Jan 22, 2015

அட்டகாசமான நன்றி

புத்தகக் கண்காட்சி முடிந்துவிட்டது. இன்று காலையில் கரிகாலன் அழைத்து ‘மசால் தோசை 38 ரூபாய் புத்தகத்தின் விற்பனை அட்டகாசம்’என்றார். இன்னமும் ஆன்லைன் ஆர்டர் எண்ணிக்கையை சரி பார்த்த மாதிரி தெரியவில்லை. களைப்பு தீர்ந்து அடுத்தவாரத் தொடக்கத்தில்தான் பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன். பதிப்பாளர் சந்தோஷமாக இருந்தால் போதும். அறுநூறு பிரதிகளை சாதாரணமாகத் தாண்டியிருக்கும் என்றார். 

தொண்ணூற்றைந்து சதவீதத்திற்கும் மேலான விற்பனை நிசப்தம் தளத்தின் வழியாக என்னை அறிந்தவர்களால்தான் என்பதில் துளி சந்தேகம் கூட தேவையில்லை. ஏதோவொருவிதத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள். என்னைத் தொடர்ந்து தாங்கிக் கொள்ளும் அத்தனை பேருக்கும் மனப்பூர்வமான நன்றி. உங்களின் ஆதரவும் அன்பும் இல்லையென்றால் எதுவுமே சாத்தியமில்லை.

புத்தகக் கண்காட்சியில் சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த வருடம் நிறையப் பேர் அருகில் வந்து பேசினார்கள். பெருமைக்காகச் சொல்லவில்லை. சந்தோஷமாக இருந்தது. நம்மை கவனிக்கிறார்கள் என்பதே உற்சாகமூட்டக் கூடியதுதானே? பலர் ‘இணையத்தை சரியாக பயன்படுத்திக் கொள்கிறீர்கள்’ என்றார்கள். அப்படிச் சொல்பவர்களிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. சரியாகத்தான் சொல்கிறார்கள். இணையம் மட்டும் இல்லையென்றால் இவ்வளவு பரவலான கவனத்தை அடைந்திருக்க முடியாது என்பது எனக்கும் தெரியும். பிப்ரவரி ஏழாம் தேதி வந்தால் நிசப்தம் தொடங்கி பதினோராவது வருடம் ஆரம்பமாகிறது. 2012 வரைக்கும் பெரிய உழைப்பில்லை. நேரம் கிடைக்கும் போது எழுதுவோம்; கவிதையப் பற்றி மட்டும் எழுதுவோம்; எல்லோருக்கும் புரியும்படி எளிமையாக எழுத வேண்டியதில்லை என்று ஏகப்பட்ட மனத்தடைகள். 

ஏதோ ஒரு தருணத்தில் அதையெல்லாம் உடைத்த பிறகுதான் இதெல்லாம் கை கூடி வரத் தொடங்கியிருக்கிறது.

‘எப்படி நேரம் கிடைக்கிறது?’ என்றும் நிறையப் பேர்கள் கேட்டார்கள். நேரடியாக பதில் சொல்லத் தெரியவில்லை. ஆனால் ஒன்று- உழைக்க தயாராக இருந்தால் நேரம் தன்னால் கிடைத்துவிடும் என்று  நம்புகிறேன். உழைப்பு மட்டும்தான் நமக்கான மரியாதையை பெற்றுத் தரும். மற்றது எல்லாமே அப்புறம்தான். வெறியெடுத்துத் திரிய வேண்டும். வேறு எந்த சூத்திரமும் இருப்பதாகத் தெரியவில்லை.

தலைமையாசிரியர் இனியன்.அ.கோவிந்தராஜூ அழைத்து ‘நீ எடுத்து வெச்சிருக்கிறது பேபி ஸ்டெப்....இன்னும் போக வேண்டிய தூரம் வெகுதூரம் இருக்கு’ என்றார். எவ்வளவு உண்மை? இப்பொழுதுதான் முளைத்திருக்கிறேன். இதே உத்வேகத்தையும், இதே மனிதர்களின் வாழ்த்துக்களையும் எந்தவிதத்திலும் சிதைத்துக் கொள்ளக் கூடாது. கடவுள் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. கடமையை மட்டும் செய்து கொண்டிருந்தால் போதும். பலனை அவர் கொடுத்துவிடுவார்.

புத்தகத்தை வெளியிடுவதற்காக முயற்சி செய்து பிறகு குடும்பச் சூழல் காரணமாக திட்டத்தைக் கைவிட்ட ராஜலிங்கம், கடைசி நேரத்தில் ‘நாங்க இருக்கோம்’ என்று தோள் கொடுத்த யாவரும் பதிப்பகத்தினர், அட்டகாசமான தனது நிழற்படத்தை அட்டைப்படமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதியளித்த நிழற்படக் கலைஞர் சசிகுமார் ராமசந்திரன், பின்னட்டை நிழற்படத்தை எடுத்துக் கொடுத்த சுதர்சன் - அவரோடு ஒரு கடையில் மசால் தோசை சாப்பிடும் போதுதான் ‘இந்த டைட்டில் வைத்தால் நன்றாக இருக்குமா’ என்று கேட்டேன். திடீரென்று உதித்த டைட்டில்தான் அது. அட்டை வடிவமைப்பாளர் கோபு ராசுவேல், புத்தக வடிவமைப்பாளர் பால கணேஷ், கடைசி நேரத்தில் மென்பொருள் பிரச்சினையைத் தீர்த்துக் கொடுத்த சத்யா, நற்றினை அச்சகத்தினர், புத்தகத்தை இணையத்தில் அறிமுகப்படுத்திய நண்பர்கள்- சவுக்கு சங்கர், அன்பழகன், கிர்த்திகா தரண், பொன் விமலா, கிஷோர், கார்டூனிஸ்ட் பாலா, சத்தி லிங்க் என்று நிறையப் பேர் எந்த எதிர்பார்ப்புமில்லாமல் உதவியிருக்கிறார்கள். சரவணபாபு, ரிச்சர்ட் விஜய், மயிலன் போன்றவர்களையும் மறக்க முடியாது. புத்தகத்தை வெளியிடுவதற்காக வந்திருந்த திருப்பதி மகேஷ், ரமணன் தம்பதியினர், எப்பொழுது சென்றாலும் புன்னகைக்கும் டிஸ்கவரி வேடியப்பன், ‘அண்ணே இன்னைக்கு செம சேல்ஸ்ண்ணே’ என்று தினமும் அழைத்து உற்சாகமூட்டிய பார்த்திபன் என அத்தனை பேருக்கும் நன்றி. 

புத்தகக் கண்காட்சியில் புத்தகத்தை விற்ற அரங்குகளுக்கும், ஆன்லைன் வழியாக விற்பனை செய்து வரும் நம்ம புக்ஸ் , Wecanshopping , டிஸ்கவரி புக் பேலஸ் உள்ளிட்ட தளங்களுக்கும் நன்றி.

கடந்த பத்து நாட்களில் வந்திருக்கும் விமர்சனங்களின் சிறு தொகுப்பு இது. 

தொகுப்பை வாசித்துவிட்டு நேரம் ஒதுக்கி விமர்சனம் எழுதிய அத்தனை பேருக்கும் நன்றி.                                  
                 
                                                                       ***

மணிகண்டன் அவர்களுக்கு,

நான் தினமும் தவறாமல் நிசப்தம் வாசிக்கும் வாசகர்களில் ஒருவர் .தங்களை புத்தக கண்காட்சியில் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி. உங்கள் எழுத்துகளை போலவே எளிமையான மணிகண்டன் (இந்த அளவுக்கு எளிமையை எதிர்பார்க்கல ).

உங்கள் லிண்ட்சேலோஹன் w/o மாரியப்பன், சைபர் சாத்தான்கள் புத்தகங்களை வாசித்திருக்கிறேன். அந்த வரிசையில் மசால் தோசை 38.

முதலில் தலைப்புக்கள் வைப்பதில் உங்களுக்கு ஒரு பாராட்டு. முக்கியமாக எம் ஜி ஆர்  பாடிக்கொண்டிருக்கிறார், ஈரம் தேடும் நாவுகள், கேள்விப்படாத கடவுள்கள்....இன்னும் பல. எல்லாமே உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் சமூகம் சார்ந்து, தனி மனிதன் சார்ந்து, அதை அப்படியே உங்க எழுத்துக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறீர்கள். 

முக்கியமாக மணிகண்டன் எழுத்துக்கள்ள பகடி அருமையா இருக்கும். கதை மாதிரி சொல்லி கடைசியில் ஒரு பெரிய சமூக நீதி காட்டி கட்ட கடைசியில் ஒரு சாதாரண காமன் மென் பார்வையில எப்படி பார்க்கிறோம்னு போகிற போக்கில சொல்லிட்டு போய்டுவீங்க. 

இன்னும் கொஞ்சம் நாவல் எழுத முயற்சிக்கலாம்.

உச்சகட்ட நகைச்சுவையாக “சாருநிவேதிதா ஊர்க்காரனுக்கும், ஜெயமோகனின் ஊர்க்காரனுக்கும் திருமணம் செய்து வைத்தால் கொஞ்சிக்கொண்டா இருப்பார்கள்?” என்று திருமணதிற்கு ஊர்பொருத்தம் பார்க்கச் சொன்ன ஒரே ஆள் நீங்கதான்.

நிசப்தம் வாசிக்கும்போதே தினமும் எதாவது ஒரு பகடி சேர்த்து சிரிக்க வைத்து விடுவீர்கள்.

முக்கியமாக உங்களோட உதவி செய்யும் முயற்சிக்கு வாழ்த்துக்கள். என்றைக்கும் தொடர வேண்டும்.

தினமும் விதவிதமான பிரச்சனைகள், அதனூடே வாழும் மனிதர்கள், அதை சொல்லும் பக்குவமான எழுத்து, அதற்கான தீர்வு- அசத்துறீங்க மணிகண்டன்.

தினமும் உரையாடுங்கள் நிசப்தம் மூலமாக ....

கவிதா ரவீந்திரன்
                                                               ***

                                                           
புத்தகக்கண்காட்சி 2015 இல் வாங்கிய புத்தகங்களில் ஒன்றுதான் நம் வா.மணிகண்டனின் மசால் தோசை 38 ரூபாய். தம்பி மணிகண்டன் தலைப்பு வைப்பது மெனு கார்ட் மாதிரி- நயன்தாரா புடவை, சிம்ரன் ஆப்பக்கடை என நச்சென்று வைத்துவிடுகிறார். பரவாயில்லை. அது அவர் இஷ்டம்.  எந்த ஐடியாவும் இல்லாமல்தான் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றேன். என் கவிதைத் தொகுப்பு விற்கும் நிவேதிதா புத்தகக் கடை எப்பவும் போல அழுதுகொண்டேயிருந்தது. 15 வருடங்கள் முன்பாக  ‘டிரெயின்ல மாம்பலம் வந்துட்டேன் சார்’ என்று BHEL கெஸ்ட் ஹவுஸிலிருந்து உதயக்கண்ணன் மற்றும் ஷங்கரநாராயணனிடம் சொல்வேன். (என் வீட்டுக்காரர் BHEL இல் மேனேஜர்). ‘பே’வென விழித்துக் கொண்டே கனிமொழி எப்போ வருவாங்க, சல்மா எப்போ வருவாங்க என்று பார்த்துக் கொண்டிருப்பேன். இப்பொழுது மாறிவிட்டேன். நான்கு புத்தகம்தான் வாங்கினேன். பேருக்குத்தான். அதில் வா.மணிகண்டன் மற்றும் கறுப்புப் பிரதிகள் நீலண்டன் பெயர் இருக்கிறது.

வா.மவின் முந்தைய புத்தகம் சுறுசுறுப்பான வாசிப்பைக் கோரியது. அது போலவே இதுவும். எக்ஸ்பிரஸ் வேகமும் கொஞ்சம் மனிதமும் கேட்கிறது. தொண்ணூறுகளின் சிறுகதை ஆசிரியர்களை எனக்கு நினைவு படுத்துகிறது. வண்ணதாசனின் ஐடியாவோ, கந்தர்வனின் கஞ்சத்தனமோ, பாடத்திட்டமோ - நல்லவேளை இல்லை.

எனக்கென்னவோ பெண்களின் உலகம் பற்றிய தனது பார்வையை அழுத்தமாக இந்தத் தொகுப்பில் மணிகண்டன் தருவது போல் எனக்குத் தெரிகிறது. (அதை அவர்தான் சொல்ல வேண்டும்). நல்ல கவிதைகளை இடையிடையே சொல்லிப் போகிற மனதினை வைத்திருக்கிறார். தனது மனதை கரட்டடிபாளையத்தில் வைத்துவிட்டு பிழைப்பை மட்டும் பெங்களூரில் நடத்துகிறார். பூனைப்பூட்டான் கட்டுரை அப்படித்தான் சொல்கிறது. அவ்வப்போது பல் புதைத்து வைத்தத் இடத்தை நினைவில் வைத்துத் தேடிப் பார்க்கிற இளம்சிறுவன் குறுக்குமறுக்காக மணிகண்டனின் எழுத்துக்களில் ஓடிக் கொண்டேயிருக்கிறான். 

வப்புஸ், பேய் ஓட்டுவது, மண்டைக்குள் நெளியும் புழு ஆகியனவெல்லாம் அப்படித்தான். மணிகண்டனின் தனித்தன்மை. விளையாடும் களம் தெரிந்தே விளையாடுகிறார். வாழ்க.

எனக்கு மனதளவில் சோகத்தைக் கிளறிவிடப் பார்த்த கட்டுரைகள் உண்டு. சல்மான்கான், மசால் தோசை கட்டுரைகள் அப்படித்தான். பாசிச, கம்யூனிஸ, தலித்திய....இப்படியெல்லாம் ஜல்லியடிக்காத கட்டுரைகள்.

என் மகள் ஆர்கிடெக்ட். அவன் மனம் வேலை செய்யும் சில இடங்களை என்னால் செரிமானம் செய்து கொள்ளவே முடிவதில்லை. காசு, பண விவகாரமும் அப்படித்தான். அப்படியொரு கட்டுரை இருக்கிறது. ‘குப்பை எடுக்கிறவனுக்கு ஏம்மா காசு கொடுத்தீங்க?’ என்பாள். ஆட்டோக்காரனுக்கு பத்து ரூபாய் கூடுதலாகத் தரமாட்டாள். ஆனால் செருப்பு விலை இரண்டாயிரம் இருக்கலாம். கடவுளே.

புத்தகத் தலைப்பின் கட்டுரை சூப்பர்!

என் மகன் அமெரிக்காவில் இருக்கிறான். வாங்கம்மா என்று அழைக்கிறான். விஸா கூட இருக்கிறது. நான் போக மாட்டேன். எனக்குப் பிடிக்கவில்லை. உங்களின் மலேசியா கட்டுரை மிகப் பிடித்திருந்தது. மருமகள் நல்ல பெண் தான். நாம் சென்றால் அவள் மாறிவிடக் கூடும். முடியாது என்று சொல்லியிருக்கிறேன்.

அப்புறம், எல்லாக்கதைகளுக்கும் எடிட்டிங் யாரு? வா.மணிகண்டனேவா? எனில் சூப்பர், சூப்பர். கச்சிதம்.

நல்ல அட்டைப்படம், நல்ல அச்சு. முன்னுரை எழவு, எழுத்தாளன் வரலாறு என்ற அறுப்பு எதுவும் இல்லாமல் புத்தகம் நச்சென்றிருந்தது. 

சாகித்ய அகாடமி, மியூஸிக் அகாடமி, பத்மபூஷன், சரஸ்வதி விருது என எதுக்கும் ஆசைப்படவில்லை. தலைப்பே சொல்கிறதே. பாலியல் பிரச்சினை, மதம், பெண்ணியம் என்ற எந்தக் கண்றாவியும் காணவில்லை. நீ நல்லா வருவ குமாரு!

தீப்பந்தம் நல்ல கட்டுரை. பொருத்தமான தலைப்பு. என் வயிற்றில் எரியும் தீ என்னைக்கு அணையுமோ தெரியவில்லை. கல்யாணம் செய்து கொடுத்த என் ஒரே பெண்- முன்பே சொன்னேனே-ஆர்க்கிடெக்ட். நள்ளிரவில் வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்ற கணவன். உங்கள் கட்டுரையில் இருப்பது நிஜமாகவே நடந்திருக்கு. இதில் ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய்ட்டார். போலீஸாரின் உதவியுடன் குழந்தையை வாங்கிவிட்டோம். வளர்க்கிறோம். நான் மதிக்கும் பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள் உதவினார்கள்.

உலகம் அன்பு மயமானது. இந்த எழுத்து தவம். தொடருங்கள்.

அன்புடன்,
கீதாஞ்சலி பிரியதர்ஷிணி

                                                               ***

அன்புள்ள(மெய்யாலுமே) மணிகண்டன்,

லால்பாக் எக்ஸ்பிரஸ்ல வந்து வீட்டுக்கு வந்தவுடனே இத எழுதுறேன்...(பாஸ்... லால்பாக் எக்ஸ்பிரஸ் இன்னைக்கு ஒரு மணி நேரம் லேட்டு..) 

..train கிளம்பின உடனே புக்க எடுத்து படிக்க ஆரம்பிச்சேன்...சல்மான்கான்ல வண்டி pickup ஆச்சுது...நாலு பக்கத்துல ஒரு பாலா படம் பாத்த கனம் மனசுக்கு... 'கூர் நகங்கள் சூழ் உலகு' அந்த குழந்தை அந்த பெற்றோர்களுக்கு கிடைத்திருக்கும் என்றே நான் நம்பி முடிவுரை எழுதிக் கொண்டேன்...அது, அதே வயதில் ஒரு பெண்குழந்தையை வைத்திருக்கும் எனக்கான பொறுப்பையும், இந்த கொடூர சமூகத்தின் மீதான வெறுப்பையும் அதிகரித்தது... 

'மின்னல் கீற்று' சல்மான்கான் ரகம்.. சரியாக 'அ'னுமந்தாவை படித்து முடிக்கையில் 'மசால் தோசே' 'மசால் தோசே' கடந்து சென்றது.. 

நல்லியண்ணன் வெறித்தனம்...

வெங்கிடு அண்ணனும், மீரான் பாயும் இரண்டு எல்லைகளில் தெரிந்தார்கள்...

பினாங் கதையைப் படிக்கும் பொது எங்க புக்க ஏதும் மாத்தி எடுத்துட்டோமோ ன்னு சந்தேகம் வந்துருச்சு... அப்புறம் மைண்ட retune பண்ணிக்கிட்டு கண்டினியூ பண்ணிகிட்டேன்...இன்னமும் சில ஏழை மனங்களினாலும், எளிய மனிதர்களின் நற்செயல்களினாலும் தான் மனிதம் வாழ்கிறது என்பது கதைக்குக்கதை உணர்த்தியது...

வாழ்க வளமுடன்...
மாரிமுத்து(மக்காயா)
                                                                     ***

நண்பர் வா.மணிகண்டன் அவர்கள் எனக்கு அறிமுகமானதே டிஸ்கவரி புக் பேலஸ் இணையதளத்தில்தான். வேறு எதோ புத்தகம் வாங்க அங்கு நுழைந்த போது 'லிண்ட்சே லோகன்...' top sellers லிஸ்டில் முதலாவதாக இருந்தது. சரி, என்னதான் இருக்குமுன்னு பார்க்கலாமே என்று எவ்வித எதிர்பார்ப்புமில்லாமல் வாங்கிப் படித்தேன். அப்பொழுதே அவரின் கட்டுரையும்,கதையுமில்லாமல் ஒரு நிதர்சமாக நிகழ்வுகளைச் சொல்லும் பாங்கும், கதை மாந்தர்கள் எங்கள் ஊரையோ(கொங்கு பகுதி) அல்லது வாழ்விடமான பெங்கரூளுவையோ கொண்டு இருந்ததும் மிகவும் பிடித்துப் போக ஒரு காரணம்.

பிற்பாடு வலைப்பூவில்,முகநூலில் தேடி நட்பு பிடித்து, படித்து வந்தது வாடிக்கையாகி விட்டது. மசால் தோசை 38 ரூபாய் அறிவிப்பு வந்தவுடன் இருந்த எதிர்பார்ப்பை இந்தப் புத்தகம் பூர்த்தி செய்து விட்டது. லிண்ட்சே எந்த அளவு நகைச்சுவை கலந்து இருந்ததோ, மசால் அதே அளவு நெஞ்சைத் தொடும் அளவி்லான நிகழ்வுகளை அதிகமாக வியாபித்து விவரித்து இருந்தது. என்ன கொஞ்சம் சீக்கிரம் படித்து முடித்து விட்டேன். அடுத்த முறை, இன்னும் கொஞ்சம் பெருசா எதிர்பாக்குறேன் உங்களிடம்.

வாழ்த்துக்களுடன் 
சதிஸ் குமார்

                                                                 ***

சில புத்தகங்கள் தான் முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை கீழே வைக்க விடாமல் படிக்க வைக்கும்... மசால் தோசை அப்படி ஒரு புத்தகம்... வா. மணிகண்டன் அசத்தி இருக்கிறார்...

சத்யா ஷான்

                                                                   ***

'மேக்சிமம் பிரஷர்' கொடுத்து படிச்சுட்டு இருக்கேன். 'ஆசம்' சார். மீதம் 5 கதைகளை நாளைக்குப் படிச்சுட்டு அப்புறமா வாரேன்.

சதீஷ் குமார் செல்லமுத்து
  
                                                                   ***

அன்பு நண்பர் மணிகண்டனுக்கு,

எல்லாமே படித்த கட்டுரை தானே என்று தவிர்த்துவந்தேன்.. இன்றுதான் முதல் கட்டுரை வாசித்தேன்...நட்சத்திரங்கள் சரியாத வானம்.

மனிதம் திசை அறிவதில்லை...ஆனாலும் வடகிழக்கில் கொஞ்சம் அதிகம்தான் போலிருக்கிறது. புதிய பூமியில் இப்படி ஒரு செயல் நம்மில் யாரும் செய்வோமோ எனப் பலமுறை யோசிக்க வைத்தது.

எஸ்.ரா. கட்டுரைகள் படிக்கும்போது முன்பெல்லாம் நினைப்பேன்...எழுதுவதற்காகவே சில நிகழ்வுகள் எழுத்தாளரைத் தேடி அமையுமோ என- அந்த வரிசையில் இப்போது நீங்களும் இணைந்துவிட்டீர்.

விபத்துகள் இயல்பு. ஆனால் அப்படி ஒரு தம்பதி அமைவது இயல்பல்ல.ஒருவேளை அந்த பெண்ணும் குழந்தையும் தங்களின் நற்செயல்தான் காரணமென்று நினைத்து தங்கள் நற்செயல்களைத் தொடரலாம்.இப்படியே ஒரு தொடர்ச்சி மூலம் மனிதம் செழிக்கலாம்.

ஒரு நிகழ்வு உங்கள் எழுத்தில் ஒரு நல்ல அனுபவமாய் மனத்தில் தேங்கி விடும் மாயம் நிகழ்த்தியிருக்கிறீர். வாழ்த்துகளும்!

நன்றி.

சைதை புகழேந்தி

                                                                   ***

அன்புள்ள நண்பர் மணிகண்டனுக்கு,

சென்னை நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் கணேஷ் குமாரின் மடல். உங்கள் ‘மசால் தோசை 38 ரூபாய்’ புத்தகம் முழுவதும் ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன் . அனைத்து கட்டுரைகளும் அருமை. மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தது.

கணேஷ்குமார்

                                                            ***
1) சிநேகாவின் காதலர்கள் இயக்குநர் முத்துராமலிங்கத்தின்  விமர்சனம்
2) கதிர்வேலின் விமர்சனம்