொழுதும் கவனம் இல்லாமல் தனது பணியைப் பற்றியே சிந்தனை கொண்டு பிள்ளைகளை ஒதுக்கி பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஓடிக்கொண்டே இருந்ததுதான்.   எத்தனையோ மாலை நேரங்களில் பள்ளிவிட்டு வந்தும் வெறுமையான வீட்டை யாருமில்லாத வீட்டின் கதவைத்திறந்து தானே இருப்பதை கொட்டிக்கொள்ளும் பழக்கம், அடுத்த வீட்டில், அன்புடன் மாலைப்பொழுதில் அம்மாவின் கைவண்ணத்துடன் செய்துதரும் சிற்றுண்டிக்கு மணம் ஏங்குகையில், ஓரளவிற்கு மனதை அறிந்தவராக அப்பா வந்து சேர்கிறார்.

கையில் அய்யர் கடை தோசை, சுவையான சாம்பார் சட்னியுடன்..அப்பப்பர் அந்த தருணங்கள் உண்மையில் தற்சமயம் 5 ஸ்டார் ஓட்டலில் கிடைக்கும் விருந்தைவிட மகிழ்ச்சியை அளித்தது.

சைக்கிள் விட தெரியாத காலத்தில் தைரியமூட்டி, கீழே விழுந்ததாலும் காயங்களுக்கு மருந்துப்போட்டு தெம்பாக சைக்கிளை ஓட்டச் சொல்லி, குரங்குபிடல் போட்டாவது தெருவை மட்டுமல்ல, கடைவீதிக்கும் போய்ட்டுவா ராசா என அனுப்பிவைப்பதில் அப்பாவிற்கு நிகர் அப்பாவே. கூடுமானவரை பள்ளிக்கூடங்களுக்கு கொண்டு வந்து விட்டு செல்ல முடியவில்லையென்றாலும், அக்கறையாக பள்ளியில் நடந்ததைப் பற்றி கேட்டறிந்து,  வகுப்பு ஆசிரியரை கண்டிப்பாக ஒருமுறையாவது நேரில் சந்தித்து (இப்பொழுது போல் பேரண்ட்ஸ் மீட்டிங் அப்பொழுது கட்டாயம் இல்லை) பையனைப்பற்றியும், சேர்மானம் பற்றியும் விசாரித்து வைத்துக்கொள்வார்.  இருந்தாலும் நாமெல்லாம் மனிதர்கள்தானே, மனம் குரங்குபோல் இஷ்டத்திற்கு யோசித்து, அப்படி இப்படி பசங்களுடன் இணைந்து கட் அடித்துவிட்டு சினிமாவிற்கு செல்வதும், அஜால் குஜால் படங்களுக்கு எப்படியாவது சென்று விடுவதும், தெரு அண்ணாக்களுடன் இணைந்து பாட்டீல் துளிகளை முகர்ந்தும், அப்பாவிற்கு அரசல் புரசலாக தெரிந்தாலும், இதெல்லாம் ஆம்பளைகள் வாழ்வில் சகஜம் என்று தானே திருந்திவிடுவான் என நம்பிக்கையுடன் காத்திருந்ததும்....அப்பப்பா... 

டூவீலர் ஓட்ட கற்றுக்கொடுத்து, பெட்ரோலுடன் வண்டியையும் கொடுத்து, ஊர்சுற்றினாலும் வருத்தப்படாமலும் விடலைக் காதல் நேரத்தில் கிடைத்த பெண்ணிடம் கடலை போட்டாலும், கண்டும் காணாமலும் இருந்தது அப்பப்பா....   

வேலையை நாமே தேடிக்கொள்ள, தேவைப்பட்ட வைராக்கியம் நம்பிக்கையையும் விதைத்ததில் அப்பாவிற்கு வேறொரு டூப் தேவையில்லை. திருமண வயதில்,  ஓடி ஓடி கடைசியில் நமக்கே நமக்கே பிடித்த பெண்ணை மட்டுமே கட்டிவைத்ததும்,  பின்னால் பிரச்சினைகள் உருவானபோது வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என விடைத்தாலும், இருபக்கமும் சமரசம் பேசி ஒட்ட வைத்துக் கொண்டே இருந்தது, குழந்தைகள் பிறந்ததும்,  அன்புடன், ஆசையுடன் எடுத்து சீராட்டியது, பேரக்குழந்தைக்கு மரணவிளிம்பில் ஏற்பட்ட சோகத்தை தாங்காமல் மருத்துமணை ஐசிக்கு வெளியே குலுங்கி குலுங்கி அழுததும்.....இன்றும் இதுபோல் அளவிட முடியாத அன்புடன் ஆண்டவனின் அருளுடன் அப்பாவின் அன்பு தொடர்கிறது....    

சிவபார்கவி