Jan 5, 2015

குடும்பத்தை கவனி

நேற்று ஊரிலிருந்து வந்து கொண்டிருந்த போது ஒருவர் அழைத்திருந்தார். வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன். ‘ஒரு நிமிடம் பேச வேண்டும்’ என்றார்.  ஓரம் கட்டி நிறுத்தினேன். எடுத்த உடனேயே ‘உங்க நேரத்தை எடுத்துக்க விரும்பவில்லை...ஆனால் உங்க குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்’ என்றார். நல்ல நோக்கத்தில்தான் சொல்கிறார். ஆனாலும் சுள்ளென்று கோபம் வந்துவிட்டது. இதையேதான் இன்னொருவர் விரிவான மின்னஞ்சலாக அனுப்பியிருந்தார். செல்லமுத்து குப்புசாமி என்னைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினால் அங்கு இன்னொருவர் ‘எழுத்துக்காக மணிகண்டன் சிலவற்றை இழந்திருப்பார் என்று நினைக்கிறேன். குறிப்பாக Home front' என்று கமெண்ட் எழுதுகிறார். 

இவர்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. எத்தனை ஆண்கள் தங்களின் குழந்தைகளுக்கு தினமும் குளித்துவிடுகிறார்கள் என்று தெரியவில்லை. மகனுக்கு பல் துலக்கிவிட்டு, குளிக்க வைத்து, உணவூட்டி, யூனிபார்ம் மற்றும் ஷூ அணிவித்து பள்ளிக்கு அனுப்புவது வரை அத்தனை வேலையையும் நான்தான் செய்கிறேன். ஆய் கழுவிவிடுவது உட்பட. இரவில் அவனுக்கு அரை மணி நேரமாவது கதை சொல்லாவிட்டால் தூங்கமாட்டான் என்பது உபரித் தகவல். குழந்தைக்கு என்ன பிடிக்கும் அவன் எப்பொழுது அழுவான் எதைச் சொன்னால் சிரிப்பான் என்பதெல்லாம் என் மனைவியைவிடவும் எனக்குத் தெரியும். உறக்கத்தில் அவனுக்கு சிறுநீர் கழிக்க வேண்டுமென்றால் என்னைத்தான் எழுப்புவானே தவிர தன் அம்மாவை எழுப்பியதில்லை. 

மனைவிக்கு என்ன செய்கிறேன் என்பதையெல்லாம் வெளியில் சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக நினைக்கவில்லை. 

குடும்பம், மனைவி பற்றியெல்லாம் வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ளாததால் அவர்களைக் கண்டுகொள்ளாமல் ஊதாரியாகத் திரிகிறேன் என்று அர்த்தமில்லை என்பதைத் தெளிவாக்குவதற்காகக் இதை எழுத வேண்டியதாகிவிட்டது. குடும்பத்தை கவனிக்காமல் எழுத்து, சமூகம், அதன் வழியாகக் கிடைக்கும் புகழ் என்று அலையுமளவிற்கு நான் ஒன்றும் யோக்கியசிகாமணி இல்லை. எல்லாவிதத்திலும் குடும்பம் முக்கியம், மனைவி முக்கியம் என்று நினைக்கும் ஒரு சரியான சுயநலவாதிதான். வேலை அத்தியாவசியம், சம்பாத்தியம் அவசியம் என்பதை மிகத் தெளிவாகவே புரிந்து வைத்திருக்கிறேன் என்பதால் இது குறித்து வரும் அறிவுரைகள் அலறச் செய்கின்றன. ஆனால் நம் நல்லதுக்குத்தானே சொல்கிறார்கள் என்பதால் பற்களைக் கடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

டாஸ்மாக்கில் கிடப்பவனுக்கும்தான் குடும்பம் இருக்கிறது. நண்பர்களோடு சேர்ந்து வார இறுதி நாட்களில் ஊர் சுற்றுபவர்களுக்கும்தான் குழந்தைகள் இருக்கிறார்கள். எந்நேரமும் ஃபேஸ்புக்கிலும், யூடியூப்பிலும் காலம் கடத்துபவர்களுக்கும்தான் மனைவி இருக்கிறார்கள். தின்றுவிட்டு தூங்குபவர்களுக்கும்தான் குடும்பம் சார்ந்த கடமைகள் இருக்கின்றன. யோசித்துப் பார்த்தால் நிறையப்பேர் நேரத்தை இப்படியெல்லாம் செலவழிக்கிறார்கள். எனது நேரத்தை நான் வேறு மாதிரியாக செலவழிக்கிறேன். அவ்வளவுதான்.

இதைச் சொல்லும் போது பெருமையடித்துக் கொள்வது போலத்தான் இருக்கிறது. ஆனால் ஒரு முறையாவது சொல்லிவிட வேண்டும் போலிருக்கிறது.

நேரத்தை எப்படிச் சரியாகத் திட்டமிடுகிறோம் என்பதில்தான் எல்லாமும் இருக்கிறது. இருபத்து நான்கு மணி நேரத்தில் தூக்கத்திற்கு ஏழு மணி நேரம் போக மிச்சமிருக்கும் பெரும்பாலான நேரம் வீணாகத்தான் போகிறது. அதில் நாற்பது சதவீதத்தைக் காப்பாற்றினாலும் கூட நாம் எவ்வளவோ செய்ய முடியும். மதியம் சாப்பிடச் சென்றால் ஒரு மணி நேரம். டீ குடிக்கச் சென்றால் இருபது நிமிடங்கள். இணையத்தளத்தை மேய்வதற்கு, நண்பர்களோடு வெட்டி அரட்டைக்கு- இப்படியே மிகப்பெரிய பட்டியலைத் தயாரிக்க முடியும். அதில் இருந்தெல்லாம் கொஞ்ச நேரத்தைக் கடன் வாங்கினாலும் கூட ஒரு நாளில் நம்மால் நிறையச் செய்துவிட முடியும்.

இதையெல்லாம் என்னால் முயன்ற அளவுக்கு தவிர்த்து விட்டுத்தான் எனக்குப் பிடித்த காரியங்களைச் செய்துக் கொண்டிருக்கிறேன். 

ஆனால் ஒன்று- சனி, ஞாயிறுகளில் வெளியில் சுற்றுவதையெல்லாம் குடும்பத்திற்கு ஒதுக்கலாமே என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. சனி, ஞாயிறுகளில் வீட்டில் தங்குவதேயில்லை. அதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு விலை இருக்கிறது. ஏதேனும் ஒன்றில் சமரசம் செய்து கொள்ளாமல் நாம் விரும்பும் அத்தனை காரியங்களையும் செய்ய முடிவதில்லை. 

வீட்டில் இருப்பவர்கள் என்னைப் புரிந்து கொள்கிறார்கள். அவர்கள் நம்புகிறார்கள். முழுமையாக ஆதரிக்கிறார்கள். அதனால்தான் மற்றவர்கள் அறிவுரை சொல்லும் போது ஒருவகையில் சங்கடமாக இருக்கிறது. கொஞ்சம் முயன்றால் எவ்வளவோ நல்ல விஷயங்களைச் செய்ய முடிகிறது. முயன்றுதான் பார்க்கலாமே? அலைவதாலும், வெறித்தனமாக உழைப்பதாலும் மட்டுமே சிலவற்றை நம்மால் செய்ய முடியும். அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்க விரும்புகிறேன். வீட்டில் அமர்ந்து கொண்டு டிவி பார்ப்பதாலும், குடும்பத்தோடு சினிமா பார்ப்பதாலும் ஒருவிதத்தில் சந்தோஷம்தான். ஆனால் அதையெல்லாம் தாண்டி சந்தோஷமளிக்கக் கூடிய சமாச்சாரங்கள் நிறைய இருக்கின்றன. உதாரணமாக கீழே இருக்கும் இந்த மின்னஞ்சலைப் படியுங்கள். இந்த எட்டு வயதுக் குழந்தையின் நம்பிக்கைக்காகவும், அன்பிற்காகவும் இன்னமும் எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்கலாம்.
                            
அன்புள்ள மணி,

எப்படி இருக்கீங்க?

சிறுவன் அரவிந்தனின் மருத்துவச் செலவுகளுக்காக ரூ. 4765/ ஐ நிசப்தம் அறக்கட்டளையின் கணக்குக்கு மாற்றியிருக்கிறேன் என்பதைத் தெரியப்படுத்த விரும்புகிறேன். ஏன் Round figure ஆக இல்லை என்று நீங்கள் ஆச்சரியமடையக் கூடும்.  இது எனது எட்டுவயது மகன் நிதினின் பங்களிப்பு. எனவே நீங்கள் ரசீது அனுப்பும் போது, நிதின் S/o ஸ்ரீராம் ராகவன் என்று குறிப்பிடவும். அரவிந்தன் குறித்து நீங்கள் எழுதியிருந்ததையும் அவனது நிழற்படங்களையும் மகனிடம் காட்டி அவனது பங்களிப்பு யாருக்குப் பயன்படுகிறது என்பதைக் காட்டினேன்.

நிதின் தினமும் 1 திர்ஹாம் சேமிக்க வேண்டும் என்பதையும் பிறகு அதை உதவி தேவைப்படுபவர்களுக்கு அவன் கொடுத்துவிட வேண்டும் என்பதையும் சொல்லித் தந்திருக்கிறோம். இதை அவன் கடந்த சில வருடங்களாக பின்பற்றி வருகிறான். ஓரிரு வருடங்களுக்கு முன்பாக நாங்கள் இந்தியா வந்திருந்த போது அவனது சேமிப்பிலிருந்து மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான விடுதியொன்றிற்கு கணிசமான அளவில் உதவியைச் செய்ய முடிந்தது. இதன் வழியாக வாய்ப்புகள் கிடைக்காத குழந்தைகளைக் கண்டுணரவும் தனது வாழ்க்கையை இன்னமும் தெளிவாக புரிந்து கொள்ளவும் அவனுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது.

இத்தகைய பயிற்சி அவனை எதிர்காலத்தில் பொறுப்புள்ளவனாக மாற்றும் என நம்புகிறோம்.

நன்றி.

அன்புடன்,
ஸ்ரீராம்